எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, August 01, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! அரங்கன் தப்பினான்! ஹொய்சளருக்கு ஆபத்து!

குலசேகரன் பின்னால் வந்தவர்கள் தில்லித் துருக்கர்கள் தான் என்பதைக் கண்டு கொண்டான்.  தப்பி ஓடிய ஒரு வீரன் மூலம் செய்தி கிடைத்து அதற்குள்ளாக ஆயிரம் வீரர்களைத் திரட்டிக் கொண்டு தில்லிப் படை அவர்களைத் துரத்திக் கொண்டு வந்து கொண்டிருந்தது. எப்படியும் இன்னும் இரு நாழிகையில் இங்கே இந்த மேட்டுக்கு வந்துவிடும். அதற்குள்ளாக அரங்கனைத் தப்புவிக்க வேண்டும்.குலசேகரன் யோசித்தான். யோசித்த வண்ணமே சுற்றும் முற்றும் பார்த்தபோது எதிர்த்திசையில் மீண்டும் மேலே ஏறும் மேடு இரு குன்றுகளுக்கு இடையே காணப்பட்டது. அது ஒரு கணவாய் போலத் தோற்றமளித்தது, அங்கே போய் எதிரிகளுடன் சண்டையிட வசதியான இடமாகத் தெரிந்தது. அங்கே விரைவில் போய்விட வேண்டும்.

பல்லக்குகளை விரட்டி அடித்துக் கொண்டு போகச் சொன்னான். அனைவரும் பல்லக்குகளைத் தூக்கிக் கொண்டு முடிந்தவரை வேகமாய் ஓடினார்கள். அனைவர் மனதிலும் தங்கள் உயிருக்கும் மேலான அரங்கன் காப்பாற்றப்பட வேண்டும் என்னும் எண்ணமே மிகுந்திருந்தது. விரைவில் கணவாயை அடைந்தனர். மூச்சிரைக்க இரைக்கக் கணவாய் மேல் ஏறினார்கள். உள்ளே நுழைந்ததும் குலசேகரன் வேறு ஓர் உத்தி செய்ய நினைத்து, சுமார் ஐம்பது பல்லக்குகளைக் காலி செய்யச் சொன்னான். பல்லக்குகளைக் காலியாக வைத்து அவற்றைக் கணவாய் வாயிலில் குவித்து வைக்கும்படி கட்டளை இட்டான். எல்லாவற்றையும் தூக்கி எறிய அவை உடைந்து விழுந்து அந்த இடமே ஒரு குப்பைக் கூளமாக ஆகிவிட்டது. மிச்சம் இருந்த ஐம்பது பல்லக்குகளில் கீழே இறங்கிய பெண்களையும் சாமான்களையும் வைத்து விரைந்து அவர்களைத் தெற்கு நோக்கிப் போகச் சொன்னான். தானும் தன் கூட்டாளிகளும் விரைந்து வரும் படையை எதிர்கொள்வதாகவும் அவர்கள் முன்னேற்றத்துக்குத் தடை விழாமல் பாதுகாப்பதாகவும் கூறி அவர்களை விரையச் சொன்னான்.

பின்னர் அனைவரிடமும் இரவானதும் பெண்கள் அனைவரும் பல்லக்குகளில் இருந்து இறங்கி வெவ்வேறு பகுதிகளுக்குப் பிரிந்து வெவ்வேறு திசைகளில் சென்று மறைந்து விட வேண்டும்.  இவர்களுக்குப் பாண்டிய நாட்டில் திரட்டிய கொற்றவைப் படையின் ஒற்றர்கள் ஆங்காங்கே காத்திருந்து உதவிகள் செய்வார்கள். பெண்கள் அவர்கள் விரும்பும் இடத்துக்குச் செல்லவும் உதவுவார்கள். என்று சொல்லி அவர்களைப் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தான். பின்னர் தன் தோழர்களுடனும், கூட வந்திருந்த 200ஹொய்சள வீரர்களுடனும் மலைப்பகுதிகளின் மேலே ஏறி எதிரே வருபவர்கள் கண்களில் படாமல் மறைந்து கொண்டனர். வீரர்கள் கணவாயை நெருங்கும் வேளையில் திடீரென எதிரே பெரிய அளவில் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. ஆம், குலசேகரன் ஏற்பாடு அது தான். அவர்கள் விரைவாகக் கணவாயின் உள்ளே வரும் தருணம் பார்த்துக் குவிந்திருந்த பல்லக்குகளில் தீயை வைக்க அது நன்கு பிடித்துக் கொண்டு எரிந்தது.

வீரர்கள் தயங்கி நின்றனர். கணவாயைக் கடக்க வேறு வழியும் புலப்படவில்லை. மலைப்பகுதியில் மேலே ஏறித் தான் கடக்க வேண்டும். ஆகவே அவர்கள் மேலே ஏறுகையில் அம்புகள் சரமாரியாக அவர்களைத் தாக்கின. குலசேகரனும் வீரர்களும் ஏறி வருபவர்களைக் கண்காணித்து அம்புகளை எய்து அவர்களைத் திணற அடிக்க வந்தவர்களுக்கோ எதிர்த்துப் போரிட முடியவில்லை. எதிரிகள் மறைந்திருக்கும் இடமே தெரியவில்லை . என்றாலும் சிறிது நேரம் சண்டை போட்டவர்கள் பின்னர் மெல்ல மெல்லப் பின் வாங்கினார்கள். அவர்கள் முற்றிலும் பின் வாங்கிச் சென்றதும் குலசேகரன் அவசரம் அவசரமாகத் தன் படையை நடத்திக் கொண்டு தானும் தெற்கு நோக்கிச் சென்றான்.

அழகர்மலையிலிருந்து அரங்கன் தப்பித் தெற்கே சென்ற தகவல் ஒரு வாரத்திற்கெல்லாம் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தது. மன்னர் உள்ளூர சந்தோஷப் பட்டாலும் தில்லிப் படைகளை நினைத்துக் கலங்கவும் செய்தார். ராணிக்கும் மிகவும் சந்தோஷம். ஆனால் மன்னரின் கலக்கத்தை உறுதி செய்வது போலவே மறுநாள் மதுரையிலிருந்து தில்லித் தளபதியின் எச்சரிக்கை ஓலை வந்து சேர்ந்தது. ஹொய்சள மன்னர் செய்த நம்பிக்கைத் துரோகத்தைக் குறிப்பிட்டு அவர் உதவியினால் மதுரையிலிருந்து பல பெண்களும், பொருட்களும்,, மற்ற செல்வங்களும் கடத்தப்பட்டிருப்பதை தளபதி அறிந்து கொண்டு விட்டதாகவும், இதற்காக ஹொய்சள நாட்டைத் தான் பழி வாங்கப் போவதாகவும் மன்னர் எதற்கும் தயாராக இருக்கும்படியும் அதில் கண்டிருந்தது. வல்லாளர் கவலையுடன் ராணி கிருஷ்ணாயியிடம் அந்த ஓலையைக் காட்டித் தான் பயந்தாற்போல் நடந்திருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

ஆனால் கிருஷ்ணாயி கலங்கவில்லை. இதற்கெல்லாம் ஏன் கலங்க வேண்டும் என்று அவள் கேட்டாள். அதற்குக் கிருஷ்ணாயி நமக்கு தில்லியுடன் தான் நேரடித் தொடர்பு. மதுரைத் தளபதிக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்! ஒரு தொடர்பும் இல்லை. நாம் கப்பம் கட்டுவதும் தில்லிக்குத் தான் ஆகவே கவலைப்பட ஒன்றுமில்லை என்றாள். ஆனால் மதுரையில் இருப்பது தில்லிப் படைதானே என மன்னர் சொன்னார். அதற்குக் கிருஷ்ணாயி, தில்லியிலிருந்து மதுரை எவ்வளவு தொலைவில் உள்ளது! தில்லி அரசர் ஒரு பெரிய படையையும் தளபதியையும் மதுரையில் விட்டு வைத்தால் என்ன ஆகும்? அது ஒரு தனி நாடாக ஆகிவிடும் அல்லவா என்று எடுத்துக் காட்டினாள். இதனால் நமக்கு என்ன லாபம் என மன்னர் கேட்கக் கிருஷ்ணாயி அதற்கு பதில் சொன்னாள்.