எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, March 30, 2019

மீண்டும் குலசேகரன் தூது!

மறுநாள் காலை குலசேகரன் குளித்து முடித்து மன்னரைக் காணச் சித்தமாக இருக்கும் வேளையில் கிருஷ்ணாயி மீண்டும் அங்கே வந்தாள். அவளுடைய இயல்பான கம்பீரமும், அவள் எழிலும் கண்ட குலசேகரன் இப்போது முகம் சுளிக்கவில்லை. அவள் பக்கமும் ஓர் நியாயம் இருப்பதைப் புரிந்து கொண்டவனாக, அவளை, "வாருங்கள் மஹாராணி!" என வரவேற்றான். ஆனால் கிருஷ்ணாயி இந்த மரியாதையை எதிர்பார்க்கவில்லை. முகம் சிணுங்கினாள். "ஸ்வாமி! எனக்கு எதற்கு இந்த மரியாதை எல்லாம்?" எனத் தன் ஆக்ஷேபத்தையும் தெரிவித்தாள். பின்னர் கை தட்டிச் சேடியரை அழைத்துக் குலசேகரனுக்கு உணவு கொண்டு வரும்படி ஆணை இட்டாள். சேடியர் கொண்டு வந்த உணவைத் தன் கைகளாலேயே குலசேகரனுக்குப் பரிமாறி அவன் உண்ணுவதைக் கண்டு மனதிற்குள் மகிழ்ந்திருந்தாள். பின்னர் அவனுக்கு வெற்றிலையும் தன் கைகளால் மடித்துக் கொடுக்க, குலசேகரன் தான் வெற்றிலைத் தாம்பூலம் தரிப்பதில்லை என மறுத்தான்.

கிருஷ்ணாயியும் அவன் விருப்பத்திற்கு மறுப்பேதும் சொல்லாமல், தாம்பூலத்தை அப்படியே தட்டில் வைத்துவிட்டு அவனைப் பார்த்து, "ஸ்வாமி! தங்களால் என் வாழ்வில் ஓர் அர்த்தம் தோன்றியது. கிடைத்தற்கு அரிய பேறுகளைப் பெற்றேன். அதன் பின்னரும் தங்கள் உதவியால் நானும் என் மகனும் உயிரும் தப்பினோம். இப்போது இந்த நேரத்தில் உங்கள் அருகில் மாளிகையில் இருக்கும் பேறும் பெற்றிருக்கிறேன். இதுவே இந்த ஜன்மத்தில் எனக்குக் கிட்ட வேண்டிய/ கிடைத்த பெரிய மகிழ்ச்சி. பேரின்பம்." என்று கண்கள் கலங்கக் கூறினாள். அந்தச் சில நொடிகளில் குலசேகரனுக்குள்ளும் ஏதோ ஓர் உணர்வு புகுந்து அவன் நெஞ்சைப் பிசைந்தது. அவளையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். பழைய நினைவுகளெல்லாம் அவன் கண்களில் நிழலாடின. தலையை உலுக்கிக் கொண்டு நினைவுலகுக்கு வந்தவன் இந்தச் சில நொடிகளில் அவன் அவளோடு பல ஆண்டுகள் தம்பதியராய் வாழ்ந்தது போன்ற உணர்வைப் பெற்றிருப்பதை உணர்ந்து கொண்டான். அவளுக்கும் அப்படியே தோன்றி இருக்கும் என்பதை அவள் கண்களால் அவனைப் பார்த்த பார்வையில் இருந்து ஊகித்து உணர்ந்தான். இந்தப் பிறவியில் மட்டுமல்லாமல் போன பிறவியிலும், பல யுகங்களிலும் கூடக் கிருஷ்ணாயிக்கும் அவனுக்கும் பிரிக்க முடியாததொரு பந்தம் இருந்திருக்க வேண்டும் என்றும் நினைத்தான்.

இவள் உண்மையிலேயே நல்ல பெண்! நன் மகனைப் பெற வேண்டியே என்னை நாடி இருக்கிறாள். உண்மையில் மன்னருக்கு துரோகம் செய்யவும் இல்லை. என்னை ஏமாற்றவும் இல்லை. அப்படி எல்லாம் தறி கெட்டவளாக இருந்திருந்தால் இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ ஆண்மகன்களோடு பழகி இருக்க வேண்டுமே! இல்லை, இல்லை. இவள் உண்மையில் குணவதி! என்றெல்லாம் நினைத்தவன், அவளைப் பார்த்து, "மஹாராணி, உங்கள் மீது எனக்கிருந்த வெறுப்பெல்லாம் போய்விட்டது. நான் உங்களைப் பரிபூரணமாகப் புரிந்து கொண்டு விட்டேன். இப்போது நம்மிருவர் இடையே இருக்கும் இந்த உறவை நான் புனிதமான ஒன்றாகக் கருதுகிறேன்." என்று கூறினான். இதைக் கேட்ட கிருஷ்ணாயி மனம் மகிழ்ந்தது அவள் முகத்தில் தெரிந்தது. கண்களில் கண்ணீர் கசிய அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.

சற்று நேரத்தில் அரண்மனைச் சேவகர்கள் வந்து அவனை மன்னரிடம் அழைத்துச் சென்றார்கள். அங்கே மன்னர் அவனை வரவேற்று சம்பிரதாய விசாரணைகள் செய்த பின்னர் குலசேகரனிடம் மீண்டும் மதுரையோடு போர் தொடுக்க ஆயத்தமாக வேண்டும் எனக் கூறினார். குலசேகரன் திடுக்கிட்டான். இப்போது தான் ஓர் பெரிய போரிலிருந்து மக்கள் சற்றே ஓய்வு கிடைத்து நிம்மதியாக இருக்கிறார்கள். அதற்குள் இன்னொரு பெரிய போரா? அதுவும் வேற்றூரில்? அங்கிருக்கும் படைத்தலைவனுடன்? சுல்தானியப் படை எவ்வளவு பெரியது! குலசேகரன் மன்னனிடம் மெதுவாகத் தற்சமயம் மதுரை மீது படை எடுப்பது அவ்வளவு உகந்தது அல்ல என எடுத்துக் கூறினான். இப்போது நடந்த சண்டையில் சுல்தானியர்கள் எண்ணிக்கையில் மட்டுமல்லாமல் போர் செய்யும் முறையிலும் உக்கிரமாகச் சண்டை போடுவதைச் சுட்டிக் காட்டினான். நம் வீரர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள். சுல்தானியர்கள் போல் உக்கிரமாகச் சண்டை போட மாட்டார்கள். மேலும் சுல்தானியர்கள் போரின் தந்திரங்களும் மாறுபட்டு இருக்கிறது. அதை நாம் முதலில் கற்க வேண்டும். முதலில் நம் படை பலத்தைப் பெருக்க வேண்டும்.

அதற்கு சுல்தானிய வீரர்களை ஆசை காட்டி நம் பக்கம் இழுக்க வேண்டும். அல்லது மதம் மாறி சுல்தானியர்களோடு சேர்ந்து விட்ட நம் வீரர்களை மீண்டும் நம் பக்கம் இழுக்க வேண்டும். அவர்களிடமிருந்து சுல்தானியர்களின் மாறுபட்ட போர்ப்பயிற்சியை நம்மவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். பின்னர் படை பலத்தையும் பெருக்கிக் கொண்டு அதன் பின்னரே நாம் மதுரைக்குப் போருக்குக் கிளம்ப வேண்டும் என்றான் குலசேகரன். அவன் கூறியதைப் பற்றி நன்கு சிந்தித்துப் பார்த்த வீர வல்லாளர் அவன் பேச்சில் உண்மை இருப்பதைப் புரிந்து கொண்டார். ஆனாலும் படை பலத்தைப் பெருக்குவதை நிறுத்தாமல் தொடர எண்ணிக் குலசேகரனிடம், அவன் தென் தமிழ்நாட்டுச் சிற்றரசர்களிடம் சென்று அவர்கள் படையை ஹொய்சள நாட்டுப்படையுடன் இணைத்து மதுரைப்போருக்குத் தயாராக வேண்டும் எனவும், வீர வல்லாளருக்கு வேண்டிய உதவிகளை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளும்படி சொன்னார். அதன்படி குலசேகரனும் தென் தமிழ்நாட்டை நோக்கிப் பயணம் ஆனான்.

No comments: