எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, May 13, 2019

குலசேகரன் மறைந்தான்!

கொட்டும் மழையில் பகல் என்றும் பாராமல், இரவு என்றும் நிற்காமல் ஓட்டமாய் ஓடினாள் வாசந்திகா. சத்தியமங்கலத்தை நோக்கி ஓடினாள். ஒருவழியாக அவள் சத்தியமங்கலத்தை அடைந்த போது நடு நிசி ஆகி விட்டிருந்தது. அரங்கனை எங்கே வைத்திருப்பார்கள் என ஆவலுடன் தேடினாள். மழை இன்னமும் கொட்டிக் கொண்டிருந்தது. கோயிலில் இருக்கிறான் அரங்கன் என்பதைத் தெரிந்து கொண்டு கோயிலை நோக்கி ஓடினாள்.  அங்கே அரங்கன் இருந்த மண்டபப் பகுதி திறந்தே இருந்தது. அரங்கனுக்குக் காவல் இருந்த கொடவர்கள் மூவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.  அகல் விளக்கு வெளிச்சத்தில் எளிய உடையில் அரங்கன் அங்கே அருள் பாலித்துக் கொண்டிருந்தான். வாசந்திகாவின் கண்கள் கலங்கின.கொடவர்கள் சப்தம் கேட்டு எழுந்து விடப் போகிறார்களே என்னும் எண்ணத்துடன் சப்தம் போடாமல் அரங்கன் விக்ரஹத்தைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு மார்பில் சார்த்திக் கொண்டாள் வாசந்திகா! அவளுக்கு இருந்த அவசரத்திலும் பரபரப்பிலும் அரங்கனின் கனம் கூடப் பெரியதாகத் தெரியவில்லை. கோயிலுக்கு வெளியே இறங்கிக் குலசேகரனைக் கிடத்தி இருந்த ஊரை நோக்கித் தெற்கு நோக்கி ஓடத்தொடங்கினாள்.

மறுநாள் காலை பொழுது விடியும்போது குலசேகரனை விட்டு விட்டு வந்த சத்திரத்தை அடைந்து விட்டாள்.  ஆவலுடன் குலசேகரன் என்ன நிலைமையில் இருக்கிறான் எனப் பார்த்தாள். "ரங்கா! ரங்கா" என முனகிக் கொண்டிருந்தான் குலசேகரன். அவனிடம், "சுவாமி! சுவாமி! உங்களுக்காகத் திருவரங்கனை இங்கேயே கொண்டு வந்து விட்டேன்!" என்று கூறிய வண்ணம் குலசேகரன் அருகே அரங்கனை எழுந்தருளப்பண்ணி அவன் கைகளை எடுத்து அரங்கன் மேல் வைத்தாள்.  குலசேகரனுக்குக் கரம் பட்டதுமே அரங்கன் தான் என்பது நிச்சயமாகி விட்டது. அத்தனை வேதனையிலும் அவன் முகம் பளிச்சிட, கைகளை நீட்டி அரங்கனை எல்லா இடங்களிலும் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தான். ஒவ்வொரு பகுதியையும் தொட்டுத் தொட்டுப் பார்த்தான். "வாசந்திகா! வாசந்திகா! நான் பஞ்சுகொண்டானுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவே இல்லை.  அதை நிறைவேற்றாமலே நான் இறக்கப்போகிறேன். எனக்குப் பின்னால் யாராவது தான் அரங்கனை மீண்டும் திருவரங்கம் கொண்டு செல்லப் பிரயத்தனப்பட வேண்டும். வேறு யாராவது செய்வார்கள். அரங்கா, ரங்கா! ரங்கா! உன்னை உன் சொந்த ராஜ்ஜியத்துக்குள் கொண்டு சேர்க்க முடியாத பாவியாகி விட்டேனே! என்னை மன்னித்து விடு! மன்னித்துவிடு! ரங்கா! ரங்கா!" எனப் புலம்பினான் குலசேகரன்.

அரங்க விக்ரஹத்தைத் தன் ஆவல் தீரத் தழுவிக் கொண்டான். அவன் உடலில் புத்துயிர் பெற்றது போல் இருந்தது. தன் பாவத்தை எல்லாம் அரங்கன் மன்னித்து விட்டான் என எண்ணிக் கொண்டான் குலசேகரன். உடல் வேதனைகள் கூடக் குறைந்த மாதிரி எண்ணிக் கொண்டான். எங்கோ காற்றில் பறப்பது போல் உணர்ந்தான். இத்தகையதோர் அதிசய உணர்வோடு மேலும் ஒரு வாரம் குலசேகரன் உயிரோடு இருந்தான். ஆனால் எட்டாம் நாளன்று அவன் உடலில் மாறுதல்கள் ஏற்பட ஆரம்பித்தன. திடீரெனச் சோர்வு தலை தூக்கியதோடல்லாமல் வேதனைகள் வெளிப்படையாய்த் தெரிய ஆரம்பித்தன. இரவும், பகலும் தூங்க முடியவில்லை.வாசந்திகாவும் தூங்க வில்லை. நினைவு போய்ப் போய் வந்தது. பல்வேறு நினைவுகளில் மோதுண்டு என்னென்னவோ பிதற்றினான். புலம்பினான்.  வாசந்திகா அவனை விட்டு அகலவில்லை. "சுவாமி!சுவாமி!" எனக் கூறிய வண்ணம் அவன் உடலைத் தடவிக் கொடுத்துக் கொண்டு அவன் கைகளைப் பற்றி ஆறுதல் சொல்ல முயன்று எல்லாவற்றிலும் தோல்வி அடைந்து கொண்டிருந்தாள் வாசந்திகா.

குலசேகரன் இப்போது புலம்பல்களை நிறுத்தி விட்டான். "ரங்கா! ரங்கா!" என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வரவில்லை. நெஞ்சு ஏறி ஏறி இறங்கியது. கண்கள் செருகிக் கொள்ள ஆரம்பித்தன. மிகுந்த முயற்சியோடு தன் கைகளை நீட்டினான். அவன் மனதைப் புரிந்து கொண்ட வாசந்திகா அரங்கன் விக்ரஹத்தை அவன் பக்கம் நகர்த்தினாள். கைகளை நீட்டி அரங்கன் விக்ரஹத்தைத் தொட்ட குலசேகரன் முகம் ஒரு கணம் மலர்ந்தது. அப்படியே அவன் கைகள் அரங்கன் விக்ரஹத்தின் பாதங்களைப் பிடித்துக் கொண்டன. குலசேகரனின் அந்திம காலம் நெருங்கி விட்டதைப் புரிந்து கொண்ட வாசந்திகா த்வய மந்திரமான, " ஶ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே! ஶ்ரீமதே நாராயணாய நமஹ!" என்று உச்சரித்துக் கொண்டே இருந்தாள். குலசேகரன் கரங்கள் அரங்கன் பாதங்களைத் தொட்டுக் கொண்டே சிறிது நேரம் இருந்தன. பின்னர் அவன் உடலில் இருந்து ஜீவன் பிரிந்ததும் கரங்கள் தளர்ந்து கீழே விழுந்தன. குலசேகரன் நாராயணனோடு ஐக்கியம் ஆகி விட்டான். மற்ற எவருக்கும் கிடைக்காத புண்ணியப் பேறு அவனுக்கு வாய்த்தது. அரங்கன் காலடிகளில் தன் உயிரை விடும் பேறு அவனுக்குக் கிடைத்தது.

வாசந்திகா அவன் மரணத்தை எதிர்பார்த்திருந்தாலும் அவளால் தாங்க முடியவில்லை. அப்படியே  வேரறுந்த மரம் போல் கீழே விழுந்து அவன் மேல் புரண்டு அழுதாள்.

No comments: