எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, February 10, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்

இவனின் காலத்தில் தான் ஶ்ரீரங்க விமானத்தின் உட்சுவர்களுக்குத் தங்கத் தகடுகள் வேயப்பட்டன. கோயிலின் மடைப்பள்ளியும் சீரமைக்கப்பட்டு பிரசாதங்கள் செய்யவும், எடுத்து வைக்கவும் தங்கப் பாத்திரங்கள் வழங்கப்பட்டன.  சித்திரைத் திருவிழாவும் ஜடாவர்மன் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டதாகவும், இவனால் ஒரு தங்கப் பல்லக்குப் பெருமாளுக்கு அளிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. சுந்தர பாண்டியனால் கோயில் விமானத்துக்கு மூன்று தங்கக் கலசங்கள் செய்து அளிக்கப்பட்டன.  இதைத் தவிரவும் அவனால் அளிக்கப்பட்ட பல பரிசுகளி, ரத்தின மாலை, கற்கள் பதிக்கப்பட்ட கிரீடங்கள், தங்கத்தினால் செய்யப்பட்ட ஆதிசேஷன், கருடன், நல் முத்துக்களால் ஆன மாலை, பல்வேறு விதமான ஆபரணங்கள், முத்து விதானம், தங்கத்தினால் செய்யப்பட்ட விதவிதமான பழங்கள், தங்க ரதம், சிம்மாதனம், ஆயுதங்கள், பாத்திரங்கள் தங்கத்தினால் ஆடைகள், தங்கக் கவசங்கள் போன்றவையும் வழங்கப்பட்டன.

இவை பாண்டியனுக்கு எல்லாத் தரப்பு மக்களிடமிருந்தும் பெரு மதிப்பைப் பெற்றுத் தந்தது. தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் இரு கவிதைகள் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனின் போர் வெற்றிகள் குறித்தும் அதன் மூலம் ஶ்ரீரங்கநாதருக்கு அவன் செய்த சேவைகள் குறித்தும் காணப்படுகின்றன. அவன் தான் அதிக அளவில் தங்கத்தைக் கோயிலுக்கு அளித்துக் கோயிலின் முக்கிய இடங்கள் தங்கத்தால் ஒளிரும்படி செய்தான் என்றும், அவன் காலத்திலேயே கோயில் தனிப் பெரும் புகழ் பெற்று விளங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இப்படித் திடீரென கணக்கில்லாச் சொத்துக்கள் வந்து சேர்ந்ததில் கோயிலின் நிர்வாகத்துக்கு மூச்சுத் திணறியது.

தங்கத்தினால் செய்த கோயில் விமானங்கள், கலசங்கள், சந்நிதிகள் ஆகியவற்றிற்குப் பாதுகாப்புப் போட வேண்டி இருந்தது.  கோயிலுக்கு என அளிக்கப்பட்ட ஆபரணங்களையும் கவனத்துடன் பாதுகாத்து ஒவ்வொரு திருவிழாக் காலங்களிலும் பெருமாளுக்கு அணிவித்துப் பாதுகாப்பாக எடுத்து வைக்கத் தனியாக ஒரு குழுவை நியமித்தனர்.  அதோடு இல்லாமல் மன்னன் நிர்வாகக் கமிட்டியை மாற்றியமைக்கும்படியும் கட்டளையிட்டிருந்தான்.  அது வரையிலும் கோயிலின் நிர்வாகம் குறிப்பிட்ட ஒரு குழுவினரிடமே இருந்து வந்தது.  இப்போது அது மற்றக் குழுவினரிடமும் பகிரும் வகையில் மாற்றியமைக்கச் சொல்லி மன்னனின் கட்டளை கிடைத்தது. இதன் மூலம் பொறுப்புகள் பகிரப் பட்டதோடு இல்லாமல் ஒருவர் மற்றவரைக் கண்காணிப்பதன் மூலம் பொருட்கள் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கிடைத்தது. நிர்வாகக் கமிட்டியினரின் நடவடிக்கையும் அனைவராலும் கண்காணிக்கப்பட்டது.

ஆரியர்கள் எனப்படும் குழுவினர் மட்டுமில்லாமல் உள்ளூர் மக்களையும் கோயிலின் பொருட்கள் பாதுகாக்கப் படுவதில் ஈடுபடுத்த வேண்டும் என்பது மன்னன்கட்டளை.  மன்னனின் கட்டளையை அந்த சர்வேசனின் கட்டளையாகவே ஏற்கப்பட்டது.  எல்லாத் தரப்பு குழுவினரிடமிருந்தும் பொறுக்கி எடுக்கப்பட்ட சிலரைப் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்தனர். கோயிலின் நிர்வாகக் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. கோவனாவர், ஶ்ரீரங்கம் அரையர், தலையிடுவார், ஆராட்டமுகி அணுக்கர், போன்றவர்களிலிருந்து இருவரும், துமரையர்கள், வாசல் ஆர்யர் ஆகியோரிலிருந்து ஒருவருமாக மொத்தம் பத்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதை அரங்கனே அப்போது இருந்த அவனுடைய அழகிய மணவாளப் பெருமாள் என்னும் பெயரில் கட்டளை பிறப்பித்ததாகவும், அந்தக் கட்டளை பிறப்பிக்கும்போது அழகிய மணவாளப் பெருமாள் (இவரே இப்போது நம்பெருமாள் என அழைக்கப்படுபவர்) பூபாலராயன் சிம்மாதனத்தில் தன் புனிதமான பள்ளியறையில் தேவியருடன்  வீற்றிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. கடவுளையே அரசனாக நினைத்து ஆணைகள் அவன் பெயராலேயே பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன எனத் தெரிய வருகிறது. இதை ஜீயர்களும், ஶ்ரீகார்யக் காரர்களும் கூட ஆமோதித்திருக்கின்றனர்.



தகவல் உதவி: திரு கலைக்கோவன் "தி ஹிந்து" ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரை, Srirangam's Golden Era.


Saturday, January 31, 2015

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஶ்ரீரங்கத்திற்கு ஒரு பொற்காலம் எனில் அது பிற்காலப் பாண்டிய சாம்ராஜ்யம் ஏற்பட்ட போது என்று சொல்லலாம். பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் ஶ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகம் சீரமைக்கப்பட்டதோடு கோயிலும் பலமுறை சீரமைக்கப்பட்டது. இங்கே காணப்படும் சுமார் 70 கல்வெட்டுக்களில் பல கி.பி. 1225க்கும் கி.பி. 1344க்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற கோயில் புனரமைப்பு வேலைகள் குறித்தும், பாண்டிய மன்னர்களால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட எண்ணற்ற விலை மதிக்க இயலாப் பரிசுகள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கின்றன. சோழநாட்டு அரசனாக இருந்த மூன்றாம் ராஜராஜனைத் தோற்கடித்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் தான் பாண்டியர்கள் சாம்ராஜ்யம் புத்துணர்வு பெற்று எழுந்தது. அப்போது தான் ஶ்ரீரங்கம் கோயிலிலும் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டன.

பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையில் அடிக்கடி நடந்த மோதல்களினால் கோயில் வளாகத்துக்குள்  நடைபெற்ற மோசமான நடத்தைகளை விசாரிக்க வேண்டி ஒரு பெரிய கூட்டம் அப்போது தான் கோயிலின் வரலாற்றிலேயே முதல் முதலில் நடைபெற்றது. இவர்களில் ஜீயர்கள், ஶ்ரீகார்யக்காரர்கள், பாகவதர்கள், பல்வேறு விதமான தொண்டுகளைச் செய்து வரும் நம்பிமார்கள், வாயில் காப்போர்கள், பட்டாசாரியார்கள், ஶ்ரீரங்கம் கோயிலின் அலுவலகத்தைச் சேர்ந்த பல்வேறு ஊழியர்கள், பதினெட்டு மண்டலங்களைச் சேர்ந்த ஶ்ரீவைணவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ராஜமஹேந்திரன் தெருவின் மேற்குப் பகுதியில் கூடினார்கள். பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இறந்த காலத்தில் கோயிலுக்குப் பாதகம் செய்தவர்கள் நீக்கப்பட்டுப் புதியவர்கள் நியமிக்கப்பட்டனர்.  கோயிலின் நிர்வாகத்தைச் செம்மை செய்து முழு அர்ப்பணிப்பு உணர்வோடு தொண்டாற்றக் கூடியவர்கள் நிர்வாகத்தில் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் நிர்வாகச் சீரமைப்புச் செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன் பின்னர் மாறவர்மனுக்குப் பின்னர் வந்த ஜடாவர்மன் சுந்தர பாண்டியனும்  திருக்கோயிலில் பொன்னால் திருப்பணி செய்ததால் "பொன்வேய்ந்த பெருமாள்" என அழைக்கப்பட்டான். இவன் காலத்தில் பொன்னாபரணங்கள் மட்டுமின்றி, பொற்கலசங்கள், விமானங்கள், மற்றும் விலைமதிக்க முடியாப் பல ரத்தினங்களால் ஆன ஆபரணங்கள் கோயிலுக்கு வழங்கப்பட்டது. பாண்டியனே துலாபாரம் மேற்கொண்டு தன்னுடைய எடைக்கு எடை பொன்னைக் கொடுத்ததாகவும் ஒரு கல்வெட்டு கூறுவதாகத் தெரிய வருகிறது.

பல்வேறு போர்களில் ஈடுபட்டு வென்று கிடைத்த பொருட்களை எல்லாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் ஶ்ரீரங்கம் கோயிலுக்குக் கொடுத்ததாகக் கேள்விப் படுகிறோம். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலே தான் நரசிம்மருக்கும், விஷ்வக்சேனருக்கும் தனித்தனி சந்நிதிகள் கட்டப்பட்டதாகவும் அறிகிறோம். சந்நிதிகள், விமானங்கள்  தங்கத் தகடுகள் வேயப்பட்டு கோபுரம் தங்கமுலாம் பூசப்பட்டன. மஹாவிஷ்ணுவின் அர்ச்சாவதாரம் ஒன்றும் தங்கத்தில் வைக்கப்பட்டது.


தகவல் உதவி: திரு கலைக்கோவன் "தி ஹிந்து" ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரை, Srirangam's Golden Era.

Tuesday, January 13, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

சப்த லோகங்களையும் உள்ளடக்கியது என்னும் பொருளில் ஏழு பிரகாரங்கள் கொண்டுள்ள ஶ்ரீரங்கம் கோயிலில் மூன்று பிரகாரங்களின் இரு பக்கங்களிலும் குடியிருப்புகளும் நான்கு பிரகாரங்களில் பிரம்மாண்டமான மண்டபங்களும் உள்ளன. ஆயிரங்கால் மண்டபம் மிகப் பெரியது ஆகும்.  பல்வேறு விதமான சேனைகளுடன் ஓர் ஊரே தங்குமளவுக்குப் பெரிதான ஆயிரங்கால் மண்டபத்தில் தற்சமயம் பாதுகாப்புக்காரணங்களுக்காக யாரையும் தங்க அனுமதிப்பதில்லை. ஏழு பிரகாரங்களைத் தவிர ஊரை உள்ளடக்கிய அடையவளைஞ்சான் திருச்சுற்றில் தான் ராஜகோபுரம் அமைந்துள்ளது.

மார்கழி மாதம் நடைபெறும் வகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு வைபவம் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் மூன்றாம் பிரகாரத்திலிருந்து நான்காம் பிரகாரம் செல்லும் வழியில் பெரிய சந்நிதிக்கு வடபுறம் உள்ளது.  இது கம்பராமாயணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட மண்டபத்துக்கு அருகாமையில் உள்ளது. வருடாவருடம் வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை திறக்கப்படும் பரமபத வாசல் அடுத்த ஒன்பது நாட்களும் இராப்பத்து உற்சவம் முடியும் வரை திறந்திருக்கும்.  இந்தப் பரமபத வாசல் வழியாகவே தினம் தினம் நம்பெருமாள் இராப்பத்து உற்சவம் முடியும் வரை சென்று வருவார்.  அவருடன் அடியார் திருக்கூட்டமும் செல்லும்.  இந்த வாசல் வழி சென்றால் வைகுந்த பிராப்தி நிச்சயம் என்னும் ஐதீகம் உள்ளதால் இது திறந்திருக்கும் ஒன்பது நாட்களும் பெருமளவில் பக்தர் கூட்டம் கோயிலுக்கு வருவார்கள்.

இந்த நான்காம் பிரகாரத்தின் கிழக்குப் பக்கம் மணல்வெளியாகக் காணப்படும்.  இங்கே தான் வைகுண்ட ஏகாதசியின் இராப்பத்து உற்சவத்தின் போது வேடுபறி நடக்கும். வையாளி சேவை இங்கே நடைபெறும் என்பதால் மணல் வெளியாக அமைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு கூற்று இருந்தாலும் பாதங்களுக்கு நல்ல பயிற்சி என்பதாலும் இங்கே மணலாக அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுவார்கள்.  இந்த மணல் வருடா வருடம் மாற்றப்படும்.  இந்த நான்காம் பிரகாரத்தில் காணப்படும் சந்திர புஷ்கரணிக்கரையில் கோதண்டராமர் சந்நிதியைக் காணலாம்.  ஶ்ரீரங்கத்தில் பிரகாரங்களில் மேலப் பட்டாபிராமர் சந்நிதி, கீழப் பட்டாபி ராமர் சந்நிதி, கோதண்டராமர் சந்நிதி ஆகியவை மிகவும் பிரபலம்.

கோதண்டராமர் சந்நிதியிலிருந்து சற்று உள்ளே பரமபதநாதர் சந்நிதியில் ஶ்ரீபரமபதநாதர் ஶ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி சமேதராக அருள் பாலிக்கிறார்.  நித்யசூரிகள் புடைசூழ ஆழ்வார்கள், ஆசாரியர்கள் ஒருசேரக் காட்சி அளிக்கக் காட்சி தரும் பரமபத நாதர் சந்நிதியில்  தான் கண்ணாடி அறை ஆண்டாள் சந்நிதியும் இருக்கிறது. இந்தப் பரமபத நாதர் ஶ்ரீரங்கம் பெரிய பெருமாள் இங்கே குடிவரும் முன்னரே இருந்தவர் என்றும், சந்திர புஷ்கரணியும் அப்போது இருந்ததாகவும், இவற்றைப் பார்த்துவிட்டே விபீஷனண் ஶ்ரீரங்க விமானத்தோடு இங்கே இறங்கியதாகவும் சொல்கின்றனர்.  இப்போது நடைபெறும் திருவத்யயன உற்சவம் எனப்படும் பகல் பத்து, இராப்பத்து உற்சவம் ஆதிகாலங்களில் திருமங்கையாழ்வார் இருந்தபோது  இந்த சந்நிதியில் தான் நடத்தப் பட்டிருக்கிறது.  பின்னர் நாதமுனிகள் காலத்தில் 20 நாள் விழாவாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.





கண்ணாடி அறை ஆண்டாள் சந்நிதியில் மார்கழி அலங்காரம்;

படம் கூகிளார் வாயிலாக தினமலருக்கு நன்றி.

Sunday, January 11, 2015

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

ஶ்ரீரங்கத்திலிருந்து உற்சவர் அழகிய மணவாளர் (இவர் தான் பின்னால் நம்பெருமாள் எனப் பெயர் மாற்றம் பெற்றவர்) ஊர் ஊராக அலைய ஆரம்பித்ததும், சில வருடங்கள் அவர் இருக்குமிடம் தெரியாமலேயே இருந்து வந்தது.  அப்போது உள்ளூர்க்காரர்கள் புதியதொரு விக்ரஹத்தைச் செய்து உற்சவர் இடத்தில் அமர்த்தினார்கள்.  பின்னால் திருமலையில் நம்பெருமாள் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டு அவரும் ஶ்ரீரங்கம் திரும்பி வந்ததும், அனைவருக்கும் இத்தனை நாட்களாக அவர் இடத்தில் இருந்தவரை என்ன செய்வது எனத் தோன்றியது!


இவரும் திருவரங்கத்தைச் சேர்ந்தவர் தானே என்னும் எண்ணம் தோன்றிய கோவில் ஊழியர்கள் அவரை நம்பெருமாள் அருகிலேயே வைத்தனர்.  திருவரங்க மாளிகையார் என்னும் புதுப் பெயரைச் சூட்டினார்கள்.  யாகசாலை நாட்களில் இவரே அங்கு எழுந்தருளுவார் எனவும் அப்போது ,"யாகபேரர்" என அழைக்கப்படுவார் என்றும் தெரிய வருகிறது.  ஆனால் இப்போது அவர் நம்பெருமாளுடன் கருவறையில் காணப்படவில்லை.  எங்கே இருக்கிறார் என விசாரிக்க வேண்டும்.  இங்கிருக்கும் சிலரை விசாரித்ததில் அவர்களில் பலருக்கு இந்த விஷயமே தெரியவில்லை.  தெரிந்தவர்களைக் கேட்டுச் சொல்கிறேன்.

இந்தக் கோயிலின் மொத்த சந்நிதிகள் 54 ஆகும்.  ஒவ்வொரு சந்நிதிக்கும் தனித்தனியான நிவேதனங்களும் உண்டு.  இவை அனைத்தும் இங்குள்ள திருக்கொட்டாரம் எனப்படும் இடத்தில் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது.  ஒவ்வொரு சந்நிதியையும் சேர்ந்த அர்ச்சகர் அல்லது மடைப்பள்ளி ஊழியர் அங்கு வந்து அன்றைய நிவேதனத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள். உபயதாரர்கள் அளிக்கும் காணிக்கைப் பொருட்களில் இருந்து அனைத்தும் இங்கேயே சேமிக்கப்படுகின்றன.

இந்த நிவேதனங்கள் பெரும்பாலும் பாலிலும், நெய்யிலுமே செய்யப்படுகின்றன.  விளக்குகள் கூடச் சுத்தமானப் பசு நெய்யிலேயே எரிக்கப்படுகின்றன. ஆதிசேஷனுக்கு மிகவும் பிடித்தது பால் தான் என்பதால் தினமும் இரவு நேரம் அரவணை வழிபாட்டின் போது ஆதிசேஷனுக்குப் பால் அமுது செய்விக்கப்படும்.  பெருமாளுக்கு அரவணை நிவேதனம் செய்யப்படும். இவற்றைப் பிரசாதமாக வழங்குவார்கள்.  இதைத் தவிர மாலையிலும் க்ஷீரான்ன வழிபாட்டின் போது பாலமுது தான் ஶ்ரீரங்கநாதருக்கு நிவேதனம் செய்யப்படும்.



படத்துக்கு நன்றி: கூகிளார் வாயிலாக தினகரன் தினசரியில் வந்தது. 


"ரங்கனே தெய்வம், பொங்கலே பிரசாதம், கம்பமே காவிரி" என்பது இங்குள்ள பிரபலமான சொல்வழக்கு.  ஶ்ரீரங்கம் கோயிலில் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் எனப்படும் அரவணை, புளியோதரை, அப்பம், அதிரசம், தேன்குழல், திருமால்வடை, தோசை போன்றவற்றோடு தினம் காலை வழிபாட்டில் கோதுமை ரொட்டியும், வெண்ணெயும் நிவேதனம் செய்யப்படுகிறது.  தாயாருக்கு மாலை வேளைகளில் புட்டு அமுது செய்யப்படும்.  வைகுண்ட ஏகாதசியன்று சிறப்பு நிவேதனமாக சம்பார தோசை, செல்வரப்பம்,ஆகியவையும் கடைசி நாளான நம்மாழ்வார் மோக்ஷத்தன்று "கேலிச் சீடை"யும் நிவேதனம் செய்யப்படும்.

Saturday, September 06, 2014

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!


முன் பதிவு

அரங்கனை மேற்கண்ட பதிவில் செல்பவர்களோடு பிரயாணம் செய்ய விட்டு விட்டுக் கொஞ்சம் பின்னோக்கிப் போய் அரங்கமாநகரில் நடந்த நிகழ்வுகளைப் பார்ப்போம். ஏற்கெனவே  பனிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 1311-ஆம் ஆண்டிலே மாலிக்காஃபூர் தலைமையிலே நடந்த படையெடுப்பில் களவாடிச் செல்லப்பட்ட அழகிய மணவாளர் விக்ரஹம் குறித்தும் பின்னர் அது திரும்ப அரங்கம் கொண்டுவரப் பட்டது குறித்தும் அறிந்து வைத்திருந்த இப்போதைய சுல்தான் தன் மகனைத் தளபதியாக அனுப்பிக் கட்டாயமாய் ஶ்ரீரங்கம் நகரில் நுழைந்து வேண்டிய மட்டும், பொன், மணி, ஆபரணங்கள், விக்ரஹங்கள் என எடுத்து வரும்படி கட்டளை இட்டிருந்தான்.  ஆகவே உலுக்கான் என அழைக்கப்பட்ட அந்தத் தளபதியும், (இவன் தான் பின்னர் அரியணை ஏறி முகமது-பின் - துக்ளக் என்னும் பெயரில் ஆட்சி புரிந்தவன்) தனக்கு வழிகாட்டிச் சென்ற ஹொய்சளர்களை அரங்கமாநகருக்குள்ளே நுழைந்து செல்லும்படி கட்டளை இட்டிருந்தான்.  வேறு வழியின்றி ஹொய்சளப் படைகள் முதலில் வழிகாட்டியபடி ஶ்ரீரங்கம் நகருக்குள் நுழைந்தது.

அதற்குள்ளாகக் கோயிலில் பெரிய பெருமாள் சந்நிதிக்குக் கல்திரை போட்டு மூடியதோடு அல்லாமல், தாயார் சந்நிதியின் மூலவரை அங்கிருந்த நந்தவனத்தில் ஒரு வில்வ மரத்தடியில் ஒளித்து வைத்துவிட்டு உற்சவரை அரங்கன் சென்ற திசைக்கு எதிர்த் திசையில் அனுப்பி வைத்தனர். இனி கடவுள் விட்ட வழி என வேதாந்த தேசிகரும் களைப்புடன் அமர்ந்த நிலையில் அவருக்கு அரங்கன் ஊர்வலம் தென் திருக்காவிரியின் எதிர்க்கரையில் ஒரு தோப்பினுள் மறைந்த வண்ணம் தேசிகர் வருகைக்குக் காத்திருப்பது சொல்லப்பட்டது. ஆனால் தேசிகர் இத்தனை மக்களையும், அரங்கனின் பரிசனங்களையும் விட்டுவிட்டுத் தான் மட்டும் செல்வது எப்படி என மறுத்துக் கொண்டிருக்கையில் அங்கே விவாதம் ஆரம்பித்தது. அப்போது கோயிலின் மூன்றாவது திருச்சுற்றில் காவலுக்கு இருந்தவர்கள் காதில் எச்சரிக்கை முரசொலி கேட்டது.

அனைவரும்  திடுக்கிட்டுப் போய்ப்பார்க்க, டில்லி சுல்தானின் படை வடகாவிரியைக் கடந்து வந்து கொண்டிருக்கும் செய்தி கிட்டுகிறது. ஆற்றில் ஆழம் காணவேண்டிப் பதிக்கப்பட்டிருந்த கொண்டைக் கோல்கள் அனைத்தும் அரங்கன் கோயிலைக் காத்து நின்ற படையால் அகற்றப்பட்டதால் டில்லி வீரர்களுக்கு  ஆற்றின் ஆழம் புரிந்து அதன் பின்னர் ஆழமில்லாத இடங்களைத் தெரிந்து கொண்டு ஆற்றைக் கடக்க நேரம் பிடிக்கும் என இங்கிருந்தவர்கள் நினைத்தனர். ஆனால் அவர்களோ விரைவில் கண்டு பிடித்து விடிவதற்குள்ளாக ஆற்றின் மறுகரைக்கு வந்துவிட்டனர்.  இதைக் கண்ட ஶ்ரீரங்கம் படை வீரர்கள் திகிலுடன் கோயிலுக்குச் செய்தியைச் சொல்லப் பறந்தனர்.  ஹொய்சளப் படைகள் வழிகாட்ட, டில்லிப் படைகள் அணிவகுத்து வந்து கொண்டிருந்தன.  அவற்றிற்கு ஓர் முடிவே இல்லாதது போல் நீளமாக வந்து கொண்டே இருந்தன.  அலங்காரப் பல்லக்கு ஒன்றில் டில்லி சுல்தான் கியாசுதீனின் மூத்த மகன் உல்லு கான் எனப்படும் உலுக்கான் அமர்ந்திருந்தான்.  போர் புரியும் திறமைகளை நன்கு கற்றறிந்தவன் எனப் பெயர் பெற்றிருந்த அவன் தன்னைச் சுற்றிலும் இங்குமங்கும் காணப்படும் காட்சிகளைக் கண்டு மனதில் பதிய வைத்துக் கொண்டு வந்தான்.

இங்கே கோயிலில் மூன்றாவது திருச்சுற்றில் வரும்படைகளை வரவேற்க வேண்டி அண்டாக்களில் எண்ணெயும், நெய்யும் கொதித்துக் கொண்டிருந்தது.  மரக்குச்சிகள், கொம்புகள், இரும்புத் துண்டங்கள் போன்றவை கூர் தீட்டப்பட்டு வீரர்கள் கைகளை அலங்கரித்தன.  பஞ்சு கொண்டான் என்னும் முதிய வீரர் படைகள் வரும் வடக்கு வாயிலையே பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தார். உடைவாளை இறுகப் பற்றிய வண்ணம் டில்லிப் படைகள் வரக் காத்திருந்தார் அவர்.  டில்லிப் படைகள் அடிக்கும் நகராவின் சப்தமும், முரசுகளின் சப்தமும் ஓங்கி ஒலித்தன. ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்களை இப்போதுள்ள கருட மண்டபத்தின் பின்னே இருந்த பட்சிராஜன் தோப்பு என்னும் காட்டுக்குள்ளிருந்து டில்லிப் படைகள் துரத்த ஆரம்பித்தனர்.

கோயிலினுள் வெளீயே நடப்பவை தெரியாமல் திருமடைப்பள்ளியில் சமையல் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.  அப்போது தான் ஆர்யபடாள்  வடக்கு வாயிலுக்கே டில்லிப் படைகள் வந்துவிட்ட செய்தியும் கிடைத்தது.  குதிரைப்படை முன்னால் வந்தது.  அந்த வீரர்கள் மெல்ல மெல்ல முன்னேறி நான்காம் திருச்சுற்றின் இருபுறங்களையும் சுற்றி வளைத்துக் கொண்டது.  அவர்களுக்குப் பின்னால் பூரண ஆயுதங்கள் தரித்த காலாட்படை வீரர்கள் பரபூரண கவசத்தோடு அணிவகுத்து நின்றனர்.  பின்னர் திடீரென அத்தனை வீரர்களும் பின் வாங்க, அவர்களில் பத்துப் பேர் மட்டும் முன்வந்து கோயிலுக்குள் இருக்கும் பொருட்களை எல்லாம் சுல்தானிடம் ஒப்படைக்குமாறும், இல்லை எனில் அநாவசியமாகப் போர் புரிந்து உயிரை விட வேண்டி இருக்கும் எனவும், சுல்தானுக்குப் பணிந்து போவது தான் ஒரே வழி எனவும் எச்சரிக்கை செய்தனர்.

Wednesday, September 03, 2014

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்--திருக்கோயில் வழிபாட்டு முறைகள்--பகுதி 8

இதைத் தவிரவும் சரக்கறைத் தலைவர் கோயிலுக்குச் சேர்ந்த பசுக்களைத் தலைமை இடையன் முன்னிலையில் பால் கறப்பது, கறந்த பாலை ஒப்படைத்தல் போன்றவற்றோடு கோயிலுக்கு அளிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், புறாக்கள், பசுக்கள், மான்கள், மயில்கள், கிளிகள் ஆகியவற்றையும் ஒழுங்காகப் பராமரிக்கிறார்களா என்று கண்காணிப்பார். மாட்டுத் தொழுவங்கள் பல இருந்தன.  ஒவ்வொரு தொழுவமும் ஒவ்வொரு இடையன் தலைமையில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஒரு நாளைக்கு இருவேளைகள் இடையர்களின் மேற்பார்வையில் பால் கறக்கப்பட்டுக் கோயிலுக்கு அளிக்கப்பட்டு வந்தது.

இவர்களிலேயே கோயில் கண்காளிப்பாளர் ஒருத்தரும் இருந்தார். அவர் திருமதில்கள், கோயில் கோபுரங்கள் ஆகியவற்றின் மேல் வளர்கின்ற செடிகள், மரங்கள், புல்லுருவிகள் ஆகியவற்றை நாள்தோறும் அகற்றுவதற்கு ஆட்களை நியமித்து வேலை வாங்குவார். கட்டிடங்களைப் பழுது பார்ப்பார்.  புதிய கட்டிடங்கள் தேவைப்பட்டால் ஆட்களை நியமித்துக் கட்டிக் கொடுப்பார்.  மற்ற அலங்கார வேலைகளான திரைச்சீலைகள், தொங்கல்கள், தோரணங்கள் ஆகியவற்றை அழகாய் அமைக்கத் திட்டங்கள் செய்து, நித்திய, நைமித்திகத் திருவிழாக் காலங்களில் பந்தல்கள் அமைத்து, அவற்றை அழுகு படுத்துவார்.  இவருக்குத் தனியாக இரண்டு ஏகாங்கிகள் உண்டு.

பூந்தோட்டங்களைக் கவனித்துக்கொள்ளவும், பருவகாலத்துக்கு ஏற்ப மலர்ச்செடிகளை நட்டுப் பயிராக்கவும்  அவற்றைப் பாதுகாக்கவும் தனியாகக் கண்காளிப்பாளர் இருப்பார்.  இவர் இதோடு கூட கோயிலுக்குத் தேவையான காய்கறிகள், கரும்பு போன்ற சாறுள்ள பயிர்கள் ஆகியவற்றையும் பயிர் செய்து தேவையான காய்களைத் திருமடைப்பள்ளிக்குச் சேர்ப்பிப்பார்.  சரக்கு அறைகளில் பொருட்கள் திருட்டுப் போகாமல் பாதுகாப்பதும், திருட்டுப்போனால் அவற்றைக் கண்டறிந்து உரிய தண்டனை கொடுப்பதும் இவர் பொறுப்பாகும்.

கோயிலைச் சார்ந்த நிலங்களுக்குத் தனியான கண்காணிப்பாளர் உண்டு. பருவ காலங்களுக்கு ஏற்றாற்போல் விதை விதைத்தல், பயிர் செய்தல், விளைந்தவற்றைத் தொகுத்துத் திரட்டி சரக்கு அறைகளில் உரிய இடத்தில் சேர்ப்பித்தல், கோயிலைச் சார்ந்த கிராமங்களில் இருந்து கோயிலுக்கு ஊழியர்களைத் தேர்ந்தெடுத்தல், கோயிலைச் சார்ந்த மருத்துவமனையைக் கண்காணிக்க ஆட்களை நியமித்தல், மருத்துவமனை நன்கு நடைபெறுகிறதா என மேற்பார்வையிடுதல் ஆகியவை இவர் பணி.  இந்த மருத்துவ மனை கோயிலுக்கு உள்ளே இருந்ததாகவும், கிராமம் ஒன்றை அந்த மருத்துவமனையின் செலவுகளுக்காக வழங்கப் பெற்றிருந்ததாகவும் அறிய வருகிறோம். மருத்துவமனை சிறப்பாக நடைபெற்றதாகவும், கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.  இடையில் ஏற்பட்ட அந்நியர் படையெடுப்பினால் இது நலிவுற்றுப் பின்னர் கி.பி. 1493 ஆம் ஆண்டில் இருந்து மீண்டும் தொடங்கியது எனக் கோயில் ஒழுகு சொல்கிறது.

இது வரை சொன்னவை எல்லாம் ஶ்ரீராமாநுஜரால் கோயிலில் சீரமைக்கப்பட்ட நிர்வாகங்களின் நடைமுறைகள் என்றும் கோயில் ஒழுகு சொல்கிறது.  ஆனால் இந்த நிர்வாகமும், சீரமைப்பும், சமயத் தலைவர்களின் பொறுப்பிலேயே கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரையிலும் இருந்து வந்ததாகவும் சோழ அரசர்களோ, பாண்டிய அரசர்களோ இவற்றில் குறுக்கிடாமல் சிறிதும் மாற்றாமல் அதன் பாதுகாவலர்களாக மட்டும் இருந்து வந்ததாகவும் தெரிய வருகிறது.  ஆனால் பின்னர் 1311, 1323 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட அந்நியர் படையெடுப்பின் பின்னர் இவற்றில் மெல்ல மெல்ல மாற்றங்கள் ஏற்பட்டன.  அவற்றைத் திருவரங்கன் ஆகிய நம்பெருமாள் அரங்கத்துக்  கோயிலை விட்டுச் சென்ற உலாவில் இருந்து மீண்டும்  பார்க்கலாம். 

Saturday, August 30, 2014

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! திருக்கோயில் வழிபாட்டு முறைகள் -- பகுதி 7

கோயில் ஆட்சியாளரின் பணிகளைக் குறித்துப் பார்ப்போமா?  கோயில் ஆட்சியாளர் தினம் தினம் வைகறையில் நீராடிய பின்னர் கோயிலுக்குச் சென்று தன் வேலையுடன் தொடர்புடைய தன் உதவியாளர்களைக் கண்டு அன்றாட வேலைகளைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.  இரண்டாம் பிரகாரத்தின் கொடிக்கம்பத்தடிக்குச் சென்று வழிபட்டுப் பின் திருமடைப்பள்ளியைப் பார்வையிட்டுத் தேவையான பொருட்கள் இருக்கின்றனவா என விசாரிப்பது, சரக்கு அறையில் புதிதாகச் சரக்குகள் வந்தால் அவற்றைச் சரிபார்ப்பது, கோயிலுக்குத் தேவையான பொருட்கள் சரிவரக் கொடுக்கப்படுவதா எனப் பார்ப்பது, நறுமணப் பொருட்கள் எவ்வளவு தேவையோ அவற்றைச் சரியான முறையில் கொடுக்கிறார்களா என்று பார்ப்பது, இத்தகைய வேலைகளைச் சரிவரச் செய்யும்படி ஊழியர்களுக்குப் பங்கிட்டுச் செய்ய வைப்பது, திருநந்தவனம் சென்று, அன்றாட வழிபாட்டுக்குத் தேவையான பல்வேறு பூக்களைத் தேர்ந்தெடுப்பது போன்றவற்றை முடித்துக் கொண்டு பின்னர் வழிபடுவதற்குச் செல்வார்.

வழிபாடுகள் முடிந்ததும், கோயில் ஊழியர்களின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, அன்றாட வேலைகள் எவ்வாறு நடக்கின்றன என்றும், இனி செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆலோசிப்பதோடு ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளையும் கூறி உற்சாகப்படுத்துவதும் அவர் வேலை.  பின்னர் அன்றாட வழிபாடுகள் சரிவரச் செய்கின்றனரா என மேற்பார்வை பார்ப்பார்.  பகல் நிவேதனம் முடிந்து கோயில் நடை சார்த்தினால் அவர் தன் வீட்டுக்குச் சென்று உணவு உண்டு ஓய்வெடுப்பார்.  பிற்பகலில் பல்வேறு சடங்குகள், விழாக்கள் போன்றவற்றை ஏற்பாடுகள் செய்து நடத்துவது அவர் வேலையாக இருக்கும்.

ஒவ்வொரு சடங்கையும், விழாவையும் சரிவரச் செய்கின்றனரா என மேற்பார்வை பார்ப்பது அவர் முக்கிய வேலை.  நம்பிகள், பிராமணர்கள் நீங்கலாக, இத்துறையில் மற்ற அனைவரையும் இவரே கண்காணிப்பார். கருவூலத்தில் வைக்கப்படும் பொருட்களின் மேல் இலச்சினை பொறிப்பதும் இவர் வேலை.  கோயிலின் உள்துறை ஊழியத் தலைவர்கள் இவருடைய நேரடிக் கண்காணிப்புக்கும், ஆணைக்கும் உட்பட்டவர்கள். இவருக்கு உதவியாக இருப்பவரை ஏகாங்கி என அழைப்பார்கள். இவருக்குக் கோயிலில் மிக உயர்ந்த மரியாதைகளைச் செய்வார்கள்.

இவருக்குத் துணையாக நான்கு உதவி ஆட்கள் இருப்பார்கள்.  இவர்கள் கோயிலின் ஆட்சிக்கு உட்பட்ட கட்டிடங்கள், அதன் புறம்பே உள்ள கட்டிடங்கள் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் ஆவார்கள்.  இவர்களில் சரக்கறைக்கு எனத் தனியாக இருக்கும் தலைவர் ஆட்சியாளர் கோயிலுக்கு வரும் முன்னரே சரக்கறைக்குச் சென்றும், திருமடைப்பள்ளிக்குச் சென்றும் அன்றாடத் தேவைக்கான அரிசி, பருப்பு, கோதுமை, தானியங்கள், பழங்கள், தயிர், நெய், பால், காய்கறிகள், தேங்காய் போன்றவை கொடுத்திருக்கின்றனரா எனச் சரிபார்ப்பார்.  கோயில் நிலங்களில் இருந்து விளையும் நெல் வகைகள், புளி, மாங்காய், மாம்பழம், தேங்காய் போன்றவை மற்றும் பல்வேறு விளை பொருட்களையும்  சரி பார்ப்பார். கோயிலின் சரக்கறைக்குக் கொண்டுவரப் படும் எண்ணெய் வித்துக்களை எண்ணெய் அறைக்குக்கொண்டு சென்று உடைத்தோ அரைத்தோ பயன்படுத்தப் படுவதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பார். சுவாமி திருவீதி வலம் வருவதற்கான வாகனங்களைத் தயாரித்தல், குடை, கொடிகள் என்பனவற்றைத் தூக்கிச் செல்ல அன்றாடக் கூலியாட்களை நியமித்தல் போன்றவையும் சரக்கறைத் தலைவர் வேலையே.