எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, August 07, 2012

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!பாண்டியன் கொண்டையானு சந்தேகமா இருக்குனு ஆடிப் பெருக்குப் பதிவிலே எழுதி இருந்தேன்.  இது பாண்டியன் முத்துக் கொண்டையே தான்.


ஸ்ரீரங்கம் கோயிலைச்  சுற்றிலும் பாதுகாவலாக திக்தேவதைகளை ஆகம சாஸ்திரப் படி ஏற்படுத்தி இருந்தார்கள் எனத் தெரிய வருகிறது.  அவர்கள் தெற்கில் உலகளந்த பெருமாள் ஆயனார் என்ற பெயரில் அழைக்கப் படுபவரும், தென்மேற்கு மூலையில் யோக அழகிய சிங்கரும், இருந்திருக்கின்றனர்.  அழகிய சிங்கர் கோயில் பழுதுபட்டதால் விக்ரஹங்கள் மூலவரும், உற்சவரும் கூரத்தாழ்வான் சந்நிதியில் வைக்கப்பட்டிருப்பதாய்க் கூறப்படுகிறது.  மேற்கில் துர்கை அல்லது பிடாரி கோயில் இன்றும் இருக்கிறது.  வடமேற்கில் வாதநாராயணர் பழுதடைந்து விட்டது எனக் கேள்விப்படுகிறோம்.  வடக்கில் தசாவதார சந்நிதி இன்றும் காணலாம்.  


வடகிழக்கில் ஆதிகேசவப் பெருமாள் சந்நிதி முழுதும் ஜீர்ணமாக பெருமாளும் நாச்சிமார்களும் பக்கத்துத் தோப்பில் எழுந்தருளி இருந்திருக்கிறார்கள்.  இப்போது எங்கே எனத் தெரியவில்லை.  விசாரிக்கிறேன்.  அடுத்து கிழக்கே லக்ஷ்மி நரசிம்மர் சந்நிதி. காட்டழகிய சிங்கர்.  நாம் ஏற்கெனவே இருமுறை பார்த்தோம்.  தென்கிழக்கு மூலையில் கோதண்டராமர் சந்நிதி. நவாபு காலத்தில் மந்திரியாக இருந்த ஒரு ராயரால் கட்டப்பட்டது.  சந்திர புஷ்கரணிக்கரையில் இருக்கும் இவரையும் நாம் பார்த்தோம்.  இவரே பிரதான ராமர்.  இவரைத் தவிரவும் பிராகாரத்தில் மேல பட்டாபி ராமர், கீழப் பட்டாபி ராமர் சந்நிதிகள் உண்டு.  இவ்வாறு எட்டுத் திக்குகளிலும் எட்டு திக்தேவதைகளை எழுந்தருளப் பண்ணி இருக்கும் திவ்யஸ்தலமான இதன் சரித்திரச் சான்றுகளை நாம் பத்தாம் நூற்றாண்டில் இருந்தே காண முடிகிறது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருமங்கை ஆழ்வார் இந்தக் கோயிலில் நான்காம் திருமதிலைக் கட்டியதாகத் தெரிய வருகிறது.  ஆனால் இதற்கான சரித்திரச் சான்றுகள் இல்லை.  திருமங்கை ஆழ்வாரே அதிகமான பாசுரங்கள் பாடி இருப்பதாகவும் தெரிகிறது.  அவற்றில் இரண்டு பாசுரங்களைப் பார்ப்போம்.  

நன்றி: மதுரைத் திட்டம்.


உந்தி மேல்நான் முகனைப் படைத்தான் உல குண்டவன்
எந்தை பெம்மான், இமையோர்கள் தாதைக்கிட மென்பரால்,
சந்தி னோடு மணியும்  கொழிக்கும்புனல்காவிரி,
அந்தி போலும் நிறத்தார் வயல்சூழ்தென் னரங்கமே (5.4.1)

1379
வையமுண் டாலிலை மேவு மாயன்மணி நீண்முடி,
பைகொள் நாகத் தணையான் பயிலுமிட மென்பரால்,
தையல் நல்லார் குழல்மா லையும்மற்றவர் தடமுலை,
செய்ய சாந்தும் கலந்திழி புனல்சூழ்தென் னரங்கமே (5.4.2)

இதைத் தவிரவும், பெரியாழ்வார் பாடல்களும், ஆண்டாள் அழகிய மணவாளரான உற்சவர் மேல் மாளாக் காதல் கொண்டு அவரையே மனைவியாக அடைவேன் எனக் காத்திருந்து மனைவியாக ஐக்கியமடைந்ததுமான வரலாறுகள் சொல்லப் படுகின்றன.  ஆண்டாளுக்கு என இங்கே மூன்று தனிச் சந்நிதிகள் இருக்கின்றன.  அவற்றில் வெளி ஆண்டாள் சந்நிதியை இன்னும் பார்க்கவில்லை.  ஆனால் அங்கே தான் ஆடிப்பூர உற்சவ நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன.  ஆண்டாளுக்கு அன்று திருமஞ்சனம் செய்விக்கப்படுகிறது.  ஆடிப் பதினெட்டு அன்று காவிரிக்குச் சீர் கொடுக்க வரும் நம்பெருமாள் திரும்புகையில் வெளி ஆண்டாள் சந்நிதியில் மாலை மாற்றிக் கொண்டு பின்னரே உள்ளே திரும்புகிறார்.  அழகிய மணவாளர் மேல் காதல் கொண்ட ஆண்டாள், நம்பெருமாளோடு ஏன் மாலை மாத்திக்கணும்னு தோணுதா?   இருவரும் ஒருவரே. அழகிய மணவாளராக இருந்தவர் தான் நம்பெருமாள் என அழைக்கப்படுகிறார்.   அந்தக் கதைக்குத் தான் இப்போ வரேன்.  அதை முதலில் பார்த்துவிடுவோம்.


முதலிலே அழகிய மணவாளன் என்ற பெயர் வந்த கதையைத் தெரிந்து கொள்வோம்.  தர்ம வர்ம சோழனின் வம்சத்தில் வந்த சோழ மன்னன் ஒருவன் நந்த சோழன் என்ற பெயரில் ஆண்டு வந்தான்.  அவன் அரங்கனிடம் மிகவும் பக்தி பூண்டு வந்தான்.  அவனுக்குப் பிள்ளைப் பேறில்லை.  அரங்கனே கதி என்றிருந்த மன்னன் இதற்கும் அரங்கனே பதில் சொல்லுவான் என நம்பிக்கையுடன் காத்திருந்தான்.  ஒருநாள் மன்னன் வேட்டைக்குச் சென்ற போது அங்கிருந்த ஒரு ஓடையில் கமலப்பூக்களின் நடுவே ஒரு அழகான பெண் குழந்தை இருப்பதைக் கண்ணுற்றான்.  அரங்கன் அளித்த செல்வம் என எண்ணி மகிழ்ந்து அக்குழந்தையை அரண்மனைக்கு எடுத்து வந்து சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தான்.  கமலவல்லி என்ற பெயருள்ள அந்தப் பெண் சிறு வயதில் இருந்தே அரங்கனிடம் பக்தி பூண்டிருந்தாள்.  ஒருநாள் அவள் உத்தியான வனத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அரங்கன் அவ்வழியே குதிரையில் சென்றதைக் கண்டாள்.  அரங்கன் மேல் மாளாக் காதல் கொண்டாள்.

மணந்தால் அரங்கனையே மணப்பது என முடிவு செய்துவிட்டாள்.  மகளின் நிலை கண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் கலங்கிய மன்னன் கனவில் அரங்கன் தோன்றி, “ நீ குழந்தை இல்லாமல் கவலைப் பட்டதற்காகவே நாம் திருமகளை அனுப்பினோம்;  அவள் நம்மைச் சார்ந்தவள்.  என் சந்நிதிக்கு அவளை அழைத்து வா;  நாம் அவளை ஏற்போம்.” எனச் சொல்லி மறைய, திகைப்புற்ற மன்னன் தன் மகள் திருமகள் எனத் தெரிந்து மகிழ்ந்தான்.  அவளை சர்வ அலங்கார பூஷிதையாக அலங்கரித்து ஊர்வலமாகச் சுற்றமும், உற்றமும் சூழ அழைத்து வந்தான்.  அரங்கன் சந்நிதியை அடைந்தான்.  கோவிலினுள் நுழைந்து அரங்கன் சந்நிதிக்கு வந்ததுமே கமலவல்லி மறைந்தாள்.  தன் பரிவாரங்களோடு வந்திருந்த மன்னன் இதைக் கண்டு அதிசயம் அடைந்தான்.   

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எண்ணற்ற திருப்பணிகள் செய்ததோடு அல்லாமல் தான் இருக்கும் உறையூரிலும் அரங்கனுக்கு ஒரு கோயில் எழுப்பினான்.  அரங்கனே அழகிய மணவாளனாக வந்து தன் மகளைத் திருமணம் செய்து கொண்டதால் அந்தப் பெருமாளுக்கு அழகிய மணவாளர் என்ற பெயரையும் சூட்டினான்.  தன் மகள் நினைவாகத் தாயாருக்குக் கமலவல்லி என்ற பெயரையும் சூட்டினான்.  இந்த அழகிய மணவாளர் தான் ஸ்ரீரங்கம் கோயிலின் உற்சவர்.  உற்சவருக்குக் கிட்டத்தட்ட அறுநூறு, எழுநூறு வருடங்கள் முன்பு அழகிய மணவாளர் என்ற பெயரே இருந்தது.  அந்தப் பெயர் தான் பின்னர் நம்பெருமாள் என மாறியது.  மாற்றியது ஒரு வண்ணான்.  ஏன்,எப்படி? வரும் நாட்களில் விபரமாய்ப் பார்க்கலாம்.  அதற்கு முன்னர் கொஞ்சம் சரித்திரப் பாடம் படிப்போம்.8 comments:

திவாண்ணா said...

ஶ்ரீரங்கம் கோவில் ஏன் இந்த திக் தேவதைகள் கோவில்களை பராமரிக்கலை? :-((((

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பகிர்வு ஐயா...

நன்றி… தொடர வாழ்த்துக்கள்...

Geetha Sambasivam said...

வாங்க வா.தி. நல்வரவு இந்தப்பக்கம் வந்ததுக்கு. அது குறித்து இங்கே யாருக்கும் சொல்லத் தெரியலை; விசாரித்து வருகிறேன். இங்கே இருக்கிறவங்களுக்கு அழகிய மணவாளர் நம்பெருமாள் ஆன கதையே இன்னும் தெரியலை. :(

Geetha Sambasivam said...

திண்டுக்கல் தனபாலன்,

சிறப்பான பகிர்வு அம்மா! :))))) நன்றிங்க.

ஸ்ரீராம். said...

திருவரங்கம் கோவிலுக்கும் அனந்தபத்மநாப சுவாமி கோவிலுக்கும் தொடர்பு உண்டா?

வல்லிசிம்ஹன் said...

அரங்கனுக்குத் திக்தேவதைகள் உண்டு என்றே இப்போதுதான் தெரியும்.
கீதா.ரொம்பக் கடமைப்பட்டிருக்கிறேன் இவ்வளவு விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.நன்றி மா.

Geetha Sambasivam said...

வாங்க ஸ்ரீராம், அநந்த பத்மநாப ஸ்வாமியோட கதையே வேறேனு கேள்விப் பட்டேன். இந்த ஸ்ரீரங்கத்துக்கும், மைசூருக்கருகிருக்கும் சீரங்கப் பட்டணத்துக்கும் தொடர்பு இருக்கிறதாய்த் தான் சொன்னாங்க. ரங்கநாதர் முகலாயப் படையெடுப்பின்போது ஊர் சுத்தினப்போ அங்கே இருந்திருக்கலாமோனு சந்தேகம். எல்லாத்தையும் விசாரித்துக் கொண்டும், கூகிளிக் கொண்டும் பார்த்து வருகிறேன். கடந்த ஒருவாரமாத் தான் கொஞ்சம் முடியாமல் போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :)))))))

Geetha Sambasivam said...

வாங்க வல்லி, வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றிம்மா. உங்க வீட்டுப் பிரச்னைகள் ஓய்ந்திருக்கும்னு நம்பறேன்.