எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, May 29, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

அழகிய நம்பி கிளம்புவதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டான். ஒரு ஆண்டியைப் போலத் தன்னைஉருமாற்றிக் கொண்டான். பின்னர் அனைவரிடமும் விடை பெற்று அழகர் மலையிலிருந்து இறங்கி மதுரை நகர் நோக்கி நடக்கலானான். கோடை காலம். வெயில் சுட்டெரித்தது. எனினும் நடந்து நடந்து அன்று மதிய நேரத்து மதுரைக் கோட்டை வாசலை அடைந்தான். காவல் என்னமோ பலமாக இருந்தது. ஆனாலும் உள்ளே போகிறவர்களோ அல்லது வெளியே செல்பவர்களோ சோதனைக்கு உள்ளாகவில்லை. அப்போது பார்த்து ஒரு பார வண்டி வர அழகிய நம்பி அதைத் தள்ளிக் கொண்டே மெல்லக் கோட்டைக்கு உள்ளே நுழைந்து விட்டான்.  உள்ளே வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. எப்போதும் கலகலவென்றிருக்கும் மதுரை நகரை வெறிச்சோடிய கோலத்தில் பார்த்த அழகிய நம்பி மனதில் வருத்தம் அடைந்தான். அங்கே யாரும் தெரிந்த மனிதர்களோ அல்லது பார்த்தால் நம்பக் கூடியவாறு உள்ள மனிதர்களோ தெரிகின்றனரா எனக் கூர்ந்து கவனித்த வண்ணம் சென்றான்.

ஆனால் மதுரை மக்களில் மதுரை நகரில் தங்கியவர்கள் பலரும் வேறு வழி இல்லாமல் தங்கியவர்களாகவே இருந்ததால் அவர்கள் நகரின் சோபை குன்றியதும், துருக்க ஆட்சிக்கு உட்பட்டதையும் நினைத்துக் கொண்டு மனதில் வருத்தத்துடன் நடைப்பிணம் போல் தங்கள் வேலைகளை இயந்திர ரீதியாகச் செய்து கொண்டிருந்தனர். ஏதேனும் கேட்டால் கூட பதில் சொன்னால் இவன் துருக்கர்களின் ஒற்றனோ, போய் உளவு சொல்லி விடுவானோ எனப் பயந்தனர். அழகிய நம்பியும் அவர்களைக் கேட்பதை விட்டு விட்டுக் கோயிலை நோக்கிச் சென்றான். கோயிலும் நெருங்கியது.  மெல்லக் கோயிலை நிமிர்ந்து பார்த்தவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அங்கு செய்யப்பட்டிருந்த சிற்ப வேலைப்பாடுகள் அனைத்தும் உடைத்துப் போடப் பட்டிருந்தது. சிலைகள் அனைத்தும் கைகள் உடைக்கப்பட்டும், கால்கள் சேதப்படுத்தப்பட்டும் தலை உடைக்கப்பட்டும் அடையாளம் காண முடியாதவாறு இருந்தன. கோபமும், ஆத்திரமும் கலந்த வருத்தம் அழகிய நம்பிக்கு மேலிட அவன் திரும்பினான். அப்போது அவன் அருகே ஒருவர் வந்து, "கொற்றவைக்கு வெற்றி!" என்றார்.

அழகிய நம்பி திரும்பிப் பார்த்தான். ஐம்பது வயது மதிக்கக் கூடிய ஒருத்தர் கண்களில் பட்டார். அவருடன் பேசுவதா வேண்டாமா என நம்பி யோசித்தான். பெரியவருக்கும் அழகிய நம்பியுடன் பேசுவதில் சந்தேகம் தோன்றி இருக்குமோ என்னும் வண்ணம் அவரும் அதன் பின்னர் தயங்கினார். ஆனால் மெல்ல மெல்ல இருவரும் பேசிக் கொள்ளப் பின்னர் துருக்கப்படைகளைச் சேர்ந்தவர்களோ அல்லது உளவாளிகளோ அல்லவென நிச்சயப்படுத்திக் கொண்டனர்.  அதன் பின்னர் அந்தப்பெரியவர் தன் பெயர் பட்சி வாகனன் என்றும் தான் இந்த ஊரில் தங்க  நேர்ந்து விட்டது என்றும் அதற்கான காரணங்கள் உண்டு எனவும் கூறிவிட்டுத் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தார். வீட்டிற்குள் இருவரும் சென்றனர். வீடு வெறிச்சோடிக் கிடந்தது. யாரும் வாழ்ந்தார்களா என்பதே தெரியாத வண்ணம் காலியாகக் கிடந்தது.

அப்போது தான் தங்க நேர்ந்த காரணங்களை அவர் தெரிவித்தார். முதல்முறை மாலிக்காபூர் வந்தபோது பாண்டிய மன்னன் வெற்றி பெற்று விட்டதால் சேதங்கள் இல்லை எனவும் ஆனால் இம்முறை உலுக்கான் வந்த போது மன்னர் தோல்வி அடைந்து விட்டார் எனவும் தோல்வி அடைந்த மன்னர் ஊரை விட்டு ஓடும்படி ஆகி விட்டது என்றும் சொன்னவர், மன்னர் வெற்றி பெற்றுவிடுவார் என நம்பித் தாங்கள் அங்கேயே தங்கியதையும் ஆனால் மன்னனுக்கு வெற்றி கிட்டாமல் போனதால் தாங்கள் பலரும் அங்கேயே மாட்டிக் கொண்டு வெளியேற வழி தெரியாமல் தவிப்பதாகவும் சொன்னார். அழகிய நம்பியோ, "அதனால் என்ன? இப்போது தப்பிச் செல்லுங்கள்!" என்று கூறினான். அவர் பதிலே சொல்லாமல் அவனை அடுக்களைக்கு அழைத்துச் சென்றார். அங்கே தரை மீது விரிக்கப்பட்டிருந்த விரிப்பை எடுத்து விட்டு ஒரு கரண்டியை எடுத்துத் தரையில் ஓர் இடத்தில் நெம்பினார். உடனே அந்த இடத்துக் கல் பெயர்ந்து ஒரு ரகசியக் கதவு  தெரிந்தது. கதவைத் திறந்தார்.

"பரிமளம்! பரிமளம்!" என அழைத்தார். "இதோ வருகிறேன்!" என ஓர் இளங்குரல் சொல்லச் சற்று நேரத்தில் அங்கிருந்த ஓர் இருட்டறையிலிருந்து சுமார் பதினைந்து வயது மதிக்கக் கூடிய ஓர் இளம்பெண் மெல்ல மேலே ஏறி வந்தாள். பல நாட்கள் உணவு கிடைக்காததால் மெலிந்து  போயிருந்த அந்தப் பெண் சூரிய ஒளியையும் பல நாட்கள் காணாததால் வெளுத்துச் சோகை பிடித்துப் போயிருந்தாள். இருவரையும் பார்த்துப் புன்னகை புரிந்தாள். அவளைக் காட்டிய அந்தப் பெரியவர், "இவள் என் பெண்! இவளுக்காகவே நான் இங்கே இருக்க வேண்டியதாக ஆகி விட்டது. இந்தத் துருக்கர்களின் கண்களில் படாமல் இவளை நான் நிலவறையில் பாதுகாத்து வருகிறேன். " என்றார். என்ன சொல்வது எனத் தெரியாமல் திகைத்த நம்பி கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும் என அவளை ஆசிர்வதித்து விட்டு வெளியே வந்தான்.

1 comment:

ஸ்ரீராம். said...

படிச்சாச்...