எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, May 10, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

அரண்மனை வைபவங்கள் முடிந்த அந்த வெள்ளிக்கிழமை  மஹாராஜா அரசவையைக் கூட்டி இருந்தார். அப்போது தான் குறளனும், குலசேகரனும் கூட அரசரைச் சந்திக்கச் சென்றார்கள். உள்ளே,அரசரை மகிழ்விக்க ஆடல், பாடல்கள் நடந்து கொண்டிருந்தன. இருவரையும் கண்ட காவலாளிகள் அடையாளம் புரிந்து கொண்டதால் தாமதிக்காமல் உள்ளே அனுப்பி வைத்தார்கள். இருவரும் உள்ளே சென்று அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த சபையைக் கண்டு வியந்தார்கள். எங்கும் பணச் செழிப்பு. ஶ்ரீரங்கம் கோயிலின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கல்லால் ஆன சுவரால் அரங்கநாதரை மூடி வைத்திருப்பதும், இங்கே அழகிய மணவாளர் அர்ச்சாவதாரத்தில் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருப்பதும் ஒரு வேளை உணவுக்குக் கூட அவரைக் கவனித்துக் கொள்ளும் கொடவர்கள் தவிப்பதும் நினைவில் வந்து முட்டியது! பட்டுத் திரைச்சீலைகள். தங்க வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள், விக்ரகங்கள், சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஆபரணங்கள்! பூக்களால் செய்யப்பட்டிருந்த பூக்கூடாரம் போன்ற அமைப்பு. பூக்களின் சுகந்தமான வாசத்தோடு அங்கிருந்தவர்கள் தரித்துக் கொண்டிருந்த வாசனைத் திரவியங்களும் சேர்ந்து ஓர் சொர்க்கத்தையே சிருஷ்டித்துக் கொண்டிருந்தது.

அரசருடன் ராணி கிருஷ்ணாயி ஒன்றாக அமர்ந்து கொண்டிருந்தவள் குலசேகரனைக் கண்டதும் அவன் பார்வை சென்ற திக்கெல்லாம் தன் பார்வையையும் செலுத்தினாள். அப்போது ஒரு கணம் அவன் பார்வை அவள் பக்கம் திரும்பவும் தடுமாறினாள். தன் பார்வையை அகற்றிக் கொண்டாள். பாடல்களை வாசிக்கும் பெண்களையும் அவர்களுக்கு வாத்தியங்கள் மூலம் உதவிய பெண்களையும் பார்த்து வியப்படைந்தான் குலசேகரன்.  அங்கே ஹேமலேகா எல்லாப் பெண்களுடனும் அமர்ந்து யாழ் வாசித்துக் கொண்டிருந்தாள். அவளை அங்கே கண்டதும் குலசேகரன் மீண்டும் திகைத்தான். பண்டிதையான ஹேமலேகா இம்மாதிரி வாத்தியம் வாசிக்கும் பெண்களுடனா அமர்ந்து யாழ் வாசிப்பது! அவள் தகுதி எங்கே! இவர்கள் தகுதி எங்கே! குலசேகரன் மனம் நொந்து போனான். ஆனால் அவளோ குலசேகரன் இருப்பதைத் தெரிந்து கொண்டது போல் தலையையே நிமிர்த்தாமல் யாழ் வாசித்தாள். திடீரென மக்களின் கரகோஷம் பெரிதாகக் கேட்கவே ஹேமலேகா தலையை நிமிர்த்தினாள். குலசேகரன் தன்னையே பரிதாபமாக ப்பார்ப்பதை அறிந்து தன் கண்களை உடனே தாழ்த்திக் கொண்டாள் ஹேமலேகா.

 ஆனாலும் அந்தக் கணநேரப் பார்வைப் பரிமாற்றத்தைக் குலசேகரனை உன்னிப்பாய்க் கவனித்துக் கொண்டிருந்த கிருஷ்ணாயி பார்த்து விட்டாள். அங்கே ஹேமலேகாவைப் பார்த்த குலசேகரன் மனம் தவித்தது. பல்வேறு நினைவுகள் அவனுள் முட்டி மோதித் தவித்துக் கொண்டிருந்தான். ஹேமலேகா கண்களில் தெரிந்த சோகம் அவனுள் ஒரு பரபரப்பை உண்டாக்கியது. வழக்கமாக அவள் இப்படி இருக்க மாட்டாள். சோகமாகக் காணப்படுகிறாள். என்ன காரணம்? அவள் முகத்தில் இருந்த சிரிப்பு எங்கே போயிற்று? குலசேகரன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

ஆடல், பாடல்கள் ஒருவழியாக நிறைவடைந்தன. அரசர் எல்லோருக்கும் பரிசில்களை வழங்கிக் கௌரவப் படுத்தினார். குலசேகரனுக்கும், குறளனுக்கும் கூட முத்தாரங்கள் கிடைத்தன. பின்னர் சபை கலைய ஆரம்பித்தது. குலசேகரனும், குறளனும் வெளியேறாமல் அங்கேயே தயங்கி நின்றனர். அரசரின் பிரதானிகள் அவர்களை என்ன விஷயம் எனக் கேட்டுத் தெரிந்து கொண்டு பின்னர் அரசர் முன்னால் கொண்டு நிறுத்தினார்கள். குலசேகரன் மன்னனை வணங்கினான். "மன்னா! நீங்களும் உங்கள் குலமும் நீடூழி வாழ்க! தீர்த்த யாத்திரையை நல்லபடியாக நிறைவேற்றி வைத்தோம்.இனியாவது தாங்கள் அரங்கனுக்காக எங்களுக்கு உதவி செய்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்." என்றான்.

அதற்கு மன்னர் இன்னும் சிலநாட்களில் தான் ஓர் முடிவு எடுக்கப் போவதாகவும் அதுவரை குலசேகரனும், குறளனும் திருவண்ணாமலையிலேயே தங்க வேண்டும் என்றும் சொல்லவே அவ்வளவில் இருவரும் தாங்கள் தங்கி இருந்த இடத்துக்குத் திரும்பினார்கள். மன்னர் இன்னும் நாட்களைத் தான் கடத்துகிறார். உதவுகிறேன் எனச் சொல்லவே இல்லை என மனக்குழப்பத்துடன் குலசேகரன் அரண்மனைத் தாழ்வாரங்களில் யோசித்துக் கொண்டே நடந்தான். அப்போது ஓர் நிலைவாயில் அருகே நின்றிருந்த சேடி அவனை "ஐயா" எனக் கூப்பிட்டாள். குலசேகரன் அவளைப் பார்க்கவும் மஹாராணி அழைப்பதாகச் சொன்னாள். குலசேகரன் சற்று யோசித்துவிட்டுக் குறளனையும் தன்னுடன் வரும்படி அழைத்தான். ஆனால் சேடியோ அவனை மட்டுமே ராணி அழைத்திருப்பதாய்க் கூறினாள்.


குலசேக்ரனுக்குத் தனியாய்ப் போய் ராணியிடம் மாட்டிக் கொள்ள இஷ்டம் இல்லை. ஆனால் சேடியோ வற்புறுத்துகிறாள். ஆகவே நடப்பது நடக்கட்டும் எனக் குறளனைச் சத்திரத்துக்குப் போகச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் ராணியைச் சந்திக்கச் சென்றான். பற்பல தாழ்வாரங்கள், கூடங்கள், முற்றங்கள் அறைகளைக் கடந்த பின்னர் தங்கத்தினால் ஆன ஒரு பெரிய கதவைப் போய்ச் சேடி தட்டவே உள்ளே சலங்கைகளின் ஒலி கிணுகிணுவென ஒலிக்கக் கதவு திறந்தது, உள்ளே ராணி கிருஷ்ணாயி உயர்ந்த ரக நீலப்பட்டு ஆடை தரித்து அதிரூப சௌந்தரியாகக் காட்சி அளித்தாள். அவள் முகம் புன்னகையால் மலர்ந்தது. மூக்கிலும் காதிலும், கழுத்திலும் அணிந்திருந்த வைர ஆபரணங்கள் ஒளி வீசிப் பிரகாசிக்க ராணியின் சந்தோஷம் அவள் கண்களிலேயே தெரிய அவனைப் பார்த்த ராணி  குழைவான இனிமையான குரலில்   வாருங்கள் வீரரே! என வரவேற்கவே தனக்குக் கிடைத்த திடீர் மரியாதையால் குலசேகரன் திகைப்படைந்தான். அன்றைய நாளே அவனுக்குத் திகைப்பதில் கழிந்தாற்போல் இருந்தது.

2 comments:

நெல்லைத் தமிழன் said...

இதனைப் படிக்கும்போது எப்படி இடைவெளி விட்டு விட்டு சீரா எழுதறீங்கன்னு தோணுது. ஒரே மூச்சில் எழுதினால், நல்ல புத்தகமாக வரும் வாய்ப்பு இருக்கு. இதற்கு நிறைய படித்திருக்கவேண்டும். பாராட்டுகள்.

Geetha Sambasivam said...

ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. எல்லாம் குறிப்புக்கள் வைச்சிருக்கேன். சந்தேகம் வரச்சே புத்தகங்களைப் பார்த்துப்பேன். என்றாலும் முன்னால் கோயில் ஒழுகு ஆடியோ கிடைச்சது! அது இப்போக் கிடைக்கவே இல்லை! இல்லைனா இங்கே ஶ்ரீரங்கத்துக்காரர் விஜயராகவன் கிருஷ்ணன் அவர்களின் வலைப்பதிவில் பார்த்துப்பேன்.