எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, May 12, 2018

ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் என்ன பழி போடுவாளோ! எதற்கும் தயாராக இருப்பாள் போல் தெரிகிறதே! கலங்கினான் குலசேகரன். ராணியோ அவனை மலர்ந்த முகத்துடன் உள்ளே வரும்படி வரவேற்றாள். எதற்கு இத்தனை மரியாதையும் உபசாரங்களும் செய்கிறாள் எனக் குலசேகரன் மறுபடி திகைத்தான். அவள் மறுபடி அவனை உள்ளே அழைக்கத் தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்தான் குலசேகரன். அவன் உள்ளே நுழையவும் அந்த அறையின் எந்த மூலையில் இருந்தோ இனிமையான கீதம் எழும்பியது. சுற்றும் முற்றும் பார்த்தக் குலசேகரன் மேலும் திகைக்கும்படி அந்த அறையில் ஓர் மூலையில் பல அழகான பெண்கள் வாத்தியங்களை இசைத்துக் கொண்டு பாடிய வண்ணம் இருக்க இன்னும் சிலச் சேடிப் பெண்கள் பூக்களை வழி நெடுகத் தூவிக் கொண்டே செல்ல தூப, தீபங்களின் வாசனை மனதைக் கிறுகிறுக்கச் செய்ய ஆரம்பித்தது. கூடத்து நடுவே போடப்பட்டிருந்த ஓர் பொன்னால் ஆன சிஙாதனத்தில் குலசேகரன் அமர்த்தப்பட்டான்.

அந்த அறையிலே மனதை மயக்கும் ஓர் அதிசய வாசனை கலந்த மணம் வீசுவதைக் குலசேகரனால் உணர முடிந்தது. அது அவன் அறிவை அழித்துவிடுமோ என அஞ்சினான். அவனையும் அறியாமல் அந்தப் பெண்களையும் அங்கிருந்த இனிமையான சுகந்த மணத்தையும் ரசிக்க ஆரம்பித்த வேளையில் ஓர் தங்கக் குடுவையில் பழ ரசத்தை நிரப்பி ராணி கிருஷ்ணாயி அவனிடம் நீட்டினாள். கிட்டத்தட்ட அவன் வாயில் புகட்டும் அளவுக்கு அவள் கொண்டு போகக் குலசேகரன் அதைக் கையில் வாங்கிக் குடித்தான். இத்தனை அற்புதமான பழ ரசத்தை இதுவரை தான் அருந்தியதே இல்லை என்பதையும் உணர்ந்தான்.  ராணியைப் பார்த்து ஏழையும் அநாதையும் ஆன அவனுக்கு இத்தகைய உபசாரங்கள் செய்வது எதற்காக என்றும் கேட்டான். ஆனால் கிருஷ்ணாயியைப் பார்த்ததும் அந்தப் பழ ரசம் அளித்த போதையினாலோ என்னவோ அவனையும் அறியாமல் புன்னகை பூத்தான். அதைக் கண்டு கொண்டு கிருஷ்ணாயி அருகிலிருந்த சேடியிடம் இன்னும் கொஞ்சம் பழரசம் கொண்டு வரும்படி பணித்தாள்.

என்ன இருந்தாலும் குலசேகரன் இளைஞன். வாழ்க்கையின் ருசிகளை உணராதவன். படிப்பிலும் போர்ப்பயிற்சிகளிலுமே நாட்களைக் கழித்தவன். அவன் அம்மாவும் உயிருடன் இருந்து அரங்கத்திலும் பிரச்னைகள் ஏற்படவில்லை எனில் அவனுக்கும் ஓர் மனைவி வாய்த்திருப்பாள். வாழ்க்கையின் இன்ப, துன்பங்கள் அவனுக்கும் புரிய ஆரம்பித்திருக்கும். ஆகவே இப்போது இந்தப் பழரசத்தின் ருசி அவனை மயங்கச் செய்ததில் ஆச்சரியம் இல்லை அல்லவா? ராணியால் வரவழைக்கப்பட்ட இன்னொரு குடுவைப் பழ ரசத்தையும் அனுபவித்துக் குடித்தான் குலசேகரன். கிருஷ்ணாயி அந்தக் குடுவையை அவன் கையிலிருந்து வாங்குகையில் தன் விரல்கள் அவன் விரல்கள் மேல் படுமாறு வைத்துக் கொண்டு வாங்கவே குலசேகரன் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் ஓர் சிலிர்ப்பு ஏற்பட்டது.

அவன் கண்கள் பழரசம் கொடுத்த போதையினால் மின்னின. கிருஷ்ணாயியைப் பார்க்கையில் அவள் சௌந்தரியமே அவன் மனதில் நின்றது. அவள் ஓர் ராணி, தான் சாதாரண வீரன், அரங்கனுக்குப் பணிகள் செய்யவே லட்சியம் கொண்டவன் என்பதெல்லாம் மறந்து விட்டது. தன் உடையை முக்கியமாக மேலாடையை அவள் தரித்திருந்த பாணியில் அவளின் அழகான ஒட்டிய வயிறும் நாபிச் சுழிப்பும் கண்களில் படக் குலசேகரன் கைகள் துறுதுருத்தன. தன்னுள் எழுந்த இத்தகைய உணர்வுகளுக்குக் காரணம் அவனுக்குப் புரியவில்லை. ஆனால் ராணியோ அவனைத் தன் தாபம் மிகுந்த கண்களால் ஏறெடுத்துப் பார்க்கக் குலசேகரன் உடலில் பழரசம் மூட்டி விட்ட போதை தீ எனப் பற்றி எரியத் தொடங்கியது. அங்கே இருந்த எல்லாப் பெண்களுமே அவனுக்குள் தான் அனுபவிக்கப் பிறந்தவர்களாகத் தோன்றினார்கள். இத்தகைய மாற்றாம் தனக்குள் எப்படி ஏற்பட்டது என அவனே வியக்கும் வேளையில் ராணி கிருஷ்ணாயி அங்கிருந்த பெண்களைப் பாடல் பாடும்படி உத்தரவிட ஓர் பெண் குரல் பாட ஆரம்பித்தது.

அந்தப் பாடல் திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமந்திரம். பாடியது ஹேமலேகா! அவள் குரலே தான் அது!

1 comment:

ஸ்ரீராம். said...

பழச்சாறில் போதை மருந்து கலந்து கொடுத்து விட்டாளோ சிலுக்கு... சே... கிருஷ்ணாயி... நாயகனைத் திரு(த்து)ப்பும் வழி அறிந்திருக்கிறாள் ஹேமலேகா!