எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Sunday, August 12, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஶ்ரீரங்கத்தில் நடந்தது என்ன?

மதில்களில் இருந்து கற்கள் பெயர்க்கப்பட்டது மனவருத்தத்தைத் தந்தாலும் இந்த மட்டும் அரங்கமாநகரை விட்டு வெளியேறினானே என உள்ளூர சந்தோஷப்பட்டார் சிங்கப்பிரான். அரங்கன் கோயிலுக்குள் சென்று கல்லால் சுவர் எழுப்பப்பட்டிருந்த மூலஸ்தானத்தின் முன்னர் நின்று கண்ணீர் வடித்துக் கதறினார்.  அரங்கனைப் பார்க்க முடியாமல் படுபாவிகள் செய்துவிட்டார்களே எனப் புலம்பினார். இத்தனை நாட்களாக எவ்விதமான வழிபாடுகளும் இல்லாமல் நிவேதனங்கள் இல்லாமல், அலங்காரங்கள் இல்லாமல் அரங்கன் தனிமையை அனுபவித்துக் கொண்டு படுத்திருக்கிறானே என வேதனைப் பட்டார். இனியாவது யாருக்கும் தெரியாமல் வழிபாடுகள் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டு நம்பிக்கையான சிலர் மூலம் உள்ளே சென்று அரங்கனுக்கு வழிபாடுகள் செய்யவேண்டிய வழிமுறைகளைச் செய்து வைத்தார்.  இந்த அரங்கமாநகரை விட்டு வெளியேற்றினாற்போல் அவர்களை, அந்த தில்லி வீரர்களை இந்தத் தமிழ்நாட்டு மண்ணை விட்டும் அகற்றவேண்டும் என நினைத்துக் கொண்டார்.

சில நாட்களில் மழைக்காலம் வந்து விட்டது. அப்போது ஓர் மழைநாளின் காலை நேரம். அழகிய மணவாளபுரத்தை நோக்கி மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தான் ஓர் இளைஞன். யார் அவன்? பார்த்தால் நம் குலசேகரனைப் போல் தோற்றுகிறதே! அவனா இவன்? இப்படி வாடிப் போய்ச் சோர்ந்து காணப்படுகிறானே! முகத்தில் எப்போதும் தெரியும் வீரக்களை எங்கே போயிற்று? வந்தவன் நேரே சிங்கப்பிரானின் வீடு நோக்கிச் சென்று வீட்டை அடைந்து அவரை அழைக்கவும் செய்தான். அங்கே வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த ஓர் வயதான மூதாட்டி அவனைக் கண்டதுமோ ஆர்வத்துடன் ஓடோடி வந்து அவனை உற்றுப் பார்த்தாள். தன் சந்தேகம் தீர்ந்தது என்னும் பாவனையில் தலையை ஆட்டிக் கொண்டாள். அவனிடம் தன்னைத் தெரிகிறதா என்றும் கேட்டாள். அவன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் தான் வாசந்திகாவின் தாயார் என அறிமுகம் செய்து கொண்டாள். வாசந்திகா அரங்கன் ஊர்வலத்தோடு குலசேகரன் சென்றபோது அவளும் வந்தாளே! இப்போது அவள் எங்கே இருக்கிறாள், என்ன ஆனாள் என்றெல்லாம் குலசேகரனைக் கேட்டாள். "என் பெண் சௌக்கியமாய் இருக்கிறாளா? அவளுக்கு ஆபத்து ஒன்றும் நேரவில்லையே?" என வாசந்திகாவின் தாய் மேலும் மேலும் விசாரித்தாள்.

சற்று உற்றுப் பார்த்தே அந்த அம்மையாரை அடையாளம் கண்டு கொண்டான் குலசேகரன். ஆம், அவன் நம் குலசேகரன் தான். ஆனால் புத்துணர்ச்சியுடனும் எப்போதும் இருக்கும் துடிப்புடனும் காணப்படவில்லை. வாசந்திகாவின் தாயை ஆழ்ந்து பார்த்துவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான் குலசேகரன். பின்னர் அவளிடம், "அம்மா, உங்கள் பெண் எங்களோடு தான் வந்தாள். அழகர் கோயில் வரை எங்களுடன் தான் இருந்தாள்!" என்று சொல்லி நிறுத்தினான்.

"பின்னர்? பின்னர் என்ன ஆனாள் தம்பி? என் பெண் இப்போது எங்கே?" என அந்த அம்மாள் துடிப்புடன் கேட்டாள். அதற்குக் குலசேகரன், "அம்மா, அழகர் கோயிலை நெருங்கும் சமயம் திடீரென ஒரு கூட்டம் தில்லி வீரர்கள் எங்களைத் தாக்கினார்கள். அரங்கன் ஊர்வலத்தார் அனைவரும் சிதறுண்டு பல்வேறு திசைகளில் பிரிந்து விட்டோம். நான் மட்டும் அரங்கனைத் தூக்கிக் கொண்டு அழகர் மலைக்காட்டுக்குள் ஓடிவிட்டேன். மற்றவர்கள் வெவ்வேறு திசைகளில் ஓடினார்கள். உங்கள் மகள் வாசந்திகா எந்தத் திசையில் ஓடினாள் என்பது எனக்குத் தெரியாது! ஆனால் அவள் பத்திரமாக எங்கேயானும் வாழ்ந்து கொண்டிருப்பாள்! கவலைப்படாதீர்கள்!" என்றான்.

அந்த அம்மாள் வாய் விட்டு அழுதாள். "அரங்கநகர் முற்றுகையின் போதே நான் அவளைப் பிரிந்திருக்கக் கூடாது தம்பி! இன்று வரை அவளைப் பற்றிய எந்தச் செய்தியும் கிட்டவே இல்லையே! அந்தப் பாவிப் பெண் நான் சொன்னது எதையும் கேட்கவே இல்லை. என்னை விட்டுப் பிரிந்து போய் விட்டாள். இப்போது அவள் எங்கே இருக்கிறாள் என்பதே எனக்குத் தெரியவில்லையே!தம்பி, தம்பி, அவள் விபரீதமான இடத்தில் அதாவது,,,,,, நான் சொல்வது,,,,,,, அவள் தில்லி வீரர்களிடம் மாட்டிக் கொண்டிருக்க மாட்டாள் அல்லவா?" வாசந்திகாவின் அம்மா மிகவும் கவலையுடன் கேட்டாள்.  குலசேகரன் அதற்கு நிச்சயமாக அவள் தில்லிப்படைகளிடம் மாட்டிக் கொண்டிருக்க மாட்டாள் என்றும் எங்காவது பத்திரமாக வாழ்வாள் என்றும் உறுதி கூறினான். அப்போது வெளியே பேச்சுக்குரல் கேட்டு உள்ளே இருந்து வந்த சிங்கப்பிரான் குலசேகரனைப் பார்த்து வரவேற்கத் தான் உள்ளே வரத் தகுதியற்றவன் என்பதால் உள்ளே வர முடியாது என்றான் குலசேகரன்.

சிங்கப்பிரான், ஏதேனும் தீட்டோ என வினவ, இல்லை இது ஓர் விரதம் என பதிலளித்தான் குலசேகரன். அவ்வளவில் அவனை விடாமல் மீண்டும் மீண்டும் சிங்கப் பிரான் கேட்டதற்குக் குலசேகரன் இது ஒரு விரதம் என்றும் புனிதமான இடங்களை மிதிக்கும் அருகதை அவனிடம் தற்போது இல்லை என்றும் இனி எப்போதுமே புனிதமான இடங்களை அவன் மிதிக்கப் போவதில்லை என்றும் கூறினான். பின்னர் அத்தனை காலம் நடந்த விஷயங்களை இருபக்கமும் பரிமாறிக் கொண்டனர் இருவரும்.பின்னர் குலசேகரன் ஹொய்சளர்கள் வடதிசை பற்றியே அதிகம் கவலைப்படுவதாகவும் தென்னகம் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை எனவும் சொன்னான்.  ஆகவே அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்பதையும் கவலையோடு கூறினான்.

அதற்கு சிங்கப்பிரான் வடதிசை பற்றி அவர்கள் கவலைப்படுவதிலும் ஓர் அர்த்தம் இருப்பதாய்க் கூறினார். ஆகவே அவர்களைக்கேட்டுக் கொண்டு இருக்காமல் நாமாக ஏதேனும் தொந்திரவை மதுரையில் உள்ள தளபதிக்குக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றார் சிங்கப்பிரான்.  இந்த தில்லிக்காரர்கள் ஆட்சியை அங்கே நிலைக்க விடக் கூடாது. விட்டால் ஆபத்து என்பதையும் சொன்னார். பின்னர் மெதுவான குரலில் தென்காசியிலிருந்து சடையவர்ம பாண்டியன் ஓலை அனுப்பி இருந்ததாய்ச் சொன்னார். அதில் பாண்டிய வம்சத்து வாரிசுகள் அனைவரும் தென்காசியில் கூடி இருப்பதாய்ச் சொன்னதோடு மதுரை மீது படை எடுக்கப் போவதால் தமிழ்நாட்டின் மற்ற அரசர்கள், வீரர்கள் அதற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்று கேட்டிருப்பதாகவும் சொன்னார். கண்ணனூரில் தங்கி இருக்கும் தில்லிப் படையின் நிலவரம் பற்றியும் சடையவர்மர் கேட்டிருப்பதால் இப்போது குலசேகரன் மூலம் அந்தத் தகவல்களைச் சடையவர்மனுக்கு அனுப்ப நினைப்பதாகவும் சொன்னார்.

4 comments:

நெல்லைத்தமிழன் said...

நீங்கள் எழுதும் இந்தத் தொடருக்கு மூலம் எது? பெயர்களெல்லாம் சரித்திர சம்பந்தம் உள்ளவையா (அனைத்தும்)?

நெல்லைத்தமிழன் said...

நீங்கள் எழுதும் இந்தத் தொடருக்கு மூலம் எது? பெயர்களெல்லாம் சரித்திர சம்பந்தம் உள்ளவையா (அனைத்தும்)?

Geetha Sambasivam said...

கோயிலொழுகு முன்னால் அதாவது இதை எழுத ஆரம்பிச்ச புதுசில் இணையத்தில் ஆடியோவாகக் கிடைத்தது. மற்றும் சில புத்தகங்கள், எல்லாவற்றுக்கும் மேல் ஶ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா ஆகிய புத்தகங்கள். அவற்றின் குறிப்புகள். இணையத்தில் முகநூலில் ஶ்ரீரங்கம் நண்பர் விஜயராகவன் கிருஷ்ணன் அவர்களின் வலைப்பக்கம், ஶ்ரீரங்கம் பட்டர் வலைப்பக்கம் போன்ற பலவும். என்னோட திறமை என்பது இவற்றிலிருந்து வேண்டிய தகவல்கள் சேகரிப்பது மட்டுமே!

Geetha Sambasivam said...

கோயிலொழுகு முழுக்க முழுக்க இந்த வரலாறைச் சொல்கிறது. ஏழு பாகம். ஏழாம் பாகமோ எத்தனையோ காண்டங்கள். விலை எல்லாம் நினைச்சுப் பார்க்கக் கூட முடியாது என்னால்! என்றாலும் இந்த ஊரில் வெகு காலமாக இருப்பவர்கள் மூலமும் சில தகவல்கள் கிடைக்கும். இப்போல்லாம் அதிகம் வெளியே போகாததால் முடியலை. கோயிலொழுகு ஆடியோ போட்டுக் கேட்டுத் தகவல்கள் குறித்துக் கொள்வேன். ஶ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்தி வரை கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போல்லாம் அந்தத் தளமே வருவதில்லை.