எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, March 01, 2019

திருவண்ணாமலையில் நடந்தது!

குலசேகரன் பயணப்பட்டுத் திருவண்ணாமலை சென்றடைவதற்குள்ளாக நாம் வாயுவேகம் மனோவேகமாகத் திருவண்ணாமலை சென்று விடுவோம். அந்தக் காலகட்டங்களில் திருவண்ணாமலை நம் தமிழ்நாட்டு வரலாற்றில் முக்கிய இடம் பெற்றிருந்தது. திருவண்ணாமலையில் கோட்டையும், மாளிகையும், அரசனும் இருந்தார்கள். வீர வல்லாளனே அங்கே இருந்துஆண்டு கொண்டிருந்தான். இப்போது அந்தக் கோட்டையைச் சுற்றிலும் அதன் முன்னரும் கடல் போல சுல்தானியப் படை வீரர்கள்.  "தீன்,தீன்" என முழக்கிக் கொண்டு எந்நேரம் திருவண்ணாமலைக் கோட்டை மேல் பாய்ந்து அடிக்கலாம் எனக் கொஞ்சமும் பொறுமையின்றிக் காத்திருந்தார்கள். ஆவேசத்துடன் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.  கோட்டை மீது யாரும் காணப்படவில்லை எனினும் அவ்வப்போது ஏதோ ஒரு வீரனின் தலை மட்டும் தெரியும். உடனே இங்கே இருந்து எல்லா வீரர்களும் அவன் மேல் அம்புகளை எய்து அவனைக் கொல்ல முனைந்தார்கள். எங்கும் ஒரே கூச்சல், குழப்பம்.

கோட்டைக்கு வெளியே உள்ள நகரத்தில் மக்கள் அவரவர் வீடுகளிலே கதவைப் பூட்டிக் கொண்டு அடைந்து கிடந்தார்கள். யாரும் வெளியே வரவில்லை. அந்த இடமே சுல்தானியர்கள் வசப்பட்டுவிட்டதோ என்னும்படிக்கு எங்கும் சுல்தானிய வீரர்கள் நிறைந்து காணப்பட்டார்கள். ஆனால் கோட்டைக்கு உள்ளேயோ நேர்மாறாகக் காட்சி அளித்தது. வீதிகளில் வீரர்களின் நடமாட்டம். மக்கள் கூட்டம்! ஒரே இரைச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள். குதிரைகளிலும், ரதங்களிலும் வீரர்கள் ஆங்காங்கே விரைந்து கொண்டிருந்தனர். வண்டிகள் ஆயுதங்களைச் சுமந்து கொண்டு விரைவாகச் சென்று கொண்டிருந்தன. பல்லக்குகளில் முக்கியஸ்தர்கள் அமர்ந்து கொண்டு அரசரோடு கலந்து ஆலோசிக்க அரண்மனையை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள்.  ஆங்காங்கே படைத்தலைவர்கள் தங்களுக்குக் கட்டுப்பட்ட படை வீரர்களுக்கு உத்தரவுகள் பிறப்பித்த வண்ணம் இருக்க மக்கள் கூட்டம் கூடி அவர்களை வேடிக்கை பார்க்கத் துவங்க வீரர்கள் அவர்களை வீட்டினுள் போய் இருக்குமாறு சொல்லிக் கொண்டே இருந்தனர்.

ஓலைக்கூரை போட்ட வீடுகளின் மேல் கூரைகள் உடனடியாக அகற்றப்பட்டன. எதிரிகள் தீப்பந்தங்கள் வீசலாம் என்பதால் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வீரர்களும் அகற்றிக் கொண்டிருந்ததோடு மக்களிடமும் அவரவர் வீட்டைப் பாதுகாத்துக்கொள்ளும்படி சொல்லிக் கொண்டிருந்தனர்.  அரசாங்கக் கருவூலத்தில் வேண்டிய பொற்காசுகள், பண்டமாற்றத்துக்கு உதவும் பொருட்கள் ஆகியவை வேண்டியவை இருக்கின்றனவா எனச் சோதிக்கப்பட்டன. அத்தோடு இல்லாமல் தானியக் களஞ்சியமும் சோதிக்கப்பட்டு வேண்டிய அளவு தானியங்கள் இருக்கின்றனவா எனச் சரிபார்க்கப்பட்டு தானியங்களை வீணாக்காமல் அளவாகப் பயன்படுத்தும்படி மக்கள் எச்சரிக்கப்பட்டனர். அதே எச்சரிக்கை தண்ணீரின் பயன்பாட்டுக்கும் சொல்லப்பட்டது.

அங்கே அரண்மனையில் சபாமண்டபத்தில் ஹொய்சள மன்னர் வீர வல்லாளர் முகம் கறுத்துக் கடுத்துக் கோபத்துடன் காணப்பட்டார். அவர் முன்னால் அனைத்துத் தளபதிகள், அரசவைப் பிரதானிகள், தண்டநாயகர்கள் என எல்லோரும் நின்ற வண்ணம் அரசரின் பேச்சுத் துவங்குவதற்குக் காத்திருந்தனர். அனைவர் மனதிலும் மெல்லிய நடுக்கம் ஒன்று இருந்தது. உள்ளுக்குள் ஏதோ நடக்கப் போகிறது; அது நமக்கும் நம் ஹொய்சள சாம்ராஜ்ஜியத்துக்கும் உகந்ததாக இருக்கப் போவதில்லை என்பதை அனைவரும் உணர்ந்தாற்போல் காணப்பட்டார்கள். அனைவர் முகத்திலும் கவலை ரேகைகள் விரிந்து கிடந்தன. வீர வல்லாளருக்கு அப்போது எண்பது வயது நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் பார்க்க அறுபது வயது போலவே காட்சி அளித்தார். அவருடைய வீரமும் உடல் பலமும், மனோபலமும் வயதுக்கும் இதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்பதைக் காட்டிக் கொண்டிருந்தது.

வல்லாளர் கோபாவேசமாகப் பேச ஆரம்பித்தார்.
"என்ன செய்தது நம் ஒற்றர் படை? சுல்தானியப் படைகள் மூன்று காத தூரத் தொலைவில் வந்த பின்னரே நமக்குச் செய்தி கிடைத்துள்ளது! ஏன்? என்ன செய்து கொண்டிருந்தனர் நம் ஒற்றர்கள்? ஆங்காங்கே நிறுத்தி வைத்திருந்த அறிவிப்பாளர்கள் என்ன ஆனார்கள்? சிங்கப்பிரானுக்குத் தெரியாமல் இதெல்லாம் நடந்திருக்க முடியாது! அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? ஏன் நமக்குச் செய்தியை முன்னரே அனுப்பவில்லை? அநியாயம்! அநியாயம்! இப்போது எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறோமே! இதற்குக் காரணம் என்ன?" என்று கோபாவேசமாகக் கத்தினார்.

வீர வல்லாளரின் கோபத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை. கண் இமைக்கும் நேரத்துக்குள் சுல்தானியப் படைகள் கோட்டையைச் சுற்றி வளைத்து விட்டன. ஆகவே வடக்கே இருந்த ஹொய்சளப் படைகளை நகருக்கு உள்ளே கொண்டு வரமுடியாத சூழ்நிலை. அது மட்டுமா? கோட்டைக்குள் இருக்கும் உணவு எவ்வளவு நாட்கள் வரும் என்பது பற்றி ஒன்றும் சொல்ல முடியவில்லை. உணவு வர வேண்டும் எனில் வெளியே சுற்றுவட்டாரக் கிராமங்கள், நகரங்களிலிருந்து தான் வர வேண்டும். ஆனால் அவற்றைக் கோட்டைக்கு உள்ளே கொண்டு வருவது என்பதோ இப்போது இயலாத காரியம்.  கோட்டைக்குள் போதிய உணவுப் பொருட்கள் இல்லை.

எல்லாவற்றிற்கும் மேல் ராணி கிருஷ்ணாயி திருக்கோயிலூருக்குச் சென்று பெருமாளைச் சேவித்து வரப் போயிருக்கிறாள். ராணி கிருஷ்ணாயி வீர வல்லாளரின் கண்களைப் போன்றவள். அவளுக்கு இந்த முற்றுகைச் செய்தி தெரியாது என்பதோடு வீர வல்லாளரின் ஒரே வாரிசான அவர் மகன் குலசேகரனையும் அழைத்துச் சென்றிருந்தாள் ராணி கிருஷ்ணாயி. இப்போது சுல்தானியப் படைகள் வந்து சூழ்ந்து கொள்ளவே கோட்டை வாசல்களை மூடும்படி ஆகி விட்டது. அப்படியும் மேற்குப் பக்கத்து வாசல் ராணி வந்து சேரட்டும் எனத் திறந்தே இருந்தது. ஆனால் ராணி வரவில்லை. இனி காத்திருக்க முடியாது என்பதால் அந்த வாசலையும் மூடி ஆகி விட்டது. கோட்டைக்கதவுகள் மூடிக் கொண்டு விட்டன. ராணியும் அரசகுமாரனும் கோட்டைக்கு வெளியே! துணைக்குச் சென்ற சில வீரர்கள் மட்டுமே அவர்களுக்குப் பாதுகாப்பு! அவர்களுக்கு என்ன நேருமோ என்னும் கவலையே மன்னர் மனதை மிகவும் வாட்டியது.

2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மன்னர் மன நிலையே படித்த எங்களுக்கும்.

Anuprem said...

அசோ ராணி கிருஷ்ணாயி..வராமலே கதவை மூடிவிட்டர்களா..