எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, May 07, 2019

திருவரங்கன் நிலை!

மேற்கே வடகாவேரிக்கரையில் நிழலான ஓர் இடத்தில் குலசேகரனைப் படுக்க வைத்து அவன் உடல் காயங்களுக்கும், கண்ணுக்கும் மூலிகைகளைப் பறித்து வந்து சிகிச்சை செய்தாள் வாசந்திகா.கொஞ்ச நேரம் அவனை அங்கே வைத்திருந்து விட்டு இரவு ஆனதும் மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தாள் வாசந்திகா!  கொஞ்ச தூரத்தில் காணப்பட்ட ஓர் சத்திரத்தில் குலசேகரனைப் படுக்க வைத்து மீண்டும் தன் சிகிச்சையைத் தொடர்ந்தாள்.  இரவெல்லாம் கண் விழித்து அவனுக்குப் பணிவிடை செய்தாள். இரண்டு நாட்கள் இவ்விதம் சிகிச்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் அவன் கண் விழிப்பானா? கண்களில் பார்வை இருக்குமா என்றெல்லாம் கவலை அடைந்த வாசந்திகா அவன் உடலைத் தூக்கித் தன் மடியில் போட்டுக் கொண்டு அவனுக்கு விசிறி விட்டுக் கொண்டிருந்தாள். அப்போது அவன் உடல் கொஞ்சம் அசைந்தது.

உடனே, "சுவாமி!சுவாமி!" என்று உரக்கக் கத்திய வண்ணம் அவன் உடலை அசைத்துக் கொடுத்தாள். குலசேகரன் மெல்லிய குரலில் முனகினான். நினைவு வருகிறது என்பதைப் புரிந்து கொண்டு, மறுபடி, மறுபடி சுவாமி சுவாமி என்று புலம்பினாள் வாசந்திகா. குலசேகரனுக்குப் பார்வை இருக்கிறதா இல்லையா என்றே அவளுக்குப் புரியவில்லை. அவன் குரல் மெல்லியதாக, "நீ யார்?" என்று அவளைக் கேட்டது. அவள்,"சுவாமி, நான் வாசந்திகா! உங்கள் அடிமை!" என்று கூறினாள். "வாசந்திகா? நீ எப்படி என்னைக் காப்பாற்றினாய்? நான் இப்போது எங்கே இருக்கிறேன்?" என்று குலசேகரன் கேட்க, வாசந்திகா போர்க்களத்திலிருந்து அவனைத் தான் தூக்கி வந்ததாகவும் கண்ணனூருக்கு மேற்கே பல காத தூரங்கள் தாண்டி வந்திருப்பதாகவும் சொன்னாள்.போர் நிலைமை பற்றிக் குலசேகரன் கேட்டதற்கு ஹொய்சளர்கள் அடைந்த தோல்வியைப் பற்றி வாசந்திகா வருத்தத்துடன் கூறினாள்.

அவன் மெல்லக் கைகளை நீட்டி அவளைத் தொட்டான்.அப்போது தான் அவன் பார்வை போய்விட்டதை வாசந்திகா முழுவதுமாகப் புரிந்து கொண்டாள். கண்கள் கண்ணீரை வெள்ளமாகப் பெருக்கின. குலசேகரன் அவளிடம் ,"வாசந்திகா! நீ வாசந்திகா தானே! என்னால் உன்னைப் பார்க்க முடியாது! என் பார்வை போய் விட்டது. உடல் முழுவதும் காயங்களால் ரணம் ஆகி விட்டது. இத்தகைய மோசமான நிலையிலிருந்து நான் மீள்வது கடினம். நான் இனி அதிக நாள் உயிருடன் இருக்க மாட்டேன்."  என்றான்.

வாசந்திகாவும் கண்ணீருடன், "தெரிந்து கொண்டேன் சுவாமி! அதனால் என்ன? நான் இருக்கிறேன் உங்களுக்கு! உங்களுக்குப் பணிவிடை செய்வதைத் தவிர்த்து எனக்கு வேறு என்ன வேலை? அது என் கடமை! என் பாக்கியம்!" என்று சொன்னாள். "வாசந்திகா! இப்போதைக்கு எனக்கு ஓர் ஆசை! அதை நீ நிறைவேற்றித் தருவாயா? ஒரு வேளை இதுவே என் கடைசி ஆசையாகவும் இருக்கலாம்!" என்றான். "கட்டளை இடுங்கள்,சுவாமி!செய்கிறேன்!" என வாசந்திகா கூற, "எனக்கு அரங்கனைப் பார்க்க வேண்டும். இப்போதே கிளம்பி அரங்கனைக் காணப்போக வேண்டும். என் கண்கள் பார்வை அற்றது என நினைக்கிறாயா? பார்வை எனக்குத் தேவை இல்லை. அரங்கன் அருகில் சென்றாலே நான் அவரைத் தரிசித்தாற்போல்தான்!" என்றான்.

அவன் ஆவலை அறிந்த வாசந்திகா மறுநாள் ஆண் உடை அணியாமல் ஒரு பெண்ணாகவே உடை உடுத்துக் கொண்டு அவனைத் தூக்கித் தன் தோளில் போட்டுக் கொண்டு ஆவேசம் வந்தவள் போல் மேலும் மேற்கு நோக்கிக் காவிரிக் கரையோடு நடக்க ஆரம்பித்தாள். அரங்கன் சத்தியமங்கலம் வரை வந்திருக்கும் செய்தி அவளுக்குத் தெரிந்திருந்தது.  அவனைத் தூக்கிக் கொண்டு அவள் நடப்பதைக் கண்ட அனைவரும் வியந்தார்கள். ஓர் பெண் பெரும் சுமையான ஓர் ஆண்மகனைத் தோளில் போட்டுக் கொண்டு ஆவேசமாகச் செல்கிறாளே என வியப்புடன் பார்த்தனர். இது எதையும் கவனிக்காமல் வாசந்திகா விரைவாகச்  சென்றாள். ஆங்காங்கே கனி வகைகளையும், புல்லரிசியையும் வைத்து அவனுக்கு உணவு சமைத்துக் கொடுத்தாள். பொதுவாக சத்தியமங்கலம் செல்லும் அந்த வழி ஜனநடமாட்டத்துடன் காணப்படும். ஆனால் இப்போது சுல்தானியர்கள் வரவினாலும் அவர்கள் எங்கும் சுற்றிக்கொண்டே இருப்பதால் போக்குவரத்து குறைந்து விட்டது.

ஆங்காங்கே ஓரிரு பிரயாணிகள் தான் பயணத்தில் இருந்தனர்.  அவர்கள் வாசந்திகா குலசேகரனைத் தூக்கிக் கொண்டு வெறியோடு நடப்பதைக் கண்டு திகைத்தனர். ஆனால் வாசந்திகா எதையும் லட்சியம் செய்யாமல் தன் போக்கில் நடந்து கொண்டிருந்தாள். குலசேகரன் அடிக்கடி சத்தியமங்கலம் வந்து விட்டதா எனக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் வாய் குழற ஆரம்பித்து விட்டது.  அதைக் கண்டு வாசந்திகா கவலையுடன், "இதோ! இதோ!" எனச் சொல்லிக் கொண்டு கொஞ்சம் ஓட்டமாக ஓட ஆரம்பித்தாள். அவன் நிலைமை மோசமாக ஆகிக் கொண்டு வருவதை அவள் உணர்ந்து கொண்டாள். சத்தியமங்கலத்தை நெருங்கும்போது திடீரென மழை சோவென்று பெய்ய ஆரம்பித்து விட்டது. அந்த அதிகாலை நேரம் மழை கொட்டியதைக் கண்ட வாசந்திகா பதைப்புடன் சுற்றும் முற்றும் பார்த்து ஓர் பாழடைந்த சத்திரத்தைக் கண்டு அங்கே சென்று குலசேகரனைக் கீழே கிடத்தினாள்.

மழை அன்று முழுவதும் கொட்டித் தீர்த்தது.மறுநாளும் மழை விடவே இல்லை. மேகங்கள் கூடிக் கொண்டு வானம் கருத்தே காணப்பட்டது. வாசந்திகா செய்வதறியாது திகைத்தாள். குலசேகரன் உடல்நிலையோ இன்னும் மோசமானது. ஓர் முடிவுக்கு வந்த வாசந்திகா குலசேகரனைத் துணி போட்டுப் போர்த்திப் பாதுகாப்பாக வைத்து விட்டு கொட்டும் மழையில் இறங்கி ஓடினாள்.

2 comments:

நெல்லைத்தமிழன் said...

சோகமான கட்டங்களா போய்க்கொண்டிருக்கிறது. வரலாற்றை மாற்ற முடியுமா? ம்ம்ம். தொடர்கிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வாசந்திகா அவன் விருப்பத்தைப் பூர்த்தி செய்தாளா, இறைவன் துணை நின்றானா என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.