எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, July 05, 2019

வல்லபனுக்குத் தூக்கு!

திடீரென ஏற்பட்ட வெளிச்சத்தில் அரண்டு போன வல்லபன் தான் இருந்த அறையின் சாளரத்தின் வழியாக வந்த வெளிச்சமே அது என்பதையும் அவர்கள் கூடத்திலே தான் வெளிச்சத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதையும் சற்றுத் தாமதமாகவே புரிந்து கொண்டான். கூடத்தில் வீரர் தலைவன் அவர்கள் இருவரையும் பிடிக்கவேண்டும் என்று கூவிக்கொண்டு அந்தச் சுளுந்துகளின் வெளிச்சத்தில் தங்களைத் தேடியதையும் வீரர் தலைவனின் கூவலில் இருந்து வல்லபனுக்குப் புரிந்தது. தத்தன் எந்தப் பக்கம் போனானோ தெரியவில்லை. தனக்குத் தெரிந்த அரைகுறை வெளிச்சத்தில் அறைக்குள் நோட்டம் விட்ட வல்லபன் தான் இரும்புச் சங்கிலி ஒன்று நீளமாகப் பிணைத்திருப்பதைத் தொடர்ந்து வந்திருப்பதை உணர்ந்தான். அது பிணைத்திருந்தது ஓர் அழகான பாதத்தில் என்பதை உணர்ந்து கொண்டு தரையில் மண்டியிட்ட வண்ணம் அமர்ந்திருந்த வல்லபன் நிமிர்ந்து பார்த்தான். அவன் முன்னே மஞ்சத்தில் அபலையாக ஓர் இளம்பெண் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவளது பாதத்தைப் பிணைத்திருந்த இரும்புச் சங்கிலியைத் தான் தொட்டுக் கொண்டு அமர்ந்திருப்பதையும் உணர்ந்து கொண்டான்.

அவன் பார்வை அந்தப் பெண்ணின் முகத்தையே ஆராயும் நோக்கத்தில் பார்த்தது. ஆனால் அவள் அழகில் வல்லபன் நிலை குலைந்து போய்விட்டான். நீண்ட அவள் விழிகளில் அவனை எதிர்பாராமல் அங்கே கண்டதனால் ஏற்பட்ட திகைப்பு, பிரமிப்பு ஆகியவற்றோடு தலைவன் கண்களில் பட்டுவிட்டால் அவன் கதி என்னவோ என்னும் இரக்கமும் ததும்பிக் கொண்டிருந்தது. வல்லபன் அப்படியே மெய்ம்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண்ணும் ஏதும் பேசவில்லை. அவனைப் பார்த்ததுமே அவள் முகத்தில் ஏற்பட்ட மந்தகாசம் சற்றும் மறையவில்லை. அதற்குள்ளாக அந்த அறைக்குள்ளும் ஓர் சேவகன்  சுளுந்தை எடுத்துக் கொண்டு நுழைந்துவிட்டான். அவனுடனேயே வீரர் தலைவனும் நுழைந்து விட்டான். வல்லபனை அங்கே கண்டதும், "அற்பப் பதரே! எழுந்திரு!" என்று கூவிக் கொண்டே வீரர் தலைவன் வாளை உருவி ஓங்கினான். வல்லபன் கழுத்தைக் குறி பார்த்தது அந்த வாள்.

அந்தப் பெண்ணின் வதனமோ சற்றும் எந்தவிதமான மாறுபாட்டையும் காட்டாமல் இருந்தது. அவள் தன் நீண்ட கண்களினால் வீரர் தலைவனைப் பார்த்துவிட்டுப் பின்னர் வல்லபனையும் பார்த்தாள். எல்லையற்ற கருணையும் இரக்கமும் அவள் கண்களில் தெரிந்தன. வல்லபன் தன்னை இழந்தான். அவன் மனதில் ஏனோ இனம் தெரியாததொரு குதூகலம் தோன்றியது. இவளிடம் பேசி என்னவெல்லாமோ தெரிந்து கொள்ள வேண்டும்; இவளை இந்த வீரர் தலைவன் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என என்னவெல்லாமோ யோசித்த வல்லபன் திடுக்கிடும்படியாக வீரர் தலைவன் மீண்டும் கூவினான்.  "அற்பப் பதரே! தப்பவா பார்த்தாய்? என்னிடமிருந்து தப்ப முடியுமா?" என்றுகூவிக் கொண்டே வல்லபனைத் தன் வாள் நுனியால் தொட்டுத் தள்ளிக் கொண்டே கூடத்துக்கு இழுத்துச் சென்று அங்கே ஒரு தூணில் வல்லபனைப் பிணைத்துக் கட்டினான்.

"எங்கேயடா அந்த இன்னொருவன்? வாசாலகமாகப் பேசுவானே! இப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டான்? தேடுங்கள் அவனையும்! பிடித்து இழுத்து வாருங்கள்!"என்று வீரர் தலைவன் தன்னுடன் இருந்த வீரர்களிடம் ஆணையிட இரு சேவகர்கள் தத்தனைத் தேடிச் சென்றனர். சத்திரம் முழுமையும் தேடினார்கள். சமையலறை, மச்சில்,கூடம், பாவுள் (உள்பக்கம் உள்ள அறை), உக்கிராண அறை (மளிகை சாமான்கள், காய்கறிகள், பால் போன்றவை வைத்திருக்கும் அறை), மேலே உள்ள பரண்கள், நெல் குதிர்கள் என ஒன்றையும் விடவில்லை. தத்தன் போன இடம் தெரியவில்லை.  தலைவனுக்குக் கோபம் அதிகம் ஆனது. வல்லபனிடம், "எங்கே சென்றான் உன் நண்பன்?" எனக்கோபமாகக் கேட்க வல்லபன் தனக்குத் தெரியாது என்று சொன்னான். ஆனால் வீரர் தலைவன் அதை நம்பவில்லை. வல்லபனை ஏசினான். பின்னர் மீண்டும் அந்த கணபதி என்பவனைக் கூப்பிட்டான். வல்லபனைத் துண்டாக வெட்டிப் போடச் சொன்னான். "இந்த இளைஞனைச் சிரச்சேதம் செய்து விடு!" என்று கோபமாக ஆணையிட்டான். 

அதைச் சத்திரத்து அறையினுள் இரும்புச் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த பெண் கேட்டிருக்க வேண்டும். சற்றே அசைந்து கொடுத்தாள் போலும். அந்த இரும்புச் சங்கிலிகள் அசைந்து சப்தம் கொடுத்தன. அதே சமயம் மழைக்காலத்தின் ஊதல் காற்றும் சத்திரத்துக் கூடத்துக்குள் புகுந்தது. வீரர் தலைவன் கணபதியைப் பார்த்து, "சீக்கிரம்!" என்றவன் என்ன நினைத்தானோ, "இரு! கணபதி! இவனை இப்படியே இரண்டு துண்டாக வெட்டி விட்டால் சரியாக வராது! அதோ அவனை அங்கே தூக்கில் போடு! தூக்கில் தொங்கிக் கொஞ்சம் கொஞ்சமாக இவன் இறக்கட்டும். அவன் நண்பன் எங்கிருந்தாவது வந்து இதைப் பார்த்துக் கொஞ்சமானும் விவேகமும், புத்தியும் அடைவான்! இது தான் இவனுக்குச் சரி!" என்று சொல்லிவிட்டு உத்திரத்தை ஆராய்ந்து ஓர் இடத்தைக் காட்டி அங்கே கயிற்றைக் கட்டுமாறு ஆணையிட்டான்.

No comments: