எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, July 02, 2019

காரிகை பாடலும் காலதத்தன் புரிதலும்!

அடுத்தடுத்து இரு பாடல்களைப் பாடினாள் அந்தப் பெண். அந்த இரண்டுமே நம்மாழ்வாரின் பாசுரங்கள்.  "குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்!" என அவள் பாடி முடித்ததும் நீண்ட பெருமூச்சு விட்டான் வல்லபன். சற்று நேரம் வரை அவள் குரல் அங்கேயே ரீங்காரம் இட்ட வண்ணம் இருந்தாற்போல் தோன்றியது அவனுக்கு.  தன்னை மறந்து நின்ற அவனைத் தோளில் கைவைத்து உலுக்கி நினைவுக்குக் கொண்டு வந்தான் காலதத்தன். வல்லபன் பரவசத்தில் ஆழ்ந்திருந்தான். ஆகவே தத்தனிடம், "தத்தா, அந்தப் பெண்ணின் குரல் இனிமையைக் கேட்டாயா? எத்தனை அழகாய்ப் பண்ணமைத்துப் பாடினாள்! பார்த்தாய் அல்லவா? பாடலைக் கேட்டாய் அல்லவா?" என்று மிகவும் மகிழ்ச்சியுடன் வினவினான். தத்தனோ அவனைப் பார்த்துக் கடும் பார்வையால் விழித்தான். அவன் காதோடு நெருங்கி, "வல்லபா! பாசுரங்களின் பொருளை உணர்ந்தாயா? பாடலின் இனிமையை மட்டும் ரசித்தாயா? முதலில் பாசுரங்களின் உட்பொருளை என்னவென்று உணர்ந்து கொள்!" என்றான்.

வல்லபனுக்கு ஏதும் புரியவில்லை. "தூதுரைத்தல் செப்புமின்கள்! தூமொழிவாய் வண்டினங்காள்!" என்னும் அடியை அவள் எத்தனை முறை பாடினாள் என்பதைக் கவனித்தாயா?" என்றான் காலதத்தன். "ஆஹா! கவனித்தேன்! அதனால் என்ன! எத்தனை அழகாய்ப் பாடினாள்! என்ன இனிமை! என்ன அழகு!" என்று ரசித்தான் வல்லபன். தத்தன் அவனைப் பார்த்து மீண்டும் விழித்தான். "வல்லபா! வல்லபா! அந்தப் பெண் மீண்டும் மீண்டும் அதே அடிகளைப் பாடியதன் காரணம் இன்னமுமா உனக்குப் புரியவில்லை! அந்தக் குரலில் அழுகை கலந்த விண்ணப்பம் உனக்குத் தெரியவில்லையா?" என்று கேட்டான். "அழுகையா?" என்று வியப்புடன் தத்தனைப் பார்த்தான் வல்லபன். "ஆம்! வல்லபா! அந்தப் பெண் இந்தக் குறிப்பிட்ட பாசுரத்தை அதிலும் இந்தக் குறிப்பிட்ட அடிகளை மீண்டும், மீண்டும் பாடியதன் மூலம் நம்மிருவருக்கும் விண்ணப்பம் வைத்திருக்கிறாள்!" என்றான்.

வல்லபன் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தான். "விண்ணப்பமா? என்ன விண்ணப்பம்?" என்று கேட்டான். "தூதுரைத்தல் செப்புமின்! என்றாள் அல்லவா? நம்மை அவளுக்காக தூது போகச் சொல்லுகிறாள்!" என்றான் தத்தன். வல்லபன் ஆச்சரியம் எல்லை மீறியது!"தூது போக வேண்டுமா? நாமா? எங்கு? யாரிடம்?" எனக் கேட்க, தத்தன், "என்னாலும் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இரண்டாவது பாசுரத்தில் அதற்கான விடை இருக்கிறது. நுட்பமாக யோசித்துப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது அதற்கு நேரம் இல்லை. ஏனெனில் நாம் இங்கிருந்து உடனே புறப்பட்டு விடவேண்டும். ஏதோ மர்மமாக நடக்கிறது இங்கு. நாம் அதில் மாட்டிக்கொள்ள வேண்டாம். வல்லபா, கிளம்பு சீக்கிரமாய்!" என்றான் தத்தன்.

வல்லபன் மேலே பேச இடம் கொடுக்காமல் தத்தன் அவன் கையைப் பிடித்துக் கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு நடந்தான். இருவரும் வாயிலை நோக்கிச் செல்லுகையில், யாரோ, "தம்பிகளே!" என இருவரையும் கூப்பிடும் குரல் கேட்டது. இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கச் சத்திரத்துக்கு உள்ளே இருந்த குச்சு ஒன்றில் இருந்த அவர்கள் முன்னர் பார்த்த வீரர் தலைவன், அந்தக் கதவைத் திறந்து கொண்டு இருவரையும் பார்த்துச் சிரித்த வண்ணம் நின்றான். இளைஞர்கள் செய்வதறியாது திகைத்து நிற்க, "தம்பிகளே! நீங்கள் இருவரும் விருந்தினர்கள் அல்லவோ? உணவு அருந்தாமல் சற்று நேரமாவது களைப்பாறாமல் நீங்கள் இங்கிருந்து செல்ல முடியுமா?" என்று கேட்டுக் கொண்டு அவர்களை நெருங்க எங்கிருந்தோ வந்த இன்னொரு வீரன் அவர்களுக்குப் பின்னால் தெரிந்த வாயில் கதவை இழுத்து மூடித் தாளிட்டு விட்டுக் காவலாக நின்றும் கொண்டான்.

உள்ளூரக் கலக்கம் அடைந்தாலும் காலதத்தன் முகத்தில் அதைக் காட்டவில்லை. சிரிப்புடன் வீரர் தலைவனைப் பார்த்தான். "அடடா! நீங்கள் இங்கே தான் இன்னமும் இருக்கிறீர்களா? மிக நல்லதாய்ப் போயிற்று! இங்கே யாரையுமே காணோமே! ஏதேனும் பேய் வீடோ எனப் பயந்து விட்டோம்! ஒருத்தரையுமே இங்கே காணோமே! சத்திரத்தில் மடப்பள்ளி இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லையே! என்றெல்லாம் குழம்பி விட்டோம். சத்திரத்து மணியக்காரர் இருக்கிறாரா இங்கே? இங்கே கட்டளை போஜனம் கிடைக்குமா? அல்லது பணம் கொடுத்துத் தான் வாங்க வேண்டுமா? எதுவுமே தெரியவில்லையே?" என்று அடுக்கடுக்காய்க் கேள்விகளைக் கேட்டு வீரர் தலைவனைத் திணற அடித்தான் காலதத்தன். பிறகு வல்லபனையும் பார்த்து, "நான் சொன்னேன் அல்லவா? இங்கே எப்படியேனும் உணவு கிடைக்கும் என்று. சற்று இப்படி உட்கார்! சற்று நேரத்தில் பசியாறலாம்." என்று சொல்லியவண்ணம் வல்லபனை வலுக்கட்டாயமாகக் கீழே உட்கார்த்தினான். 

No comments: