எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Saturday, June 26, 2021

சிங்கழகரின் அனுபவங்கள் தொடர்ச்சி! ஶ்ரீரங்க ரங்க நாதரின் பாதம் பணிந்தோம்.

 அன்றைக்குச் சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன்னர் ஶ்ரீரங்க நகரில் இருந்து அரங்க விக்ரஹத்தோடு புறப்பட்ட கோஷ்டி கர்நாடகத்தின் மேல்கோட்டையை அடைந்து அங்குள்ள திருநாராயணபுரத்தில் அரங்கனை எழுந்தருள வைத்துக் கொண்டு பலரும் அங்கேயே அரங்கனுடன் தங்கிவிட்டார்கள் என்றார் சிங்கழகர். தாமும் அவர்களில் ஒருவனாக அப்போது இருந்ததாகவும் சொன்னார். மொத்தம் அறுபது பேர் கிளம்பியதில் யாத்திரையின் கடுமையான சோதனைகளில் பலரும் திசைமாறிப்பல்வேறு திக்குகளிலும் போய்விட சிலர் ஆங்காங்கே தங்கி விட எஞ்சிய சிலருடன் கன்னடத்தின் மேல்கோட்டையில் அரங்கனுடன் சிலர் தங்கினார்கள். அவர்களில் சிங்கழகரும் ஒருவராக இருந்தார்.  சில ஆண்டுகளின் பின்னர் ஹொய்சள மன்னன் மதுரை சுல்தானுடன் சண்டை இடுவதாகத் தகவல்கள் கிட்ட மேல்கோட்டையிலிருந்து கிளம்பி கொங்கு வழியாகச் சத்தியமங்கலத்தை வந்தடைந்தனர் சிலர். அவர்களில் சிங்கழகரும் ஒருவர். ஆனால் அந்தப் போரில் ஹொய்சள மன்னன் கொல்லப்பட்டு ஹொய்சளப்படைகள் தோல்வி அடைய மீண்டும் மேல்கோட்டையை நோக்கிச் சென்றுவிட்டனர் அனைவரும். 

சுல்தானியர்களோ தமிழர்களின் இந்தத் திடீர் எழுச்சியைச் சகிக்காமல் மேலும் கோபம் கொண்டு அக்கம்பக்கம் நாடுகளையும் குறிப்பாக ஹொய்சள நாட்டையும் கோயில்களையும் சூறையாடினார்கள். அவர்கள் அப்படியே அரங்க விக்ரஹம் மேல்கோட்டையில் இருக்கும் செய்தியைத் தெரிந்து கொண்டு அங்கே வருவார்கள் என்னும் செய்தி மேல்கோட்டையில் பரவியது. பீதி அடைந்த அவர்கள் அரங்கனை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வேறெங்காவது இன்னமும் தூரமாகப்போய்விட எண்ணினார்கள். ஆனால் வடக்கே செல்ல முடியாது. ஏனெனில் வடக்கே பெரும்பாலும் துருக்கியரே ஆண்டு வந்தனர். ஆகவே கிழக்கே செல்லலாம் என நினைத்துத் திருமலை/திருப்பதி நோக்கிப் போய் அங்கேயே தங்கத் தீர்மானம் செய்தனர் அவர்கள் அனைவரும்.  இவர்கள் இப்போது ஐந்து பேர்களாகக் குறைந்து விட்டனர். திருவரங்கத்திலிருந்து கிளம்பிய போது அறுபது பேர்களாக இருந்தவர்கள் இப்போது ஐந்து பேர்களாகக் குறைந்து விட்டனர். இவர்களில் சிங்கழகர் தவிர இன்னொருவர் மாலழகர். மற்ற மூவரும் பந்துக்களான கொடவர்கள் குருகூர் தாசர், சீராம தாசர், வில்லிப்புத்தூர் தாசர் ஆகியோர்.  சீராம தாசர் குருகூர் தாசரின் மகன். வில்லிபுத்தூர் தாசரோ சீராம தாசரின் தாய் மாமன் ஆவார்.

அரங்கனின் பொன் நகைகள், எஞ்சி இருந்த அணிமணிகள், ஆடைகள் என அனைத்தையும் ஓர் சுமையாகக் கட்டி ஒருவர் எடுத்துக் கொண்டோம். அரங்க விக்ரஹம் கனமாக இருந்ததால் மாறி மாறி அவரைத் தங்கள் தோள் மேல் வைத்துக் கொண்டு சென்றோம்.வழியெங்கும் கலவரமாக இருந்ததால் மிகவும் கவனமாக வழி நடந்து ஆங்காங்கே வைணவர்களாகத் தேடித்தேடி அவர்கள் உதவிகளைப் பெற்று இரவுகளில் ரகசியமாகத் தங்கிக் கொண்டு நாற்பது நாட்கள் கழித்துச் சந்திரகிரிக்கோட்டையை அடைந்தோம். என்ன துரதிருஷ்டம்! சந்திரகிரிக்கோட்டையும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கவே கோட்டையைத் தவிர்த்துவிட்டுக் காட்டு மார்க்கத்தில் இறங்கிப் பிரயாணப்படும்போது அங்கிருந்த தனிப்பாதையில் மூன்று துருக்கிய வீரர்கள் காவலுக்கு இருந்தவர்கள் எங்களைப் பார்த்துவிட்டார்கள், என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்தோம்.

Wednesday, June 23, 2021

சிங்கழகரின் அனுபவங்கள்! ஶ்ரீரங்க ரங்கநாதரின் பாதம் பணிந்தோம்!

 சத்திரத்துக்குத் திரும்பினாலும் தத்தன் கண்களின் எதிரே மஞ்சரியின் முகமே அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் தயவாக ஆறுதலாக அந்தப் பெண்ணிடம் நடந்து கொண்டிருக்கலாமோ என நினைத்துக் கொண்டான் தத்தன். மறுநாள் காலையில் கட்டாயமாய் அந்தப் பெண்ணைப் போய்ப் பார்த்து ஆறுதலாக நாலு வார்த்தைகள் பேச வேண்டும் என தத்தன் நினைத்துக் கொண்டான். மறுநாள் காலையில் இருவருமே மஞ்சரியின் மாமா வீடு சென்றனர்.  மஞ்சரி அவர்களைக் கண்டதுமே மிகுந்த உற்சாகத்துடன் அவர்களுக்கு உபசரணைகள் செய்தாள். ஓர் பெரிய கிண்ணம் நிறையக் காய்ச்சிப் பக்குவமாய் நாட்டுச் சர்க்கரை சேர்த்த பசும்பாலை இதமான சூட்டுடன் குடிக்கக் கொடுத்தாள். 

சற்று நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவரும் பின்னர் மெதுவாக சிங்கழகரிடம் தாங்கள் இருவரும் அரங்கனைக் கண்டு பிடிக்கும் வேலையில் இருப்பதாகவும் அரங்கனை எங்கே கண்டு பிடிக்க முடியும் என்பது பற்றி அவருக்கு ஏதேனும் தெரியுமா என்றும் கேட்டார்கள். இதைக் கேட்ட சிங்கழகர் கண்களில் மாலை மாலையாகக் கண்ணீர் பெருகியது. எழுந்து வந்த அவர் இளைஞர்களைத் தழுவிக் கொண்டு கண்ணீர் மழை பொழிந்தார். இக்காலத்தில் அரங்கனை நினைப்பாரும் இருக்கிறார்களே எனச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.  அரங்கன் என ஒருத்தர் இருந்ததையே பலரும் மறந்திருக்கையில் இளைஞர்களான இவர்கள் இருவரும் அவன் இருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டு செல்வதை அறிந்து மிகவும் மனம் மகிழ்ந்து அவர்களுக்கு ஆசிகள் வழங்கினார். அவர்கள் யாரெனக் கேட்டார். வல்லபனின் தந்தை பற்றி அறிந்ததுமே அவருக்குள் ஆனந்தம் பொங்கிற்று. தான் வல்லபனின் தந்தையை நேரில் பார்த்திருப்பதாகவும், அவர் வீரத்தைக் குறித்தும் அறிந்திருந்ததாகவும் சொன்னார்.

வல்லபன் பார்க்கத் தன் தந்தையையே சாயலில் உரித்து வைத்தாற்போல் இருப்பதையும் சொன்னார்.  வல்லபனின் தந்தை அரங்க நகரையும், அரங்க நகரத்து மக்களையும், அரங்கனையும் கொடியோர் கைகளில் இருந்து பாதுகாக்கப் பட்ட பாட்டை நினைவு கூர்ந்தார் அந்தக் கிழவர். அதோடு இல்லாமல் வல்லபனின் தாய் வாசந்தியைப் பற்றியும் மிகவும் புகழ்ந்து சொன்னதோடு அல்லாமல் வல்லபனைக் குறித்துப் பெருமிதமும் கொண்டார். இப்போதுள்ள நிலைமையில் நாடுகளெல்லாம் அழிந்து நம் சமயங்கள் எல்லாம் சீரழிந்து வரும் இந்தச் சமயத்தில் அரங்கனை நினைப்பாரும் உண்டோ! அவனைத் தேடுவாரும் உண்டோ எனச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.  வல்லபன் அவரிடம் அரங்கனைத் தூக்கிக் கொண்டு கோட்டையிலிருந்து புறப்பட்டஐவரில் சிங்கழகரும் ஒருவர் எனத் தான் அறிந்திருப்பதைக் குறித்துக் கூறினான்.ஆகவே சிங்கழகருக்கு நேர்ந்ததை எல்லாம் அவர் நினைவில் இருக்கிறபடி அப்படியே கூறினால் அதிலிருந்து அரங்கன் குறித்து ஏதேனும் தகவல்கள் கிடைக்கலாம் என்றான் வல்லபன்.  சிங்கழகரும் அதை ஒப்புக் கொண்டு தன் நினைவில் இருந்தவரையிலும் எல்லாவற்றையும் வல்லபனுக்கும் தத்தனுக்கும் எடுத்துக் கூறலானார். 

Wednesday, June 09, 2021

மஞ்சரியின் மாமன்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய் மாமன் வீட்டிற்கு எனச் சொன்னான் தத்தன். நேற்றுக் கேட்டதற்கு மாமன் கிடைக்கவில்லையே என தத்தன் சொன்னதை நினைவூட்டின மஞ்சரியிடம் தத்தன் முதலில் பெற்றோர் இல்லை என்பதை அவளிடம் சொல்லி மனதளவில் அவளைத் தயார் செய்ய வேண்டி இருந்ததாய்ச் சொன்னான். அதன் பின்னர் அவள் தாய் மாமன் வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்ல இருந்ததாயும் சொன்னான். மஞ்சரியின் கண்கள் நீரை ஆறாய்ப் பெருக்கின. உள்ளுக்குள் அவள் குமுறுகிறாள் என்பதை நிலை குத்திய அவள் பார்வையும் துடிக்கும் உதடுகளும் வெளிப்படுத்தின. அவள் வாய்விட்டு அழட்டும் என தத்தன் நினைத்தான். சில வினாடிகளில் அவள் குமுறிக் குமுறி வாய்விட்டுக் கதறினாள். 

தன் பாட்டனார் தன்னிடம் இந்த உண்மையைச் சொல்லாதது குறித்தும் சொல்லி இருந்தால் தான் ரொம்பவே வேதனைப் பட்டிருப்போம் என்பதால் தன் நன்மையைக் கருதியே பாட்டனார் சொல்லவில்லை எனத் தான் புரிந்து கொண்டதாகவும் சொன்னாள் மஞ்சரி. ஆனாலும் அதனால் ஏற்பட்ட தீமையும் உண்டு எனச் சொன்ன மஞ்சரியை தத்தன் நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்தில் தென்பட்ட ஆச்சரியக் குறியைக் கண்ட மஞ்சரி தான் தன் பெற்றோர் இருப்பதாகவே கருதி ஆசைகளை வளர்த்துக்கொண்டதையும் பெற்றோருடன் சேர்ந்து வாழப் போகும் வாழ்வை நினைத்துக் கண்ட கனவுகளையும் சொல்லி இப்போது அனைத்தும் சுக்கு நூறாக நொறுங்கி விட்டதால் அவள் தாத்தா சிறு வயதிலேயே அவளுக்கு உண்மையை எடுத்துச் சொல்லி அவளைத் தயார் செய்திருக்க வேண்டும் என்றும் சொன்னாள். சிறிது நேரம் அவளை அழவிட்ட தத்தன் அவளை மாமன் வீட்டிற்காகக் கிளம்பச் சொல்ல அவளும் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு அவனுடன் கிளம்பினாள்.

சிங்கழகர் என அழைக்கப்பட்ட வயது முதிர்ந்த மஞ்சரியின் தாய் மாமன் ஒரு நந்தவனத்திற்கு அருகே உள்ள மண் வீட்டில் வசித்து வந்தார். விஷக்கடியினால் ஏற்பட்ட வியாதிகாரணமாக அவரால் அதிகம் நடமாட முடியாது. சுமார் அறுபது பிராயங்கள் ஆன அவர் மஞ்சரியையும் தத்தன்.வல்லபன் இருவரையும் பார்த்ததும் வியப்படைந்தார். யாரோ அதிதிகள் என எண்ணிக்கொண்டு அவர்களை உபசரித்து ஆசனங்களில் அமர வைத்து என்ன செய்ய வேண்டும் என்றும் விண்ணப்பம் செய்தார். தத்தன் அவரிடம் மஞ்சரியைக் காட்டி அவருடைய சகோதரியின் பெண் தான் இந்தப் பெண் என்பதையும் சொல்லி அவள் பாட்டனார் வளர்த்து வந்ததையும் பெற்றோர் குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் போது அந்நியப் படையெடுப்பில் கொல்லப்பட்ட விபரத்தையும் இது நாள் வரை மஞ்சரிக்கு அது விஷயம் தெரியாது என்பதையும் சொன்னான். பின்னர் அவர் இங்கே இருக்கும் விஷயத்தை மஞ்சரியின் தாத்தா மூலம் அறிந்து கொண்டதாகவும் அவர் காலம் ஆகிவிட்டதால் மஞ்சரியைத் தானும் வல்லபனும் பொறுப்பெடுத்துக் கொண்டு காஞ்சிகுக் கூட்டி வந்து அவரிடம் ஒப்படைக்க எண்ணியதையும் சொன்னான்.

சிங்கழகருக்கு ஒரு புறம் வியப்பு! மகிழ்ச்சி! இன்னொரு புறம் சோகம்! வருத்தம். அவருக்கும் தன் சகோதரி குடும்பம் குறித்த தகவல்களே இல்லாமல் இருந்ததில் இப்போது விஷயங்களைத் தெரிந்து கொண்டு ஒரு பக்கம் சந்தோஷம் அடைந்தாலும் இன்னொரு பக்கம் துக்கமும் மேலிட்டது. மஞ்சரியைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் உகுத்தார். அவளைத் தன் கைகளால் தொட்டு ஆசீர்வதித்தார். துணை இல்லாமல் பற்றில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த தனக்கு இப்போது துணையோடு வாழ்க்கையில் பற்றும் ஏற்பட்டு விட்டதாய்ச் சொன்னார்.இனி தன் வாழ்க்கையை மஞ்சரிக்காக வாழ வேண்டும் எனவும் சொன்னார். இது ஒரு சுமை தான் தனக்கு என்றாலும் சுகமான சுமை அதிலும் சொந்தமான ஒரு சுமை. தன் கடமை எனவும் சொல்லிக் கொண்டார். மஞ்சரியைத் தன் பொறுப்பில் வைத்துக் கொள்வதாக உறுதியும் அளித்தார்.

சிறிது நேரம் சம்பிரதாயமான பேச்சு வார்த்தைக்குப் பின்னர் தத்தனும் வல்லபனும் சத்திரத்துக்குக்கிளம்ப "ஐயா!" என மஞ்சரி அவர்களை அழைத்தாள். வல்லபனுக்குப் புரிந்தது அவள் தத்தனோடு தனியாகப் பேச விரும்புகிறாள் என்பது. ஆகவே அவன் தத்தனிடம் அவனைப் போய்ப் பேசச் சொல்லிவிட்டுத் தான் ஒதுங்கி நின்றான். மஞ்சரி தத்தன் வரவும் அவனிடம், இப்படித் தன்னை முன்பின் தெரியாத ஓர் இடத்தில் நிர்க்கதியாக விட்டுச் செல்வதைக் குறித்துக் குறை கூறினாள். அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பியது. தத்தன் திடுக்கிட்டான். மஞ்சரியோ மேலும் அவளை விட்டுவிட்டு அவர்கள் சீக்கிரம் கிளம்பியதற்கும் ஆக்ஷேபம் தெரிவித்தாள். என்னதான் தன் மாமன் அங்கே இருந்தாலும் இந்த முன்பின் தெரியாத புதிய இடம் தனக்குப் பாந்தமாக இல்லை எனவும் தத்தன் தான் சொந்தம் போலவும் மாமன் அந்நியராகவும் தெரிவதாய்ச் சொன்னாள்.  தத்தனையும் வல்லபனையும் விட்டுப் பிரியக் கஷ்டமாக இருப்பதாகவும் அதிலும் தத்தனோடு நிரந்தரப்பிரிவு ஏற்பட்டு விடுமோ என அஞ்சுவதாகவும் அதை நினைத்து வருந்துவதாகவும் சொன்னாள். தத்தனால் பேச முடியவில்லை. அவளைச் சமாதானம் செய்யப் பல நல்ல வார்த்தைகளைச் சொல்லி வாக்குறுதிகளைக் கொடுத்து மெல்ல மெல்ல அவளைச் சமாதானம் செய்ய முற்பட்டான். தானும் வல்லபனும் நாளையும் வருவோம் எனவும் காஞ்சியில் இருக்கும்வரை தினம் வந்து பார்த்துவிட்டுச் செல்வதாயும் வாக்குறுதி அளித்தான்.

Friday, June 04, 2021

மஞ்சரியின் பெற்றோர்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 இரவில் நேரம் சென்று வந்த தத்தனிடம் அந்தப் பெண் மஞ்சரி உரிமையுடனும் சலுகையுடனும் கடிந்து கொண்டது வல்லபன் காதில் விழ அவன் வியப்பின் எல்லைக்கே போனான். தத்தன் என்ன சொல்கிறானோ எனக் கவனித்துப் பார்த்தவனுக்கு தத்தன் வாயைத் திறக்காமல் மௌனமாக இருந்தது உறுத்தியது. ஆனால் அந்தப் பெண் விடாமல் தன் மாமனைக் கண்டு பிடித்தானா தத்தன் என்பதை அவனிடம் விசாரிக்க அதற்கும் தத்தன் சிறிது நேரம் கழித்தே தன்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதைச் சொன்னான். தத்தனுக்கு என்ன ஆயிற்று என வல்லபன் யோசித்தான். மஞ்சரி தத்தனிடம் மேலும் மேலும் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தாள். தன் மாமன் எங்கிருப்பார் என்பது குறித்தும் தத்தனுக்குத் தெரியாது என்பதைக் கேட்டறிந்தவள் தன்னையே நொந்து கொண்டாள். 

காஞ்சிக்குப் பெற்றோர்களைக் கண்டு அவர்களுடன் சேரலாம் என நினைத்திருந்த தன் எண்ணத்துக்கு மாறாக எல்லாம் நடப்பதைக் கண்டு மனம் வருந்தினாள் மஞ்சரி.  தத்தன் வல்லபனைத் தேடி வந்து அவனுடன் இனிச் செய்ய வேண்டியவை குறித்து ஆலோசித்தான். இரவு முழுவதும் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  காலை விடிந்ததும் தத்தன் மஞ்சரியைத் தேடிக் கொண்டு வந்தான். அவள் வெளியே செல்லத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். மஞ்சரியைப் பெயர் சொல்லி தத்தன் அழைக்கவும் அதிலேயே மகிழ்ந்து போன மஞ்சரி ஆவலுடன் அவனைப் பார்த்தாள். தத்தன் அவளை அமரச் சொல்லித் தானும் அவளருகே சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டான். மஞ்சரியிடம் ஒரு முக்கியமான விஷயம் பற்றிக் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றான் தத்தன்.  பின் மெல்ல மெல்ல அவள் தாத்தா தன்னிடம் கூறினவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சரியிடம் எடுத்துச் சொன்னான் தத்தன். கடைசியில் மஞ்சரியின் பெற்றோர் இப்போது உயிருடன் இல்லை எனவும் அவர்கள் இறந்து பல காலம் ஆகிவிட்டது என்றும் சொன்னான். 

மலர்ந்த முகத்துடன் அந்தக் காலை வேளையில் அன்றலர்ந்த மலர்போல விகசிப்புடன் இருந்த மஞ்சரிக்கு மெல்ல மெல்ல முகம் மாறி வெளிறிப் போய்விட்டது.  சிலை போல் அமர்ந்திருந்த மஞ்சரியின் கண்கள் கண்ணீரை வடித்துக் கொண்டிருந்தன. அது ஒன்றே அவள் உயிருள்ள பெண் என்பதைக் காட்டிக் கொண்டிருந்தது.  அவள் அழுது முடித்து மெல்ல மெல்லத் தேறட்டும் எனக் காத்திருந்தான் தத்தன். பின்னர் அவளைப் பார்த்து அவள் பெயர் சொல்லி, "மஞ்சரி, மஞ்சரி!" என அழைத்தான். ஆனால் அவளோ நிமிரவே இல்லை. தலை குனிந்தபடியே அப்படியே அசையாமல் வீற்றிருந்தாள்.  தத்தனுக்குள் இரக்கம் மீதூறியது. மெல்ல அவளைத் தொட்டு அசைத்து தன்னைப் பார்க்கும்படி சொன்னான். அவள் சோகத்தில் கசிந்த கண்களுடன் மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். மிகுந்த இரக்கத்துடன் சோகம் ததும்பிய அவள் முகத்தைப் பார்த்த தத்தன் கண்களிலும் கண்ணீர் பெருகியது.

"இதோ பார் மஞ்சரி! நாட்டைப் பீடித்திருக்கும் பீடைகள் இன்னமும் விலகவில்லை. நாம் இன்னமும் அந்நிய ஆட்சியில் இருக்கிறோம். நாட்டில் நடந்த இந்த மோசமான படையெடுப்புக்களில் எத்தனையோ மக்கள் உயிரைத் தியாகம் செய்திருக்கின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளை இழந்தும், குழந்தைகள் பெற்றோரை இழந்தும் வாழ்கிறார்கள். இறந்தவர்கள் அனைவருமே நம் அரங்கனுக்காகவும் தமிழ் பேசும் மக்களுக்காகவும் உயிரைத் தியாகம் செய்தவர்கள்.  சொர்க்கத்தில் இடம் பெற்றவர்கள். ஆகவே உன் பெற்றோரும் சொர்க்கத்திற்குத் தான் போயிருப்பார்கள்.  நீ அவர்களை நினைத்துக் கவலை கொள்ளாதே! மனதைத் தேற்றிக் கொள்!" என்றான்.

மஞ்சரி அவனிடம், "ஐயா! இந்தக் காஞ்சிக்கு வந்து சேர்ந்ததும் ஒருவழியாகப் பெற்றோர்களிடம் சென்று விடுவேன் என நம்பிக் கொண்டிருந்தேன். இப்போது தங்கள் செய்தியிலிருந்து எனக்கு அந்த பாக்கியம் இல்லை; நான் பெற்றோர்களைச் சிறு வயதிலேயே இழந்துவிட்டேன் என்பதைப் புரிந்து கொண்டேன்.  என் நினைப்பெல்லாம் பெற்றோர்களைச் சென்று அடைவதில் இருந்தது. நினைப்பிலேயே அவர்களை அடைந்து நினைப்பிலேயே அவர்களை இழக்கவும் செய்திருக்கிறேன்.  இப்போது இந்த நினைவுக்கள் என்னை விட்டு அழிய வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே கனவும்களும் நினைவுகளுமாகப் போய்விட்டன." என்று கண்ணீருடன் கூறினாள். அவள் மன முதிர்ச்சியும் பேச்சும் தத்தனை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. இத்தனை சிறிய வயதில் எவ்வளவு மன முதிர்ச்சி என நினைத்துக் கொண்டான். அவளைச் சமாதானம் செய்ய முயன்றான்.  ஆனால் நேற்றுத் தான் சொன்ன ஒரு சிறு பொய் அவளை என்ன செய்யப் போகிறதோ எனக் கவலை கொண்ட தத்தன் அவளை விரைவில் அதற்குத் தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வல்லபனைப் பார்க்க எழுந்து சென்றான்.

Friday, May 28, 2021

வல்லபனின் கேள்விகள்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 தத்தன் தனியாக விசாரிக்கப் போயிருப்பதைப் பற்றிக் கவலைப்பட்ட அந்தப் பெண் மஞ்சரி அவனுக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ எனக் கவலையையும் தெரிவித்தாள். குறுகிய காலத்தில் தத்தன் மேல் அந்தப் பெண் காட்டும் ஈடுபாட்டையும், அன்பையும் கண்ட வல்லபன் ஆச்சரியப் பட்டான். அவர்கள் பயணத்தின்போதும் வரும் வழியெல்லாம் அவள் தத்தனுடைய சௌகரியங்களையும், அவன் உடல் நிலை மீதும் மிகுந்த கரிசனம் காட்டினாள்.  அவனுக்குத் தவறாமல் மருந்துகள் கொடுப்பது, சரியாக உணவு உண்டானா எனக் கவனிப்பது, அவன் துணிகளைத் தோய்த்து உலர்த்தித் தருவது என அவள் காட்டிய ஈடுபாடு வல்லபனுக்குள் ஆச்சரியத்தையும் தோற்றுவித்திருந்தது. வல்லபனுக்கு ஒரு பெண் ஒரு ஆண்மகன் மேல் அன்பும், பாசமும் கொண்டு விட்டால் அவனுக்காக எது வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதைக் குறித்து வியப்பு ஏற்பட்டது. அதோடு அந்தப் பெண் அந்த ஆண்மகனிடம் காட்டும் ஈடுபாடும் சேவைகளும் இனிமையானவை என்று எண்ணும் அதே சமயம் அதன் மூலம் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் ஏற்படும் வேதனைகளையும் எண்ணினான். தானும் மகரவிழியாள் எங்கே இருக்கிறாள் என்பதே தெரியாமல் அவதிப்படுவதையும் அதனால் தன் மனதில் எழும் வேதனைகளையும் நினைத்துப் பெருமூச்செறிந்தான்.

இப்போது அந்த மகர விழியாள் இங்கே இருந்திருந்தால்? இதை எண்ணிய வல்லபனுக்குத் தனக்கு அவள் இப்படி எல்லாம் சேவைகள் செய்திருப்பாளா என எண்ணிப் பார்க்க அந்த எண்ணங்களே அவனுக்கு இன்பமயமாக இருந்தன. ஆனால் அவை உண்மையில் நடக்காது எனவும்,அ வள் யாரோ அரச குடும்பத்து வாரிசு எனவும் என்னதான் அவள் தன்னைக் காதலித்தாலும் திருமணம் என வந்தால் அவள் தன்னைத் திருமணம் செய்து கொள்வது நடக்காத ஒன்று என்பதும் வல்லபனுக்குப் புரிந்தது. இதனால் ஏற்பட்ட மன வேதனையில் அவனுக்கு தத்தன் மேல் கொஞ்சம் பொறாமை கூட ஏற்பட்டது. ஆனால் உடனே தன்னைச் சமாளித்துக் கொண்டான்.  என்றாலும் மீண்டும் மீண்டும் அவன் மனதினுள் மகரவிழியாளின் முகமே தோன்ற அவளைக் குறித்து மஞ்சரியிடம் கேட்டால் என்ன என்னும் எண்ணம் அவனுக்குள் எழுந்தது.  இப்போது இங்கே தத்தனும் இல்லை. ஆகவே இதுவே நல்ல தருணம் என நினைத்தான் வல்லபன். மேலும் அந்தச் சேவகர்கள் கூடவே அந்த மகரவிழியாளையும் அழைத்து வந்து தான் இருந்த இடத்திற்கு எதிரே அவளை வைத்திருந்ததை நினைவு கூர்ந்தான். ஆகவே மஞ்சரிக்கு அவளைப் பற்றித் தெரிந்திருக்கக் கூடும் என்னும் எண்ணம் அவனுக்குள் தோன்றியது.

உடனே அவன் மஞ்சரியிடம்,  நல்லூரில் அந்த சேவகர்கள் வந்தபோது தனியாக வந்தார்களா? அல்லது கூடவே ஒரு பெண்ணும் வந்தாளா என்று கேட்டான்.  அவள் ஏதானும் பார்த்தாளா என்று அறியவே அவன் கேட்டான். ஆனால் அதற்கு மஞ்சரி தான் அந்தப் பெண்ணைப் பார்த்ததோடு அல்லாமல் அவள் கூடவே இரண்டு நாட்கள் இருந்ததாயும், அந்தப் பெண் உடல் நலமில்லாமல் இருந்ததாயும் தெரிவித்தாள். அதனால் தான் அந்த சேவகர்கள் அங்கேயே தங்கி அவள் உடல் நலம் கொஞ்சம் சொஸ்தம் ஆனதும் கிளம்பினார்கள் என்றும் சொன்னாள்.  வல்லபன் மனம் பதைத்தது. எனினும் வெளியே காட்டிக் கொள்ளாமல் என்ன உடம்பு என விசாரித்தான். நல்ல ஜூரமாகவும் அதோடு வயிற்று வலியும் சேர்ந்து கொண்டதாக மஞ்சரி சொன்னாள். பிரக்ஞையே இல்லாமல் இருந்தவளை முதலில் ஆதுரசாலையில் சேர்த்ததாகவும், பிறகு அங்கே நடமாட்டம் அதிகம் இருந்ததால் வேறே தனி வீட்டுக்கு அவளைக் கொண்டு சென்றதாகவும், எவரும் அவளைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அவள் இருப்பதையே ரகசியமாக வைத்திருந்ததாகவும் சொன்னாள்.

தன்னையும், வைத்தியரையும் மட்டும் நெருங்க விட்டதாய்ச் சொன்ன மஞ்சரி தான் ஒரு பெண் என்பதால் இன்னொரு பெண்ணுக்கு வைத்தியம் செய்யும்போது நான் கூட இருப்பது அவளுக்கும் அனுகூலம் என நினைத்திருப்பார்கள் என்றும் சொன்னாள். ஆனால் வீட்டுக்கு அவளை எடுத்துச் சென்ற பின்னர் தன்னை அந்த வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் போகும்போது தன்னையும் வைத்தியரையும் கடுமையான எச்சரிக்கைகளால் பயமுறுத்திவிட்டுப் போனதாகவும் சொன்னாள். அதோடு இல்லாமல் அந்த ஆதுரசாலைக்கு வருபவர்களைக் கண்காணித்துக் கொண்டும் இருந்தனர். அவர்கள் இதற்காக ஒரு நாடகமும் நடத்தியதாகச் சொன்னாள். வல்லபன் ஆவலுடன் என்ன நாடகம் எனக் கேட்க மஞ்சரி  மேலே சொன்னாள். அங்கே சேவகன் ஒருவன் காலில் அடிபட்டுக் கட்டுப் போட்டுக் கொண்டு படுத்திருப்பது போல் கிடந்தான். ஆனால் அவன் உண்மையில் அடிபட்டுக்கொண்டவன் எல்லாம் இல்லை. அந்தப் பெண் ஆதுரசாலையில் தனி அறையில் இருந்ததால் அங்கே வருபவர்களைக் கண்காணிக்க அந்தச் சேவகன் அங்கே வந்து படுத்துக் கொண்டான் எனவும் அவனுக்குத் துணையாகச் சிலர் அங்கேயே நடமாடிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் சொன்னாள். 

பின்னர் அந்தப் பெண்ணைப் பற்றி அவள் வர்ணித்தாள். அவள் அழகையும், கம்பீரத்தையும் பார்த்தால் அவள் ஓர் ராஜகுமாரியாகத் தான் இருக்க வேண்டும் என்றும் ஆனால் அந்தச் சேவகர்கள் அவள் யாரோ ஓர் பிரபுவின் பெண் என்றே சொன்னதாகவும் சொன்னாள். மேலும் அந்தப் பெண் எப்போதும் மயக்கத்திலேயே இருந்ததாகவும் அது இயற்கையாக இல்லை என்பதால் வைத்தியருக்கும் அவளுக்கும் பயம் ஏற்பட்டதாகவும் சொன்னாள். இருவருக்குமே அவளை இவர்கள் கடத்திச் செல்வது புரிந்து விட்டதாகவும் அதனாலேயே அவளை எப்போதும் மயக்க நிலையிலேயே வைத்திருந்ததாகவும் சொன்னாள்.  வல்லபன் அவள், அந்த மகரவிழியாள், பேசினாளா என்றும் எப்படிப் பேசினாள் என்றும் தீவிரமாகக் கேட்டறிந்ததைக் கண்ட மஞ்சரி சிரித்தாள். "உங்களுக்குத் தெரிந்தவளா?"என்று வல்லபனிடம் கேட்க அவனோ அவள் மீது தனக்கு ஓர் அனுதாபம் தோன்றியதாகவும் அதனால் கேட்டதாகவும் சொன்னான். 

Tuesday, May 25, 2021

காஞ்சிபுரத்தில் இளைஞர்கள்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

தயா சதகம் பாடி கோபண்ணாவை வழி அனுப்பி வைத்தார் தேசிகர். கோபண்ணாவும் தன் அந்தரங்க வேலைக்காரர்களுடன் கிழக்கு நோக்கித் திருமலையில் போய்த் தேடும் எண்ணத்துடன் கிளம்பினார். இரண்டாவது கோஷ்டியாக அவர்கள் சென்றனர்.
***************************************************** 
இங்கே வல்லபனும், தத்தனும் கடைசியாகத் தங்கிய இடத்திலிருந்து இடைவிடாது பயணித்துக் காஞ்சிபுரத்தை அடைந்திருந்தனர். காஞ்சிபுரம் எத்தனையோ பேரின் ஆட்சிகளைக் கண்டிருந்தது. அந்தக் கால கட்டத்தில் சம்புவராயரின் கட்டுப்பாட்டில் இருந்தது. சம்புவராயரின் ராஜ்யத்திற்கு "ராஜ கம்பீரம்" என்னும் பெயர் வழங்கி வந்தது.  காஞ்சிபுரம் செல்ல அவர்கள் மனம் தயங்கினாலும் வேறு வழியில்லாமல் மஞ்சரிக்காகச் செல்ல வேண்டி வந்தது. தங்களிடம் அவள் பொறுப்பை அவள் தாத்தா சுமத்திவிட்டதாக இருவருமே நினைத்தனர். காலை வேளையிலே காஞ்சிபுரத்துக்குள்ளே நுழைந்த அவர்கள் அந்த நகரின் வீதிகள் அப்போது இருந்த சுறுசுறுப்பைக் கண்டு வியந்தார்கள். இத்தனைக்கும் பழைய பெருமை எல்லாம் குறைந்து இருந்தது காஞ்சிபுரம். யானை ஒன்றின் மீது திருமஞ்சனக்குடம் வைக்கப்பட்டு அதன் அருகே இருபக்கமும் அம்பாரியில் பட்டாசாரியார்கள் வீற்றிருந்து கவரி வீசி வர, சங்குகளும் எக்காளங்களும் சப்தமிட பெரிய பெரிய குடைகளுடன் ஊர்வலம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட இளைஞர்களுக்கு வியப்பு அதிகமாய் இருந்தது. இம்மாதிரி ஒரு காட்சியை அவர்கள் கண்டதே இல்லை.

நகரத்தின் வீதிகள் கலகலப்புடன் இருந்ததோடு அல்லாமல் போவோரும் வருவோருமாக, வண்டிகள் ஆங்காங்கே ஓசைப்படுத்தப் பல்லக்குகளிலும் பயணித்த மனிதர்களோடு தெருக்கள் போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டன.  அங்கே வரை சுல்தான்களின் கொடுமைகள், கொடூரங்கள் வராத காரணத்தால் மக்கள் முகங்களும் மலர்ந்து நிச்சலனமாகக் காணப்பட்டன. இது வல்லபனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.  எங்கு பார்த்தாலும் மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டு, கமுகு, வாழைமரங்கள் போன்றவையும் கட்டப்பட்டிருக்கவே ஊரில் ஏதோ திருவிழா/அல்லது வேறு ஏதோ விசேஷம் என இருவரும் விசாரித்துத் தெரிந்து கொண்டனர்.  எங்கு பார்த்தாலும் அலங்காரப் பந்தல்களும், அலங்கரிக்கப்பட்ட விசித்திரமான சித்திரங்களுமாகக் காணப்பட்ட வீதிகள் அத்ஹ்டனையும் சுத்தமாகவும் நீளமும் அகலமுமாகக் காணப்பட்டதோடு விதம் விதமான மாக்கோலங்கள் வீதிகளை அலங்கரித்தன.  வல்லபனுக்கும் தத்தனுக்கும் தாங்கள் ஏதோ மாயாலோகத்தில் நுழைந்து விட்டாற்போல் உணர்ந்தார்கள். 

ஆங்காங்கே திண்ணைகள், மாளிகையின் பெரிய கூடங்களில் திவ்யப்ரபந்தங்களைச் சேவிக்கும் கோஷங்களும் அவ்வப்போது கேட்டன.  அதைத் தவிரவும் ஆங்காங்கே பல வீடுகளில் இருந்து வேத கோஷங்களும் ப்ரபந்தங்களின் கோஷங்களுக்கு இணையாகப் போட்டி போட்டுக் கொண்டு கேட்டன.  அதைக் கண்ட வல்லபனுக்கு நெஞ்சு குமுறியது! தத்தனிடம், "தத்தா! நம் நாடும் தமிழ் பேசும் நாடு தானே! அங்கேயும் இப்படித்தானே இருந்திருக்க வேண்டும். இத்தனை கோலாகலங்களோடு ஜனங்கள் வாழ்ந்திருபபர்கள் அல்லவா?  இந்த சுல்தான்களின் ஆட்சியில் அனைத்தும் மறைந்தும்/மறந்தும் போய் விட்டன அல்லவா?" என்று மனம் நொந்து கலங்கினான் வல்லபன். மஞ்சரியும் இதுநாள் வரை சுல்தான்கள் ஆட்சியிலேயே இருந்ததால் அவளுக்கும் இதெல்லாம் புதுமையாகவே இருந்தது.  காஞ்சியின் காட்சிகள் பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் உண்டு பண்ணின. 

மூவரும் ஓர் சத்திரத்தைத் தேடிப் பிடித்துத் தங்க எண்ணினார்கள். அதன் பின்னர் எப்படியேனும் மஞ்சரியின் மாமனைத் தேடி அவரிடம் அவளை ஒப்படைக்க வேண்டும்.  ஆகவே சத்திரம் ஒன்றைக் கண்டு பிடித்து அங்கே தங்க இடம் பார்த்துக் கொண்டு மஞ்சரியை அங்கே பாதுகாப்பாக இருக்க வைத்துவிட்டுப் பின்னர் இருவரும் மஞ்சரியின் மாமனைத் தேடிச் சென்றார்கள்.  பகல் முழுவதும் தேடியும் மஞ்சரி சொன்ன "சிங்கழகர்" என்னும் பெயருள்ள அந்த மாமனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மாலையும் ஆகி விட்டது. கலங்கி நின்ற அவர்களில் தத்தன், வல்லபனைப் பார்த்து, "வல்லபா! ஊரில் உள்ள வைணவ மடங்களில் கேட்டுப் பார்க்கலாமா? நான் அவற்றிற்குச் சென்று ஒவ்வொன்றாக விசாரித்துக் கொண்டு வருகிறேன். இப்போது இரவாகி விட்டதால் மஞ்சரிக்கு யாரேனும் காவல் இருக்க வேண்டும். ஆகவே நீ போய்ச் சத்திரத்தில் அவளுக்குத் துணை இரு!" என்று சொன்னான்.

அதன் பேரில் வல்லபன் சத்திரத்துக்கு வந்து ஓய்வு எடுத்துக் கொண்டு சத்திரத்தின் முற்றத்தில் இருந்த துளசிமாடத்துக்கு அருகே உள்ள மேடையில் அமர்ந்து கொண்டு யோசனையில் இருக்க உள்ளே இருந்த மஞ்சரி வெளியே வந்து வல்லபனைப் பார்த்த வண்ணம் எதிரே அமர்ந்து கொண்டாள். தத்தன் தனியே தேடப் போயிருப்பது குறித்துத் தன் கவலையைத் தெரிவித்தாள். தத்தன் மீது அவள் வைத்திருக்கும் கரிசனமும் , பாசமும் வல்லபனைக் கவர்ந்தன. 

Wednesday, May 19, 2021

மஞ்சரியின் கதை! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 வல்லபன் தானும் அந்தப் பெண்ணின் மாமா மூலம் அரங்கன் குறித்த தகவல்கள் கிடைக்கும் என நம்பியே ஒத்துக் கொண்டதாகவும், மேலும் அவர்கள் இருவரும் அந்தச் சேவகர்களின் கொடுமையிலிருந்து தப்பிக்கவும் இந்தப் பெண் உதவியதாலும் அவளைக் கூட அழைத்துவரச் சம்மதித்ததாகச் சொன்னான். அதை தத்தனும் ஒத்துக் கொண்டான். மேலும் சொன்னான். அந்தச் சேவகர்கள் இவர்களைத் தேடிக் கொண்டு வைத்தியர் வீட்டில் சோதனை போட்டபோது தான் மட்டும் புழக்கடைக் கிணற்றுக்குள் இறங்கி ஒளியவில்லை எனில் அவர்களிடம் மாட்டிக் கொண்டிருப்போம் எனவும் உயிருடன் தப்பி இருக்க முடியுமா என்பதே சந்தேகம் எனவும் சொன்னான். அதுவும் அந்த ஆழமான கிணற்றின் கடைசி உறையில் தான் நின்று கொண்டிருந்ததாகவும் மயக்கம், மயக்கமாய் வந்ததாகவும் சமாளித்துக் கொண்டு இருந்ததாயும் சொன்னான். 

அப்போது வல்லபன் தத்தன் ஜன்னி கண்டு நினைவின்றிப் படுத்திருந்த காலத்தில் அவனை அடையாளம் கண்டு கொண்ட சேவகன் ஒருவன் அவனருகே வருவதைப் பார்த்துவிட்டு அந்தப் பெண் மஞ்சரி தத்தன் இறந்துவிட்டான் எனப் பொய் சொல்லி அவனருகில் அந்தச் சேவகன் வராதவாறு தடுத்ததோடு அல்லாமல் குச்சிலில் தத்தனை மறைத்து வைத்துப் பணிவிடைகள் செய்து மருந்துகளை நேரம் தவறாமல் கொடுத்து அவனைக் காப்பாற்றியதையும் சொன்னான். தத்தன் அதற்கு இதெல்லாம் ஓர் உதவியா எனச் சிரிக்க, வல்லபனோ இந்த உதவிக்கு மட்டுமின்றி அந்தப் பெண் வந்து பணிவிடைகள் செய்ததற்கும் தத்தன் அதிர்ஷ்டம் பண்ணி இருக்கவேண்டும் எனவும் இல்லை எனில் இதெல்லாம் நடந்திருக்காது என்றும் சொன்னான்.  தத்தனோ மிகத் தீவிரமான மனோநிலையில் இவை எல்லாம் நடந்ததற்குத் தன் விதி தான் காரணம் எனவும், தான் பிழைக்கவேண்டும் என்பது விதி என்றும் அதனால் தான் தான் பிழைத்ததாகவும் சொன்னான்.

வல்லபனுக்கு தத்தன் பேச்சுப் பிடிக்காததால் மௌனமானான். அதைக் கண்ட தத்தன் அவனைப் பேச்சுக்கு இழுக்க நினைத்துத் தான் அரங்கனைப் பற்றிய தகவல்களைத் தேடுவதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பதாய்ச் சொன்னான். வல்லபன் தனக்கும் அதே குறிக்கோள் தான் என்றான்.  மேலும் அதனால் தான் அந்தப் பெண் நம்மோடு வந்தால் அவள் மாமாவைப் பார்த்துத் தகவல் அறிய வசதியாக இருக்கும் என நினைத்து அவளையும் கூட அழைத்து வந்ததாகவும் வல்லபன் கூறினான். மேலும் வல்லபன் அவள் கூட வரும் அவள் பாட்டனார் அந்தப் பெண்ணை அவள் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என எண்ணுவதாகவும் அதற்குத் தான் உதவியாக இருக்கப் போவதாகவும் கூறினான்.  அப்போது பக்கத்து அறையில் இருந்து மஞ்சரி ஓடி வந்து இவர்கள் இருவரையும் அழைத்தாள். பெரியவர் எப்படியோ பார்ப்பதாகவும் தனக்குப் பயமாக இருப்பதால் அவர்கள் இருவரும் துணைக்கு வரவேண்டும் எனவும் அழைத்தாள்.

இருவரும் ஓடோடிச் சென்று பார்த்தால் கிழவர் உடல் தூக்கித் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது. கண்கள் ஒரு மாதிரியாகச் சொருகிக் கொண்டிருந்தன. பார்க்கவே பயமாக இருந்தது. தத்தன் அவர் அருகே போய் உட்கார்ந்து கொண்டான். சற்று நேரத்தில் அவர் மயக்கத்திலிருந்து விழித்துப் பார்த்தார். தத்தனை அடையாளம் கண்டு கொண்டார். மஞ்சரியிடம் குடிக்க வெந்நீர் கொண்டுவரச் சொல்லிவிட்டு அவர் தத்தனிடம் பேசலானார்.  தான் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு வடக்கே காஞ்சியை நோக்கிச் செல்வதாகவும் இவள் தன்னுடைய பேத்தி என்று, சொன்னவர் வழியில் தனக்கு ஜுரம் கண்டதால் பூங்குளத்தில் வைத்தியரிடம் தங்கிச் சிகிச்சை பெற்றதையும் சொன்னார். ஆனாலும் தனக்கு வயது ஆகிவிட்டதால் இனித் தான் பிழைக்கப் போவதில்லை என்று நம்புவதாகவும் சொன்னார். அதற்கு முன்னர் அந்தப் பெண்ணிற்குத் தான் செய்ய வேண்டிய கடமை ஒன்றிருப்பதாகவும் அதைத் தான் இப்போது தத்தனிடம் கூறப்போவதாகவும் சொல்லிவிட்டு அவனை அருகே அழைத்துக் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

அந்தப் பெண் மஞ்சரி அவள் பெற்றோர்களுக்கு ஒரே பெண் என்றும் குழந்தைக்குப் பிரார்த்தனையை நிறைவேற்றத் திருப்பதிக்குக் குழந்தையையும் தூக்கிக் கொண்டு திருப்பதி செல்ல நினைத்தவர்கள் குழந்தை உடல் நலம் இல்லாமல் இருந்ததால் ஊரிலேயே விட்டு விட்டுக் கணவன், மனைவி இருவரும் மட்டும் சென்றதாகவும் அவர்கள் சென்ற வழியில் தான் அப்போது கண்ணனூர்ப் போர் நடந்ததாகவும் தெரிவித்தார். கண்ணனூர்ப் போரில் வெற்றி பெற்ற துருக்கியர்கள் அந்தக் கொண்டாட்டத்தில் அக்கம்பக்கம் ஊர்களை எல்லாம் சூறையாடிப் பெண்களை பலவந்தம் செய்து என்று பல அக்கிரமங்கள் செய்ததாகவும், அவர்கள் கைகளில் மாட்டிக் கொண்ட இந்தத் தம்பதியர் அவர்களால் கொல்லப்பட்டதையும் கூறினார். ஆனால் அந்தப் பெண்ணுக்கு அதைத் தெரிவிக்கவில்லை என்றும் பெற்றோர் வந்துவிடுவார்கள் என்றே சொன்னதாகவும் சொன்னார்.  பெற்றோர்களைப் பார்க்க வேண்டும் என்ற பெண்ணிடம் காஞ்சியில் மாமன் வீட்டில் இருப்பதாகப் பொய் சொன்னதாகவும் நாட்டில் நடக்கும் கலவரங்களால் இப்போது போக முடியாது என்றும் நாட்களைக் கடத்தியதாகவும் மேலும், மேலும் அவள் வற்புறுத்தல் தாங்காமல் தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகச் சொன்னார்.  இதைச் சொல்லும்போதே அவருக்குப் பலத்த இருமல் வரப் பேசமுடியாமல் தவித்தார். விடாமல் நீடித்த இருமல் அவர் உயிரை வாங்கிக் கொண்ட பின்னரே நின்றது.

**************************************************

திருநாராயணபுரம், மஹான் வேதாந்த தேசிகரின் வீடு. காலை வேளை. பட்சிகளின் விதம் விதமான கூவல்கள் அந்த இடத்தையே ஒளிரச் செய்து கொண்டிருந்தது. வேதாந்த தேசிகரைப் பார்க்க கோபண்ணா வந்திருந்தார். அவரை நமஸ்கரித்துத் தான் திருப்பதி யாத்திரை மேற்கொண்டிருப்பதாகவும் ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அவரது ஆசிகளைப் பெற்றுக் கொண்டவர் தனக்கு இன்னொரு ஆசையும் உண்டென்றும் அது தான் அரங்கனைத் தேடுவது என்றும் அதற்கும் தேசிகரின் ஆசிகள் தேவை என்றும் சொன்னார். அரங்கன் அருள் இருந்தால் எல்லாம் நல்லபடி நடந்து நன்மையாகவே முடியும் என ஆசிகளைத் தந்த தேசிகர் "தயா சதகம்" என்னும் நூலை இயற்றிப் பாட ஆரம்பித்தார்.

Sunday, May 16, 2021

நண்பர்களுக்குள் தர்க்கம்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 எதிர் வீட்டில் காணப்பட்ட அந்த அழகி தன்னைக் கவனிக்கவில்லை என்பதில் வல்லபனுக்கு வருத்தம் தான். மனது வேதனைப் பட்டது. அவன் மச்சிலில் புகுந்து ஓய்வு எடுக்கும்போதெல்லாம் அந்த தேவதாசிப் பெண்மணி சுகிர்த ரத்னா வந்து பார்த்து வல்லபனை விசாரித்துச் சென்றாள். அந்தச் சேவகர்கள் ஊரில் எல்லா வீடுகளிலும் நுழைந்து புகுந்து சோதனைகள் போட்டுத் தேடுவதையும் அட்டகாசம் செய்வதையும் சொல்லி வருந்தினாள்.  இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் தங்கள் இஷ்டத்துக்கு நடந்து கொள்கின்றனர் என்றும் வருந்தினாள். நாடு உண்மையிலேயே சீரழிந்து விட்டதாகவும் நல்ல நடவடிக்கைகள், நல்லெண்ணெங்கள் மறைந்து வருவதாகவும் போகப் போக என்னாகுமோ என்னும் கவலை ஏற்படுவதாகும் சொன்னாள். அவள் சொன்னது சற்றும் மிகையில்லை என்பதைப் போல் அந்த ஊரிலே அனைவருக்கும் மனதில் கலக்கம் ஒன்று வந்துவிட்டது. சேவகர்கள் அனைவரும் அந்த அளவுக்கு ஊர் மக்களைப் படுத்தி எடுத்தார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்குமே இதன் காரணம் புலப்படவில்லை.

அந்தச் சேவகர்கள் சம்புவராயரின் சேவகர்கள் அல்ல என்றும் யாரோ கொள்ளைக்காரர்கள் என்றும் சிலர் சொல்ல இன்னும் சிலர் யாரோ உயர்ந்த குடியில் பிறந்தவர்களை இவர்கள் கடத்திக்கொண்டு செல்வதாகவும் இவர்கள் கை தேர்ந்த கடத்தல்காரர்கள் என்றும் உறுதியாகச் சொன்னார்கள். இதைப் பற்றியே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருந்த ஊர் மக்களுக்கு அன்றிரவே அவர்கள் அனைவரும் ஊரைக் காலி செய்து கொண்டு போய்விட்ட செய்தி மறுநாள் கிடைத்ததும் தான் நிம்மதி ஆயிற்று. மழைக்காலம் இன்னமும் விடாததால் இரண்டு நாட்கள் வெறித்திருந்த வானம் அன்று மோடம் போட்டு மழையும் பெய்தது. அந்த ஊரில் இருந்த பெரிய ஏரி நிரம்பி வழிந்தது. வடிகால்கள் வழியே நீர் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. ஏரிக்கரைக்குச் சற்றே தள்ளி ஓர் மேடான இடத்தில் ஓர் மண்டபம் காணப்பட்டது.  பதினாறு தூண்களுடன் பதினாறுகால் மண்டபம் என்றும் அழைக்கப்பட்ட அது அந்த வழியாகச் செல்லும் பயணிகள் தங்கி இளைப்பாறிச் செல்லவென்று ஏற்படுத்தப்பட்டது. சிற்பங்கள் பல செதுக்கப்பட்டிருந்தன.

தண்ணீர் அருகிலேயே ஏரியில் கிடைப்பதால் யாத்ரிகர்கள் அங்கே தங்கிக் குளித்துக் கடமைகளை முடித்துக் கொண்டு உணவும் சமைத்து உண்டு ஓய்வு எடுத்துப் பின் செல்வது வழக்கமாக இருந்தது. அன்றைக்கு இரவு வரை மழை பெய்ததால் ஓர் ஊதல் காற்றுடன் அந்த இடமே ஈரப்பிசுபிசுப்புடன் காணப்பட்டது. வெளியே இருந்து எழுந்த சத்தங்களைப் போல் மண்டபத்துக்கு உள்ளே இருந்தும் ஓர் முனகல் கேட்டது. வயோதிகர் ஒருவர் உடல்நிலை சரியில்லாதவரின் முனகல் குரல். மண்டபத்தின் தரையில் கோரைப்பாயைப் பரப்பி மேலே துணிகளைய்ப் போட்டுப் பெரியவரைப் படுக்க வைத்து விட்டு அருகே அமர்ந்திருந்தால் ஓர் இளம்பெண். அவருக்குப் பணிவிடைகளை அவள் தான் செய்து கொண்டிருந்தாள். அந்த மண்டபம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மண் சுவரைத் தற்காலிகமாய் எழுப்பி இரு தனி அறைகள் போலச் செய்திருந்தார்கள். அதில் தான் ஒன்றில் அந்தப் பெரியவரைப் படுக்க வைத்திருந்தாள் அந்த இளம்பெண். அவர் தலைமாட்டில் ஓர் விளக்கு மென்மையான ஒளியைத் தந்து கொண்டிருந்தது. 

அந்தப் பெண் உள்ளே பெரியவரைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மண்டபத்தின் இன்னொரு ஓரத்தில் இருந்த ஓர் யாளிச் சிற்பத்தின் மீது சாய்ந்து கொண்டு வல்லபனும், தத்தனும் பேசிக் கொண்டிருந்தனர். உண்மையில் காரசாரமான விவாதம். அந்தப் பெரியவரையும், இளம்பெண்ணையும் வல்லபன் தன் பொறுப்பில் அழைத்து வந்திருப்பான் போல் அவர்கள் பேச்சில் இருந்து தெரிந்தது. அதை முழுத்தவறு என ஆணித்தரமாகச் சொல்லிக் கொண்டிருந்தான் தத்தன்.  தத்தனைக் கேட்டுக் கொண்டே தான் முடிவெடுத்ததாய்ச் சொன்ன வல்லபனிடம் தத்தன் தான் ஒத்துக் கொண்டதற்கான காரணமே வேறே என்று சொன்னான்.

"அந்தப் பெண்ணின் மாமன் ஒருவர் அரங்கனுடன் புறப்பட்ட ஐந்து பேரில் ஒருத்தர். ஒருவேளை இப்போது அவர் காஞ்சியில் இருந்தால் அவரைச் சந்தித்தால் அரங்கனைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் புதிதாக இருந்தால் நமக்குத் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும். நம் காரியத்திற்கும் உதவியாக இருக்கும். அதனால் தான் நான் ஒத்துக் கொண்டேன்." என்று தத்தன் சொல்ல, வல்லபன் அது மட்டும் காரணம் அல்ல என்றும் அந்தப் பெண் தத்தனின் உயிரைக்காப்பாற்றியதோடு வல்லபனையும் சேவகர்கள் பிடித்துச் செல்லாவண்ணம் காப்பாற்றிப் பாதுகாத்தாள் என்பதால் அவளுக்குத் தாங்கள் செலுத்தவேண்டிய நன்றிக்கடனாகவும் கூடவே அழைத்து வந்ததாய்ச் சொன்னான்.

Wednesday, May 12, 2021

வல்லபன் மறைந்திருந்த இடம்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

உள்ளே நெடுகிலும் பார்த்துவிட்டு மீண்டும் கூடத்துக்கூ வந்த அவர்களுக்கு முகங்களில் வெறுப்பும், தேடியதனால் ஏற்பட்ட களைப்புமாகத் தெரிந்தது. மஞ்சரியையும் அவர்கள் வெறுப்புடன் பார்த்தார்கள். பின்னர் எதுவுமே சொல்லாமல் வெளியே சென்றனர். மஞ்சரி அவர்கள் கொஞ்ச தூரம் போய்விட்டதை நிச்சயப்படுத்திக் கொண்டு உள்ளே குச்சிலுக்கு ஓடினாள். குச்சிலில் சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தாள். அங்கே யாரையுமே காணோம்! எங்கே போயிருப்பார் அவர்? மஞ்சரி கலக்கம் அடைந்தாள்.  அங்கிருந்த குதிர்களைத் திறந்து பார்த்தாள். பானைகளின் உள்ளே ஒளிந்திருப்பாரோ எனத் தேடினாள். மேலுள்ள பரண்களில் படுத்திருப்பானோ என எம்பி எம்பிப் பார்த்தாள். எங்கேயுமே காணவில்லை. புழக்கடைக் கதவைத் திறந்து அங்கே வெளியே எங்காவது மறைந்திருப்பானோ என்றும் பார்த்தவளுக்கு எங்கேயுமே காணோம் என்றதும் துக்கம் மேலோங்கியது. அயர்ந்து போய் அங்கேயே அமர்ந்தாள்.

சித்திரசாலையில் இருந்து இனிமையான மணங்கள் எல்லா இடங்களிலும் பரவிக் கொண்டிருந்தன. மேல் மாடம் முழுவதும் பரவி நிறைந்து எங்கும் இனிய மணம் வீசிற்று. கூடவே இனிய கீதம் மெல்ல மெல்ல சிற்றலையைப் போல் கிளம்பிற்று. ஐந்து தினங்களாய்த் தொடர்ந்த இந்த இனிய மணமும், இனிய கீதமும் அவனுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. எங்கோ ஓர் உலகில் சஞ்சரிப்பதைப் போல் உணர்ந்தான். எனினும் வல்லபனுக்கு தத்தன் கதை என்னவாகி இருக்குமோ என்னும் கவலை வாட்டி எடுத்தது.கடுமையான ஜூரத்துடன் நோயாளியாகக் கட்டிலில் படுத்திருந்தானே! அவனை அந்தச் சேவகர்கள் கண்டு பிடித்திருப்பார்களோ? பிடித்துக் கொண்டு போயிருப்பார்களோ! அப்படி அவர்கள் பிடித்துச் செல்லவில்லை என்றாலும் நோயின் கடுமையிலிருந்து அவன் தப்பி உயிர் பிழைத்திருப்பானா?  மேற்கொண்டு பிரயாணம் செய்யவும் யோசனை தான். ஏனெனில் சோதனைகள் தொடர்ந்து வந்து சூழ்கின்றன. இந்தச் சேவகர்கள் எங்காவது தொலைந்தால் தான்! மேலே என்ன செய்யலாம் என யோசிக்கவே முடியும். 

ஆனாலும் இவர்கள் வந்ததால் தானே அந்த மங்கையையும் பார்க்க முடிந்தது. இல்லை எனில் அவளுடன் சந்திப்பே நடந்திருக்காதே! அந்த அழகிய முகமும் அந்த நீண்ட பெரிய கண்களால் அவள் பார்ப்பதும் தனி சுகம். இவ்விதம் யோசித்தவனுக்கு அந்த மாடத்துக்குப் படிகளில் ஏறி யாரோ வரும் அரவம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தான் வல்லபன். உள்ளே வந்தவள் சுகிர்த ரத்னா என்னும் பெண்மணி. எம்பெருமாண்டியார் கூட்டத்தைச் சேர்ந்தவள். தேவதாசிகளை அந்நாட்களில் எம்பெருமாண்டியார் என அழைத்து வந்தனர். அவள் கண்ணன் மேல் அபார பிரேமை கொண்டவள். சங்கீதம், நிருத்தியம், சித்திரம், ஆரூடம் என அனைத்திலும் தேர்ந்தவள். நன்கு கற்றுத் தேர்ந்த அவளுக்கு எல்லோரையுமே கண்ணனாகப் பார்க்கும் இயல்பு கை வந்திருந்தது. பார்க்குமிடமெல்லாம் அவள் கண்ணனையே பார்த்தாள். அவள் மனம் கண்ணனின் பிரேமையில் ஆழ்ந்திருந்தது. 

மேலே வந்தவள் வல்லபனைப் பார்த்து, "கண்ணா! காலையிலிருந்து எந்த உணவும் சாப்பிடாமல் பட்டினியாகவே இருக்கிறாயே!எனக்குக் கவலை தாங்கவில்லை என்பதால் உணவை எடுத்துக் கொண்டு நானே வந்தேன்!" என்றபடி கையிலிருந்த வெள்ளித்தட்டுக்களை அவன் முன்னர் வைத்தாள். அவனைக் "கண்ணா!" எனப் பல முறை அழைத்து அவன் வேண்டிய மட்டும் உணவு படைத்துவிட்டுக் கீழே சென்றால் சுகிர்த ரத்னா! வல்லபன் இங்கே வந்ததில் இருந்து அவனைக் கவனித்துக் கொள்பவள் அவள் தான். அவன் தாயைப் போலவே இவளும் அவனிடம் பரிவு காட்டினாள்.  அன்பு ஒன்றைத் தவிர அவளிடம் கொடுப்பதற்கு வேறு எதுவும் இல்லை என்பதை நிதரிசனமாக உணர வைத்தாள்.  சத்திரத்து வாசலில் போக இடம் இல்லாமல் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்த வல்லபன் தற்செயலாக இவளைப் பார்த்தான். அவளிடம் விஷயத்தைச் சொன்னதும் மிகவும் மகிழ்வுடன் அவனை அவள் தன் விருந்தாளியாக ஏற்றுக் கொண்டாள்.

வல்லபன் உணவை உண்டு முடிக்கையில் கீழே சென்றிருந்த சுகிர்தரத்னாவிடம் யாரோ ஏதோ விசாரிக்கும் குரல் கேட்டது. ஆஹா! இந்தத் தோரணையான குரல்! அந்தச் சேவகர்களில் ஒருவன் அல்லவோ? வல்லபன் எச்சரிக்கை அடைந்தான்.  அந்தக் குரல் வீட்டில் யார் இருக்கிறார்கள் என சுகிர்த ரத்னாவிடம் விசாரித்துக் கொண்டிருந்தது. நாங்கள் வீட்டுச் சொந்தக்காரர்கள் தாம் என சுகிர்தா மறுமொழி கொடுப்பதும் அதற்கு அவர்கள் வீட்டைச் சோதனை இட வேண்டும் எனவும் சொல்லுவதைக் கேட்டான் வல்லபன். சுகிர்தாவின் மறுப்பும், அவர்களின் வற்புறுத்தலும் சோதனைக்கு வழிவிடும்படியான ஆணையும் வல்லபன் காதில் கேட்டது. சுகிர்தாவை மீறிக்கொண்டு அவர்கள் உள்ளே நுழையப் பிரயத்தனப் படுவதும் அவனுக்குப் புரிந்தது. ஆனால் சுகிர்தாவோ உரத்த குரலில் "நில்லுங்கள்!" எனக் கத்திக் கொண்டே அவர்களைத் தடுத்தாள்.

தங்களைத் தடுக்கக் கூடாது எனச் சேவகர்கள் கூறுவதும் அவர்களிடம் "நீங்கள் சம்புவராயர் நாட்டைச் சேர்ந்தவர்களா?" என சுகிர்தா விசாரிப்பதும் வல்லபன் காதில் விழுந்தது. அவர்கள் அதை ஆமோதிக்கவும் சுகிர்த ரத்னா உடனே தாங்கள் இருப்பது சுரத்தான் நாடு. இங்கே சம்புவராயர் நாட்டுச் சட்டங்கள் செல்லாது எனவும் அதற்கு அந்தச் சேவகர்கள் இன்னும் ஒரு காத தூரத்துக்கு மேலே எல்லைக்குப் போயாக வேண்டும் என்றும் சொன்னாள். சுரத்தானுக்குத் தேவைப்படும்போது ஆயிரம் பேருக்கு மேல் படையைத் தான் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் இவர்கள் மீறி உள்ளே நுழைந்தால் சுரத்தானிடம் போய்ப் புகார் செய்யப் போவதாயும் திட்டவட்டமாய்க் கூறினாள். சேவகர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு விழித்தார்கள். அவர்களை விரட்டினாள் சுகிர்தா. சுரத்தானுக்கு ஆள் அனுப்பப் போவதாகவும் பயமுறுத்தினாள். சற்று நேரம் எதுவும் பேச்சு இல்லாமல் இருந்தார்கள் அனைவரும். பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் அங்கிருந்து வெளியேறுவது வல்லபனுக்குக் காலடி ஓசைகளில் இருந்து புரிந்தது.

வல்லபன் உடனே திட்டி வாசலுக்கு வந்தான். அங்கிருந்து தட்டோட்டிக்குச் சென்று கைப்பிடிச் சுவர் வழியாக வெளியே எட்டிப் பார்த்தான். அவன் பார்த்த உயரத்திலிருந்து கீழே இருந்த ஆட்களின் தலைகள் மட்டுமே தெரிந்தன. ஆவலோடு பார்த்தான் வல்லபன். மூன்று சேவகர்கள் வெளியேறுவது அவனுக்குத் தெரிந்தது. அளவற்ற சந்தோஷத்துடன் திரும்புகையில் தற்செயலாக அவன் பார்வை எதிர் மாடியின் சாளரத்திற்குச் சென்றது. அப்படியே உறைந்து போய் நின்றான் வல்லபன். அங்கே அந்தப் பெண் நின்று கொண்டு இங்கே கீழேயே பார்த்துக் கொண்டு இருந்தாள். அந்தப் பெண் தலை நிமிர்ந்து தன்னைப் பார்ப்பாளோ என வல்லபனுக்குள் ஆவல் மீதூறியது. அவளையே கவனித்துக் கொண்டிருந்தான். அவளோ அங்கும் இங்குமாய்ப் பார்த்துவிட்டு ஒரு கணம் வல்லபனைப் பார்ப்பது போல் இருந்த நேரத்தில் சட்டெனப் பார்வையைத் திருப்பி விட்டாள். வல்லபன் கண்களில் இருந்து ஆறாகக் கண்ணீர் பெருகியது.

Monday, May 10, 2021

மஞ்சரியின் கலக்கம்! ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 வல்லபனைத் தேடிக் கொண்டு சத்திரத்தை நோக்கி நடந்தாலும் மஞ்சரிக்குத் தன்னை யாரோ பின் தொடருவதாகவே தோன்றியது. இருந்தாலும் அங்கும் இங்குமாகச் சிறிது சுற்றி விட்டுச் சந்துகளுக்குள் புகுந்து சத்திரத்தை அடைந்தாள். கூடத்துக்குள் நுழைந்தாளோ இல்லையோ! யாரோ அவள் கைகளைப் பிடித்து இழுத்தார்கள். திடுக்கிட்ட மஞ்சரி திகைத்துத் திரும்பிப் பார்த்தால் ஏற்கெனவே அறிமுகம் ஆன சேவகர்களில் ஒருவன். சிரித்துக் கொண்டு நின்றிருந்தான். திகைத்த மஞ்சரி நொடியில் தன்னைச் சமாளித்துக் கொண்டாள். அவனைப்பார்த்துத் தன்னைத் தொடக் கூடாது எனவும் தொட்டால் சம்புவராயரிடம் புகார் கொடுப்பேன் என்றும் எச்சரித்தாள். சம்புவராயர் பெயரைக் கேட்ட அந்த சேவகன் கொஞ்சம் தயங்கினான். பின்னர் இந்தச் சின்னஞ்சிறு பெண்ணுக்குப் பயப்படுவதாவது என்று தோன்றியோ என்னமோ அவளைப் பார்த்து, "ஆமாம், ஆமாம்! உனக்குத் தான் அவரை நன்றாகத் தெரியுமே!" என்று கேலி செய்தான்.

ஆனால் மஞ்சரியோ அசராமல், "ஆமாம்! நானும் என் தாத்தாவும் அவரைப் பார்க்கவே இங்கே வந்தோம். போகப்போகிறோம் அவரைப் பார்த்துப் பேச!" என்றாள். சேவகன் திகைப்புடன் அவளைப் பார்த்து அவள் சத்திரத்துக்கு வந்த காரணம் என்னவெனக் கேட்க சத்திரத்துப் பாட்டியைப் பார்த்துப் பேச வந்ததாய் மஞ்சரி பொய் சொன்னாள்.  சேவகனோ இன்னமும் திகைத்துப் பாட்டி ஒருத்தி இங்கே எங்கே வந்தாள் என்ற யோசனையில் ஆழ்ந்தான். அதை அவளிடம் கேட்கவும் கேட்டான். அவளோ அவன் சொன்னதையே அவனிடம் திருப்பிக் கேட்டுவிட்டு அங்குமிங்கும் சுற்றிப் பார்த்துவிட்டுச்சத்திரத்தை விட்டு வெளியேறி வீதிகளில் நடக்க ஆரம்பித்தாள். மஞ்சரி மருத்துவசாலைக்கூ வரும் வழியெல்லாம் யோசித்துக் கொண்டே வந்தாள்.

தாத்தா தன்னிடம் மற்றவர்களுக்கு அதிலும் முகம் தெரியாதவர்களுக்கு எல்லாம் உதவி செய்ய வேண்டாம். நமக்கே ஆபத்து வரும் என்று சொன்னதை நினைத்துப் பார்த்து அதே போல் இப்போது ஆகிவிட்டதே என நினைத்துக் கொண்டாள். பின்னர் அவள் மனம் வல்லபன் எங்கே போயிருப்பான்? தான் தத்தனுக்கு என்ன பதில் சொல்லுவது என்றெல்லாம் யோசனையில் ஆழ்ந்தது. மெதுவாக நடந்து மருத்துவசாலைக்கு வந்து படி ஏறினாளோ இல்லையோ குதிரைகளில் ஐந்து நபர்கள் வந்து அவளைச் சூழ்ந்து கொண்டு சத்தம் போட ஆரம்பித்தார்கள். "சம்புவராயரிடம் புகார் செய்வேன் என்றாயாமே! உனக்கு அவ்வளவு தைரியமா? சம்புவராயரிடம் அவ்வளவு செல்வாக்கா?" என்றெல்லாம் கேட்டுக் கொண்டு அவள் சத்திரத்தில் பார்த்த அந்தச் சேவகன் குதிரையிலிருந்து குதித்தான்.

மஞ்சரி ஆத்திரத்துடன் திரும்பினாள். "சொல்லமாட்டேன் என்றெல்லாம் நினைக்காதே! நிச்சயம் சொல்லுவேன்." என்றாள் படபடப்புடன். அதற்கு அவர்கள் இன்னமும் கேலியாக, "சொல்லு!சொல்லு! நிறையப் புகார்களைக் கொடு! நாங்கள் அந்தச் செத்துப் போனவன் பிழைத்துவிட்டான் எனக் கேள்விப் பட்டோம். அதைப் பார்க்கிறோம்!" என்று சொல்லிக் கொண்டே வைத்தியசாலைக்குள் நுழைந்தார்கள்.  மஞ்சரிக்கு இவர்களுக்கு எப்படித் தெரியும் என்னும் எண்ணம் மனதில் வந்தது. இந்த இருவரையும் இந்தச் சேவகர்கள் எதற்காக இப்படித் தீவிரமாகத் தேடுகிறார்கள். உண்மையில் குற்றம் செய்தவர்கள் யார்? அந்த இளைஞர்களா? அல்லது இவர்களா?  என்றெல்லாம் குழம்பிப் போனாலும் உள்ளூர தத்தனைக் காப்பாற்றும்படி அரங்கனை வேண்டிக் கொள்ள ஆரம்பித்தாள்.  அந்த மருத்துவசாலை முழுவதும் போய் அவர்கள் தேடினார்கள். உரத்த குரலில் சப்தம் போட்டுக் கொண்டு அவர்கள் தேடியது மற்ற நோயாளிகளுக்குச் சிரமங்களை உண்டாக்கிற்று. 

உக்கிராண அறையைப் பார்த்துத் தேடிவிட்டு வெளியே வந்தவர்களைப் பார்த்து மஞ்சரி, "ஐயா, சேவகர்களே!" என்று மிக மரியாதையாக அழைத்தாள். அவர்கள் திரும்பவும் அவர்களைப் பார்த்து, "ஐயாமார்களே! இங்கெல்லாம் நீங்கள் அழைப்பில்லாமலோ, உள்ளே நுழைய உத்தரவில்லாமலோ செல்லலாமோ? உள்ளே பல்வேறுவிதமான மூலிகைகள், மருந்துகள் இருக்கின்றன. சில மிகவும் விஷத்தன்மை வாய்ந்தவை. அவற்றை நீங்கள் காரணமில்லாமல் தொட்டு வைத்தால் உங்களைத் தான் பாதிக்கும். அதோடு துர் தேவதைகளை மந்திர சக்தியால் கட்டிக் குடங்களில் அடைத்து வைத்திருக்கின்றனர். நீங்கள் பாட்டுக்குக் குடங்களைத் திறந்து பார்த்தால் என்ன ஆகும்?" என்றாள். ஆனால் அந்த சேவகர்களோ கொஞ்சம் தயங்கினாலும் எதற்கும் கவலைப்படாமல் உள்ளேயும் சென்று தேடிவிட்டே திரும்பினார்கள்.  மஞ்சரி திகிலோடு வெளியேயே காத்திருந்தாள். நீண்ட நேரம் தேடினார்கள் போல! போனவர்கள் திரும்பவில்லை! என்ன ஆயிற்றோ என்னும் கவலையோடு மஞ்சரி உள்ளே இருந்து அவர்கள் வரும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

Friday, April 16, 2021

கோபமும் தாபமும்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 பண்டிதரும் கங்காதேவியும் கோபண்ணாவைப் புனித யாத்திரை மேற்கொண்டு அதன் மூலம் அவர் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம் என ஆலோசனை சொல்ல கோபண்ணாவும் தாற்காலிகமாக இது ஒரு தீர்வு எனில் ஏற்றுக்கொள்ளலாமே என யோசித்தார். அவ்வளவில் எழுந்து இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார் கோபண்ணா. பின்னர் திரும்பி இருவரையும் பார்த்துத் தான் நாளைக்கே பயணம் மேற்கொள்ளப் போவதாகவும் சொன்னார். இருவருமே அதை ஏற்றுக் கொண்டனர்.  அதற்குள்ளாக இங்கே மருத்துவமனையில் இருந்த தத்தனுக்குள் பல யோசனைகள்!

இருட்டாக இருந்த ஓர் குச்சில் தத்தனைப் படுக்க வைத்திருந்தார்கள், அதன் மூலம் தன்னைப் பாதுகாக்கவே இப்படி ஓர் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதையும் தத்தன் அறிந்து கொண்டான். ஆங்காங்கே எலிகள் வேறே அங்குமிங்குமாக ஸ்வாதீனத்துடன் ஓடிக் கொண்டிருந்தன.  வெளிச்சம் வர வழியே இல்லை போலிருக்கே என தத்தன் நினைக்க மேலே உச்சி முகட்டில் ஒரு கண்ணாடித் துண்டு ஒட்டி இருந்தது. அதன் மூலம் கொஞ்சம் வெளிச்சமும் வந்தது. என்றாலும் இவ்வளவு மோசமான இடத்தில் தன்னைக் கொண்டு விட்டுவிட்டு வல்லபன் எங்கே போனான்? தான் ஏன் இங்கே வந்து கிடக்கிறோம்! எழுந்து தான் பார்ப்போமே! என நினைத்தவாறு தத்தன் மெல்ல எழுந்தான். அடுத்த கணம் அவன் கட்டிலில் அப்படியே விழுந்து விட்டான். இத்தனை பலஹீனம் தனக்குள் எப்படி ஏற்பட்டது? இதை நினைத்து தத்தன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். என்னதான் காய்ச்சல் அடித்தாலும் 2,3 நாட்கள் காய்ச்சலில் தனக்கு இத்தனை பலஹீனமா என தத்தன் நினைத்த வண்ணம் இன்னொரு முறை எழுந்து பார்க்க உத்தேசித்தான். 

மெல்ல மெல்ல எழுந்து சுவரைப் பிடித்துக் கொண்டு சற்று நேரம் நின்றுவிட்டுப் பின்னர் சுவரைப் பிடித்த வண்ணமே மெல்ல மெல்ல நடந்து அந்தக் குச்சிலின் வாயிலுக்கு வந்தான். அந்தக் குச்சிலில் இரு வாயில்கள் இருந்ததையும் ஒன்று புழக்கடைப்பக்கம் போவதையும் இன்னொன்று அந்த வீட்டின் உட்புறம் செல்வதையும் கண்ட தத்தன் புழக்கடைப் பக்கத்து வாயிலைத் திறந்தான். பளீரென்ற வெளிச்சம் அவன் கண்களைக் கூசியது. பசுமையானதொரு சோலையும் அங்கே தெரிந்தது. மெல்ல அப்படியே வெளியே செல்லலாம் என நினைத்தவன் போல ஓர் அடி எடுத்து வைத்தான். உடனேயே உள்ளே இருந்து மஞ்சரியின் குரல் கூவும் சப்தம் கேட்டது! "அடடா! பார்த்தீர்களா! இது என்ன வேலை!" என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மஞ்சரி ஓடோடி வந்தாள். இப்படிப் போவது ஆபத்தல்லவோ என்று சொல்லிக் கொண்டே ஓடி வந்து தத்தன் கையைப் பிடிக்க அவன் கோபத்துடன் அவள் கைகளை உதறினான். இம்முறை மஞ்சரிக்கும் கோபம் வந்து அவனை முறைத்துப் பார்த்தாள்.

"ஐயா, மஹானுபாவனே! போங்க! போங்க! தாராளமாய்ப் போங்க! எனக்கு என்ன வந்தது? உங்கள் நண்பர் தான் உங்களுக்கு ஆபத்து இருப்பதைச் சொல்லி எனக்கு எச்சரிக்கையும் செய்துவிட்டுப் போனார். அவர் சொன்னதின் மேல் தான் நான் உங்களைக் கண்ணும், கருத்துமாய்ப் பார்த்துக் கொண்டதோடு உங்களைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன். என் தாத்தா சொல்லிக் கொண்டே இருப்பது போல் மற்றவங்க வேலைகளில் நான் தலையிட்டிருக்கக் கூடாது தான். அதுதான் அவமானப்பட்டு நிற்கிறேன். எனக்கு நன்றாய் வேண்டும். இது போதாது!" என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். பிறகு தத்தன் கைகளை அவளும் உதறிவிட்டுப் புழக்கடைக் கதவை உள்ளிருந்து சார்த்திக் கொண்டு அங்கிருந்து போய்விட்டாள். தத்தனுக்கு மனசு எப்படியோ ஆகிவிட்டது. அவனும் உள்ளே வந்தான். கட்டிலில் அமர்ந்த வண்ணம், அவளை, "இந்தா!" என அழைக்க அவளோ, "என் பெயர் மஞ்சரி!" என்று கோபத்துடன் சொன்னாள். 

"பேசுவதற்கு உன் பெயர் தேவையா என்ன?" என்றான் தத்தன். மேலும் தொடர்ந்து, "இது என்ன இடம்? எந்த ஊர்? என் நண்பன் வல்லபன் எங்கே? நான் ஏன் இங்கே இருக்கிறேன்? எத்தனை நாட்களாக இருக்கிறேன். எல்லாவற்றையும் விபரமாகச் சொல்!" என்றான் அவளைப் பார்த்து. அவளோ ஹூம் என்ற வண்ணம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. பின்னர் கையிலிருந்த பால் பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு, தான் முன்னர் சொன்னபோது சரியாகக் கேட்டுக் கொள்ளாத தத்தனுக்கு இப்போச் சொல்லத் தன்னால் முடியாது என்ற வண்ணம் எழுந்து உள்ளே போக ஆரம்பித்தாள்.

தத்தனோ அவளை மீண்டும் அழைத்து முழு விபரத்தையும் சொல்லிவிட்டுப் போகும்படி கேட்டான். அவளும் ஓரளவுக்கு சமாதானம் ஆகித் திரும்பி வந்தாள். அங்கே இருந்த ஓர் பானை மேல் அமர்ந்த வண்ணம் தத்தனிடம் நடந்தவை அனைத்தையும் தெரிவித்தாள். தத்தனுக்கு அந்த வீரர்களிடமிருந்து இன்னமும் ஆபத்து விலகவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினாள். தத்தன் எப்படியானும் தப்பித்துச் சென்று விடலாமா என யோசித்தான். ஆனால் அந்தப் பெண்ணோ அதற்கான வலு இப்போது தத்தனிடம் இல்லை. இந்த நிலையில் வெளியில் சென்றால் மீண்டும் ஜூரமும், ஜன்னியும் வரலாம் என்றும் குறைந்த பட்சமாக இன்னும் பத்து நாட்கள் வெளியே செல்ல முடியாது என்றும் தெரிவித்தாள்.  தத்தனுக்கு ஒரு வாரம் அதிகப்படியாகத் தோன்றியது. தான் உடனே வல்லபனைப் பார்த்தாக வேண்டும் என்றான். அவள் கூடாது என்று சொல்ல தத்தன் இரவில் தான் எவரும் அறியா வண்ணம் சத்திரத்தில் போய்ப் பார்க்கப் போவதாய்ச் சொன்னான். 

அந்தப் பெண்ணோ தத்தன் தலை வெளியே தெரிந்தாலே அவனுக்கு ஆபத்து என்றாள். அந்த வீரர்கள் அங்கேயே இருப்பதாகவும் அடிக்கடி அந்த மருத்துவமனைக்கு வந்து சோதனைகள் போடுவதாகவும் சொன்னாள். அதற்கு மட்டும் அவர்கள் வரவில்லை. அவர்களில் ஒருவனுக்குக் காலில் அடிபட்டுப் படுத்திருப்பதும் ஒரு காரணம் என்றாள். அதைக் கேட்ட தத்தன் அந்தப் பெண்ணிடம் அவள் ஓர் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டான். அவளும் என்ன உதவி எனக் கேட்க வல்லபனைப் போய்ப் பார்த்துவிட்டு விபரங்களைத் தெரிந்து கொண்டு வரும்படியும், அவன் சத்திரத்தில் தான் இருப்பான் என்றும் கூறினான். அவளும் சம்மதித்துக் கொண்டு தெருவில் வந்து சத்திரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் பின்னாலேயே யாரோ வருவது போன்ற உணர்வு அவளுக்குள் ஏற்பட்டது.

Friday, March 26, 2021

கோபண்ணாவின் வருத்தம்! ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

கங்காதேவி தொடர்ந்து பண்டிதருடன் தனக்கு இருந்த சந்தேகங்கள் பற்றிக் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டிருந்தாள். அப்போது வாசலில் நிழலாட இருவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கே கோபண்ணா வந்து கொண்டிருந்தார். உடல் இளைத்து வாட்டம் அடைந்த முகத்துடன் கையில் பட்டுத்துணி சுற்றிய ஏதோ ஒரு பொருளுடன் வந்து கொண்டிருந்தார்.  பண்டிதர் அவரை வரவேற்று ஆசனத்தில் அமர வைக்க கங்காதேவியோ அவரை நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டாள். கோபண்ணாவும் வடமொழி வல்லுநராக இருந்தாலும் இப்போது அதைப் பற்றிப் பேசவில்லை. ராஜரிக காரியமாக கோபண்ணா வந்திருப்பதைப் புரிந்து கொண்ட பண்டிதர் கோபண்ணாவிடம் அவர் என்ன முடிவு எடுத்தார் எனக் கேட்டார். கோபண்ணாவோ தாம் ராஜரிகத்தைத் துறக்கும் முடிவையே எடுத்ததாய்ச் சொன்னார்.  தம் கையில் கொண்டு வந்திருந்த பட்டுத்துணியை அவிழ்த்து அதிலிருந்து இரு பொன்னால் ஆன கங்கணங்களை வெளியே எடுத்தார்.  பண்டிதர் அதைப் பார்த்துத் திடுக்கிட்டார்.

அந்தக் கங்கணங்கள் சாமான்யமானவை அல்ல. வீரக் கங்கணங்கள். அவற்றை புக்கராயரே கோபண்ணா கிழக்கில் நடந்த போர்களில் காட்டிய திறமைகளுக்காகத் தன் கைகளால் கோபண்ணாவுக்குப் பூட்டியவை.  அதை அவர் எடுத்ததைப் பார்த்த கங்காதேவிக்கும் திகைப்பு ஏற்பட்டது. பண்டிதரோ கோபண்ணாவைப் பார்த்து, "கோபண்ணா! மன்னர் இப்போது ஊரில் இல்லை.  ஆகவே தங்கள் முடிவைத் தள்ளிப் போட்டு மன்னர் வந்ததும் அவரிடம் பேசி முடிவெடுப்பதே சிறந்தது." என்றார்.  ஆனால் கோபண்ணாவோ திட்டவட்டமாக மறுத்தார். தன் மனதில் ஏற்பட்டிருக்கும் அவாவைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் தான் இருப்பதால் மன்னர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; அவருக்கு அடுத்து இருக்கும் கிரியாசக்திப் பண்டிதரிடம் தன் பொறுப்பை ஒப்படைக்க விரும்புவதாய்ச் சொன்னார்.

பண்டிதர் கண்களில் கண்ணீர் திரண்டது. கோபண்ணாவைப் பார்த்து அவர் நாட்டில் தர்மங்களே இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன/ அல்லது அழிக்கப்படுகின்றன. இந்நிலையில் நீங்கள் உங்கள் ஸ்வதர்மத்தை மட்டும் காத்துப் பாதுகாக்க விரும்பலாமா? இந்த விஜயநகர சாம்ராஜ்யம் ஏன் தோன்றியது என்பதைத் தாங்கள் அறிவீர்கள் தானே? புதியதாய் ஓர் ராஜவம்சம் தோன்றுவதற்கோ அல்லது புதிய ஒரு ராஜா பட்டத்துக்கு வருவதைக் கொண்டாடவோ இல்லை. நம் தர்மங்களும், நம் ஒழுக்கங்களும் பாழ்பட்டு வருகின்றன. அவற்றை மீட்டெடுத்து வருங்காலச் சந்ததிகளிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லவா? அதற்காகத் தானே இந்த சாம்ராஜ்யத்தின் உதயமே!  இப்போது குறுகிய வட்டத்தில் இருக்கும் இந்த சாம்ராஜ்யம் விரைவில் தென்னாடுகள் முழுவதையும் சேர்த்துக் கொண்டு வலிமையானதொரு பெரிய சாம்ராஜ்யமாக மாற வேண்டும். நம் தர்மங்களை அழிவிலிருந்து மீட்க வேண்டும். நமது விருப்பம் தேசத்தைச் சார்ந்ததாக இருக்கவேண்டுமே அல்லாது, நம் ஸ்வதர்மத்தைக் காப்பதற்கோ சமயத் துறவை மேற்கொண்டு பற்றற்ற வாழ்க்கையைக்கைக்கொள்வதற்கோ அல்ல. இது தான் தற்போதைய மிகப் பெரிய தர்மம். அதை நாம் காக்க வேண்டும்."

கோபண்ணாவோ அவர் பேசி முடிக்கக் காத்திருந்தவரைப் போல் அவரிடம் சமய வாழ்க்கையையே தான் மிகவும் விரும்புவதாய்க் கூறினார். கங்காதேவி அப்போது குறுக்கிட்டுத் தான், நடுவில் பேசுவதற்கு மன்னிக்கும்படி கூறிவிட்டு மேலே தொடர்ந்தாள். தான் ஓர் வேண்டுகோள் விடுப்பதாகவும் கூறினாள். அதன் பேரில் என்ன வேண்டுகோள் என கோபண்ணா கேட்டார்.  ராஜரீகத்தைத் துறந்து சமயப்பணி ஆற்றவேண்டும் என்னும் எண்ணம் கோபண்ணாவிற்குத் தானாகத் தோன்றியதா அல்லது தெய்வத்தின் ஆக்ஞையா எனக் கேட்டாள் கங்கா தேவி. கோபண்ணா அதற்கு ஒரு விதத்தில் இது தெய்வ ஆக்ஞை தான் என்றார். மேலும் தொடர்ந்த கோபண்ணா தாம் கொள்ளைக்களம் போய் வந்ததிலிருந்து தொடர்ந்து வரும் ஒரு கனவைப் பற்றிக் கூறினார். அந்தக் கனவை விவரிக்கச் சொல்லி கங்கா தேவி கேட்க அவரும் கூறினார்/

தாம் ஓர் கனத்த அந்தகாரத்தில் இருப்பதாயும் கைகளால் துழாவுவதாயும் உணர்ந்ததாய்ச் சொன்னவர் அப்படித் துழாவும்போது ஓர் தெய்வ விக்ரஹம் அவர் கைகளுக்குத் தட்டுப்பட்டதாகவும் சொன்னார். அழகான பிரசன்ன வதனத்துடன் கூடிய அந்த முகத்தைப் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஏற்பட்டதாயும், சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டிருந்தபடியால் அது விஷ்ணுவின் விக்ரஹமாக இருக்க வேண்டும் எனவும் சொன்னார்.  அந்த விக்ரஹத்தைத் தாம் இதற்கு முன்னர் பார்த்ததே இல்லை என்றவர் அது திருவரங்கன் விக்ரஹம் எனத் தனக்குத் தோன்றியதாயும் சொன்னார். தாம் திருவரங்கமே போனதில்லை என்றவர் அரங்கனைப் பார்த்ததே இல்லை என்றும் சொன்னார்.  ஆனால் அவர் மனதில் தாம் கனவில் கண்ட அந்த விக்ரஹம் அரங்கனுடையது தான் என்று உறுதியாய்க் கூறினார். 

அடிக்கடி கனவில் வரும் அந்த விக்ரஹம், வஸ்திரங்கள், ஆபரணங்கள் எதுவும் இல்லாமல் வெறுமையாய் இருப்பதாயும் அது அவர் மனதில் துக்கத்தை ஏற்படுத்தியதாயும் சொன்னார். கனவிலேயே தாம் கண்ணீர் விட்டு அழுததாயும் பின்னர் எழுந்து கொண்டால் அதே நினைவுகள் திரும்பத் திரும்ப வருவதால் தன்னால் எந்த வேலையையும் மனம் ஒருமித்துச் செய்ய முடியாமல் போவதாயும் சொன்னார். வேறு என்ன கனவில் தெரிந்தது எனக் கேட்டதற்கு கோபண்ணா, அந்தகாரமான பெரிய காடு ஒன்று கனவில் வருவதாய்ச் சொன்னார். அந்த அந்தகாரமான காட்டில் எங்கேயோ இருந்து கொண்டு தான் அரங்கன் தம்மை அழைப்பதாயும் சொன்னார். 

அப்போது கங்காதேவி," காடும், மலையும் சேர்ந்த இடம் திருமலை/திருப்பதி தான்.  தெய்வமும் அங்கே இருக்கின்றது. ஆகவே உங்கள் கனவில் வந்த க்ஷேத்திரம் திருமலையாகத் தான் இருக்க வேண்டும். தாங்கள் ஏன் திருமலைக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு வரக்கூடாது?. அதன் மூலம் ஏதேனும் தெளிவு பெறலாமே! " என்றாள். பண்டிதர், கோபண்ணா இருவரின் முகங்களும் மலர்ந்தன. பண்டிதர் கோபண்ணாவிடம்," தாங்கள் ஏன் இதைச் செயலாற்றக் கூடாது? ஏதேனும் ஒரு வழி கிடைக்கலாம்!" எனத் தன் கருத்தையும் சொன்னார்.

Wednesday, March 24, 2021

கங்கா தேவியின் ஆசை! ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்!

 கலுவத்தை எடுத்து அதில் மருந்தைப் போட்டுப் பொடி செய்து கொண்டு தேனில் குழைக்க ஆரம்பித்தாள் மஞ்சரி. கூடவே வாய் தானாகப் புலம்ப ஆரம்பித்தது. தன் தாத்தா வெகுளியாய்ப் பேசக்கூடாது என்று சொன்னதாகவும், தான் தான் அதைக் கேட்காமல் இப்போது அவமானப் படுவதாயும், நஷ்டப்படுவதாயும் புலம்பினாள். ஓரிரு முறை திரும்பி ஓரக்கண்களால் தத்தனையும் பார்த்துக் கொண்டாள். மருந்து கலக்கும் நெடி அறை முழுவதும் பரவ தத்தன் யோசனையில் ஆழ்ந்தான். தான் உடல் ரீதியாகப் பலவீனமாய் இருப்பதை உணர்ந்து கொண்டிருந்தாலும் தனக்கு நேர்ந்தது என்னவென அவனுக்குப் புரியவில்லை. கை,கால்கள் குச்சியைப் போல் இருந்ததும் எழுந்திருக்கக் கூட முடியாமல் சக்தியற்றுத் தான் இருப்பதையும் உணர்ந்து கொண்டான். மஞ்சரிக்குக் கோபம் காரணமாக ஏற்பட்ட விரக்தியுடன் அவள் கலுவத்திலிருந்த மருந்தை ஓர் கிண்ணத்திற்கு மாற்றி தத்தனிடம் கொடுத்துக் குடிக்கச் சொன்னாள். அவனுடன் பேசும் மனோநிலையில் அவள் இல்லை என்பதையும் வெளிக்காட்டிக் கொண்டாள். தத்தன் அவளைப் பார்த்த வண்ணமே அந்த மருந்தை வாங்கிக் கொண்டான். அவள் கண்களின் ஆழத்தையும் அதில் தெரிந்த இனம் புரியாப் பாசத்துடன் கலந்த சோகத்தையும் பார்த்தவனுக்கு இந்த மனோநிலை ஆச்சரியத்தைக் கொடுத்தது. அப்போது அவளை வேறு யாரோ அழைக்கவே மஞ்சரி அங்கிருந்து ஓட்டமாய் ஓடினாள்.

இங்கே முள்வாய் நகரில்! கிரியாசக்திப் பண்டிதர் மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கிவிட்டார். புக்கராயர் குலத்தின் குரு என்னும் உரிமையில் அவர் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாமே! க்ஷேத்திராடனத்திற்காக விஜயநகரத்தை விட்டுக் கிளம்பி இருந்தவர் இங்கே வந்ததும் இங்கேயே தங்கிவிட்டார்.  மேலும் எப்படியும் கம்பணர் முள்வாய் நகருக்கு வந்தே தீர வேண்டும் என்பதால் அவரை எதிர்பார்த்தும் அங்கே தங்கி இருந்தார்.  நல்ல மழைக்காலம்! ஐப்பசி மாதம் அடை மழை பொழியும் காலங்கள்! விண்ணில் எங்கெங்கும் மழை மேகங்கள் மூடிக் கிடந்தன. விரைவில் திரண்டு மழை கொட்டும் என எதிர்பார்க்கலாம் என்பது போல் இருந்த ஒரு மாலை நேரம். கங்காதேவி/கம்பணனின் மனைவி கிரியாசக்திப் பண்டிதர் தங்கி இருந்த மாளிகையினுள் நுழைந்தாள். அவள் கைகளில் பட்டுத்துணியால் மூடப்பட்டப் பல ஏட்டுச் சுவடிகள்! கிரியாசக்திப் பண்டிதர் மாலை வழிபாடுகளை முடித்துவிட்டுக் கொஞ்சம் ஓய்வில் இருக்கலாம் என இருந்த நேரம் அது.

கங்காதேவி உள்ளே நுழைந்ததும் பண்டிதர் இருந்த இடத்திற்கு வந்து அவரை நமஸ்கரித்துவிட்டுப் பின் அவர் சுட்டிக் காட்டிய ஓர் ஆசனத்தில் அமர்ந்தாள். பாணன் எழுதிய காதம்பரியில் பண்டிதரிடம் சில சந்தேகங்கள் கேட்டுத் தெளிவடைய வேண்டி வந்திருந்தாள். பாணருக்கு அக்காலத்தில் மிகவும் ரசிகர்கள் பலர் இருந்தனர். மேலும் அவர் மருத்துவம், பூமி சாஸ்திரம், வான சாத்திரம், ராஜாங்க சாத்திரம், புராண இதிகாசங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவு என அனைத்திலும் தேர்ந்தவராக இருந்தார். அதோடு மக்களின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றிலும் அவருக்குத் தெளிந்த அறிவு இருந்தது. இலக்கியத்தில் அவரை மிஞ்ச யாரும் இல்லை என்னும்படி இலக்கியகர்த்தாவாக விளங்கி இருந்தார்.  கங்கா தேவி பண்டிதரைப் பார்த்து பாணரைப் பற்றிப் புகழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தாள்.

அன்றைக்குச் சுமார் ஐநூறுஆறு நூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த மக்கள்/ அரசாங்கம்/அது நடந்த விதம் என என்னென்ன உண்டோ அனைத்தையும் பாணர் தன் நூல்கள் மூலம் தெளிவாகத் தெரிவித்து விட்டார் எனவும் அதுவும் காதம்பரி ஒன்றின் மூலமே அனைத்தும் தெரிந்து கொள்ள முடிகிறது எனவும் மஹாராஹா ஹர்ஷர் வாழ்ந்த காலத்தைக் கூர்ந்து கவனித்து அப்போதிருந்த ராஜாங்க நடைமுறைகளைத் தெள்ளத் தெளிவாக எழுதி இருப்பதையும் எடுத்துக் கூறி இவற்றைப் படிக்கும் சமயங்களில் தானும் அந்தக் காலத்தில் வாழ்ந்த ஜனங்களிடையே வாழ்ந்த மாதிரியான உணர்வைப் பெறுவதாகவும் கூறினாள். ஆனால் பண்டிதரோ மென்மையாக அதை மறுத்தார். இளமை ததும்பிய கங்காதேவி தன் வயது, இளமை இவற்றின் காரணமாகவே சிங்காரம் நிறைந்த ஒரு காதல் காவியமான காதம்பரியைப் பாராட்டுவதாயும் இது வெறும் தோற்றம் எனவும் உடலுக்கும் மனதுக்கும் அறிவுக்கும் இது போதையைக் கொடுக்கும் எனவும் உடலுக்குப் போதை வேண்டி அருந்து மதுவைக் காட்டிலும் இது கொடியது எனவும் கூறினார்.

ஆனாலும் கங்காதேவி அவர் எழுதி இருக்கும் விதத்தைப் பாராட்டும் முறையாக மேலும் பேசினாள். சங்கிலித்தொடர் போன்ற நீண்ட வாக்கியங்களில் எழுதி இருப்பதை அவள் சுட்டிக்காட்டவும் பண்டிதர் அவற்றின் இடையே வந்திருக்கும் சிறு வாக்கியங்கள் இன்னமும் லளிதமாக அமைந்திருப்பதைக் காட்டினார். கங்காதேவி இதனாலேயே பாணரின் எழுத்தின் மேல் தனக்கு ஏற்பட்டிருக்கும் மோகத்தைப் பற்றியும் தான் அது வரையிலும் சுமார் 20 முறைகளுக்கும் மேல் காதம்பரியைப் படித்திருப்பதாகவும் ஒவ்வொரு தரமும் புதுமையாகத் தென்படுவதாயும் கூறினாள். அதைக் கேட்ட பண்டிதர் இதனால் தவறேதும் இல்லை எனவும் வடமொழி வார்த்தைகளில் கங்காதேவிக்கு ஆழ்ந்த ஞானம் ஏற்படும் என்றும் கூறினார். அதைக் கேட்ட கங்கா தேவி தனக்கும் இயன்றால் இப்படி ஒரு சரிதம் எழுத ஆவலாய் இருப்பதாய்க் கூறினாள். 

அதற்குப் பண்டிதர் பாணர் சரிதம் எழுதினார் எனில் அவருக்கு அது குறித்த ஞானம் நிறைய இருந்ததாகவும், அனுபவங்கள் அவருக்கு அதிகம் எனவும் குறிப்பிட்டார். மேலும் தொடர்ந்து அவரின் சிறு வயதிலேயே தாய் இறந்துவிட்டாள் எனவும் தந்தையும் அவருடைய பதின்ம வயதில் இறக்கவே அதன் பின்னர் பாணர் போகாத இடமில்லை எனவும் சுற்றாத இடம் இல்லை எனவும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் சிநேகிதம் வைத்துக் கொண்டதால் அவருக்குப் பரந்து பட்ட அறிவு ஏற்பட்டதாயும் கூறினார். அதன் பின்னரே திருந்தி மீண்டும் குடும்பத்திற்குள் வந்து ஹர்ஷரின் சரிதத்தை எழுதினதாகவும், அதன் பின்னர் காதம்பரியை எழுதியதாகவும் கூறினார். அவர் பட்ட அனுபவங்களின் துணை கொண்டே அவரால் இதெல்லாம் எழுதி முடிக்க முடிந்தது எனவும் கூறினார். மேலும் கங்காதேவியிடம் அத்தகைய அனுபவங்கள் உனக்கு இருக்கின்றனவா என்றும் கேட்க கங்காதேவி திகைத்தாள்.

பின்னர் தனக்கு சொந்த அனுபவம் இல்லை எனினும் கேள்வி ஞானம் இருப்பதாயும் அதுவும் ஓர் அனுபவம் தானே எனவும் கேட்டவள் தன் கணவர் தான் செல்லுமிடமெல்லாம் தன்னையும் அழைத்துச் செல்வதையும் சொன்னாள். இந்த யாத்திரைகளெல்லாம் கொடுக்கும் அனுபவம் போதாதா என்றும் கேட்டாள். பண்டிதர் சிரித்த வண்ணம், "சரிதான் கங்கா! பாணரைப் போல் அலைந்து திரிந்து அனுபவம் பெறாவிட்டாலும் உனக்கேற்பட்ட அனுபவங்களை வைத்தே உனக்குத் தெரிந்ததை நீயும் எழுது! உனக்கு என் ஆசிகள்!" என்றார்.

Sunday, January 10, 2021

தத்தனும் மஞ்சரியும்! ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்!

இப்போது இன்னமும் இருவர் சேர்ந்து கொள்ள நான்கு பேரின் குரலும் வாதங்களில் முற்ற ஆரம்பித்தது. கடைசியில் அங்கேயே ஒருவருக்கொருவர் சமாதானம் செய்து கொண்டனர்.  பேசிக் கொண்டே மேலே நடக்க ஆரம்பித்தனர். வல்லபன் மறைந்திருந்த திண்ணையை விட்டு மெதுவாக எழுந்தான். நல்லவேளையாகத் தன்னைப் பார்க்கவில்லை, பிழைத்தோம் என எண்ணிக் கொண்டான். பெரிய வீதிகள் வேண்டாம் என முடிவெடுத்துச் சிறிய வீதிகளில் சுற்றிப் பார்த்து ஒரு வீட்டின் திண்ணையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். திண்ணையில் ஏறியவனுக்குத் தன் நிலை குறித்து சுய பச்சாத்தாபம் உண்டாகியது. அந்தப் பெண் இப்போது நம்மைப் பார்த்தால்? என எண்ணிக் கொண்டவன், மெல்ல மெல்ல யோசனைகளும், கனவுகளுமாக உறங்க ஆரம்பித்தான்.  அங்கே தத்தன் மருத்தூவமனையில்! .............
***********************************************************************************
 சேவகர்கள் கண்களில் பட வேண்டாம் என தத்தனைக் கட்டிலோடு இறந்தவனாகச் சொல்லிக் கொண்டு வந்து மறைத்து வைத்திருந்தார்கள். மருத்துவமும் தொடர்ந்து கொண்டு இருந்ததால் தத்தனுக்கு நினைவு வருவதும் போவதுமாக இருந்தது. இரவா, பகலா எனத் தெரியாத பொழுது. ஏதேதோ சப்தங்கள் கேட்பது போலவும் இருந்தது. நிசப்தமாகவும் தெரிந்தது. தத்தன் கண்களை விழித்துப் பார்த்தான். சப்தங்கள் தாம் விசித்திரமாக இருந்தனவெனில் காட்சிகளும் அப்படியே விசித்திரமாகத் தெரிந்தன! தான் உயிரோடு இல்லையோ? மேலுலகம் வந்து விட்டோம் போல் தெரிகிறது. அதனால் தான் விசித்திரமான சப்தங்களும், விசித்திரமான காட்சிகளும் தெரிகின்றன என தத்தன் நினைத்துக் கொண்டான்.  மீண்டும் நினைவுகளைத் தொடர்ச்சியாகக் கொண்டு வர முயன்றான். களைப்பு மேலிட்டது. நினைவுகளா, கனவுகளா எனத் தெரியாமல் மிதப்பது போல் உணர்ந்தான். அவனுக்கு நினைவுகளைக் கோர்வையாகக் கொண்டு வர முடியவில்லை. 

ஒரு வேளை இவை அனைத்தும் நினைவில்லையோ? கனவுகளோ? அல்லது தான் இறந்து தான் விட்டோம் போல இருக்கிறது. அப்போது கேட்ட ஒரு குரல் பெண் குரல் போல் இருந்தது. பழகிய குரலாகவும் இருந்தது. யார் குரல்? அந்தச் சின்னஞ்சிறு இளம்பெண்! நம்மைப் பார்த்துச் சிரித்தாளே! அவள் குரலோ? ஆம்! அப்படித்தான் தெரிகிறது.  வைத்தியர் வீட்டு வாசலில் தான் நீரில் விழுந்தபோது தன்னைப் பார்த்து நகைத்த குரல். ஏதோ சொல்கிறாளே! தத்தன் பெரு முயற்சியுடன் தன் கண்களைத் திறந்து குரல் வந்த திசையில் பார்த்தான். அவள் உருவம் போல் ஓர் பெண் உருவம் அங்கே தெரிந்தது. ஆனால் அது அந்தப் பெண் தானா? தத்தனுக்கு மறுபடி நினைவு தப்பி விட்டது. இரண்டு நாட்கள் இப்படித் தூக்கத்திலும் விழிப்பிலும் மாறி மாறிப் போராடினான் தத்தன். மூன்றாம் நாள் அவனுக்கு நினைவு சுத்தமாகத் தெளிவாகத் திரும்பி விட்டது.

கண்களை விழித்துப் பார்த்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். தான் மருத்துவமனையில் இருப்பதையும் உலகம் எப்போதும் போல் இயங்குவதையும் கவனித்துப் புரிந்து கொண்டான். அவனால் எழுந்திருக்க முடியவில்லை. ஆகையால் கட்டிலில் இருந்து இந்தப்பக்கமும் அந்தப் பக்கமும் திரும்பிப் பார்த்தான். ஒரு பக்கம் பார்த்தபோது அந்தப் பெண் ஓர் கலயத்தில் எதையோ குழைத்துக் கொண்டிருந்தாள்.  அவள் பெயர் தெரியவில்லையே என நினைத்துக் கொண்டே, "ஏ! பெண்ணே! இந்தா!" எனக் கூப்பிட்டான் தத்தன். அந்தப் பெண்ணிற்கு ஆச்சரியம் மேலிட்டது. ஒரு கணம் அவனைப் பார்த்தவள் அவனுக்கு முழு நினைவு திரும்பி விட்டதை உணர்ந்து கொண்டு அவன் பக்கம் பிரகாசமான முகத்துடன் வந்தாள்.

நினைவு திரும்பி விட்டதா எனக்கேட்டுக் கொண்டே வந்தாள் அந்தப் பெண். அவள் முக அழகும், கண்களின் பிரகாசமும், தத்தனைக் கவர்ந்து இழுத்தது. இவ்வளவு பருவ அழகுடன் கூடிய ஒரு இளம்பெண்ணை முதல்முறையாகக் கிட்டத்தில் பார்த்த தத்தன் மூச்சுத் திணறிப் போய் விட்டான். அவள் மேனியின் சுகந்தன் அவனை எட்டியது. அவ்வளவு கிட்டத்தில் அந்தப் பெண் நின்றிருந்தாள். அவளைப் பார்த்துத் தான் மயங்கி விட்டதை அவள் உணரக் கூடாது என்னும் எண்ணம் திடீரெனத் தோன்ற அவனிடம் பழைய மிடுக்கு வந்துவிட்டது. "யார் நீ?" என்று அதட்டிக் கேட்க அவளுக்கும் கோபம் வந்தது. 

"ஆஹா! என்னைத் தெரியாது அல்லவா? நேரிலே பார்த்ததே இல்லை அல்லவா? அதான் கேட்கிறீர்கள்! யார் நீ! யார் நீ!" என்று அவனைப் பார்த்துச் சொன்னவண்ணம் பழிப்புக் காட்டினாள். அதற்கு பதில் சொல்லாமல் தத்தன் இது எந்த இடம் என்றும் தன்னை ஏன் அங்கு அந்தப் பெண் வைத்திருக்கிறாள் என்றும் கேட்டான். மேலும் வல்லபன் எங்கே என்றும் விசாரித்தான். அவள் அதற்குக் கிண்டலாக, "இது பூலோகம் தான் ஐயா! வைகுண்ட வாசலை எட்டிப் பார்த்த உங்களை அங்கே போக விடாமல் இங்கேயே வைத்திருக்கிறோம். நீங்கள் கேட்கும் கேள்விகளும், கேட்கும் தோரணையும் பிரமாதமாய்த் தான் இருக்கிறது. உங்களுக்கு நீங்கள் கடும் ஜூரத்தில் இருந்ததும் உங்களைக் காப்பாற்றியதும் பெரியதாய்த் தெரியவில்லை. குணப்படுத்தினவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் தோன்றவில்லை. ஏதோ உங்களைப் படுத்தி எடுத்துவிட்ட மாதிரி தான் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்கிறீர்கள்!" என்று கடுமையாகச் சொன்னாள்.

Friday, January 08, 2021

தத்தனுக்கு நேர்ந்தது என்ன? ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

தன்னை சுதாரித்துக் கொண்ட மஞ்சரி அங்கிருந்து கிளம்பி வைத்தியர் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். சிறிது நேரத்தில் இரு வேலைக்காரகள் அங்கே வந்து தத்தனைப் படுத்திருந்த கட்டிலோடு சேர்த்துத் தூக்கிச் சென்றார்கள். திடுக்கிட்ட அந்த வீரன் என்னவென விசாரித்ததற்கு நோயாளி இறந்துவிட்டான் என்பதால் உடலை அகற்றி விட்டார்கள் எனத் தெரியவந்தது. 

அங்கே சத்திரத்தில் தங்கி இருந்த வல்லபனுக்கோ தூக்கமே வரவில்லை. ஊரிலிருந்து கிளம்பியதில் இருந்து நடந்தவற்றை எல்லாம் மீண்டும் நினைத்துப் பார்த்தான். ஏதேதோ சம்பவங்கள் நடந்திருந்தன. அடுக்கடுக்காக நடந்து கொண்டே இருந்தன. அந்தக் கூண்டு வண்டியையும், அதில் அந்தப் பெண்ணையும் பார்த்ததில் இருந்து சங்கடங்கள்! தலைவனிடம் அகப்பட்டு அவனோடு விவாதித்துத் தூக்குக் கயிற்றிலிருந்து மீண்டு வந்தது என அடுத்தடுத்து நினைவில் வந்தன. அரங்கனைத் தானே தேடிக் கொண்டு கிளம்பினோம்.அரங்கனும் கிடைக்கவில்லை. அவனைப் பற்றிய மேல் அதிகத் தகவல்களும் கிட்டவில்லை. எத்தனை இடையூறுகள் நேரிட்டு விட்டன?

யோசித்த வல்லபனுக்கு தத்தனின் நினைவு வந்துவிட்டது. அந்தச் சேவகன் தத்தனைப் பார்த்திருப்பானோ? அடையாளம் கண்டு கொண்டிருப்பானோ?  ஓடுமானூரில் அவர்களோடு சமாதானம் செய்து கொண்டிருந்தாலும் அவர்கள் தங்கள் மேல் மறுபடி மோதல் போக்கைக் கடைப்பிடித்தால்?  ஏனெனில் அவர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தி வைத்தது அந்தக் கற்பூர வியாபாரி தான். அவனால் தான் சமாதானம் ஏற்பட்டது. அந்த வீரர் தலைவன் அதை ஏற்கவே இல்லை என்பது அவன் முகத்தில் அப்போதே தெரிந்தது. அதிலும் அந்தப் பெண்ணைக் காட்டும்படி சொன்னபோது அந்த வீரர் தலைவன் முகத்தில் கோபமும், குரோதமும் கொழுந்து விட்டெரிந்தது. அந்தப் பெண்ணை அவர்கள் ரகசியமாக அழைத்துச் சென்றிருந்திருக்கிறார்கள். ஆகவே அந்தப் பெண்ணைப் பலர் முன்னால் தான் காட்டச் சொன்னது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. 

ஆகவே அவனுக்குத் தன்மேல் கோபம் இன்னமும் குறைந்திருக்காது.  வஞ்சகத்தைத் தீர்த்துக் கொள்ளச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பான். நினைவுகள் மேலே மேலே வந்து மோதின வல்லபனுக்குள். உறக்கம் என்பதே வரவில்லை. மனதில் கலக்கம் ஏற்பட்டு விட்டது. ஏதோ நடக்கப் போகிறது என்று உள்ளுணர்வு சொல்லியது. ஆகவே வல்லபன் உடனே எழுந்து தன் சுமைகளைச் சேகரித்துக் கொண்டான். சத்திரத்து அதிகாரியிடம் தான் இப்போதே செல்வதாகக் கூறிவிட்டுச் சத்திரத்தை விட்டு வெளியேறினான். அந்த ஊரில் மொத்தம் நான்கு பெரிய வீதிகளும் இரண்டு சிறிய தெருக்களும் இருந்தன. அங்கே யார் வீட்டுத் திண்ணையிலாவது இடம் பெற்றுப் படுக்க வேண்டும் என நினைத்தான் வல்லபன். ஒரு வீதிமுனை திரும்புகையில் பேச்சுக்குரல்கள் கேட்டுச் சற்றே நின்றான். அவனைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தார்கள். 

ஒருவன் சொல்கிறன்: அதே பையன் தான்! சத்திரத்தில் தான் தங்கி இருப்பான். வேறே எங்கும் சென்றிருக்க மாட்டான்!" என்றான்.

"நிச்சயமாய்ச் சொல்கிறாயா? அவனேதானா? உனக்குக் கொஞ்சம் போதாது. தப்பாக அடையாளம் கண்டிருப்பாய்!" இன்னொருவன்.

இருவர் வாக்குவாதங்களும் முற்ற ஆரம்பித்தன. 

Tuesday, January 05, 2021

மஞ்சரியின் சந்தேகம்! ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்.!

ஓட்டமாக ஓடிய வல்லபன் மனதில் சந்தேகம் எழ வாயிலருகே திரும்பிப் பார்த்து, கவனித்துக் கொள்வீர்களா? என்று மீண்டும் கேட்க, அந்தப் பெண்ணோ அவனைப் பார்த்துச் சிரித்தாள்.  ஆனால் அந்தச் சேவகனின் கட்டிலருகே இருந்த அவன் நண்பன் கட்டிலை விட்டு நகரவும் வல்லபன் அவன் எங்கே நம்மைப் பார்த்துவிடுவானோ என்னும் அச்சத்துடன் ஓட்டமாய் ஓடிவிட்டான். அவன் சென்ற பின்னர் அந்தப் பெண் யோசனையில் ஆழ்ந்தான். அவள் தன் கையிலிருந்த விளக்கை அங்கே இருந்த ஒரு மாடத்தில் வைத்துவிட்டுப் படுக்கைகள் போட்டு நோயாளிகளைப் படுக்க வைத்திருந்த இடத்தை நோக்கிச் சென்றாள். தத்தனின் கட்டிலைத் தேடிக் கொண்டு சென்றாள். சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தவள் கண்களுக்கு அந்தச் சேவகனின் கட்டில் அருகே இருந்த இன்னொருவன் தன்னைப் பார்த்தது தெரிய வந்தது.

ஆனால் அவள் எதையும் கவனிக்காதவள் போல முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு இயல்பாகவே நடந்து கொண்டாள்.  தத்தனின் கட்டில் அருகே சென்றவள் கட்டிலின் அருகே மண்டியிட்டு அமர்ந்த வண்ணம் அவனை, "ஐயா! ஐயா!" என அழைத்தாள் மெதுவாக. ஆனால் தத்தன் ஏதும் பேசவில்லை. ஜூர வேகம் அதிகமாக இருந்தது. உடலில் இருந்து ஜ்வாலை வீசியது. கண்களைத் திறக்காமல் அப்படியே அசையாமல் இருந்தான். பயந்து போன அந்த இளம்பெண் அவன் நெற்றியில் கையை வைத்தாள். தத்தனின் உடல் சூட்டைத்தாங்காமல் தன் கைகள் பொரிந்துவிடுமோ என்று எண்ணும் வண்ணம் கொதிக்கவே அவள் திகிலுடன் கையை உதறிவிட்டு எடுத்து விட்டாள். அவள் மனதில் கலவரமும் பயமும் ஏற்பட்டது. அங்கும் இங்குமாகப் பார்வையைத் திருப்பியவள் கண்களில் மீண்டும் அந்தச் சேவகன் தன்னையே பார்த்துக் கொண்டு கட்டிலருகே நிற்பது தெரிய வந்தது.

அவன் அங்கிருந்து திடீரெனக் கிளம்பியவன் தத்தன் கட்டிலருகே அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை நோக்கியே வந்தான். அவனைக் கவனிக்காதது போல் காட்டிக் கொண்ட அந்தப் பெண் தன் மனமும்  உடலும் பரபரப்பதை அடக்கிக் கொண்டு என்ன செய்யலாம் என்ற யோசனையில் அந்த மனிதன் வருவதைப் பார்த்துக் கொண்டு அவனைப் பார்த்துப் புன்சிரிப்புச் சிரித்தாள். அந்த மனிதன் கட்டிலை நோக்கி வருவதைக் கண்டு தான் உள்ளூர கவலை கொண்டிருப்பதை அவள் காட்டிக் கொள்ளவில்லை.

அருகே வந்த அந்த மனிதனோ அவளை, "மஞ்சரி! " என அழைத்தவாறே, "இது யார்? உன் தாத்தா தானே நோயாளி என்றாய்? இவர் யார்? உனக்குத் தெரிந்தவரா?" என்றும் கேட்டான். அதற்கு மஞ்சரி, எழுந்து கொண்டே, "இவர் எனக்கு உறவில்லை. வைத்தியருக்கு ஏதோ உறவாம். கடும் ஜன்னி கண்டிருக்கிறது. இவரை நன்றாய்ப் பார்த்துக் கொள்ள வேண்டும் என வைத்தியர் சொன்னார். நான் அதைப் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தேன். இப்போது இவருக்கு நினைவே இல்லை. நினைவு தப்பி விட்டது. இன்று இரவு போவதே கஷ்டம்!" என்று சொன்னவள், கடைசி வார்த்தையை இழுத்தவாறே சொன்னாள். அந்தச் சேவகனின் ஊகத்திற்கு அதை விட்டவள் போல் பேச்சையும் பாதியில் நிறுத்தினாள்.

அவன் தத்தனின் கட்டிலை நோக்கி வருவதைத் தடுக்கும் விதமாக அவளே முன்னேறிச் சென்று அவனைத் தடுத்துத் திரும்பும் வண்ணம் செய்தவள் அவனிடம், உங்கள் நண்பரின் கால் இப்போது எப்படி உள்ளது? என்றும் கேட்டாள். அவனை அப்படியே அந்தச் சேவகன் படுத்திருந்த கூடம் வரை அழைத்துச் சென்று விட்டாள். ஆனால் அந்தச் சேவகனோ அங்கே உள்ளே செல்லாமல் அங்கேயே இருந்த ஓர் ஆசனத்தில் அமரவே மஞ்சரிக்குச் சந்தேகம் வந்துவிட்டது.

Friday, January 01, 2021

ஆதுரசாலையில் தத்தன்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 ப்ளாகர் திடீர் திடீர்னு சண்டித்தனம் பண்ணுது. இன்னிக்குப் பதிவை எப்படியானும் போடணும்னு நினைச்சு முயற்சிகள் செய்தால், "இன்னிக்குப் போட முடியாது!" unable to create new post!" என்றே செய்தி வருது. என்னடா இது சோதனைனு நினைச்சுட்டு மறுபடி மறுபடி விடாமல் முயற்சி செய்ய ஒரு வழியா வந்தது. கிட்டத்தட்ட ஒரு மாசமா எழுத முடியலை. வீட்டில் உறவினர் வந்து ஒரு வாரம் இருக்கப் போறாங்கனு நினைச்சு எல்லாத்தையும் ஏறக்கட்டிட்டு இருந்தேன். வந்தவங்க உடனே கிளம்பிப் போயிட்டாங்க. ஆனாலும் பதிவு போட முடியலை. என்னமோ தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இன்னிக்கு எப்படியானும் உட்கார்ந்துடணும்னு உட்கார்ந்திருக்கேன். 

*************************************************************************************

அவ்வளவில் இருவரும் அன்றிரவு உறங்கிவிட்டார்கள். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் தத்தனுக்கு உடல் கொதித்துக் கொண்டிருந்தது. கஷாயம் சாப்பிட்டுவிட்டு தத்தனை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டுப் பார்த்தால் இரவில் மறுபடி ஜூரம் அதிகம் ஆகி தத்தன் கன்னாபின்னாவெனப் பிதற்ற ஆரம்பித்தான். வல்லபன் செய்வதறியாது சத்திரத்து உதவியாளர்களை அழைக்க அவர்கள் ஓர் வண்டி வைத்து தத்தனையும், வல்லபனையும் அங்கிருந்த ஆதுரசாலைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த வயோதிக வைத்தியரின் வீட்டிற்குப் பக்கத்திலேயே அந்த ஆதுர சாலை இருந்தது. அவரும் இவர்களை உடனே அடையாளம் கண்டு கொண்டுவிட்டார். இளம் வயது என்பதால் தேவையின்றி மழையில் நனைந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டே தன் வைத்தியத்தை ஆரம்பித்து வைத்தார். 

சுற்றும் முற்றும் பார்த்த வல்லபன் அங்கே தத்தனைத் தவிர இன்னமும் 30 பேர் சிகிச்சைக்கு வந்திருப்பதையும், அங்கே படுக்கைகளில் படுத்திருப்பதையும் கண்டான். எங்கும் மருந்தின் மணம் சூழ்ந்து இருந்தது. வல்லபன் தத்தனின் கை, கால்களைத் தேய்த்து விட்டுச் சூடு பண்ணிவிட்டுப் போர்வையால் அவன் உடலைப் போர்த்திவிட்டுப் பின்னர் நோயாளியுடன் வந்தவர்களுக்கு எனப் பிரத்யேகமாய் இருந்த இடத்திற்குச் சென்று அமர்ந்து இளைப்பாறினான். இருள் கவிந்து வந்த அந்த மழைக்கால மாலைப் பொழுதில் ஆதுர சாலையின் அந்தக் கூடத்திலும் இருள் சூழ ஆரம்பிக்க இரு பெண்கள் வந்து ஆங்காங்கே மாடங்களில் உள்ள விளக்குகளை ஏற்றி வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தியைப் பார்த்துத் திகைத்தான் வல்லபன். தத்தன் தண்ணீரில் விழுந்தபோது அவனைக் கைப்பிடித்துத் தூக்கிய பெண் தான் அவள். சின்னப் பெண்ணான அவள் சுறுசுறுப்புடன் ஒவ்வொரு மாடமாகச் சென்று விளக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு இடமாகப் போன அவள் அந்த ஆதுரசாலையின் ஓர் ஓரத்துக் கட்டில் அருகே விளக்கை ஏற்றும்போது அந்தக் கட்டிலில் படுத்திருப்பவரைப் பார்த்த வல்லபனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. எங்கேயோ பார்த்த நினைவு வந்தது. காலில் கட்டுகளுடன் அங்கே படுத்திருந்த மனிதனையும், அவனது கால் மாட்டில் வல்லபனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நிற்பவரையும் ஏற்கெனவே பார்த்த மாதிரி இருந்தது வல்லபனுக்கு.  எங்கே பார்த்தோம் என யோசித்தவனுக்கு திடீரென நினைவு வந்தது. ஆஹா! இவர்கள் அந்த மகரவிழி மங்கைக்குப் பாதுகாவலாகச் சென்ற சேவகர்கள் ஆயிற்றே! இங்கே எப்படி வந்தார்கள்? தன்னைப் பார்த்திருப்பார்களோ? அப்படிப் பார்த்து அடையாளமும் தெரிந்து கொண்டால் ஆபத்தாயிற்றே!

இவர்கள் இருவர் மட்டும் இருக்கிறார்களா? அல்லது மற்றவர்கள் இவர்களுக்காக இந்த ஊரிலேயே காத்திருக்கிறார்களா? அப்படியானால் அந்த மகரவிழியாள்? அவள் எங்கே போயிருப்பாள்? அவள் கட்டாயமாய் பாண்டிய ராஜகுமாரியாகத் தான் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் நினைத்த வல்லபன் விளக்குகளை ஏற்றி முடித்துத் திரும்பிச் சென்று கொண்டிருந்த அந்த இளம்பெண்ணைப் பார்த்துவிட்டு அவளைத் தொடர்ந்து சென்றான்.  இரண்டே எட்டில் அவளை அடைந்து முன்னால் சென்று அவள் வழியை மறிக்கிறாப்போல் நிற்கவே அவள் வல்லபனைப் பார்த்துப் புரிந்து கொண்டு குறும்புப் புன்னகை செய்தாள். அவள் பெயர் என்னவென்று கேட்டுக்கொள்ளவில்லையே என நினைத்தவண்ணம் வல்லபன் அவளிடம், அவசரமாக ஓர் உதவி வேண்டும் என்று கெஞ்சினான்.  அந்தப் பெண்ணோ அதை வேடிக்கையாக எடுத்துக் கொண்டு தத்தன் மீண்டும் வழுக்கி விழுந்துவிட்டானா? என்று கேலியாகக் கேட்டுவிட்டுக் கலகலவெனச் சிரித்தாள்.

வல்லபன் அதற்கு தத்தன் அந்த ஆதுரசாலையில் தான் ஜுரத்துடன் படுத்திருப்பதாகச் சொன்னான். அவள் ஆச்சரியத்துடன் அப்படியா எனவினவிவிட்டு எங்கே படுத்திருக்கிறான் என்பதையும் கேட்டாள். தூரத்தில் இருந்தே தத்தன் படுத்திருந்த கட்டிலைச் சுட்டிக்காட்டிய வல்லபன், அந்த சேவகர்கள் இருந்த இடத்தையும் சுட்டிக் காட்டிவிட்டு இந்தச் சேவகர்களால் தங்கள் இருவருக்கும் எந்நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்பதை விளக்கிச் சொன்னான். அந்தப் பெண்ணிடம் அதனால் தான் வேண்டிக் கேட்டுக் கொள்வதாகவும் அந்தச் சேவகர்களால் தத்தனுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க அவள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டவன், அவர்கள் மேல் தாக்ஷண்யம் வைத்து அந்தப் பெண் இதைச் செய்ய வேண்டும் எனவும், மேலும் தொடர்ந்து வல்லபன் அங்கேயே இருந்தால் அவனுக்கும் ஆபத்து வந்துவிடும் என்பதால் தான் போய்வருவதாகவும், தத்தனைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளும்படியும் சொல்லிக் கொண்டே வாசல்பக்கம் ஓடினான் வல்லபன். அந்தப் பெண்ணோ பிடி கொடுத்தே பேசவில்லை.