எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, March 04, 2009

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம் - அஹோபிலம் 4

திரு கேஆரெஸ் சிங்கவேள் குன்றத்தின் கதையை எழுதச் சொல்லி இருக்கிறார். கொஞ்சம் பொறுத்துக்குங்க. முதலில் அதை எழுதும் எண்ணம் இல்லை. அனைவரும் அறிந்த கதைதானேன்னு எழுதலை. என்றாலும் மீண்டும் எழுதறேன். இப்போ மாலோல நரசிம்மரைத் தரிசிக்கச் செல்வோமா? இரு மலைகள் ஆன கருடாத்திரி, வேதாத்திரி மலைகளில் அமைந்தவையே நவ நரசிம்மர் சந்நிதிகளும். அவற்றில் வேதாத்திரி மலையில் உள்ளது. இந்த மலைத் தொடர்களை லக்ஷ்மி க்ஷேத்திரம் எனவும் அழைக்கின்றனர். கனகபாயா என அழைக்கப் படும் நதிக்கரையில் உள்ளது இந்த ஆலயம்.
ஹிரண்யகசிபுவைக் கொன்ற கோபத்தில் இருந்து தணியாத நரசிம்மரின் கோபத்தை அடக்க முடியாமல் தவித்த தேவர்கள், பிரஹலாதனையே வேண்ட அவனும் நரசிம்மத்தின் கோபம் தணியப் பிரார்த்திக்கின்றான். அவனுக்காக எழுந்தருளிய கோலமே இது. கோபம் தணிந்து ஸ்ரீ எனப்படும் அன்னையுடன் எழுந்தருளி இருக்கின்றார் நரசிம்மர். மா= என்பது மஹாலக்ஷ்மியைக் குறிக்கும். லோலா=என்றால் காதலன், லோலம்=காதல். அன்னையைக் காதலுடன் தன் இடது தொடையில் இருத்தி செளம்ய ரூபமாய் இடக்காலை மடக்கி, வலக்காலைத் தொங்கவிட்டு சுகாசனத்தின் அமர்ந்திருக்கும் ரூபமே மாலோல நரசிம்மர்.

நவ நரசிம்மர்களில் இவருக்குள்ள மற்றொரு சிறப்பு, மடியில் திருமகளை இருத்திக் கொண்ட இவரின் இந்த மூர்த்தத்தையே அடிப்படையாக வைத்து உற்சவரை அஹோபிலம் மடம் ஜீயர்கள் அமைத்துள்ளனர். முதலாம் ஜீயரின் கனவில் சாட்சாத் அந்த ஸ்ரீமந்நாராயணனே, மாலோல நரசிம்மராய்க் காட்சி அளித்து இவ்விதம் உத்திரவிட்டதாயும் சொல்கின்றனர். இன்றைக்கும் அஹோபில மடத்தின் ஜீயர்கள் தாங்கள் ஆன்மீக யாத்திரைகள் செல்லும்போதெல்லாம் மாலோல நரசிம்மரின் இந்த உருவத்தை அடிப்படையாய்க் கொண்ட உற்சவ மூர்த்தத்தைத் தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர். தினசரி உற்சவருக்குப் பூஜை, வழிபாடுகளும் உண்டு.

இன்னும் சிலர் மா= என்றால் பிரானையே குறிப்பதாகவும் லோலா என்பதே ஸ்ரீ என்னும் மஹா லக்ஷ்மியைக் குறிக்கும் எனவும் சொல்கின்றனர். எப்படி இருந்தாலும் ஸ்ரீயை அணைத்த கோலத்தில் சங்கு, சக்ரதாரியாய், அழகிய கோலத்தில் காட்சி அளிக்கின்றார். இங்கும் சடாரி, தீர்த்தப் பிரசாதம் வழங்கப் பட்டது. இவ்வளவு கடினமான இடங்களுக்குக் கூட வந்து வழிபாடுகள் நடத்தும் பட்டாசாரியார்களை வாழ்த்த வார்த்தைகளே இல்லை. இந்த மாலோல நரசிம்மர் ஆனவர் செவ்வாயினால் ஏற்படும் அனைத்து தோஷங்களையும் போக்கி அருள்கின்றார். மனதில் ஏற்படும், சஞ்சலம், பயம் அனைத்தையும் போக்கி மனோ தைரியத்தை உண்டு பண்ணுகின்றார்.

ஏய்ந்தபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
வாய்ந்தவாகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதனிடம்,
ஓய்ந்தமாவுமுடைந்தகுன்றும் அன்றியும் நின்றழலால்,
13தேய்ந்தவேயுமல்லதில்லாச் சிங்கவேள்குன்றமே. 1.7.3
1011
எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை
வவ்வி, ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம்,
கவ்வுநாயும்கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று,
தெய்வமல்லால்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே. 1.7.4


அடுத்து யோக நரசிம்மர். அதற்கு முன்னர் இந்த மலையைப் பற்றிய ஒரு சிறு குறிப்புத் தொடரும்.

6 comments:

Raghav said...

மாலோலன் திருவடிகளே சரணம்..
அழகிய சிங்கர் திருவடிகளே சரணம்..

மெளலி (மதுரையம்பதி) said...

மாலோல நரசிம்ஹர் போன்ற விக்ரஹமே சிருங்கேரி பூஜையிலும் இருக்கிறது கீதாம்மா. மாத்வ மடங்கள் சிலவற்றிலும் லக்ஷ்மி நரசிம்ஹர் பூஜாவிக்ரஹமாக உண்டு.

யோக/உக்ர நரசிம்ஹ ரூபங்கள் கோவில்களில் மட்டுமே என்று படித்த நினைவு..

Raghav said...

அஹோபில மடம் ஜீயர் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஸ்வாமிகள் 70க்கும் அதிகமான வைணவக் கோயில்களுக்கு பூஜை முதலான கைங்கர்யங்கள் சிறப்பாக நடைபெறக் காரணமாக உள்ளார். திருவரங்கனின் ராஜகோபுரத் திருப்பணியை சிறப்புற செய்து முடித்தவரும் ஸ்வாமியின் முயற்சியே.

குமரன் (Kumaran) said...

பிரகலாத வரத மாலோல அழகிய சிங்கர் திருவடிகளே சரணம்.

தெய்வமல்லால் செல்லவொண்ணா சிங்கவேள் குன்றத்திற்குச் சென்று அந்த யாத்திரையைப் பற்றி எழுதி வருவதற்கு நன்றி அம்மா.

குமரன் (Kumaran) said...

அழகிய சிங்கர்ன்னவுடனே இப்ப எல்லாம் நம்ம இரவிசங்கர் பாணியில கமல் தசாவதாரம் படத்துல இந்த வார்த்தைக்குப் ஒரு பொருள் சொல்வாரே அதுவும் நினைவிற்கு வருது. :-) :-(

வல்லிசிம்ஹன் said...

நிருசிம்ஹம் என்றதுமே ஓடும் மாசெல்லாம் என்று எங்க வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள். பயம் போக்குவதற்கும்,உடல் நோய் தீரவும்
ஜபித்துக் கொண்டே இருக்கக் கற்றுக் கொடுப்பார்கள். ஸ்ரீ லக்ஷ்மிந்ருசிம்ஹனையும் ஆச்சார்ய வைபவங்களயும் அறியக் கொடுக்கிறீர்கள். உங்கள் புண்ணியத்தில் நானும் அனுபவிக்கிறேன்.சந்தோஷமாக இருக்கிறது.
நன்றி கீதா.