எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Thursday, December 06, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! வாசந்திகாவும் அவள் தாயும்!

தன் நிலையை நினைத்து நொந்துகொண்ட வாசந்திகா, "அம்மா! அம்மா! இங்கே வா!" என அழைக்க ஹேமலேகாவுடன் சில பெண்கள் அந்த மூதாட்டியைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வாசந்திகா முன்னால் நிறுத்தினார்கள். தன் தாயின் நிலையைப்பார்த்த வாசந்திகா கண்ணீர் பெருக்கினாள். பிச்சைக்காரி போல ஓர் பித்தாகக் காட்சி அளித்தாள் அவள் தாய்! திருக்கரம்பனூர் அம்மங்கிவல்லி என்னும் பெயர் கொண்ட தன் தாய் இன்று தன்னிலை இழந்து தன்னைப் பற்றிய அனைத்தையும் மறந்து தான் பெற்ற மகளான வாசந்திகாவைப் பற்றிய நினைவு ஒன்றில் மட்டும் வாழ்வதைக் கண்டு அவள் மனம் புண்ணானது.  கூடு போல் காட்சி அளித்த அந்த உடலில் உயிர் இருப்பது அவள் கண்களின் அசைவினால் மட்டுமே தெரிந்தது.

அவளிடம் வாசந்திகா, "அம்மா, அம்மா, இதோ நான் வாசந்திகா! என்னைப் பார் அம்மா! உன் வாசந்திகா நான் தான்!" என்று சொல்லியவண்ணம் தாயின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு கேவினாள். ஆனால் அவளோ வாசந்திகாவையே கூர்ந்து பார்த்துத் தலையை  ஆட்டினாள். "இல்லை! இல்லை! நீ என் வாசந்திகா இல்லை! அவள் இப்படி இருக்க மாட்டாள். நீ வேறு யாரோ! எவரோ! என் மனச்சாந்திக்காகப் பொய் கூறாதே!" என்ற வண்ணம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். "வாசந்திகா! மகளே! வாசந்திகா!" என்று கூச்சலிட்டாள். வாசந்திகா அழுத வண்ணம், " அம்மா, அம்மா! நான் வாசந்திகா தான் அம்மா! என்னை நன்றாகப் பாரம்மா!" என்று மீண்டும் மீண்டும் கூறினாள்.

"நீயா வாசந்திகா! இல்லவே இல்லை! எனக்குத் தெரியும். அதோ, அங்கே ஆடுகிறாள் என் வாசந்திகா!" என்று தொலைவில் மேடையில் ஆடிக்கொண்டிருந்தவர்களைக் காட்டினாள் அம்மங்கிவல்லி.  வாசந்திகாவின் இதயமே வெடித்து விடும்போல் இருந்தது. தன் தாய்க்குப் பைத்தியம் முற்றிவிட்டது என்பதைப் புரிந்து கொண்டவளுக்கு இனி தன்னை அவளுக்கு அடையாளமும் தெரியாது என்பது புரியவர மனம் உடைந்து அழ ஆரம்பித்தாள். அப்போது அந்த மூதாட்டி அனைவரின் பிடியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தாள்.  ஹேமலேகா அவளைப் பார்த்து, "நீங்கள் தான் வாசந்திகாவா? அது உங்கள் தாய்தானா? " என்று கேட்க வாசந்திகா ஆமோதித்தாள். பின்னர் மெல்லிய குரலில் தான் தில்லிப் படைவீரர்களிடம் சிக்கிக் கொண்டு நாசமானது குறித்துச் சொன்னாள்.

ஹேமலேகா அவளிடம் வாசந்திகாவின் தாயாரைத் தான் தான் பார்த்துக் கொள்வதாகவும், தாயார் இல்லாத தான் அவளைத் தன் சொந்தத் தாயாக நினைத்துக் கொண்டு அவளைக்கவனித்துக்கொள்வதாகவும் எடுத்துச் சொன்னாள்.  வாசந்திகா உடனே தன்னிடம் இருந்த பொன்னாபரணங்களில் சிறந்த பெறுமானம் பெறும் ஒன்றை எடுத்து ஹேமலேகாவிடம் கொடுத்தாள். தன் தாயை நன்கு கவனித்துக் கொள்ளுமாறும் கடவுள் அருள் இருந்தால் தனக்கு விடுதலை கிடைக்கும் எனவும், அப்படி விடுதலை கிடைத்தால் தான் அவளை வந்து கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள்.  பின்னர் திரும்பியவளுக்குக் குலசேகரன் புலம்பல் நினைவில் வரவே அவளிடம் மீண்டும் சென்று, "உன் பெயர் ஹேமலேகா தானே?" எனக் கேட்டாள். ஹேமலேகா ஆமோதித்தாள்.

"ஓஹோ! அப்போது நீ குலசேகரனை அறிவாயோ?" என்று வாசந்திகா வினவ ஹேமலேகா திடுக்கிட்டாள்.  ஆனாலும் அவன் பெயரைக் கேட்டதும் அவள் முகத்தில் தெரிந்த பிரகாசத்தைக் கண்டுகொண்ட வாசந்திகா இவளைக் குறித்துத் தான் குலசேகரன் புலம்பி இருக்கவேண்டும் என நினைத்துக் கொண்டாள். ஹேமலேகா வாசந்திகா கேட்பதன் காரணத்தைக் கேட்க, வாசந்திகா அவளை அருகே அழைத்து, மிகவும் ரகசியமாக, "அவர் இந்தத் துருக்க வீரர்களால் குற்றுயிராக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்!" என்றாள். ஹேமலேகா திகைக்க சுல்தானிய ராணி வாசந்திகாவைக் கைதட்டித் தன்னிடம் அழைத்தாள். 

No comments: