எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Tuesday, December 11, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஹேமலேகா வந்தாள்!

பொன்னாச்சியால் அந்த ஆபரணம் வந்த விதம் சொல்ல முடியவில்லை. அவனுக்குச் சிகிச்சை செய்ய ஆரம்பித்தாள் பொன்னாச்சி. அவன் உடலில் உள்ள ரணங்களால் பல இடங்களிலும் சீழ் கோர்த்துக் கொண்டு வலியும், வீக்கமும் அதிகம் இருந்ததால் குலசேகரன் உடல் வேதனையில் மிகவும் நொந்து போனான். பொன்னாச்சி அவனுக்குப் பச்சிலைகளை அரைத்துத் தடவி பல மூலிகைச்சாறுகளைக் கஷாயம் செய்து குடிக்கச் செய்து அவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டாள்.அவள் கவனிப்புக்குக் கொஞ்சம் பலன் இருந்தது.  ஆனால் குலசேகரன் அங்கே வந்து சேர்ந்து பல நாட்கள் ஆகிவிட்டன. ஓர் காலைவேளையில் குலசேகரன் தன் நிலைமையை நினைத்து வருந்திய வண்ணம் மெள்ள எழுந்து நடந்து ஆற்றங்கரையை நோக்கிச் சென்றான்.

ரணங்கள் ஆறி இருந்தாலும் தழும்புகள் பெரிதாகத் தெரிந்தன. ஆற்றங்கரையில் நிழல் பரப்பிக் கொண்டிருந்த ஓர் மரத்தின் அடியில் அமர்ந்த வண்ணம் ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தான் குலசேகரன். அப்படியே உட்கார்ந்திருந்தவன் காதுகளில் திடீரென, "ஆர்ய!" என ஒரு தீங்குரல் கேட்டது. ஹேமலேகாவையே நினைத்துக் கொண்டிருப்பதால் இதுவும் பிரமை என நினைத்த குலசேகரன் அவ்வளவாய் கவனம் செலுத்தவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் அந்தக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. நிஜமாகவே ஹேமலேகா தான் கூப்பிடுகிறாளோ என்ற சந்தேகத்துடன் திரும்பிய குலசேகரன் கண்ணெதிரில் கனிவு ததும்பிய கண்களுடன் ஹேமலேகாவே நின்று கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் குலசேகரனுக்கு ஆனந்தம் பீறிட்டது. ஆர்வமுடன் "ஹேமலேகா! ஹேமூ!" என்ற வண்ணம் எழுந்தான். "எப்படி இருக்கிறீர்கள் ஐயா?" என ஹேமலேகா அவனைக் கேட்டாள்.

"இருக்கிறேன். நீ தான் பார்க்கிறாயே!" என்றான் குலசேகரன் தழுதழுத்த குரலில். தான் கனவு காண்கிறோமோ என சந்தேகம் கொண்ட ஹேமலேகா அதை அவனிடம் கேட்கவும் கேட்டாள். இல்லை அவள் கனவு காணவில்லை; இது நனவே எனக் குலசேகரன் கூறினான். அவன் உடலில் உள்ள தழும்புகளைக் கண்ட ஹேமலேகா அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொண்டவளாக அவனை அமரச் சொன்னாள். பலஹீனமான உடல்நிலையில் வெகு நேரம் அவன் நிற்க வேண்டாம் என்பதே அவள் எண்ணம். ஹேமலேகாவை அங்கே எப்படி வந்தாள் என அறிவதற்காகக் குலசேகரன்,"ஹேமூ, நீ எப்படி இங்கே?" என்று வினவினான். ஹேமலேகா அவன் இதயத்தில் தானும் தன் இதயத்தில் அவனும் இருப்பதால் அவனைக் கண்டு பிடிப்பது அவளுக்கு எளிதாயிற்று என்றாள்.  அவனையே நினைத்துக் கொண்டிருந்ததாகவும் கூறினாள். பின்னர் அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கேட்டறிந்தாள். குலசேகரனும் தான் அடிபட்டு விழுந்தவரையில் கூறினான். பின்னர் தாழியில் கிடந்ததையும் பொன்னாச்சி எடுத்துக் காப்பாற்றியதையும் சொன்னான்.

அவன் தான் வாங்கிய சாட்டை அடிகளால் ஏற்பட்ட தழும்புகளைக் காட்டினான். அவனிடம் அவள் அவன் ரணங்களுக்குத்தான் ஓர் அருமருந்தாக விளங்க விரும்புவதாயும் ஆனால் அவனை ஸ்பரிசித்து சிகிச்சை செய்யும் பாக்கியம் அவளுக்கு இல்லை எனவும் கூறினாள். ஆனாலும் அவன் மேல் அவள் கொண்ட பிரேமை காலத்துக்கும் அழியாது எனவும் இந்தப் பிரேமை வெறும் உடல் ஸ்பரிசத்தால் மட்டுமே ஆனந்தம் அடையாது எனவும் மனங்களிலேயே தாங்கள் வாழ்வதாகவும், அது தொடரும் எனவும் கூறினாள்.

No comments: