எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, December 05, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! மாயமா, மர்மமா?

மறுநாள் காலை சுல்தானிய ராணியுடன் வந்தவர்களும் ராணியும் எழுந்து பார்த்தபோது தாங்கள் சிறைப்பிடித்து வைத்தவர்களில் முக்கியமான ஒருவனைக் காணோம் என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். இது எப்படி சாத்தியம் என நினைத்தார்கள்.  அந்தக் காலகட்டங்களில் மாயாவித்தைகள், யோக வித்தைகள் தெரிந்தவர்கள் நிறைய இருந்ததால் அப்படி ஏதோ நடந்திருக்கும் எனச் சந்தேகித்தார்கள். எதற்கும் இந்த மண்டபத்தில் இருந்து உடனடியாகக் கிளம்பாவிட்டால் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து சம்பவிக்குமோ எனக் கவலைப்பட்டார்கள். ஆகவே அனைவரும் குதிரைகளைக் கிளப்பி விட்டுப் பல்லக்குத் தூக்கிகளைப் பல்லக்குகளைச் சுமக்கச் செய்து பயணத்தை வடக்கு நோக்கித்தொடர்ந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்களுக்குக் காவிரியின் தென் கரை கண்ணில் பட்டது. நதியில் அப்போது நீர் சுழித்துக் கொண்டு ஓடியது. ஆகவே அவர்கள் படகுகளை அமர்த்திக் கொண்டு அதன் மூலம் நதியைக் கடக்க ஆரம்பித்தார்கள்.

அந்தப் படகுகளில் ஒன்று அமர்ந்தவண்ணம் அவர்களுடன் கூடப் பயணித்த வாசந்திகாவுக்கு நதியில் நீர்ப்பிரவாகம் சுழித்துக் கொண்டு ஓடுவதைக் கண்டதும் உள்ளூரத் திகிலே ஏற்பட்டது! தான் செய்தது சரியா என்னும் எண்ணமும் தோன்றியது! தாழியில் தான் இறக்கி வைத்த குலசேகரன் இது நேரம் எங்கே பயணித்திருப்பானோ! இந்த வேகத்தில் வெள்ளத்தின் நடுவே தாழி சென்றால் சமுத்திரத்தில் போய்ச் சேருமே! என்ன செய்வது?  குலை உயிரும் குற்றுயிருமாகக் கிடக்கும் அவர் சரியான மருத்துவ உதவி கிட்டாமல் என்ன ஆவாரோ தெரியவில்லையே! நேற்றிரவு இத்தனை வெள்ளம் போவது தெரிந்திருக்கவில்லை! அவள் மனம் பதைபதைத்தது. அதை அவள் முகமும் வெளிக்காட்டியது. தான் செய்தது தவறானதோ என்னும் எண்ணம் மேலும் மேலும் தோன்றக் குலசேகரனைத் தான் பெரியதொரு ஆபத்தில் சிக்க வைத்துவிட்டோம் என அவள் நினைத்தாள்.

அவர்கள் படகு திருச்சிராப்பள்ளியை அடையாமல் அதற்குக் கிழக்கே சிறிது தூரத்தில் தென்காவிரியைக் கடந்தது. அப்போது வாசந்திகாவுக்குத் திருவரங்கக் கரை கண்ணில் படம் உள்ளமும், உடலும் சிலிர்த்தது. எத்தனை வருடங்கள்! இதை மீண்டும் பார்க்க மாட்டோம் என்றே நினைத்திருக்க இன்று பார்க்க நேர்ந்ததே! அரங்கன் கதி என்னவாயிற்றோ! அவள் கண்கள் குளமாகின.  காவிரிக்கரையில் அவர்கள் அமர்ந்து சிறிது இளைப்பாறினார்கள். பின்னர் மேற்கே பயணித்து அழகிய மணவாளம் கிராமத்தை அடைந்தனர்.  அங்கே ஏற்கெனவே சிங்கப்பிரானுக்கு சுல்தானிய ராணி வரப்போது தெரிந்திருந்தமையால் அவளை முறைப்படி வரவேற்க எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தார்.  ஊரில் உள்ள முக்கியமான விருந்தினர்கள் வந்தால் தங்கும் சத்திரத்தில் தங்க வைத்து அவர்களுக்கு மது மற்றும் சிறப்பான விருந்து அளித்து மனம் குளிர வைத்தார். பின்னர் அவர்களை அன்றிரவு அங்கேயே கழிக்கும்படி சொல்லி வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்.

இரவில் அவர்கள் பொழுதைக் கழிக்கப் பாட்டும், கூத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அதற்கெனத் தயாராக இருந்த தேவதாசிகள் தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு வந்து நின்றனர். சிறிது நேரத்தில் ராணி தன் பரிவாரங்களுடன் அங்கே வந்து சேர்ந்தாள். வந்தவர்கள் அனைவரும் அவர்களையே பார்க்க ஆட வந்த தேவதாசிகள் வாசந்திகாவைப் பார்த்துத் திகைத்தனர். ஒருவருக்கொருவர் சுட்டிப் பேசிக் கொண்டார்கள். திருக்கரம்பனூர் வாசந்திகாவைப் போலவே இவள் இருக்கிறாளே! அவள் தானோ அல்லது வேறு யாருமோ என ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டார்கள். பின்னர் பாட்டும், கூத்தும் தொடங்கின.  சிங்கப்பிரானுக்கு வாசந்திகாவை அடையாளம் தெரிந்து விட்டது. வாசந்திகாவும் அவரைத் தெரிந்து கொண்டாள் என்பது அவள் பார்வையில் இருந்து அவர் அறிந்தார். வாசந்திகா எங்கேயோ போய்விட்டாள் அல்லது இறந்திருக்கலாம் என நாம் நினைக்க இந்தக் கொடுமைக்காரர்களிடமா மாட்டிக்கொண்டாள் என சிங்கப்பிரான் பரிதாபம் அடைந்தார்.

கூத்து நடக்கும்போது ஓர் வயதான அம்மா, வாசந்திகாவின் பெயரைச் சொல்லிக் கொண்டே ஆடுபவர்கள் நடுவில் வந்து நின்று கொண்டு, "வாசந்திகா! ஆடு! ஆடு! ஆடு அம்மா!" என்று கூறினாள்.  அந்த மூதாட்டியைத் தொடர்ந்து ஹேமலேகா ஓடி வந்தாள். "அம்மா, அம்மா, அங்கெல்லாம் போகாதீர்கள்! வாசந்திகா அங்கே இல்லை! இங்கே வாருங்கள்!" என்று அழைத்தவண்ணம் அந்த மூதாட்டியை ஓடிப் போய்ப் பிடித்தாள். ஆனால் அந்த மூதாட்டியோ நேராக தேவதாசிகளுக்கிடையே வந்து, "வாசந்திகா! வாசந்திகா!" என்று கூவிக்கொண்டு "ஆடு! ஆடு" எனச் சொல்லிக் கொண்டு இருந்தாள். அவளை இழுத்துச் செல்லுமாறு அனைவரும் கூவ வாசந்திகா தன் தாயைப் புரிந்து கொண்டாள். ஆஹா, அம்மா உயிருடன் இருக்கிறாளா?உடனே அங்கே செல்லக் கால்கள் எழும்பினாலும் அவள் நிலை அவளைத் தயங்க வைத்தது. ராணியைப் பார்த்து, "ராணி! அது என்னைப் பெற்ற தாய்! நான் அவளிடம் பேசவேண்டும். உங்கள் அனுமதி அதற்கு வேண்டும்." என்று கூட ராணி சற்று யோசித்து விட்டு அரைமனதோடு அனுமதி தந்தாள். ஆனால் அவளை இங்கே அழைத்து வந்து தனக்கு எதிரே பேசவேண்டும் என்று சொன்னாள். 

No comments: