எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Wednesday, December 12, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! ஹேமலேகாவின் கதை!

ஹேமலேகா மேலும் தொடர்ந்து பேசினாள். "ஸ்வாமி! உலகிலுள்ளோர் பலரும் புலன்களில் வாழ்கின்றனர். ஆனால் சிலரோ மனதில் வாழ்கின்றனர்.  இன்னும் சிலரோ ஆன்மாவிலேயே வாழ்கின்றனர். (இது எப்படி சாத்தியம் என்பது எனக்குப் புரியவில்லை. இது என் தனிப்பட்ட கருத்து.) புலன்களால் அனுபவிக்கப்படும் சுகங்களை அனுபவித்து வாழ்பவர்கள் வாழ்க்கை ஒரு மாதிரி எனில் என்னைப் போல் மனதில்வாழ்பவர்கள் காவியங்களிலும் இதிஹாசங்களிலும் மனதைப் பறி கொடுத்து அதிலேயே மூழ்கிப் போகிறோம். ஆன்மாவில் வாழ்பவர்களோ பிரம்மத்தைப் பற்றிய விசாரங்களிலே மூழ்கிப் போகின்றனர்.  அவரவர் மனோபாவத்துக்கு ஏற்ப அவரவர் சுகத்தையும் இம்மாதிரி அனுபவங்களையும் பெற்று இன்புறுகின்றனர். "

"ஆர்ய! நான் மனதாலேயே வாழ்கிறேன். கிட்டத்தட்ட நீங்களும் அப்படித்தான். என்னை மனதால் நினைந்து வாழ்கிறீர்கள். நமக்கு இந்தப் போலியான சடங்குகளான திருமணம், இல்வாழ்க்கை போன்றவை தேவையே இல்லை. நாம் மனதில் ஒருவரை ஒருவர் நினைப்பதாலேயே அந்த இனிமையிலேயே வாழ்ந்து வருகிறோம். நாம் ஒருவரை ஒருவர் நினைக்கும் இன்பம் தான் நம் வாழ்க்கை! அத்தகைய வாழ்க்கையைத் தான் நாம் வாழ்ந்து வருகிறோம்." என்று சொன்னாள் ஹேமலேகா. குலசேகரன் வாயே திறக்காமல் அவள் பேசும் அழகை ரசித்தான்.  அவள் அளவுக்கு அவன் ஏதும் படித்தது இல்லை. ஆகவே அவனுக்கு அவள் பேச்சு ஓர் சுகமான கானமாகத் தெரிந்தது. அவன் மனமும் திறந்து கொண்டது போல் உணர்ந்தான்.  மனதுக்கு அவள் பேச்சு நிறைவாக அமைந்தது. சிறிது நேரம் இந்த உணர்வுகளில் மயங்கி நின்ற குலசேகரன் மெல்ல மெல்ல சுய நினைவுக்கு வந்தான்.

"அதெல்லாம் சரி! ஹேமூ! நீ எப்படி என்னைத் தேடினாய்? உனக்கு எப்படித் தெரியும் என்னைப் பற்றி? யார் சொன்னார்கள்?" என்று கேட்டான். அப்போது ஹேமலேகா, வாசந்திகாவைப் பற்றி அவனுக்கு நினைவூட்டினாள். குலசேகரனுக்கும் வாசந்திகாவைப் பற்றிய நினைவு வந்தது. அவள் இப்போது சுல்தானின் ராணியின் அந்தப்புரச் சேடியாக வாழ்க்கை நடத்துவதை ஹேமலேகா தெரிவித்தாள்.  இதைக் கேட்ட குலசேகரன் திகைப்புடன் வாசந்திகாவுக்கு இத்தகைய நிலைமை ஏற்பட என்ன காரணம் என்று கேட்டான். அதற்கு ஹேமலேகா, அதைப் பற்றித் தனக்குத் தெரியாது என்றாள். மேலும் சுல்தானிய ராணியின் கோஷ்டி அழகிய மணவாளம் கிராமம் வந்ததும். அப்போது ராணியை மகிழ்விக்க வேண்டி நடந்த நாட்டிய நிகழ்ச்சி பற்றியும் கூறினாள். அப்போது ஹேமலேகாவின் தாயாரைத் தான் அங்கே அழைத்துச் சென்றதையும் வாசந்திகா தாயை அடையாளம் கண்டுகொண்டு வந்து பேசியதையும் கூறினாள்.

கூடவே வாசந்திகா அவளைத் தனியாக அழைத்துக் குலசேகரன் தாழியில் இடப்பட்டுக் குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடப்பதையும் தாழி காவிரியில் மிதந்து கொண்டு செல்வதையும் அவனைக் காப்பாற்றுமாறும் கேட்டுக்கொண்டதைத் தெரிவித்தான். தான் பின்னர் அதை சிங்கப்பிரானிடம் அதைத் தெரிவித்ததாகவும் அவர் படகுக்காரர்களையும் வீரர்களையும் ஏவி விட்டு அவனைத் தேடச் சொன்னதாகவும் கூறினாள். கிழக்கே சென்ற வீரர்கள் பல காதம் தேடிவிட்டு அவன் கிடைக்காமல் திரும்பியதையும் சொன்னாள். பின்னர் அதனால் கவலை அடைந்த சிங்கப்பிரான் தானே ஒரு குழுவைச் சேர்த்துக் கொண்டு தேட முற்பட்டதும், அவர்களோடு தானும் சேர்ந்து கொண்டதாகவும் சொன்னாள். குழுவினர் கரையில் இறங்கி அங்குள்ள கிராமத்து மக்களையும் மற்றவர்களையும் விசாரித்துக் கொண்டு வர தான் மட்டும் தயிர்க்காரி பொன்னாச்சியின் குடிசையைப் பார்த்துவிட்டு இங்கே வந்ததாய்ச் சொன்னாள்.

இதை எல்லாம் கேட்ட குலசேகரன் ஆச்சரியம் அடைந்தான். தான் தப்புவதற்கு வாசந்திகா செய்திருக்கும் பெரிய உதவியை நினைத்துக் கொண்டு வியந்ததோடு அல்லாமல் அவன் வைத்தியத்திற்கும், வழிச்செலவுக்கும் பணம் தேவைப்படும் என்பதாலே பொன்னாரத்தைத் தன் கழுத்தில் போட்டிருக்கிறாள் என்றும் புரிந்து கொண்டான். இத்தகைய மாசு மருவற்ற எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத தூய அன்புக்குத் தான் செய்யப் போகும் கைம்மாறு தான் என்ன? குலசேகான் கண்கள் கலங்கின. அதற்குள் சிங்கப்பிரானின் குழுவினர் ஹேமலேகா அவர்களை விட்டுப் போய் இவ்வளவு நேரம் ஆகியும் இன்னமும் காணவில்லையே எனத் தேடிக் கொண்டு வந்தார்கள். குலசேகரனோடு பேசிக் கொண்டிருந்த ஹேமலேகாவைக் கண்டதும் மனம் மகிழ்ந்தனர். அவனைத் தேடிக் கொண்டு போன மற்றக் குழுக்களுக்கு அவன் கிடைத்துவிட்ட செய்தியை அனுப்பி விட்டு மற்றவர்கள் அனைவரும் அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசிப்பதற்காக அன்று மாலை ஒன்று கூடினார்கள். 

No comments: