எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Friday, December 14, 2018

ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்! பொன்னாச்சியின் மனம்!

குலசேகரன் நடக்கும் நிலையிலோ குதிரையில் அமர்ந்தவண்ணம் பயணம் செய்யும் நிலையிலோ இல்லாததால் அவனை எப்படி அழைத்துச் செல்வது எனக் கலந்து ஆலோசித்தார்கள். அவன் காயங்கள் பூரணமாக ஆறவில்லை. சீழ்க்கோர்த்துக் கொண்ட புண்களுக்கு இன்னமும் சிகிச்சை தேவைப்பட்டது. ஆகவே அவனை ஓர் படகில் அமர்த்திக் கரையோரமாகவே ஓட்டிக் கொண்டு ஒரு சிலர் துணையோடு அவனை அழகிய மணவாளம் கிராமத்துக்கு அழைத்துச் செல்ல முடிவானது. புறப்படும் நேரம் குலசேகரன் பொன்னாச்சியிடம் விடைபெறச் சென்றான். அவளிடம் நன்றி தெரிவித்துவிட்டு விடைபெற்றவன் வாசந்திகா தனக்கு அளித்திருந்த பொன் ஆபரணத்தை வைத்துக்கொள்ளும்படி அவளிடம் நீட்டினான். அவள் அதைப் பெற்றுக் கொள்ளாமல் கண்ணீர் சிந்தினாள்.

குலசேகரனுக்கு ஏதும் புரியாமல் வெளியே வந்து ஹேமலேகாவிடம் விஷயத்தைச் சொல்லி அவளை உள்ளே அனுப்பி வைத்தான். அப்போது அவள் ஹேமலேகாவிடம் தான் செய்த கைம்மாறுக்குப் பிரதிபலனைத் தான் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்தாள். குலசேகரன் போன்றோருக்குத் தொண்டு செய்ததன் மூலம் தான் மகிழ்ச்சியை அனுபவித்ததாகவும் அதற்காகப் பணமோ பொருளோ வாங்கிக்கொள்ள மாட்டேன் எனவும் சொன்னாள். மேலும் அவள் தன் கணவன் வியாபாரம் செய்ய வேண்டித் தன்னை விட்டுப் பிரிந்து சென்று பதினைந்து வருஷம் ஆகிவிட்டதாயும் இன்னமும் அவன் திரும்பவில்லை என்பதையும் எங்கே இருக்கிறானோ என்பதே தெரியாமல் தான் வாழ்ந்து வருவதையும் கூறினாள்.  தான் இன்னொரு ஆண்பிள்ளையைப் பார்த்து நேருக்கு நேர் பேசியது கூட இல்லை எனவும் கணவன் இல்லாமல் இத்தனை வருஷங்களைக் கழித்தவளுக்குக்குலசேகரன் வருகை பெரிதாக சந்தோஷத்தைக் கொடுத்ததும் அவனைக் கவனித்துக் கொண்டதன் மூலம் தானும் தன் தாய்நாட்டிற்கும் அதற்குச் சேவை புரியும் ஒரு வீரனுக்கும் தொண்டாற்றி அதன் மூலம் தனக்குச் சிறிது நிம்மதியும் ஆறுதலும் கிடைத்தது எனவும் சொன்னாள்.

குலசேகரனுக்குப் பணிவிடைகள் செய்ததன் மூலம் தான் அனுபவித்த ஆனந்தத்திற்குப் பொருளோ, பணமோ வாங்கினால் தான் செய்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்றாள். இது தன் கடமை எனவும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள். வாழ்க்கையில் தான் அனுபவித்த வறட்சிக்கு நடுவே பாலைவனச் சோலை போலக் கிடைத்த இந்த இனிமையான தினங்களைத் தான் போற்றிப் பாதுகாத்து வைக்கப் போவதாகவும் சொன்னாள்.  இந்த நினைவுகளையும் தான் செய்த தொண்டையும் குறித்து இன்னும் அதிகம் பேசினால் அதற்கு மதிப்பில்லாமல் போய்விடும் என்றும் அது பற்றி அதிகம் பேசவிரும்பவில்லை என்றும் சொல்லி விட்டுக் கண்ணீர் விட ஆரம்பித்தாள். ஹேமலேகாவும் அவள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தாள்.  குலசேகரனிடம் அந்தப் பொன்னாச்சி என்னும் தயிர்க்காரியின் உயர்ந்த உள்ளத்தைக் குறித்து எடுத்துக் கூறினாள். குலசேகரன் உண்மையிலேயே மெய் சிலிர்த்துக் கண் கலங்கி மானசிகமாக அவளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டான்.

குலசேகரனை ஓர் படகில் ஏற்றிப் படுத்த வண்ணமாக அமரவைத்தனர். சாய்வாகப் படுத்துக் கொண்ட குலசேகரன் கண்களுக்குக் கரையில் தோப்பு மரங்களுக்கு இடையே நின்று கொண்டு அவனுக்குப் பிரியாவிடை கொடுக்கும் பொன்னாச்சியின் உருவம் தெரிந்தது. இனி இவளை நாம் எங்கே பார்க்கப் போகிறோம் என நினைத்தவண்ணம் குலசேகரன் அவளிடமிருந்து விடை பெற்றான். அழகிய மணவாளம் கிராமம் போய்ச் சேர்ந்ததும் குலசேகரனைக் கரையேற்றி ஓர் வீட்டில் ரகசியமாகத் தங்க வைத்தார்கள். அவனுக்கு வேண்டிய வைத்திய சிகிச்சைகளும் செய்யப்பட்டன. மற்றப் பணிவிடைகளும் செய்யப்பட்டன. குலசேகரன் மெல்ல மெல்ல உடல் தேறி வந்தான். பின்னர் அவனால் நடக்கும் நிலைமைக்கு வந்த பின்னர் வடகாவிரி எனப்படும் கொள்ளிடக் கரைக்கு அடிக்கடி சென்று உலாத்தி வந்தான்.

ஒரு நாள் மாலை நேரம்! கொள்ளிடக்கரையில் அமர்ந்த வண்ணம் எதிர்க்கரையையே பார்த்த குலசேகரன் கண்களுக்கு மறுகரையில் திடீரெனக் கறுப்பான நிழல்கள் தெரிவது கண்களில் பட்டன. கூர்ந்து கவனித்தபோது அவை யாவும் நிழல்கள் அல்ல நிஜம் என்பதும் குதிரைகளில் அமர்ந்த வீரர்கள் என்பதும் புரிந்தது. அதுவும் அவை யாரும் ஒரு மாபெரும் படையின் ஒரு பகுதி எனவும் புரிந்து கொண்டான். விஷயத்தை சிங்கப்பிரானிடம் உடனே சொல்ல வேண்டும் என்னும் எண்ணம் கிளர்ந்தெழ ஓட ஆரம்பித்தான் குலசேகரன். அப்படிக் கண்மண் தெரியாமல் ஓடியவன் யார் மேலோ முட்டிக் கொண்டான். யார் எனப் பார்த்தவனுக்கு அவன் ஓர் சுல்தானிய வீரன் என்பதும் வேறு யாரும் இல்லை, தன்னைச் சிறைப்பிடித்த வீரர்களின் தலைவனாக இருந்தவனே என்பதும் தெரியவரக் குலசேகரனுக்கு சப்த நாடியும் ஒடுங்கலாயிற்று  . 

No comments: