எச்சரிக்கை

ஆன்மிகப் பயணம் வலைப்பக்கங்களில் வெளிவரும் பதிவுகள் என் சொந்த உழைப்பினால் உருவானவை. காப்புரிமை என்னைச் சேர்ந்தது. அதைப் பயன்படுத்துவோர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப் படுகின்றனர்.

Monday, July 04, 2022

சம்புவரையர்களின் ஆட்சியின் நிலைமை! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 இளைஞர்கள் மூவரும் பேசியதைக் கண்டு மகிழ்வடைந்த சிங்கழகர் பதினெட்டு ஆண்டுகளாகத் தாம் இத்தகைய தைரியம், வீரம் நிறைந்த வார்த்தைகளைக் கேட்டதே இல்லை எனவும். காரியம் நடக்கிறதோ இல்லையோ இளைஞர்களின் தைரியமான பேச்சினால் மனம் நிறைவடைந்தது என்றும் கூறினார். அதன் பேரில் வல்லபனும் தத்தனும் அன்றிரவு அங்கேயே உறங்கிவிட்டுப் பின்னர் காலையில் தாங்கள் தங்கி இருந்த சத்திரத்துக்குத் திரும்பிச் சென்றனர். சத்திரத்தை விட்டு வெளியே வராமல் யார் கண்களிலும் படாமல் மதியம் வரை இருந்துவிட்டு மதியத்திற்கு மேல் மறுபடி சிங்கழகரின் குடிலுக்குச் சென்றனர். அப்போது இரு ராஜசேவகர்கள் மிகவும் கோபமாக சிங்கழகரிடம் பேசிக் கொண்டிருந்தனர். 

இளைஞர்கள் கொஞ்சம் கவலையுடன் ராஜசேவகர்கள் எதிரில் போய் நிற்காமல் ஒதுங்கியே நின்றனர். சற்று நேரத்தில் சேவகர்கள் சென்றதும் இருவரும் உள்ளே சென்று சிங்கழகரைப் பார்க்க அவர் அவர்கள் இருவரையுமே தாம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அப்போது வல்லபனும், தத்தனும் அவருக்கெதிரே அமர்ந்த வண்ணம் வந்த ராஜசேவகர்கள் யார் எனவும் எதற்காக வந்தார்கள் என்பதையும் கேட்டார்கள். சிங்கழகர் அதற்கு அந்தச் சேவகர்கள் சம்புவரையரின் வீரர்கள் எனவும் வரி(இறை) வாங்க வந்திருந்ததாகவும் சொன்னார். ஊரிலே எதை எடுத்தாலும் எதற்கென்றாலும் இறை விதித்துக் கடுமையாக வசூலிப்பதாகச் சொன்னார். ராஜரிகம் இப்போதைய நாட்களில் முன்னைப் போல் இல்லை எனவும் மோசமாக இருப்பதாகவும் சொன்னார். தாங்கள் அது குறித்து எதுவும் அறிய மாட்டோம் என்றனர் இளைஞர்கள்.

அப்போது சிங்கழகர் கூறலுற்றார்: இந்தச் சம்புவரையரின் ராஜ்யம் புதிதெல்லாம் இல்லை. காலம் காலமாய் இருந்து வருவது தான். தர்மத்தின் பால் நின்று நிலைத்திருந்தது. ஆனால் இப்போதோ? ராஜ்யத்திலே அநீதிகள் பெரிதாக ஆரம்பித்துவிட்டன. அரசரோ இதை எல்லாம் தெரிந்து கொண்டும் தெரியாதது போல் இருக்கிறார். அரசரின் புத்தி இப்படியும் மாறுமா என நினைத்துக் குடிமக்கள் அதிசயமும் ஆத்திரமும் கொண்டு இருக்கின்றனர்.  அரசர் ஏனோ இப்படி இருக்கிறார்." என்றார் சிங்கழகர். அதற்கு வல்லபன் இந்தச் சம்புவரையரின் நாடும் சுல்தானுக்குக் கீழே தானே வருகிறது என்று கேட்டான். ஆமாம் என ஆமோதித்த சிங்கழகர் சுல்தானுக்குச் சம்புவரையர் கப்பம் கட்டி வருவதாகவும் இல்லை எனில் இந்த ராஜ்யத்தையே அவர் இழந்திருக்க வேண்டியது தான் எனவும் கூறினார். சோழ, பாண்டியர்கள் அப்படி அடங்கி நடக்கவில்லை என்பதால் அவர்களுக்கு ஏற்பட்ட கதி இவருக்கும் ஏற்பட்டிருக்கும் எனவும் சிங்கழகர் கூறினார். 

மேலும் தொடர்ந்து கூறினார் சிங்கழகர். "சம்புவரையர்கள் தந்திரசாலிகள். சுல்தான்கள் உள்ளே நுழைந்ததுமே அவர்களுக்கு அடி பணிந்து விட்டார்கள்.சிற்றரசர்களாகவே இருந்து கப்பம் கட்டி வருவதாக வாக்குக் கொடுத்துவிட்டார்கள். ஆகவே அவர்கள் ராஜ்யம்பிழைத்ததோடு அல்லாமல் ஆட்சியும் பிழைத்துவிட்டது. "என்றார். அப்போது தத்தன் குறுக்கிட்டுச் சம்புவரையர்கள் வேதாந்த சமயங்களைச் சார்ந்தவர்கள் ஆதலால் தங்கள் சமயத்துக்கு மாற்றாக இருக்கும் சுல்தான்களை ஏன் எதிர்த்துப் போரிட்டு நாடுகளைக் காப்பாற்றவில்லை. இப்போது அடிமைகளாக இருப்பவர்களை ஏன் மீட்கவில்லை!" என்றெல்லாம் கேட்டான். 

சிங்கழகர் அதற்கு இந்தச் சுல்தான்களை எதிர்க்கும் அளவுக்கு வீரம் செறிந்தவர்கள் அல்ல இந்தச் சம்புவரையர்கள் என்றதோடு போதிய படை பலமும் இல்லை. ஏதோ இருக்கும் வீரர்களை வைத்துக் கொண்டு ஒப்பேற்றி வருகிறார்கள். சுல்தானியருக்குப் பயந்து பயந்து தான் இவர்கள் ஆட்சி நடக்கிறது. " என்றார். தத்தன் தனக்கு அது தெரியாது எனவும் காஞ்சிக்குள் நுழைந்ததில் இருந்து மக்கள் நிச்சிந்தையாகப் போய் வருவதையும் கோயில்களுக்குத் திருமஞ்சனக்குடங்கள் போய் வருவதையும் பார்த்துவிட்டு இங்கே சுதந்திர ஆட்சி எனத் தான் நினைத்ததாகச் சொன்னான். பூரண சுதந்திரத்துடன் சம்புவரையர்கள் ஆட்சி நடத்துகிறார்கள் எனத் தான் நினைத்ததாகவும் வல்லபனும் அதுவே நினைத்ததாகவும் சொன்னான். 

ஒரு நீண்ட பெருமூச்சு விட்ட சிங்கழகர் இவை எல்லாம் வெளிப்பூச்சுக்களே! சும்மாவானும் பார்ப்பதற்கு அப்படித் தோன்றும்படி நடந்து கொள்வதாகவும் சுல்தானியர்கள் நினைத்தால் இங்கே ஆட்சியாளர்களிடம் வந்து பணம் கேட்டுத் தொந்திரவு செய்வதாகவும் அதனால் தான் இவர்களும் அதிகமாக இறை வசூலித்து மக்களைத் துன்புறுத்துவதாகவும் சொன்னார்.  மக்கள் மனம் நைந்து போய்விட்டார்கள். கோயிலில் வழிபாடுகள் என்பதெல்லாம் வெளிப்பூச்சு. காலை ஒரு நாழிகையும் மாலை ஒரு நாழிகையும் மட்டுமே பூஜைகள் நடைபெறுகின்றன. மற்ற நேரங்களில் கோயில்கள் அடைக்கப்பட்டுவிடும். பூஜைகள் நடப்பது கூட சுல்தானியர்கள் இருந்தால் நடப்பதில்லை. அவர்களுக்குத் தெரியாமல் நடந்து வருகிறது. தெரிந்தால் விபரீதங்கள் ஏற்படும்.இவர்களால் என்றைக்கும் மதுரை சுல்தான்களை எதிர்த்து நடந்து கொள்வது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. என்ன ஒரே ஒரு நன்மை என்றால் என்னைப் போன்ற திக்கற்றவர்களுக்கு இது "அஞ்சினான் புகலிடம்" ஆக இருந்து வருகிறது." என்று கூறி நிறுத்தினார் சிங்கழகர்.

Thursday, April 07, 2022

மஞ்சரியின் வேண்டுகோள்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 இளைஞர்கள் இருவரும் திடுக்கிட்டுப் போனார்கள். ஒருவரை ஒருவர் யோசனையுடன் பார்த்துக் கொண்டார்கள்.  தத்தன் அவளைப் பார்த்து அன்புடனும் ஆதுரத்துடனும், "என்ன ஆயிற்று மஞ்சரி?" என வினவினான். மஞ்சரி அவனைப் பார்த்து, "ஐயா! அமைதியாக இருந்த நம் நாட்டிலே கடந்த இருபது/இருபத்தைந்து வருஷங்களாக என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மனம் வேதனை அடைகிறது.  நம் மூத்தோர்கள்/முன்னோர்கள் எத்தகையதொரு கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள். சிலர் இன்னமும் அனுபவித்தும் வருகின்றனரே! அதிலும் அரங்கமாநகரின் மனதுக்கு இனியவனான அந்த அரங்கன்! அவனுக்கே எத்தனை எத்தனை கஷ்டங்கள்! எப்படி எல்லாம் தப்பிப் பிழைத்திருக்கிறான்! இன்னமும் அவன் தன் இருப்பிடம் போய்ச் சேரமுடியவில்லையே! என்று நடக்கும் இது? நம் தாத்தா/தந்தை காலங்களில் நடக்கவில்லை எனில் நம் காலத்திலாவது நடக்குமா என எண்ணினால் மனம் சோர்ந்து போகிறது! அரங்கனுக்கே இத்தனை துன்பங்கள் நேர்ந்தது எனில் சாமானிய மக்கள் எவ்வளவு துன்பம் அடைந்திருப்பார்கள்!" என்று சொல்லிவிட்டு மேலும் விம்மி அழுதாள்.

மேலும் தொடர்ந்து, "ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் அன்றாட வாழ்க்கை முறையையே அடியோடு மாற்றி விட்டார்களே! அவர்கள் அந்த சுல்தானியர்களின் இந்த நடவடிக்கையால் தானே என் தாய்/தந்தை இருவரையும் நான் ஒருசேர இழந்து அநாதை ஆகிவிட்டேன். இதைப் போல் ஒவ்வொரு குடும்பமும் தங்கள்/தங்கள் அன்புக்குப் பாத்திரம் ஆனவர்களையும் கஷ்டப்பட்டுச் சேர்த்த சொத்துக்கள்/பூமி போன்றவற்றையும் இழந்து விட்டார்களே! இதற்கெல்லாம் என்ன மாற்று? எப்படி நிவர்த்தி செய்வது? அரங்கனும் தன் திருவரங்கத்தை இழந்துவிட்டான். "திரு" அவனை விட்டு நீங்கி விட்டதே! இப்படி அநாதையாய் அங்குமிங்கும் அலைகிறானே! இதைப் பற்றி யாரும் எதுவும் கேட்பதும் இல்லை. அரங்கனைப் பற்றிக் கவலைப்படுபவரும் இல்லை.  கண்டிப்பாரும் இல்லையே!"

"நம் நாடு வீரர்கள் நிறைந்திருந்த நாடு தான். ஆனால் இந்த சுல்தானியர்கள் உள்ளே நுழைந்த காலத்தின் தோஷமோ என்னமோ எல்லோரும் தங்கள் வீரத்தையும் ஆண்மையையும் இழந்து பெண்களை விட மோசமானவர்கள் ஆகிவிட்டார்களே! அவர்களுக்கு இருந்த திட மனதும் மனோபலமும் வீரமும் ஏட்டில் தான் இனி எழுதிப் பார்க்கணுமோ? எனக்கு துக்கம் அடங்கவில்லையே! மனது வேதனையில் தவித்துத் துடிக்கிறதே!" என்று கூறிய வண்ணம் மேலும் மேலும் விம்மி விம்மி அழுதாள்.  தத்தனுக்கு ஒரே திகைப்பு.  வாய் பேசாது நின்றான். ஆனால் வல்லபனுக்குள் ஆவேசம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. எரிமலை கொதிப்பது போல் அவன் உள்ளூரக் கொதித்தான். கண்களில் இருந்து துக்கக் கண்ணீருடன் சேர்ந்து அவன் உதடுகளும் ஏதோ பேசத்துடித்தன. ஆனால் பேச முடியவில்லை. ஒருவாறு அவன் தன்னைச் சமாளித்துக் கொண்டான். 

"மஞ்சரி! நீ பேசியதெல்லாம் என் உள்ளத்தில் அம்புகளைப் போல் தைத்திருக்கின்றன.  அந்த அம்புகள் கொடுக்கும் துன்பம் என்னை வாட்டி வதைக்கிறது. என் தந்தை வரையிலும் இருந்த மாந்தர்கள்  காட்டிய சிறுதுளி வீரத்தைக் கூட இப்போதுள்ள என் வயது இளைஞர்கள் காட்டவே இல்லையே! இது எவ்வளவு பெரிய கொடுமை! மற்றவர்கள் எப்படியோ! என் தந்தையின் கடைசி ஆவலும் இதுவாகவே இருந்தது. என் தாயும் என்னிடம் அதைச் சொல்லிச் சொல்லியே வளர்த்தாள். மற்றவர்கள் எப்படியோ தத்தனின் துணை கொண்டு நான் மாபெரும் லட்சியத்தை நோக்கிப் பயணப்பட்டிருக்கிறேன். அதை நிறைவேற்றி வைப்பேன். அரங்கனை அரங்கமாநகரில் கொண்டு சேர்ப்பேன்! இது சத்தியம்!" என்று ஆவேசம் வந்தவன் போல் பேசினான்.

பிறகு தன் இடுப்பிலிருந்து குறுங்கத்தியை எடுத்து மஞ்சரியின் எதிரே வைத்து அவளை அந்தக் கத்தியை எடுத்துத் தொட்டுக் கொடுக்கச் சொன்னான்.  அவள் அவ்விதம் கொடுப்பதன் மூலம் அவள் பேசிய வார்த்தைகள் அவனுக்குள் எப்போதும் கனன்று கொண்டிருக்கும் ஆவேசத்தீ அணையாமல் பாதுகாக்கும். அவன் லட்சியத்தை விட்டு இம்மி அளவும் பிறழாமல் நடக்கவும் உறுதுணையாக இருக்கும்.  மனம் வெதும்பி மஞ்சரி பேசிய வார்த்தைகளை எப்போதுமே நினைவூட்டும்!" என்றான்.

மஞ்சரி கண்களால் கண்ணீரைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் வல்லபன் பேச்சைக் கேட்டு அவள் இதழ்களில் புன்னகை ஒன்று பூத்தது கண்ணீல் நீரும் உதட்டில் முகிழ்ந்திருக்கும் புன்னகையுடனும் அவள் அந்தக் குறுவாளை எடுத்து வல்லபனிடம் நீட்டிக் கொண்டு, இப்போது தன் மனம் ஆனந்தப் பெருக்கில் திளைப்பதாகவும் உற்சாகம் அதிகம் ஆவதாகவும் கூறினாள். அவள் சொல்வதைக் கேட்ட வண்ணம் அங்கே நொண்டி நொண்டி நடந்து கொண்டு சிங்கழகர் வந்தார்.

Saturday, April 02, 2022

சிங்கழகருக்கு ஏற்பட்ட விபரீதம்! ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்!

சுற்றும் முற்றும் பார்த்த சிங்கழகர் கண்களில் அங்கே இருந்த அரங்கனும் படவில்லை. சீராம தாசரே அரங்கனையும் எடுத்துக் கொண்டு காணாமல் போய்விட்டாரா? அல்லது இருவரையும் துருக்கியப் படையினர் பிடித்துவிட்டார்களா? ஆனால் அங்கே படை ஏதும் வந்து போனதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை. மறுபடி மறுபடி தேடிய வண்ணம், "சீராமா! சீராமா1" எனக் குரல் கொடுத்து அழைத்தும் பார்த்தார். மாலை நெருங்கிற்று. அது வரை சீராமர் இருக்கும் இடமே தெரியவில்லை.  சற்றுக் கழித்து கருகருவென இருட்டுக் கவிந்து வரத் தாம் தனிமையில் இந்தக் காட்டில் இருட்டில் அகப்பட்டுக் கொண்டதை நினைத்து வருந்தியவண்ணம் எப்படி ஆனாலும் இன்றிரவை இங்கே தான் கழித்தாக வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டார்.  மறுநாள் காலை எழுந்து பார்த்தால்!

என்ன கொடுமை. இடுப்புக்குக் கீழ் இரு கால்களும் தனக்கு இயங்கவில்லை என்பதைக் கண்டு கொண்டார் சிங்கழகர். திகைத்துப் போனவராகக் கொஞ்சம் சாய்ந்தாற்போல் எழுந்து கொண்டு இரு கால்களையும் நோக்கினால் மூட்டு வரை நீலம் பாரித்திருந்தது இரு கால்களிலும். அப்போது தான் அவருக்கு நினைவில் வந்தது. தாசர்களின் கடைசிக் கிரியைக்காக அவர்கள் உடல்களைத் தேடிக் கண்டு பிடிக்கையிலும் அதன் பின்னர் புதர்களை ஊடுருவிக்கொண்டு அவர்களுக்குக் கடைசிக் கிரியைகள் செய்யச் சென்றபோதும் அவ்வப்போது "சுருக்" "சுருக்" என ஏதோ குத்திக் கொண்டே இருந்தது. கூடவே காலில் வலியும் தோன்றியது. முள் செடிகள் குத்திக் காலில் வலி தோன்றியதாக நினைத்தவண்ணம் அப்போதே அதை என்ன என்றே பார்க்கவில்லை. இப்போது அவருக்குப் புரிந்தது ஏதோ விஷச் செடிகளின் முட்களோ, அல்லது விஷப்பூச்சிகளோ, விஷ ஜந்துக்களோ தன் கால்களைக் கடித்திருக்க வேண்டும். அது தான் கால்கள் மூட்டு வரை நீலம் பாரித்துவிட்டது என நினைத்தவண்ணம் கால்களைப் பார்த்தவர் மனதில் அதிர்ச்சியே மேலோங்கியது.

கால்கள் கட்டையாகிவிட்டன. தமக்கு இனி எழுந்து நடக்க முடியாது என்பதை உணர்ந்ததும் அவருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.  உதவி இல்லாமல் தன்னால் இனி எங்கேயும் போகமுடியாது என்பதைப் புரிந்து கொண்டவராக எங்கோ சென்ற சீராம தாசர் வரட்டும். அதுவரை இங்கேயே காத்திருக்க வேண்டியது தான் என நினைத்த வண்ணம் அங்கேயே அன்று பகல், இரவு முழுவதையும் கழித்தார்.  இரண்டாம் நாள் பொழுது புலரும்போதே இனி இந்தக் காட்டில் இருப்பதில் எந்தவிதப் பலனும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டார். சீராமதாசர் இனியும் வருவார் என எண்ணுவதும் வியர்த்தமானது. காட்டை விட்டு உடனே வெளியேறாவிட்டால் ஆட்கொல்லி மிருகங்களால் ஆபத்துத் தான் வந்து சேரும் என்று எண்ணிக் கொண்டு தவழ்ந்த வண்ணம் மெல்ல மெல்ல அந்தக் காட்டில் ஊடுருவிக் கொண்டு செல்லலானார். பசி, சோர்வு! இரண்டும் அழுத்தியது அவரை.  அப்படியே தவழ்ந்த வண்ணம் மேலும் மூன்று நாட்களும் கழிந்து விட்டன. காடு எங்கே முடிந்து நகரம் ஆரம்பிக்கிறது எனத் தெரியவில்லை அவருக்கு. மயங்கிக் கிடந்தார்.

அப்போது அங்கே வேட்டைக்கு வந்த செஞ்சு இனத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்களில் ஒருவர் அவரைக் கண்டு கொண்டார்.  அவர்கள் அவர் இன்னமும் உயிருடன் இருப்பதைக் கண்டுத் தண்ணீர் அருந்தக் கொடுத்ததோடு அல்லாமல் பசியுடனும் இருப்பதை அறிந்து கொண்டு தங்களிடம் இருந்த பழங்கள், தேன் போன்றவற்றைச் சாப்பிடக் கொடுத்தனர். பிறகு மெல்ல அவரிடம் பேச்சுக் கொடுத்து அவருடைய விருத்தாந்தங்களைக் கேட்டு அறிந்து கொண்டனர். அவர்களில் தலைவனாக இருந்தவன் ஒரு டோலாவைக் கொண்டு வரும்படி மற்றவர்களைப் பணித்தான். உடனே ஒருவன் சென்று எங்கிருந்தோ ஒரு டோலாவைக் கொண்டு வந்தான். அந்த டோலாவில் சிங்கழகரை அவர்கள் ஏற்றினார்கள்.  நான்கு பேர் அவருடைய டோலாவைத் தூக்கிச் சென்று  காட்டைக் கடந்து நாட்டுக்கு அருகே ராஜபாட்டையில் இறக்கி விட்டார்கள். அங்கேயே விடப்பட்ட சிங்கழகர் செஞ்சு வேடர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அவ்வழியாக வந்த போக்கு வண்டிகளில் மாறி மாறிப் பயணம் செய்து கடைசியில் ஒரு வழியாகக் காஞ்சிபுரத்துக்கு வந்து சேர்ந்தார். முற்றிலும் மரத்துப் போயிருந்த தம் கால்களுக்கு அங்கேயே வைத்தியரிடம் வைத்தியம் பார்த்துக் கொண்டு காஞ்சி நகரிலேயே வசிக்கலானார். 

இதைச் சொல்லி முடித்த சிங்கழகர் இப்போது முற்றிலும் தன்னை வேற்று மனிதனாகப் பாவித்துக் கொண்டு, "அவர் இவ்விதம் பதினெட்டு ஆண்டுகள் இந்தக் காஞ்சியில் வசித்துவிட்டார் அப்பா! அவருடைய ஆசைகள், எண்ணங்கள் , மனோரதங்கள் ஆகியவை இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் சுக்குச் சுக்காய்ச் சிதறிவிட்டன. இப்போது கேவலம் ஓர் நடைப்பிணம்!" என்று சொல்லிய வண்ணம் முட்டிக் கொண்டு வரும் கண்ணீரை அடக்க முடியாமல் கேவிய வண்ணம் தம் கதையைச் சொல்லி முடித்தார் சிங்கழகர்.

இளைஞர்கள் கற்சிலை போல் அப்படியே அமர்ந்திருந்தார்கள்.  மஞ்சரியும் செய்வதறியாது திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள். புராண இதிகாசக் கதை ஒன்றைக் கேட்டது போன்ற உணர்வில் இருந்தனர் வல்லபனும், தத்தனும். அதன் சோகமான முடிவு அவர்கள் மனங்களை அசைத்துவிட்டது. துக்கம் அந்த அறையைச் சூழ்ந்து கொண்டது. ஓரளவுக்குத் தம்மைத் தேற்றிக் கொண்ட சிங்கழகர் அவர்களைப் பார்த்து, "பிள்ளைகளே!" என அழைத்தார். சோகமான மன நிலையிலிருந்த இருவரும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தார்கள்.  சிங்கழகர் மேலும் சொன்னார். " நீங்கள் கேட்டது ஒரு சோக காவியம். அதனால் உங்கள் மனங்கள் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் நீங்கள் எங்கும் போக வேண்டாம். இங்கேயே இந்தக் குடிலிலேயே தங்குங்கள். என் மனதின் பாரமும் சற்று நீங்கட்டும். அதன் பின்னர் நான் மேலும் கொஞ்சம் உங்களுடன் உரையாடுவேன்." என்றார். இருவரும் மௌனமாக இருக்க சிங்கழகர் மெள்ள எழுந்திருந்து விந்தி விந்தி நடந்து புழக்கடையில் உள்ள நந்தவனத்துக்குச் சென்றார்.  இளைஞர்கள் அப்படியே அமர்ந்திருக்க அவர்கள் காதுகளில் திடீரென ஓர் விசும்பலும், கேவலும் கேட்க நிமிர்ந்து பார்த்தார்கள். மஞ்சரி தான் விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்தாள்.

Thursday, March 31, 2022

சீராமதாசர் எங்கே! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 சீராமதாசருக்கும் மற்ற மூத்த கொடவர்கள் இருவருக்கும் என்ன கதி நேர்ந்தது என்பது பற்றித் தெரியாமலேயே இங்கே சிங்கழகர் தனிமையில் கிடந்து தவித்துக் கொண்டிருந்தார். துருக்கியப் படைகள் மேலே ஏறிக் கொண்டிருந்ததை நேரில் பார்த்தார் ஆகையால் அந்தப் படைகளால் கொடவர்களுக்கும் அரங்கனுக்கும் என்ன கேடு நிகழ்ந்ததோ எனப் பரிதவித்துக் கொண்டிருந்தார்.  பகல் போய் மாலையும் நெருங்கியது. மாலை ஏற ஏறச் சிங்கழகரின் தவிப்பும் அதிகம் ஆகிவிட்டது. ஆனால் அவர் வெளியே வந்தால் உடனே மலையைச் சூழ்ந்திருக்கும் துருக்கியப் படைகள் கண்களில் பட்டுவிடுவார். ஆகவே அப்படியே அமர்ந்திருந்தார். மெல்ல மெல்ல அந்தியும் மறைய ஆரம்பித்தது. ஆங்காங்கே நிழல்கள் நீண்டு போய் இருட்டுக் கவிய ஆரம்பித்தது. அப்போது தூரத்திலிருந்து ஏதோ குரல் கேட்ட மாதிரி சிங்கழகருக்குத் தெரியவே கூர்ந்து கவனித்தார். "சுவாமி, அழகர் சுவாமி!" என யாரோ மெல்லிய குரலில் மிக மிகச் சன்னமாகக் கூப்பிடும் ஒலி அவருக்குக் கேட்டது. தன்னைத் தான் யாரோ அழைக்கின்றனர் என்பதைப் புரிந்து கொண்டவரின் மனதிலும்/உடலிலும் தெம்பு கூடியது. சற்றுக் கூர்ந்து கவனித்தவர் குரல் கேட்ட திசையை ஒருவாறு அனுமானித்துக் கொண்டு அந்தத் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தார். கிட்டே செல்லச் செல்லக் குரலும் அருகில் கேட்கத் தொடங்கியது.

சற்றுத் தொலைவிலேயே சீராமதாசரைச் சிங்கழகர் கண்டு கொண்டார். அவரைக் கண்டதுமே சிங்கழகருக்கு ஏற்பட்ட ஆனந்தத்தில் சுற்றுச் சூழலை மறந்து, சீராமரே! சீராமரே! எனக் கத்திக் கூப்பிட்ட வண்ணம் ஓடினார். ஓடி வந்ததில் மூச்சு இரைத்தது சிங்கழகருக்கு. சீராமதாசரை நெருங்கியதும் அவரைப் பார்த்துக் கட்டித் தழுவிக் கொண்டார். இருவருக்கும் என்ன பேசுவது எனத் தெரியாமல் பிதற்றினார்கள். உளறினார்கள்; அழுதார்கள்; மீண்டும் மீண்டும் கட்டிக் கொண்டார்கள். சிங்கழகரும் அங்கே இருந்த அரங்கனைக்கண்டு கொண்டார். உடனே சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார். சீராமதாசரிடம் நடந்தவற்றைப் பற்றிக் கேட்டார்.  சீராமதாசரால் முதலில் பேசவே முடியவில்லை. கண்ணீர் பெருகியது. ஒருவாறு சமாளித்துக் கொண்டு நடந்தவற்றைப் படிப்படியாகக் கூறினார். அதற்குள்ளாக அவருக்குப் பல முறை தொண்டை அடைத்ஹ்டுக் கொண்டது. சிங்கழகரும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டதும் பேசுவது ஏதும் அறியாமல் கண்ணீர் உகுத்தார்.

மெல்ல மெல்ல இரவு தன் கரங்களை நீட்டியது. இருவரும் அன்றிரவு அங்கேயே தங்க முடிவு செய்து அங்கேயே உட்கார்ந்து கொண்டு பழையனவற்றை எல்லாம் பேசிப் பேசிப் பேசித் தீர்த்தார்கள். புலம்பினார்கள். மறுநாள் காலை விடிந்ததும் முதல் வேலையாக சிங்கழகர்  திருக்குருகூர் தாசர் மற்றும் வில்லிபுத்தூர் தாசர் இருவரின் திருமேனிகளையும் தேடிச் சென்றார். அவற்றுக்கான கடைசிக் கிரியைகளை முறைப்படி செய்ய விரும்பினார் அவர். அதைக் குறித்து சீராமதாசரிடம் கூறிவிட்டுக் கிளம்பினார். சீராமதாசர் எதுவுமே பேசாமல் "உம்" கொட்டினார். சிங்கழகர் அதை முன்னாலேயே கவனித்தார். சீராமதாசரால் எதுவும் பேச முடியவில்லை என்பதும் பேசுவது தெளிவாக இல்லாததையும், வெறித்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறார் என்பதையும் கண்டு கொண்டார்.  தாம் சொன்னதை எல்லாம் அவர் புரிந்து கொண்டாரா என்னும் சந்தேகம் சிங்கழகருக்கு ஏற்பட்டது. சந்தேகங்களின் நடுவே அவர் இப்போது முதலில் கவனிக்க வேண்டியது இறந்த இரு தாசர்களின் உடல்களைக் கண்டு பிடித்து அந்திமக் கிரியைகளை நடத்த வேண்டும் என்பதே! ஆகவே சீராமதாசரைத் தேற்றும் விதமும் தெரியாமல் அப்படியே விட்டு விட்டுச் செல்ல நினைத்தார். அதீத சோகத்தில் இருப்பவர் சற்றுத் தனியாக இருந்தால் மேலே மேலே வரும் யோசனைகளில் சரியாகிவிடுவார் என்று நினைத்தார் சிங்கழகர்.

அவரைக் கவனமாக இருக்கச் சொல்லிவிட்டு அவரிடம் இருந்து ஏதும் மறுமொழி வரும் முன்னரே சிங்கழகர் அங்கிருந்து கிளம்பி விட்டார். அன்று முழுதும் அலைந்து திரிந்து கடைசியில் நடுப்பகலில் இறந்து போன இரு தாசர்களின் உடல்களையும் சிங்கழகர் கண்டு விட்டார். மனதில் துக்கம் பொங்கி வழிந்து கண்கள் வழியே ஆறாய்ப் பெருகியது.  அரங்கனைப் பார்த்து, அரங்கா! அறுபது பேர் இருந்த இடத்தில் இப்போது வெறும் இரண்டு பேராக மாறி விட்டதே! இன்னும் என்னென்ன நடக்கப் போகிறாதோ என நினைத்துக் கொண்டு வருந்தி அழுதார். பின்னர் இரு தாசர்களின் திருமேனிகளையும் ஓர் ஓடையின் படுகைக்குக் கொண்டு சென்றார்.  பின்னர் தம் கைகளாலேயே மணலில் குழிகள் பறித்து அவர்கள் உடல்களை அந்தக் குழியில் கிடத்தி விழி சோர முறைப்படி பிரார்த்தனைகள் எல்லாம் செய்து பின்னர் அவர்கள் மேனிகளை மண்ணால் மூடினார். எரிக்க ஒன்றும் வழியில்லாமல் போய்விட்டதை எண்ணி மனம் நொந்தார்.  பின்னர் சீராமதாசரை விட்டு விட்டு வந்த இடம் நோக்கிச் சென்றால் அங்கே அவர் இல்லை.

Sunday, March 27, 2022

அரங்கன் எங்கே?சீராமதாசரின் கவலை! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 பழசெல்லாம் நினைவுக்கு வந்ததும் சிங்கழகர் மனதிலே துக்கம் பொங்கியது. கண்களில் இருந்து பிரவாகம் எடுத்தது.  மனமே நைந்து விட்டாற்போல் இருந்தது. எதிரே அமர்ந்து கொண்டு அவருடைய முக மாற்றங்களைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்களுக்கும் அவர் உள் மனதில் ஓடும் எண்ணங்கள் புரிய வரவே இருவரும் துக்கத்தில் ஆழ்ந்தனர். அரங்கனைக் காப்பாற்ற எத்தனை எத்தனை போராட்டங்கள்! எவ்வளவு பேரின் உயிரிழப்பு! அரங்கா! இது உனக்கே நியாயமாய் இருக்கா? என்றெல்லாம் மனதிற்குள் நினைத்துக் கொண்டு அடுத்துச் சிங்கழகர் பேச்சைத் தொடருவதற்காகக் காத்திருந்தனர்.  சின்னஞ்சிறு பெண்ணான மஞ்சரிக்கும் இவை எல்லாம் நடந்திருக்கிறது என்பதே நம்ப முடியாமல் இருந்தது. ஆச்சரியத்தினாலும் அச்சத்தினாலும் விரிந்த கண்களோடு சிங்கழகர் முகத்தையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.  சிங்கழகர் கொஞ்சம் நீரைக் குடித்துத் தன்னுள் எரிந்து கொண்டிருந்த ஆக்ரோஷத்தைத் தணித்துக் கொண்டார்.  கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். 

"அரங்கன் என்ன ஆனான் என்பது தானே வேண்டும்? இதோ!" என ஆரம்பித்தார். தான் கண்டு கேட்டு உணர்ந்தவற்றை அவர் விவரிக்கலானார்.

அஞ்சனாத்ரி மலையின் அடிவாரத்தில் அரங்கனோடு சறுக்கி இறங்கிய திருக்குருகூர் தாசரும் அவர் மைத்துனரான வில்லிபுத்தூர் தாசரும் உயிர் இழந்ததைக் கண்ட சீராம தாசருக்கு மனம் கலங்கியது. அடுத்து என்ன செய்வது என்பதே புரியவில்லை. அப்படியே பாறை மீது படுத்துக் கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தார். திடீரென அவருக்கு அரங்கன் என்ன ஆனான் என்னும் எண்ணம் தோன்றவே திடுக்கிட்டு எழுந்தார். சுற்றும் , முற்றும் பார்த்தார். சங்குப் புஷ்பங்கள் பூத்துக்குலுங்கிக் கொண்டிருந்த அந்தப் புதர்க்காட்டில் உற்றுப் பார்த்த போது ஏதோ காட்டுக்கொடிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருப்பதைக் கண்டார். சட்டென அவர் மனதில் இது திருக்குருகூர் தாசர் அரங்கனைப் பிணைத்துக் கொண்டு கீழே இறங்குவதற்காகத் தாம் கட்டிய காட்டுக் கொடிக் கயிறல்லவோ?  எனக் கூர்ந்து பார்த்தார். அந்தக் கொடிகள் கன்னாபின்னாவெனச் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அங்கே ஓடோடிச் சென்றார்.

ஓடிச் சென்றவர் கொடிகளின் சிக்கலைப் பிரிக்கமுடியாமல் அவரும் சேர்ந்து சிக்கிக் கொண்டுவிட்டார். திகைத்துப் போனார் சீராமதாசர்.  இதென்னடா புதுக்குழப்பம்? காட்டுக்கொடிகளைப் பிணைத்து மிருகங்களைப் பிடிப்பார்கள். அது போல் இப்போது இந்தக் கொடி என்னைப் பிணைத்துவிட்டதே! இதை எப்படிப் பிரிப்பது என்று யோசித்தார். வேறு வழியில்லாமல் பாதுகாப்புக்காகத் தம் இடுப்பில் செருகி இருந்த கத்தியை எடுத்துக் கொடிகளை அறுத்து விட்டு உள்ளே சென்றார். அந்தக் கொடிகள் போகப் போகப் போய்க் கொண்டே இருந்தனவே அல்லாமல் முடிவே தெரியவில்லை. அரங்க விக்ரஹம் அந்தக் கொடியில் தான் பிணைக்கப்பட்டு திருக்குருகூர் தாசரோடு சேர்த்துக் கட்டி இருந்தது. இப்போதோ அரங்க விக்ரஹம் இருக்குமிடமே தெரியவில்லையே! இது என்ன கலக்கம்? என எண்ணிக் கொண்டு மனதில் பெருகிய துக்கத்துடன் அப்படியே கீழே அமர்ந்து விட்டார். 

"அரங்கா! இது என்ன சோதனை அப்பா! நீ இருக்கும் இடத்தை இப்போதே எனக்குக் காட்டிவிடு! இனி பொறுக்க இயலாது!: என்ற வண்ணம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விட்டார். சிறிது நேரத்தில் கண்களைத் திறந்தவருக்கு சூரியன் அந்தி வானில் சாய ஆரம்பித்துவிட்டான் என்பது அங்கே விழுந்திருக்கும் சூரிய கிரணங்களின் புதிய கோணத்தில் தெரிய வர அந்தக்கிரணங்களின் வீச்சு சங்கு மலர்ப் புஷ்பங்களின் செடிக்கூட்டத்தின் இன்னொரு பகுதியிலே அந்தக் கிரணம் பட்டுப் பளீரென ஒளி வீசிற்று. துள்ளி எழுந்த சீராம தாசர் அந்தப் புதர்களை எல்லாம் வெட்டி விலக்கிக் கொண்டு ஒளி தெரிந்த அந்த இடத்திற்கு முன்னேறிச் சென்றார். அங்கே  அரங்கனுக்கு என்றே ஏற்படுத்தி இருந்தாற்போல் பசுந்தழைகளாலும் ,கொடிகளாலும், மலர்களாலும் பின்னி இருந்த ஓர் படுகையில் எந்தவிதமான சேதாரமும் இன்றி யாரோ படுக்க வைக்கப்பட்டது போல் மல்லாந்து கிடந்தான் அரங்கன்.  தாய் தேடுகையில் வந்து ஒளிந்து கொண்ட குழந்தை போல் காணப்பட்டான் அவன்.

சீராமதாசருக்குப் புல்லரித்தது. "என் குட்டா! என் குட்டா!" என்று புலம்பிய வண்ணம் ஓடோடியும் வந்து அரங்க விக்ரஹத்தின் அருகே அமர்ந்தார். அரங்கனை எடுத்துத் தம் மடி மேல் ஓர் குழந்தையைப்போட்டுக் கொள்வது போல் போட்டுக் கொண்டார். அரங்கனைப் பார்த்து, "உமக்கென்ன! எந்தக் கவலையும் இல்லை. நல்லவேளையாக ஒரு குறையும் இல்லை/ ஆனால் எங்களைக் குறை உள்ளவன் ஆக்கிவிட்டீரே!" எனப் புலம்பிய வண்ணம் அரங்கனைத் தடவிக் கொடுத்தபடி பிரமை பிடித்தவர் போல் உட்கார்ந்திருந்தார்.

Saturday, March 26, 2022

கொடவர்களுக்கு நேர்ந்த கதி! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 அங்கும் இங்குமாக அந்த மலைக்காட்டில் அலைந்து திரிந்து தேடியவர்களில் ஒருவர் கண்களில் மூத்த கொடவர் தென்பட அவர் இதோ, இங்கே! என்று கூச்சலிட்டார். உடனே சீராமதாசர் என்னும் மற்றொருவர் ஓடிப் போய்ப் பார்த்தால்! என்னவென்று சொல்வது! மேலிருந்து உருண்டு வருவது வெகு எளிது என நினைத்தாலும் அதைப் போல் சிரமமான ஒன்று இல்லை என்பது மூத்த கொடவரைப் பார்த்ததுமே புரிந்து விட்டது. சங்கு மலர்கள் பூத்திருந்த பூச்செடிகளின் நடுவே காலும், கையும் ஒடிந்து தோள் பட்டையிலிருந்தும் முழங்கால் மூட்டிலிருந்து பிரிந்து தனியாய்த் தொங்க, முகத்திலே கண், வாய், மூக்கு இருந்த இடங்களே தெரியாமல் ரத்தச் சேறாகக் காட்சி அளிக்கக் கீழே கிடந்த மூத்த கொடவரின் உயிர் எப்போவோ பிரிந்து விட்டது என்பது நன்கு தெரிந்தது. மனதில் வேதனை மூள மூத்த கொடவரின் மகனான சீராம தாசர், "அப்பா!" எனக்கூக்குரலிட்டுக் கொண்டு அவர் உடலையும் கைகளையும் தொட்டு அசைத்தார். பலனில்லை என்பது தெரிந்தது தான். ஆனாலும் பெற்ற மகன் ஆச்சே! மனசு கேட்கவில்லை.

வயிற்றின் ஆழத்திலிருந்து பெருக்கெடுத்ததொரு பெரிய கேவலோடு அவர் தன் தகப்பன் உடல் மேல் அப்படியே விழுந்தார். "அப்பா! அப்பா! அப்பா!" எனக் கதறிய வண்ணம் விழுந்து புரண்டார். எத்தனை நேரம் அழுதாரோ, துக்கம் கரையவா போகிறது! அவர் மிகுந்த துக்கத்துடன் தன்னை ஒருவாறு தேற்றிக் கொண்டு தன் மாமன் ஆன வில்லிபுத்தூர் தாசரிடம்  சென்றார். அவரோ நிலை குத்திய பார்வையுடன் ஒரே பக்கம் பார்த்துக்கொண்டு ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தார். அவர் நிலையைக் கண்டு பயந்த சீராமதாசர் அவர் அருகே சென்று அவரிடம், "மாமா!மாமா! இங்கே பாருங்கள் மாமா! அப்பா இறந்துவிட்டாரே! பார்த்தீர்களா?" என அரற்ற வில்லிபுத்தூர் தாசரோ வாயே திறக்காமல் அமர்ந்து இருந்தார். ஏதோ சந்தேகம் மனதில் ஜனிக்க சீராமதாசர் அவரை மாமா, மாமா என அழைத்த வண்ணம் உலுக்க வில்லிபுத்தூர் தாசரின் உடல் அப்படியே கீழே விழுந்து விட்டது.

திகைத்துப் பதைத்துப் போனார் சீராமதாசர். மாமனின் கை நாடியையும் இதயத் துடிப்பையையும் சோதித்தவருக்கு மாமன் உயிருடன் இல்லை என்பது புரிய வர மாமா! எனப் பெருங்கூச்சல் இட்டார்.  பெரிய கொடவர் இறந்து கிடந்ததைப் பார்த்த அதிர்ச்சியில் வில்லிபுத்தூர் தாசர் இறந்திருக்கிறார்.  அதை உணர்ந்ததுமே சீராமதாசர் எல்லாமும் இழந்துவிட்டேனே! எனப் புலம்பிக் கொண்டு தன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுது புரண்டார். தேற்றக் கூட ஆள் இல்லாக் காட்டு வனாந்தரம்.  சோகத்துடன் அப்படியே படுத்துக் கிடந்தார்.

மேற்சொன்ன கதையை சிங்கழகர் வாய் மூலம் கேட்ட வல்லபனுக்கும் தத்தனுக்கும் அரங்கனைக் காக்கும் வேலையில் எத்தனை பேர்  உயிரிழந்திருக்கிறார்கள் என நினைக்க நினைக்கக் கண்ணீர் பெருகியது!  அப்போது சிங்கழகருக்கும் பேச்சே எழும்பவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட அவர் இளைஞர்களைப் பார்த்து, "சற்றுப் பொறுங்கள்! மேலே சொல்கிறேன். இப்போது துக்கத்தில் எனக்குப் பேச்சு எழும்பவே இல்லை!:" என்று தழுதழுத்த குரலில் சொன்னார். அவர் கண்களில் இருந்தும் கண்ணீர் ஆறாகப் பெருகியது. இது எல்லாவற்றையும் உள்ளே கூடத்தில் அமர்ந்து  கேட்டுக் கொண்டிருந்த மஞ்சரியும் துக்கம் தாங்காமல் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். ஓர் சிலை அமர்ந்திருப்பது போலவே காட்சி அளித்தாள் அவள். சிங்கழகர் அவளிடம், "அம்மா, மஞ்சரி, குடிக்கக் கொஞ்சம் நீர் கொண்டு வா!" என்று கேட்க இளைஞர்களும், மஞ்சரியும் மேற்கொண்டு அரங்கனைப் பற்றி அவர் என்ன சொல்லப் போகிறாரோ என எண்ணினார்கள். சிங்கழகர் தண்ணீரைக் குடித்த பின்னர் மேலும் ஆரம்பித்தார்.

Tuesday, March 22, 2022

அரங்கன் தப்பித்தானா? ஶ்ரீரங்க ரங்கநாதரின் பாதம் பணிந்தோம்!

 சற்று நேரம் யோசித்த மூத்த கொடவரான திருக்குருகூர்தாசர் மற்றவர்களைப் பார்த்துக் கூறலானார். "கீழே செங்குத்தான பகுதியில் யாரும் இல்லை என்பதாலும் அங்கே யாரும் இறங்க முடியாது என்பதாலும் இப்போது நாம் ஒரு வேலை செய்யலாம். நீங்கள் இருவரும் நல்லதொரு கயிற்றில் என்னைப் பிணைத்து என்னோடு அரங்க விக்ரஹத்தையும் சேர்த்து நன்றாகக் கட்டி விடுங்கள். காட்டுக்கொடிகளால் நல்ல உறுதியான கயிறைத் தயாரித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே கொடிகளால் இன்னொரு உறுதியான கயிற்றை நீளமாகத் தயாரியுங்கள். என்னை அந்த நீளமான கயிற்றில் பிணைத்து இருவருமாகக் கீழே இறக்கி விட்டுவிடுங்கள்.  இது செங்குத்தான பள்ளமாக இருக்கிறது. யாராலும் அவ்வளவு சுலபமாகக் கீழே இறங்க முடியாது. அதன் அப்பால் இருக்கும் இறக்கத்தில் யாரும் நடந்து செல்ல முடியாது. ஆனால் உருண்டு போக முடியும். அந்தச் சரிவில் நான் தொட்டதும் நீங்கள் உங்கள் பக்கத்துக் கயிறுகளை நழுவ விடுங்கள். நான் அந்தச் சரிவில் உருண்டு உருண்டு போய்க் கொள்கிறேன். சரிவில் உருண்டு போனால் கடைசியில் நான் அடிவாரத்தை அடைந்து விடுவேன். "என்று சொன்னார்.

ஆனால் இதைக் கேட்ட மற்ற இருவரும் திடுக்கிட்டுத் திகைத்துப் பயந்து போனார்கள். இது மிக மிக ஆபத்தான காரியம் என யோசித்தார்கள். ஆனால் திருக்குருகூர் தாசரோ அரங்கனைக் காப்பாற்ற வேண்டுமானால் இப்படி எல்லாம் செய்தே ஆகவேண்டும் என்று முடிவாகக் கூறினார்.  ஆனாலும் இருவரும் மீண்டும் மீண்டும் யோசிக்கவே திருக்குருகூர் தாசர் அவர்களைச் சமாதானம் செய்து இதை விட்டால் வேறு வழியில்லை என்றும் அங்கேயே அவர்கள் இருந்தால் எப்படியும் படைவீரர்கள் வந்து பிடித்துவிடுவார்கள். அரங்கனையும் தூக்கிக் கொண்டு சென்றுவிடுவார்கள் என்றெல்லாம் எடுத்துச் சொல்லி இருவரையும் சமாதானம் செய்தார்.  மிகவும் யோசித்துவிட்டுக் கடைசியில் வேறே வழி ஏதும் தோன்றாததால் அவர்கள் இருவரும் சம்மதித்தனர். காட்டுக்கொடிகளை அறுத்து எடுத்துக் கொண்டு வந்து கயிறு திரிக்க ஆரம்பித்தனர். 

பின்னர் மூத்த கொடவரான திருகுருகூர் தாசர் கீழே அந்தக் காட்டுத் தரையில் மல்லாந்து படுத்தார். அவர் வயிற்றின் மீது அரங்க விக்ரஹத்தைக் குப்புறப் படுக்க வைத்தார்கள் இருவருமாக. காட்டு மூலிகைக் கொடிகளால் இருவரையும் பிணைத்து நன்கு இறுகக் கட்டினார்கள்.  கட்டும்போதே அவர்கல் விக்ரஹத்தையும் கொடவரையும் தொட்டுத் தொட்டு வணங்கிக் கொண்டார்கள். பின்னர் அவரை விக்ரஹத்தோடு சேர்த்துக் கட்டிய காட்டுக்கொடிக் கயிற்றில் கொஞ்சம் பகுதியை நீளமாக விட்டு விட்டு அதில் ஒரு மூலையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து  பெரியவரின் இடுப்பில் பிணைத்துவிட்டு இன்னொரு மூலையை அங்கிருந்த பெரிய ஆலமர விழுதில் பிணைத்தார்கள்.

பின்னர் அவர்கள் மிகுந்த முயற்சியுடன் மீண்டும் மீண்டும் திருக்குருகூர் தாசரை வணங்கிக் கொண்டு, விக்ரஹத்தையும் தொட்டு வணங்கிக் கொண்டு அஞ்சலிகள் பலமுறை செய்துவிட்டு தாசரிடம் விடை பெற்றுக் கொண்டு அவரை மெல்ல மெல்ல அந்த மலை முகட்டின் நுனிக்கு எடுத்துச் சென்றார்கள். அவரோடு சேர்த்து அரங்கனையும் கொண்டு போக வேண்டி இருந்தது. கனம் தாங்கவில்லை. எப்படியோ மெதுவாக எடுத்துச் சென்று விட்டார்கள்.  பின்னர் மெதுவாகக் கிழவரையும்  அவரோடு இறுக்கிக் கட்டி இருந்த அரங்கனையும் சேர்த்து மெல்ல மெல்ல நிதானமாகக் கீழ் நோக்கி விட்டார்கள். பெரியவரும் கயிற்றில் தொங்கிய வண்ணம் ஊசலாடிக் கொண்டு கீழ் நோக்கிப் பயணித்தார். அந்த மலை முகடு கீழே பார்க்க முடியாதவண்ணம் உச்சியில் மிகவும் வளைந்தும் நெளித்தும் இருந்தது.  என்றாலும் பயத்துடனேயே மற்ற இரு கொடவர்களும் மெல்ல மெல்ல கொடிக்கயிற்றை நழுவ விட்டார்கள். உத்தேசமாக முன்பே கயிற்றில் கணித்துள்ள இடம் வந்ததும் முழுக்கொடியையும் கீழே நழுவ விட்டார்கள்.

கீழே சென்று கொண்டிருந்த திருக்குருகூர் தாசருக்குச் சரிவு தட்டியது, உடனே கிடு கிடு சரிவில் அரங்கனோடு சேர்ந்து உருண்டு உருண்டு வெகு வேகமாகப் போனார். சர்ரென இறங்கிய அந்தச் சரிவில் கீழே நெடுந்தூரம் அப்படி உருண்டு பயணம் செய்த பின்னரே அடிவாரம் வந்தது.  அந்தக் கடினமான பாறைச் சரிவில் கல்லிலும், முள்ளிலும்,, புதர்களிலும் உருண்டு மேலே எல்லாம் காயம் பட்டுக் கொண்டு எதையும் லட்சியம் செய்யாமல் அரங்கனைக் காப்பாற்றுவதே குறிக்கோளாய் தாசர் உருண்டு கொண்டிருந்தார்.  அவர் உருண்டு போனதைப் பார்த்த இரு கொடவர்களும் உடனே தாங்களும் அடிவாரம் செல்ல வேண்டும் என்று எண்ணினார்கள். அதன்படியே இருவரும் அடிவாரத்திற்கு இறங்க ஆரம்பித்து இரண்டே நாழிகையில் கீழே இறங்கி மூத்த கொடவரையும் அரங்கனையும் தேட ஆரம்பித்தனர். 

Sunday, March 20, 2022

கொடவர்களைத் துரத்தும் துருக்க வீரர்கள்! ஶ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோம்!

 சிங்கழகர் சொன்ன வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்த வல்லபனுக்கு ஆச்சரியமும் வருத்தமும் ஒரு சேரத் தோன்றிக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் அரங்க நகரிலிருந்து அரங்கனைத் தூக்கிக் கொண்டு கிளம்பிய அறுபது பேரில் இன்று மீதம் இருப்பவர்கள் சொல்பமே. ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை அவர்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.  நம்பிக்கை அவர்களைக் கைவிடவில்லை. அரங்கனை எப்படியானும் காப்பாற்றியே ஆகவேண்டும் என்னும் அவர்களுடைய தீவிரமான முடிவு ஓர்  சமுதாயத்தின் நம்பிக்கையையே கட்டிக் காத்துக் கொண்டிருந்தது.  ஓர் அருமையான சமுதாயத்தின் நம்பிக்கையாக ஒளிர்ந்து கொண்டிருந்தவன் அந்த அரங்கன். இவனைக் காப்பாற்ற எத்தனை பேர் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்! இதை நீனைக்க நினைக்க வல்லபன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சிங்கழகரைப் பார்த்துக் கண்கள் கலங்கிய வண்ணம் தன் மனம் எவ்விதம் துன்பத்தால் குமுறுகிறது என்பதைச் சொன்னான் வல்லபன். அதற்குச் சிங்கழகர் வல்லபனின் நல்ல உள்ளத்தையும் நேர்மையான நடத்தையையுமே அது குறிப்பதாகச் சொன்னார்.  நல்ல ஆத்மாக்களுக்கே இப்படி எல்லாம் தோன்றும் எனவும் அரங்கனைத் தேடிக் கண்டு பிடிப்பாரில்லாமல் தாம் இத்தனை ஆண்டுகளாக வருந்திக் கொண்டிருந்ததையும் சொன்னார். இப்போது இவர்கள் இருவரையும் பார்த்ததும் தம் மனம் கொண்ட ஆறுதலையும் எடுத்துச் சொன்னார். பின்னர் அவர் அவர்கள் இருவரிடமும் மேலே நடந்தனவற்றையும் தாம் சொல்லப் போவதாகவும் அதையும் கேட்கும்படியும் சொல்லிவிட்டு மேலே தொடர்ந்தார்.

அஞ்சனாத்ரி மலையடிவாரத்தில் உள்ள காட்டில் அடர்ந்து வளர்ந்து கிடந்த புதர்களின் மறைவிலே நின்றவண்ணம் சிங்கழகர் பரிதவித்துக் கொண்டிருந்தார். துருக்கிப் படைகள் பேர் ஆரவாரத்தோடு காட்டை ஊடுருவிக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தன. காட்டில் தோன்றிய பேர் ஆரவாரத்தால் கலங்கிய பக்ஷிகளும், மிருகங்களும் அங்கும், இங்குமாக ஓடி அலைக்கழிக்கப்பட்டன.  இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிங்கழகருக்கோ செய்வது என்ன என்று தெரியாமல் கலக்கம் ஏற்பட்டது.  கண்ணீர் பெருக்கிய வண்ணம் இனி தாம் செய்வது எதுவும் இல்லை; என்ன நடக்கப் போகிறதோ நடக்கட்டும். வேறே வ்ழி இல்லை என நினைத்தவராய் அந்தப் புதர்களிலேயே மறைந்து அமர்ந்து கொண்டு விட்டார்.

படை வீரர்கள் அடிவாரக்காட்டை அடைந்து சூழ்ந்து கொண்டு விட்டார்கள். அவர்கள் அங்கும் இங்குமாகத் தங்கள் பார்வையைச் செலுத்திக் கொண்டு ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அடிவாரத்தைச் சூழ்ந்து கொண்டிருப்பதையும்  தங்களைத் தேடிக் கொண்டிருப்பதையும் மேலே ஏறிக் கொண்டிருந்த மூன்று கொடவர்களுக்கும் தெரியாது.  ஆபத்து இனித் தொடரப் போவதில்லை என்று நினைத்த வண்ணம் கவலை இல்லாமல் ஆனால் வேகமாக மலை மேல் ஏறிக் கொண்டிருந்தனர். போகும் வழியெல்லாம் புதர்கள் நிறைந்து காணப்பட்டது. ஆனால் மேலே ஏற ஏற ஆங்காங்கே பாறைக்கற்களும், தரையெல்லாம் கற்கள் நிரம்பியனவாகவும் காணப்பட்டன. கொஞ்ச தூரத்துக்கு ஒரே வெட்டவெளியாகவும் இருந்தது. அந்த வெட்டவெளியிலே அரங்கனைத் தூக்கிக் கொண்டு அவர்கள் சென்றதைக் கீழே இருந்த வீரர்களில் சிலர் பார்த்துவிடவே ஒரே கூக்குரல். கோஷம். திடீரென எழுந்த பெரிய ஆரவாரத்தைக் கேட்ட கொடவர்களும் திரும்பிப் பார்க்க மேலிருந்து கீழே படைவீரர்கள் அடிவாரத்தைச் சூழ்ந்து கொண்டுஇருப்பதைக் கவனித்து விட்டார்கள். 

உடனே அரங்கனைத் தூக்கிக் கொண்டு ஒரே ஓட்டமாக அந்தப் பெரிய பரந்த வெளியைக் கடக்கத் தொடங்கினார்கள். மீண்டும் வெகு விரைவில் மறுபடி புதர்கள் சூழ்ந்த அடர்ந்த காட்டுப்பகுதிக்கு வந்ததும்  இனி திருப்பதி மலை மேல் ஏறி அரங்கனைக் காப்பாற்றுவது கஷ்டம் என்பதோடு கோயிலுக்கும் அவர்களால் தீங்கு ஏற்பட்டுவிடும் எனப் பயந்த கொடவர்கள் அருகிலுள்ள மலை முகட்டின் மேலே ஏறி எங்கானும் மறைந்து கொள்ளலாம் என நினைத்தனர். அதற்குள்ளாகக் கீழே என்ன நடக்கிறது எனக் கவனித்த கொடவர்களுக்குப் படை வீரர்கள் தங்களில் ஒரு பிரிவினரை மலை மேல் ஏறிக் கொடவர்களைத் தொடரும்படி ஆணை இட்டுக் கொண்டிருந்ததையும் அதன்படி வீரர்கள் மலைமேல் ஏறத் தொடங்குவதையும் கண்டனர்.  இனி என்ன செய்யலாம் எனக் கவலையுடன் சிந்தனையில் ஆழ்ந்தனர். 

மலை முகடுகளைக் கூர்ந்து சுற்றிச் சுற்றிப்பார்த்தனர் மூவரும். மூவரின் பெயர்களும் முறையே திருக்குருகூர் தாசர், திருவில்லிபுத்தூர் தாசர், சீராம தாசர் ஆகியோர் ஆகும். திருக்குருகூராரின் மைத்துனர் திருவில்லிபுத்தூர் தாசர் ஆவார். குருகூர் தாசரின் மகன் சீராம தாசர் ஆவார். இப்போது மேலே ஏறிக்கொண்டிருக்கும் படை விரைவில் அவர்கள் இருக்குமிடம் வருவதற்குள்ளாக ஏதேனும் செய்ய வேண்டுமே. ஆகவே மூத்தவரான திருக்குருகூர் தாசர் (அரங்கத்தை விட்டுக் கிளம்புகையில் அறுபத்திரண்டு வயசில் இருந்தவருக்கு இப்போது எண்பத்தி இரண்டு வயது ஆகிவிட்டது. நல்ல மூப்பு) அவர் மற்ற இருவரையும் பார்த்துத் தப்புவதற்கு எப்படியேனும் வழி தேடவேண்டும் என்று சொல்லிச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்.  அந்த மலை முகடு மூன்று பக்கங்களிலும் சரிவாகக் காணப்பட்டது. நான்காவது பக்கம் செங்குத்தாகப் பாம்பு படமெடுத்தாற்போல் காணப்பட்டதையும் கவனித்தவருக்கு அந்தச் செங்குத்தான மலைமுகட்டில் ஏறுவது கஷ்டம் என்பதால் படை வீரர்கள் அந்தப் பக்கம் யாரையும் ஏவவில்லை என்பதையும் கண்டு கொண்டார். 


Tuesday, March 15, 2022

சிங்கழகரின் அனுபவங்கள்! தொடர்ச்சி 3!

 கிட்டத்தட்டப் பத்து மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது தொடர்ந்து எழுத.  போன வருஷம் ஜூன் மாதம் உடம்பு முடியாமல் போனதில் இருந்து எத்தனையோ முறை முயன்றும் இதை எழுத முடியவில்லை. இன்னிக்கு எப்படியானும் எழுதிடணும் எனக் காலையிலிருந்தே முயன்று பார்த்துவிட்டு ஒரு வழியாக இப்போ உட்கார்ந்திருக்கேன். நல்லபடியாகத் தொடர அந்த அரங்கன் தான் அருள் செய்யணும். பங்குனித் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. அரங்கன் உறையூருக்குப் போயிருக்கான். கமலவல்லியைத் திருமணம் செய்து  கொள்ள. நேற்று எங்க தெருவழியாகத் தான் போயிருக்கான். ஆனால் முன் அறிவிப்பு இல்லாததால் எங்களுக்கெல்லாம் தெரியலை. நான் அரங்கனைப் பார்த்தே சுமார் இரண்டரை வருஷங்கள் ஆகின்றன. :(

*************************************************************************************

துருக்கியர் எங்களைப் பார்த்துவிட்டனர் என்பது அவர்கள் கூக்குரலில் இருந்தும் அவர்கள் ஓடி வருவதில் இருந்தும் புரிந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்த எங்களை மாலழகர் என்பார் பார்த்துவிட்டு," எனக்கு மல் யுத்தமும் தெரியும், சிலம்பமும் தெரியும்.  ஆகவே வருபவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். அவர்கள் உங்களைத் தொடராமல் நான் இங்கேயே தடுத்து நிறுத்துகிறேன். நீங்கள் அனைவரும் அரங்கனைத் தூக்கிக் கொண்டு விரைவில் வெகுதூரம் போய்விடுங்கள்!:" என்றார். அது தானே ஒரே வழி. ஆகவே நாங்களும் மாலழகரை அங்கே தனியாக விட்டுவிட்டு அரங்கனைத் தூக்கிக் கொண்டு காட்டு வழியில் விரைந்தோம். இங்கே மாலழகருக்கும் வீரர்களுக்கும் கடுமையான போர். என்றாலும் தனக்குத் தெரிந்த சிலம்ப வித்தையை வைத்துக் கொண்டு மாலழகர் அவர்கள் தன் மேல் வாள் வீசுவதைக் கூடியவரை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்.  என்றாலும் ஆயுதங்கள் இருந்தமையால் அவர்கள் விரைவில் மாலழகரைக் குற்றுயிராகக் கீழே தள்ளினார்கள்.

பின்னர் அவர்கள் மாலழகரிடம் அவர் யார் எனவும், எங்கே போய்க் கொண்டிருக்கிறார் எனவும் விசாரித்தார்கள்.  உடல் உபாதை பொறுக்க முடியாத மாலழகர் "அரங்கா! அரங்கா!" எனப் புலம்ப ஆரம்பிக்க அவர்களோ இவர்கள் அந்த அரங்க விக்ரஹத்தைத் தான் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள் போலும். கூடவே கையில் வைத்திருந்த மூட்டைகளில் அரங்கனின் ஆபரணங்களும், வைர, வைடூரியங்களும், ரத்தினங்களுமாக இருக்க வேண்டும். வாருங்கள் விரைவில் சென்று அவர்களைப் பிடிப்போம் என அவர்களில் ஒருவன்மற்றவர்களைத் துரிதப்படுத்த  இன்னொருவன் நாம் தனியாகப் போவதை விடக் கோட்டைக்குள் சென்று மற்றப்படை வீரர்களையும் அழைத்துச் சென்றால் விரைவில் அவர்களைப் பிடித்துவிடலாம் என்று யோசனை சொல்ல அதன் பேரில் அவர்கள் அனைவரும் கோட்டைக்குச் செல்ல ஆயத்தம் செய்தார்கள். போகிற போக்கில் ஏற்கெனவே காயங்களால் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்த மாலழகரின் கால்களையும்  வெட்டி விட்டார்கள்.

அப்போது சிங்கழகர் மேலும் தொடர்ந்து, "மேற்சொன்ன சம்பவம் நடந்த போது நான் மற்ற இருவருடனும் அரங்கனைத் தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தேன். அரங்க விக்ரஹம் ரொம்பக் கனமாக இருந்தபடியால் மாறி மாறித்தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு சென்றோம். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றதும் நான் மற்றவர்களைப் பார்த்து அங்கேயே சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு நான் மட்டும் போய் மாலழகர் கதி என்ன எனப் பார்த்து வருவதாகச் சொன்னேன். பின்னர் நான் விரைந்து வந்து மாலழகரைத் தேடிக் கொண்டு அவர் கீழே விழுந்து கிடக்கும் இடம் வந்து அவரைப் பார்த்து மனம் நொந்து போனேன். இரண்டு கால்களும் வெட்டப்பட்டுக் குற்றுயிராக இருந்த மாலழகரின் உயிர் பிரியும் தருவாயில் இருந்தார்.  கண்ணீருடன் அவரருகே சென்று அவர் தலையைத் தூக்கி என் மடியில் வைத்துக்கொண்டு அவரை அழைத்தேன். மிகச் சிரமப்பட்டுக் கண் திறந்து பார்த்த அவர் என்னிடம்,"சீக்கிரம், சீக்கிரம் விரைந்து செல்லுங்கள். அந்தப் போக்கிரிகள் அரங்கன் உங்களிடம் இருப்பதை எப்படியோ கண்டு கொண்டார்கள். படை வீரர்களை அழைத்துக் கொண்டு தேடுதல் வேட்டை நடத்தி உங்களைக் கண்டு பிடித்துவிடப் போகிறார்கள். விரைந்து சென்று அரங்கனையும் மற்றவர்களையும் காப்பாற்றுங்கள்!" எனக் கை கூப்பி வேண்டிக் கொண்டார்.  உடனே அவர் உயிர் உடலில் இருந்து பிரிந்து சென்றது.

அவர் உடலை அங்கே இருந்த பள்ளத்தில் விட்டுவிட்டுச் செடி, கொடி, கம்புகள், இலைகள், தழைகளால் மூடினேன். பின்னர் விரைவாக மற்ற இருவரையும் அரங்கனோடு விட்டு விட்டு வந்த இடம் நோக்கி ஓடினேன். அவர்களிடம் மாலழகர் கூறிய விஷயத்தைக் கூறிவிட்டு படை வீரர்கள் அங்கே அவர்களைத் தேடிக் கொண்டு வந்து சேர்வதற்குள்ளாக நாம் வெகு தூரம் போய்விட வேண்டும் என்றும் சொன்னேன். இம்மாதிரித் திக்குத் தெரியாமல் பல காத தூரம் ஓடிய எங்கள் கண்களில் பட்ட அஞ்சனாத்ரி மலை மனதில் ஆறுதலையும் நிம்மதியையும் தந்தது. மலை மேல் ஏறி மேலே போய்விட்டால் இந்த வீரர்களிடமிருந்து தப்பிக்கலாம் என நினைத்து அதைச் சொல்வதற்குள் மற்றக் கொடவர்கள் என்னிடம்,  அவர்கள் அரங்கனைத் தூக்கிக் கொண்டு மலை மேல் ஏறுவதாகவும் என்னைக் கீழேயே இருந்து வீரர்கள் வருவதைக் கண்காணிக்கும்படியும் சொன்னார்கள்.  சுமார் 3 நாட்கள் வரை பார்த்துவிட்டு எவராலும் தொந்திரவு நேராது என்பது உறுதியானதும் என்னையும் மேலே வந்து அவர்களுடன் சேர்ந்து கொள்ளச் சொன்னார்கள்.  சரி என ஒத்துக்கொண்டு அவர்களை மலை மேல் ஏறச் சொல்லிவிட்டு நான் மட்டும் பாறைகளுக்கும் புதர்களுக்கும் நடுவில் இருந்த குகை போன்ற இடத்தில் மறைந்து கொண்டேன். சில நாழிகைகளிலேயே பேரிரைச்சல் கேட்டது.  சற்று வெளியே வந்து எட்டிப்பார்த்தால் துருக்க வீரர்கள் காட்டிலிருந்து வெளியே ஓடி வந்து அஞ்சனாத்ரி மலையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர். திடுகிட்ட நான் என்ன செய்வது எனத் தெரியாமல், "அரங்கா! அரங்கா!" எனப் புலம்பத் தொடங்கினேன்.

Saturday, June 26, 2021

சிங்கழகரின் அனுபவங்கள் தொடர்ச்சி! ஶ்ரீரங்க ரங்க நாதரின் பாதம் பணிந்தோம்.

 அன்றைக்குச் சுமார் பதினெட்டு ஆண்டுகள் முன்னர் ஶ்ரீரங்க நகரில் இருந்து அரங்க விக்ரஹத்தோடு புறப்பட்ட கோஷ்டி கர்நாடகத்தின் மேல்கோட்டையை அடைந்து அங்குள்ள திருநாராயணபுரத்தில் அரங்கனை எழுந்தருள வைத்துக் கொண்டு பலரும் அங்கேயே அரங்கனுடன் தங்கிவிட்டார்கள் என்றார் சிங்கழகர். தாமும் அவர்களில் ஒருவனாக அப்போது இருந்ததாகவும் சொன்னார். மொத்தம் அறுபது பேர் கிளம்பியதில் யாத்திரையின் கடுமையான சோதனைகளில் பலரும் திசைமாறிப்பல்வேறு திக்குகளிலும் போய்விட சிலர் ஆங்காங்கே தங்கி விட எஞ்சிய சிலருடன் கன்னடத்தின் மேல்கோட்டையில் அரங்கனுடன் சிலர் தங்கினார்கள். அவர்களில் சிங்கழகரும் ஒருவராக இருந்தார்.  சில ஆண்டுகளின் பின்னர் ஹொய்சள மன்னன் மதுரை சுல்தானுடன் சண்டை இடுவதாகத் தகவல்கள் கிட்ட மேல்கோட்டையிலிருந்து கிளம்பி கொங்கு வழியாகச் சத்தியமங்கலத்தை வந்தடைந்தனர் சிலர். அவர்களில் சிங்கழகரும் ஒருவர். ஆனால் அந்தப் போரில் ஹொய்சள மன்னன் கொல்லப்பட்டு ஹொய்சளப்படைகள் தோல்வி அடைய மீண்டும் மேல்கோட்டையை நோக்கிச் சென்றுவிட்டனர் அனைவரும். 

சுல்தானியர்களோ தமிழர்களின் இந்தத் திடீர் எழுச்சியைச் சகிக்காமல் மேலும் கோபம் கொண்டு அக்கம்பக்கம் நாடுகளையும் குறிப்பாக ஹொய்சள நாட்டையும் கோயில்களையும் சூறையாடினார்கள். அவர்கள் அப்படியே அரங்க விக்ரஹம் மேல்கோட்டையில் இருக்கும் செய்தியைத் தெரிந்து கொண்டு அங்கே வருவார்கள் என்னும் செய்தி மேல்கோட்டையில் பரவியது. பீதி அடைந்த அவர்கள் அரங்கனை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வேறெங்காவது இன்னமும் தூரமாகப்போய்விட எண்ணினார்கள். ஆனால் வடக்கே செல்ல முடியாது. ஏனெனில் வடக்கே பெரும்பாலும் துருக்கியரே ஆண்டு வந்தனர். ஆகவே கிழக்கே செல்லலாம் என நினைத்துத் திருமலை/திருப்பதி நோக்கிப் போய் அங்கேயே தங்கத் தீர்மானம் செய்தனர் அவர்கள் அனைவரும்.  இவர்கள் இப்போது ஐந்து பேர்களாகக் குறைந்து விட்டனர். திருவரங்கத்திலிருந்து கிளம்பிய போது அறுபது பேர்களாக இருந்தவர்கள் இப்போது ஐந்து பேர்களாகக் குறைந்து விட்டனர். இவர்களில் சிங்கழகர் தவிர இன்னொருவர் மாலழகர். மற்ற மூவரும் பந்துக்களான கொடவர்கள் குருகூர் தாசர், சீராம தாசர், வில்லிப்புத்தூர் தாசர் ஆகியோர்.  சீராம தாசர் குருகூர் தாசரின் மகன். வில்லிபுத்தூர் தாசரோ சீராம தாசரின் தாய் மாமன் ஆவார்.

அரங்கனின் பொன் நகைகள், எஞ்சி இருந்த அணிமணிகள், ஆடைகள் என அனைத்தையும் ஓர் சுமையாகக் கட்டி ஒருவர் எடுத்துக் கொண்டோம். அரங்க விக்ரஹம் கனமாக இருந்ததால் மாறி மாறி அவரைத் தங்கள் தோள் மேல் வைத்துக் கொண்டு சென்றோம்.வழியெங்கும் கலவரமாக இருந்ததால் மிகவும் கவனமாக வழி நடந்து ஆங்காங்கே வைணவர்களாகத் தேடித்தேடி அவர்கள் உதவிகளைப் பெற்று இரவுகளில் ரகசியமாகத் தங்கிக் கொண்டு நாற்பது நாட்கள் கழித்துச் சந்திரகிரிக்கோட்டையை அடைந்தோம். என்ன துரதிருஷ்டம்! சந்திரகிரிக்கோட்டையும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கவே கோட்டையைத் தவிர்த்துவிட்டுக் காட்டு மார்க்கத்தில் இறங்கிப் பிரயாணப்படும்போது அங்கிருந்த தனிப்பாதையில் மூன்று துருக்கிய வீரர்கள் காவலுக்கு இருந்தவர்கள் எங்களைப் பார்த்துவிட்டார்கள், என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்தோம்.

Wednesday, June 23, 2021

சிங்கழகரின் அனுபவங்கள்! ஶ்ரீரங்க ரங்கநாதரின் பாதம் பணிந்தோம்!

 சத்திரத்துக்குத் திரும்பினாலும் தத்தன் கண்களின் எதிரே மஞ்சரியின் முகமே அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் தயவாக ஆறுதலாக அந்தப் பெண்ணிடம் நடந்து கொண்டிருக்கலாமோ என நினைத்துக் கொண்டான் தத்தன். மறுநாள் காலையில் கட்டாயமாய் அந்தப் பெண்ணைப் போய்ப் பார்த்து ஆறுதலாக நாலு வார்த்தைகள் பேச வேண்டும் என தத்தன் நினைத்துக் கொண்டான். மறுநாள் காலையில் இருவருமே மஞ்சரியின் மாமா வீடு சென்றனர்.  மஞ்சரி அவர்களைக் கண்டதுமே மிகுந்த உற்சாகத்துடன் அவர்களுக்கு உபசரணைகள் செய்தாள். ஓர் பெரிய கிண்ணம் நிறையக் காய்ச்சிப் பக்குவமாய் நாட்டுச் சர்க்கரை சேர்த்த பசும்பாலை இதமான சூட்டுடன் குடிக்கக் கொடுத்தாள். 

சற்று நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவரும் பின்னர் மெதுவாக சிங்கழகரிடம் தாங்கள் இருவரும் அரங்கனைக் கண்டு பிடிக்கும் வேலையில் இருப்பதாகவும் அரங்கனை எங்கே கண்டு பிடிக்க முடியும் என்பது பற்றி அவருக்கு ஏதேனும் தெரியுமா என்றும் கேட்டார்கள். இதைக் கேட்ட சிங்கழகர் கண்களில் மாலை மாலையாகக் கண்ணீர் பெருகியது. எழுந்து வந்த அவர் இளைஞர்களைத் தழுவிக் கொண்டு கண்ணீர் மழை பொழிந்தார். இக்காலத்தில் அரங்கனை நினைப்பாரும் இருக்கிறார்களே எனச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.  அரங்கன் என ஒருத்தர் இருந்ததையே பலரும் மறந்திருக்கையில் இளைஞர்களான இவர்கள் இருவரும் அவன் இருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டு செல்வதை அறிந்து மிகவும் மனம் மகிழ்ந்து அவர்களுக்கு ஆசிகள் வழங்கினார். அவர்கள் யாரெனக் கேட்டார். வல்லபனின் தந்தை பற்றி அறிந்ததுமே அவருக்குள் ஆனந்தம் பொங்கிற்று. தான் வல்லபனின் தந்தையை நேரில் பார்த்திருப்பதாகவும், அவர் வீரத்தைக் குறித்தும் அறிந்திருந்ததாகவும் சொன்னார்.

வல்லபன் பார்க்கத் தன் தந்தையையே சாயலில் உரித்து வைத்தாற்போல் இருப்பதையும் சொன்னார்.  வல்லபனின் தந்தை அரங்க நகரையும், அரங்க நகரத்து மக்களையும், அரங்கனையும் கொடியோர் கைகளில் இருந்து பாதுகாக்கப் பட்ட பாட்டை நினைவு கூர்ந்தார் அந்தக் கிழவர். அதோடு இல்லாமல் வல்லபனின் தாய் வாசந்தியைப் பற்றியும் மிகவும் புகழ்ந்து சொன்னதோடு அல்லாமல் வல்லபனைக் குறித்துப் பெருமிதமும் கொண்டார். இப்போதுள்ள நிலைமையில் நாடுகளெல்லாம் அழிந்து நம் சமயங்கள் எல்லாம் சீரழிந்து வரும் இந்தச் சமயத்தில் அரங்கனை நினைப்பாரும் உண்டோ! அவனைத் தேடுவாரும் உண்டோ எனச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.  வல்லபன் அவரிடம் அரங்கனைத் தூக்கிக் கொண்டு கோட்டையிலிருந்து புறப்பட்டஐவரில் சிங்கழகரும் ஒருவர் எனத் தான் அறிந்திருப்பதைக் குறித்துக் கூறினான்.ஆகவே சிங்கழகருக்கு நேர்ந்ததை எல்லாம் அவர் நினைவில் இருக்கிறபடி அப்படியே கூறினால் அதிலிருந்து அரங்கன் குறித்து ஏதேனும் தகவல்கள் கிடைக்கலாம் என்றான் வல்லபன்.  சிங்கழகரும் அதை ஒப்புக் கொண்டு தன் நினைவில் இருந்தவரையிலும் எல்லாவற்றையும் வல்லபனுக்கும் தத்தனுக்கும் எடுத்துக் கூறலானார். 

Wednesday, June 09, 2021

மஞ்சரியின் மாமன்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 சிறிது நேரத்தில் வல்லபனுடன் அங்கே வந்த தத்தன் மஞ்சரியை அழைத்துக் கிளம்பும்படி சொன்னான். எங்கே செல்லவேண்டும் என ஆச்சரியத்துடன் கேட்ட மஞ்சரியிடம் அவள் தாய் மாமன் வீட்டிற்கு எனச் சொன்னான் தத்தன். நேற்றுக் கேட்டதற்கு மாமன் கிடைக்கவில்லையே என தத்தன் சொன்னதை நினைவூட்டின மஞ்சரியிடம் தத்தன் முதலில் பெற்றோர் இல்லை என்பதை அவளிடம் சொல்லி மனதளவில் அவளைத் தயார் செய்ய வேண்டி இருந்ததாய்ச் சொன்னான். அதன் பின்னர் அவள் தாய் மாமன் வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்ல இருந்ததாயும் சொன்னான். மஞ்சரியின் கண்கள் நீரை ஆறாய்ப் பெருக்கின. உள்ளுக்குள் அவள் குமுறுகிறாள் என்பதை நிலை குத்திய அவள் பார்வையும் துடிக்கும் உதடுகளும் வெளிப்படுத்தின. அவள் வாய்விட்டு அழட்டும் என தத்தன் நினைத்தான். சில வினாடிகளில் அவள் குமுறிக் குமுறி வாய்விட்டுக் கதறினாள். 

தன் பாட்டனார் தன்னிடம் இந்த உண்மையைச் சொல்லாதது குறித்தும் சொல்லி இருந்தால் தான் ரொம்பவே வேதனைப் பட்டிருப்போம் என்பதால் தன் நன்மையைக் கருதியே பாட்டனார் சொல்லவில்லை எனத் தான் புரிந்து கொண்டதாகவும் சொன்னாள் மஞ்சரி. ஆனாலும் அதனால் ஏற்பட்ட தீமையும் உண்டு எனச் சொன்ன மஞ்சரியை தத்தன் நிமிர்ந்து பார்த்தான். அவன் முகத்தில் தென்பட்ட ஆச்சரியக் குறியைக் கண்ட மஞ்சரி தான் தன் பெற்றோர் இருப்பதாகவே கருதி ஆசைகளை வளர்த்துக்கொண்டதையும் பெற்றோருடன் சேர்ந்து வாழப் போகும் வாழ்வை நினைத்துக் கண்ட கனவுகளையும் சொல்லி இப்போது அனைத்தும் சுக்கு நூறாக நொறுங்கி விட்டதால் அவள் தாத்தா சிறு வயதிலேயே அவளுக்கு உண்மையை எடுத்துச் சொல்லி அவளைத் தயார் செய்திருக்க வேண்டும் என்றும் சொன்னாள். சிறிது நேரம் அவளை அழவிட்ட தத்தன் அவளை மாமன் வீட்டிற்காகக் கிளம்பச் சொல்ல அவளும் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு அவனுடன் கிளம்பினாள்.

சிங்கழகர் என அழைக்கப்பட்ட வயது முதிர்ந்த மஞ்சரியின் தாய் மாமன் ஒரு நந்தவனத்திற்கு அருகே உள்ள மண் வீட்டில் வசித்து வந்தார். விஷக்கடியினால் ஏற்பட்ட வியாதிகாரணமாக அவரால் அதிகம் நடமாட முடியாது. சுமார் அறுபது பிராயங்கள் ஆன அவர் மஞ்சரியையும் தத்தன்.வல்லபன் இருவரையும் பார்த்ததும் வியப்படைந்தார். யாரோ அதிதிகள் என எண்ணிக்கொண்டு அவர்களை உபசரித்து ஆசனங்களில் அமர வைத்து என்ன செய்ய வேண்டும் என்றும் விண்ணப்பம் செய்தார். தத்தன் அவரிடம் மஞ்சரியைக் காட்டி அவருடைய சகோதரியின் பெண் தான் இந்தப் பெண் என்பதையும் சொல்லி அவள் பாட்டனார் வளர்த்து வந்ததையும் பெற்றோர் குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் போது அந்நியப் படையெடுப்பில் கொல்லப்பட்ட விபரத்தையும் இது நாள் வரை மஞ்சரிக்கு அது விஷயம் தெரியாது என்பதையும் சொன்னான். பின்னர் அவர் இங்கே இருக்கும் விஷயத்தை மஞ்சரியின் தாத்தா மூலம் அறிந்து கொண்டதாகவும் அவர் காலம் ஆகிவிட்டதால் மஞ்சரியைத் தானும் வல்லபனும் பொறுப்பெடுத்துக் கொண்டு காஞ்சிகுக் கூட்டி வந்து அவரிடம் ஒப்படைக்க எண்ணியதையும் சொன்னான்.

சிங்கழகருக்கு ஒரு புறம் வியப்பு! மகிழ்ச்சி! இன்னொரு புறம் சோகம்! வருத்தம். அவருக்கும் தன் சகோதரி குடும்பம் குறித்த தகவல்களே இல்லாமல் இருந்ததில் இப்போது விஷயங்களைத் தெரிந்து கொண்டு ஒரு பக்கம் சந்தோஷம் அடைந்தாலும் இன்னொரு பக்கம் துக்கமும் மேலிட்டது. மஞ்சரியைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் உகுத்தார். அவளைத் தன் கைகளால் தொட்டு ஆசீர்வதித்தார். துணை இல்லாமல் பற்றில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த தனக்கு இப்போது துணையோடு வாழ்க்கையில் பற்றும் ஏற்பட்டு விட்டதாய்ச் சொன்னார்.இனி தன் வாழ்க்கையை மஞ்சரிக்காக வாழ வேண்டும் எனவும் சொன்னார். இது ஒரு சுமை தான் தனக்கு என்றாலும் சுகமான சுமை அதிலும் சொந்தமான ஒரு சுமை. தன் கடமை எனவும் சொல்லிக் கொண்டார். மஞ்சரியைத் தன் பொறுப்பில் வைத்துக் கொள்வதாக உறுதியும் அளித்தார்.

சிறிது நேரம் சம்பிரதாயமான பேச்சு வார்த்தைக்குப் பின்னர் தத்தனும் வல்லபனும் சத்திரத்துக்குக்கிளம்ப "ஐயா!" என மஞ்சரி அவர்களை அழைத்தாள். வல்லபனுக்குப் புரிந்தது அவள் தத்தனோடு தனியாகப் பேச விரும்புகிறாள் என்பது. ஆகவே அவன் தத்தனிடம் அவனைப் போய்ப் பேசச் சொல்லிவிட்டுத் தான் ஒதுங்கி நின்றான். மஞ்சரி தத்தன் வரவும் அவனிடம், இப்படித் தன்னை முன்பின் தெரியாத ஓர் இடத்தில் நிர்க்கதியாக விட்டுச் செல்வதைக் குறித்துக் குறை கூறினாள். அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பியது. தத்தன் திடுக்கிட்டான். மஞ்சரியோ மேலும் அவளை விட்டுவிட்டு அவர்கள் சீக்கிரம் கிளம்பியதற்கும் ஆக்ஷேபம் தெரிவித்தாள். என்னதான் தன் மாமன் அங்கே இருந்தாலும் இந்த முன்பின் தெரியாத புதிய இடம் தனக்குப் பாந்தமாக இல்லை எனவும் தத்தன் தான் சொந்தம் போலவும் மாமன் அந்நியராகவும் தெரிவதாய்ச் சொன்னாள்.  தத்தனையும் வல்லபனையும் விட்டுப் பிரியக் கஷ்டமாக இருப்பதாகவும் அதிலும் தத்தனோடு நிரந்தரப்பிரிவு ஏற்பட்டு விடுமோ என அஞ்சுவதாகவும் அதை நினைத்து வருந்துவதாகவும் சொன்னாள். தத்தனால் பேச முடியவில்லை. அவளைச் சமாதானம் செய்யப் பல நல்ல வார்த்தைகளைச் சொல்லி வாக்குறுதிகளைக் கொடுத்து மெல்ல மெல்ல அவளைச் சமாதானம் செய்ய முற்பட்டான். தானும் வல்லபனும் நாளையும் வருவோம் எனவும் காஞ்சியில் இருக்கும்வரை தினம் வந்து பார்த்துவிட்டுச் செல்வதாயும் வாக்குறுதி அளித்தான்.

Friday, June 04, 2021

மஞ்சரியின் பெற்றோர்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 இரவில் நேரம் சென்று வந்த தத்தனிடம் அந்தப் பெண் மஞ்சரி உரிமையுடனும் சலுகையுடனும் கடிந்து கொண்டது வல்லபன் காதில் விழ அவன் வியப்பின் எல்லைக்கே போனான். தத்தன் என்ன சொல்கிறானோ எனக் கவனித்துப் பார்த்தவனுக்கு தத்தன் வாயைத் திறக்காமல் மௌனமாக இருந்தது உறுத்தியது. ஆனால் அந்தப் பெண் விடாமல் தன் மாமனைக் கண்டு பிடித்தானா தத்தன் என்பதை அவனிடம் விசாரிக்க அதற்கும் தத்தன் சிறிது நேரம் கழித்தே தன்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதைச் சொன்னான். தத்தனுக்கு என்ன ஆயிற்று என வல்லபன் யோசித்தான். மஞ்சரி தத்தனிடம் மேலும் மேலும் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தாள். தன் மாமன் எங்கிருப்பார் என்பது குறித்தும் தத்தனுக்குத் தெரியாது என்பதைக் கேட்டறிந்தவள் தன்னையே நொந்து கொண்டாள். 

காஞ்சிக்குப் பெற்றோர்களைக் கண்டு அவர்களுடன் சேரலாம் என நினைத்திருந்த தன் எண்ணத்துக்கு மாறாக எல்லாம் நடப்பதைக் கண்டு மனம் வருந்தினாள் மஞ்சரி.  தத்தன் வல்லபனைத் தேடி வந்து அவனுடன் இனிச் செய்ய வேண்டியவை குறித்து ஆலோசித்தான். இரவு முழுவதும் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  காலை விடிந்ததும் தத்தன் மஞ்சரியைத் தேடிக் கொண்டு வந்தான். அவள் வெளியே செல்லத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். மஞ்சரியைப் பெயர் சொல்லி தத்தன் அழைக்கவும் அதிலேயே மகிழ்ந்து போன மஞ்சரி ஆவலுடன் அவனைப் பார்த்தாள். தத்தன் அவளை அமரச் சொல்லித் தானும் அவளருகே சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டான். மஞ்சரியிடம் ஒரு முக்கியமான விஷயம் பற்றிக் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றான் தத்தன்.  பின் மெல்ல மெல்ல அவள் தாத்தா தன்னிடம் கூறினவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சரியிடம் எடுத்துச் சொன்னான் தத்தன். கடைசியில் மஞ்சரியின் பெற்றோர் இப்போது உயிருடன் இல்லை எனவும் அவர்கள் இறந்து பல காலம் ஆகிவிட்டது என்றும் சொன்னான். 

மலர்ந்த முகத்துடன் அந்தக் காலை வேளையில் அன்றலர்ந்த மலர்போல விகசிப்புடன் இருந்த மஞ்சரிக்கு மெல்ல மெல்ல முகம் மாறி வெளிறிப் போய்விட்டது.  சிலை போல் அமர்ந்திருந்த மஞ்சரியின் கண்கள் கண்ணீரை வடித்துக் கொண்டிருந்தன. அது ஒன்றே அவள் உயிருள்ள பெண் என்பதைக் காட்டிக் கொண்டிருந்தது.  அவள் அழுது முடித்து மெல்ல மெல்லத் தேறட்டும் எனக் காத்திருந்தான் தத்தன். பின்னர் அவளைப் பார்த்து அவள் பெயர் சொல்லி, "மஞ்சரி, மஞ்சரி!" என அழைத்தான். ஆனால் அவளோ நிமிரவே இல்லை. தலை குனிந்தபடியே அப்படியே அசையாமல் வீற்றிருந்தாள்.  தத்தனுக்குள் இரக்கம் மீதூறியது. மெல்ல அவளைத் தொட்டு அசைத்து தன்னைப் பார்க்கும்படி சொன்னான். அவள் சோகத்தில் கசிந்த கண்களுடன் மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். மிகுந்த இரக்கத்துடன் சோகம் ததும்பிய அவள் முகத்தைப் பார்த்த தத்தன் கண்களிலும் கண்ணீர் பெருகியது.

"இதோ பார் மஞ்சரி! நாட்டைப் பீடித்திருக்கும் பீடைகள் இன்னமும் விலகவில்லை. நாம் இன்னமும் அந்நிய ஆட்சியில் இருக்கிறோம். நாட்டில் நடந்த இந்த மோசமான படையெடுப்புக்களில் எத்தனையோ மக்கள் உயிரைத் தியாகம் செய்திருக்கின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளை இழந்தும், குழந்தைகள் பெற்றோரை இழந்தும் வாழ்கிறார்கள். இறந்தவர்கள் அனைவருமே நம் அரங்கனுக்காகவும் தமிழ் பேசும் மக்களுக்காகவும் உயிரைத் தியாகம் செய்தவர்கள்.  சொர்க்கத்தில் இடம் பெற்றவர்கள். ஆகவே உன் பெற்றோரும் சொர்க்கத்திற்குத் தான் போயிருப்பார்கள்.  நீ அவர்களை நினைத்துக் கவலை கொள்ளாதே! மனதைத் தேற்றிக் கொள்!" என்றான்.

மஞ்சரி அவனிடம், "ஐயா! இந்தக் காஞ்சிக்கு வந்து சேர்ந்ததும் ஒருவழியாகப் பெற்றோர்களிடம் சென்று விடுவேன் என நம்பிக் கொண்டிருந்தேன். இப்போது தங்கள் செய்தியிலிருந்து எனக்கு அந்த பாக்கியம் இல்லை; நான் பெற்றோர்களைச் சிறு வயதிலேயே இழந்துவிட்டேன் என்பதைப் புரிந்து கொண்டேன்.  என் நினைப்பெல்லாம் பெற்றோர்களைச் சென்று அடைவதில் இருந்தது. நினைப்பிலேயே அவர்களை அடைந்து நினைப்பிலேயே அவர்களை இழக்கவும் செய்திருக்கிறேன்.  இப்போது இந்த நினைவுக்கள் என்னை விட்டு அழிய வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே கனவும்களும் நினைவுகளுமாகப் போய்விட்டன." என்று கண்ணீருடன் கூறினாள். அவள் மன முதிர்ச்சியும் பேச்சும் தத்தனை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. இத்தனை சிறிய வயதில் எவ்வளவு மன முதிர்ச்சி என நினைத்துக் கொண்டான். அவளைச் சமாதானம் செய்ய முயன்றான்.  ஆனால் நேற்றுத் தான் சொன்ன ஒரு சிறு பொய் அவளை என்ன செய்யப் போகிறதோ எனக் கவலை கொண்ட தத்தன் அவளை விரைவில் அதற்குத் தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வல்லபனைப் பார்க்க எழுந்து சென்றான்.

Friday, May 28, 2021

வல்லபனின் கேள்விகள்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 தத்தன் தனியாக விசாரிக்கப் போயிருப்பதைப் பற்றிக் கவலைப்பட்ட அந்தப் பெண் மஞ்சரி அவனுக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ எனக் கவலையையும் தெரிவித்தாள். குறுகிய காலத்தில் தத்தன் மேல் அந்தப் பெண் காட்டும் ஈடுபாட்டையும், அன்பையும் கண்ட வல்லபன் ஆச்சரியப் பட்டான். அவர்கள் பயணத்தின்போதும் வரும் வழியெல்லாம் அவள் தத்தனுடைய சௌகரியங்களையும், அவன் உடல் நிலை மீதும் மிகுந்த கரிசனம் காட்டினாள்.  அவனுக்குத் தவறாமல் மருந்துகள் கொடுப்பது, சரியாக உணவு உண்டானா எனக் கவனிப்பது, அவன் துணிகளைத் தோய்த்து உலர்த்தித் தருவது என அவள் காட்டிய ஈடுபாடு வல்லபனுக்குள் ஆச்சரியத்தையும் தோற்றுவித்திருந்தது. வல்லபனுக்கு ஒரு பெண் ஒரு ஆண்மகன் மேல் அன்பும், பாசமும் கொண்டு விட்டால் அவனுக்காக எது வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதைக் குறித்து வியப்பு ஏற்பட்டது. அதோடு அந்தப் பெண் அந்த ஆண்மகனிடம் காட்டும் ஈடுபாடும் சேவைகளும் இனிமையானவை என்று எண்ணும் அதே சமயம் அதன் மூலம் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் ஏற்படும் வேதனைகளையும் எண்ணினான். தானும் மகரவிழியாள் எங்கே இருக்கிறாள் என்பதே தெரியாமல் அவதிப்படுவதையும் அதனால் தன் மனதில் எழும் வேதனைகளையும் நினைத்துப் பெருமூச்செறிந்தான்.

இப்போது அந்த மகர விழியாள் இங்கே இருந்திருந்தால்? இதை எண்ணிய வல்லபனுக்குத் தனக்கு அவள் இப்படி எல்லாம் சேவைகள் செய்திருப்பாளா என எண்ணிப் பார்க்க அந்த எண்ணங்களே அவனுக்கு இன்பமயமாக இருந்தன. ஆனால் அவை உண்மையில் நடக்காது எனவும்,அ வள் யாரோ அரச குடும்பத்து வாரிசு எனவும் என்னதான் அவள் தன்னைக் காதலித்தாலும் திருமணம் என வந்தால் அவள் தன்னைத் திருமணம் செய்து கொள்வது நடக்காத ஒன்று என்பதும் வல்லபனுக்குப் புரிந்தது. இதனால் ஏற்பட்ட மன வேதனையில் அவனுக்கு தத்தன் மேல் கொஞ்சம் பொறாமை கூட ஏற்பட்டது. ஆனால் உடனே தன்னைச் சமாளித்துக் கொண்டான்.  என்றாலும் மீண்டும் மீண்டும் அவன் மனதினுள் மகரவிழியாளின் முகமே தோன்ற அவளைக் குறித்து மஞ்சரியிடம் கேட்டால் என்ன என்னும் எண்ணம் அவனுக்குள் எழுந்தது.  இப்போது இங்கே தத்தனும் இல்லை. ஆகவே இதுவே நல்ல தருணம் என நினைத்தான் வல்லபன். மேலும் அந்தச் சேவகர்கள் கூடவே அந்த மகரவிழியாளையும் அழைத்து வந்து தான் இருந்த இடத்திற்கு எதிரே அவளை வைத்திருந்ததை நினைவு கூர்ந்தான். ஆகவே மஞ்சரிக்கு அவளைப் பற்றித் தெரிந்திருக்கக் கூடும் என்னும் எண்ணம் அவனுக்குள் தோன்றியது.

உடனே அவன் மஞ்சரியிடம்,  நல்லூரில் அந்த சேவகர்கள் வந்தபோது தனியாக வந்தார்களா? அல்லது கூடவே ஒரு பெண்ணும் வந்தாளா என்று கேட்டான்.  அவள் ஏதானும் பார்த்தாளா என்று அறியவே அவன் கேட்டான். ஆனால் அதற்கு மஞ்சரி தான் அந்தப் பெண்ணைப் பார்த்ததோடு அல்லாமல் அவள் கூடவே இரண்டு நாட்கள் இருந்ததாயும், அந்தப் பெண் உடல் நலமில்லாமல் இருந்ததாயும் தெரிவித்தாள். அதனால் தான் அந்த சேவகர்கள் அங்கேயே தங்கி அவள் உடல் நலம் கொஞ்சம் சொஸ்தம் ஆனதும் கிளம்பினார்கள் என்றும் சொன்னாள்.  வல்லபன் மனம் பதைத்தது. எனினும் வெளியே காட்டிக் கொள்ளாமல் என்ன உடம்பு என விசாரித்தான். நல்ல ஜூரமாகவும் அதோடு வயிற்று வலியும் சேர்ந்து கொண்டதாக மஞ்சரி சொன்னாள். பிரக்ஞையே இல்லாமல் இருந்தவளை முதலில் ஆதுரசாலையில் சேர்த்ததாகவும், பிறகு அங்கே நடமாட்டம் அதிகம் இருந்ததால் வேறே தனி வீட்டுக்கு அவளைக் கொண்டு சென்றதாகவும், எவரும் அவளைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அவள் இருப்பதையே ரகசியமாக வைத்திருந்ததாகவும் சொன்னாள்.

தன்னையும், வைத்தியரையும் மட்டும் நெருங்க விட்டதாய்ச் சொன்ன மஞ்சரி தான் ஒரு பெண் என்பதால் இன்னொரு பெண்ணுக்கு வைத்தியம் செய்யும்போது நான் கூட இருப்பது அவளுக்கும் அனுகூலம் என நினைத்திருப்பார்கள் என்றும் சொன்னாள். ஆனால் வீட்டுக்கு அவளை எடுத்துச் சென்ற பின்னர் தன்னை அந்த வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் போகும்போது தன்னையும் வைத்தியரையும் கடுமையான எச்சரிக்கைகளால் பயமுறுத்திவிட்டுப் போனதாகவும் சொன்னாள். அதோடு இல்லாமல் அந்த ஆதுரசாலைக்கு வருபவர்களைக் கண்காணித்துக் கொண்டும் இருந்தனர். அவர்கள் இதற்காக ஒரு நாடகமும் நடத்தியதாகச் சொன்னாள். வல்லபன் ஆவலுடன் என்ன நாடகம் எனக் கேட்க மஞ்சரி  மேலே சொன்னாள். அங்கே சேவகன் ஒருவன் காலில் அடிபட்டுக் கட்டுப் போட்டுக் கொண்டு படுத்திருப்பது போல் கிடந்தான். ஆனால் அவன் உண்மையில் அடிபட்டுக்கொண்டவன் எல்லாம் இல்லை. அந்தப் பெண் ஆதுரசாலையில் தனி அறையில் இருந்ததால் அங்கே வருபவர்களைக் கண்காணிக்க அந்தச் சேவகன் அங்கே வந்து படுத்துக் கொண்டான் எனவும் அவனுக்குத் துணையாகச் சிலர் அங்கேயே நடமாடிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் சொன்னாள். 

பின்னர் அந்தப் பெண்ணைப் பற்றி அவள் வர்ணித்தாள். அவள் அழகையும், கம்பீரத்தையும் பார்த்தால் அவள் ஓர் ராஜகுமாரியாகத் தான் இருக்க வேண்டும் என்றும் ஆனால் அந்தச் சேவகர்கள் அவள் யாரோ ஓர் பிரபுவின் பெண் என்றே சொன்னதாகவும் சொன்னாள். மேலும் அந்தப் பெண் எப்போதும் மயக்கத்திலேயே இருந்ததாகவும் அது இயற்கையாக இல்லை என்பதால் வைத்தியருக்கும் அவளுக்கும் பயம் ஏற்பட்டதாகவும் சொன்னாள். இருவருக்குமே அவளை இவர்கள் கடத்திச் செல்வது புரிந்து விட்டதாகவும் அதனாலேயே அவளை எப்போதும் மயக்க நிலையிலேயே வைத்திருந்ததாகவும் சொன்னாள்.  வல்லபன் அவள், அந்த மகரவிழியாள், பேசினாளா என்றும் எப்படிப் பேசினாள் என்றும் தீவிரமாகக் கேட்டறிந்ததைக் கண்ட மஞ்சரி சிரித்தாள். "உங்களுக்குத் தெரிந்தவளா?"என்று வல்லபனிடம் கேட்க அவனோ அவள் மீது தனக்கு ஓர் அனுதாபம் தோன்றியதாகவும் அதனால் கேட்டதாகவும் சொன்னான். 

Tuesday, May 25, 2021

காஞ்சிபுரத்தில் இளைஞர்கள்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

தயா சதகம் பாடி கோபண்ணாவை வழி அனுப்பி வைத்தார் தேசிகர். கோபண்ணாவும் தன் அந்தரங்க வேலைக்காரர்களுடன் கிழக்கு நோக்கித் திருமலையில் போய்த் தேடும் எண்ணத்துடன் கிளம்பினார். இரண்டாவது கோஷ்டியாக அவர்கள் சென்றனர்.
***************************************************** 
இங்கே வல்லபனும், தத்தனும் கடைசியாகத் தங்கிய இடத்திலிருந்து இடைவிடாது பயணித்துக் காஞ்சிபுரத்தை அடைந்திருந்தனர். காஞ்சிபுரம் எத்தனையோ பேரின் ஆட்சிகளைக் கண்டிருந்தது. அந்தக் கால கட்டத்தில் சம்புவராயரின் கட்டுப்பாட்டில் இருந்தது. சம்புவராயரின் ராஜ்யத்திற்கு "ராஜ கம்பீரம்" என்னும் பெயர் வழங்கி வந்தது.  காஞ்சிபுரம் செல்ல அவர்கள் மனம் தயங்கினாலும் வேறு வழியில்லாமல் மஞ்சரிக்காகச் செல்ல வேண்டி வந்தது. தங்களிடம் அவள் பொறுப்பை அவள் தாத்தா சுமத்திவிட்டதாக இருவருமே நினைத்தனர். காலை வேளையிலே காஞ்சிபுரத்துக்குள்ளே நுழைந்த அவர்கள் அந்த நகரின் வீதிகள் அப்போது இருந்த சுறுசுறுப்பைக் கண்டு வியந்தார்கள். இத்தனைக்கும் பழைய பெருமை எல்லாம் குறைந்து இருந்தது காஞ்சிபுரம். யானை ஒன்றின் மீது திருமஞ்சனக்குடம் வைக்கப்பட்டு அதன் அருகே இருபக்கமும் அம்பாரியில் பட்டாசாரியார்கள் வீற்றிருந்து கவரி வீசி வர, சங்குகளும் எக்காளங்களும் சப்தமிட பெரிய பெரிய குடைகளுடன் ஊர்வலம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட இளைஞர்களுக்கு வியப்பு அதிகமாய் இருந்தது. இம்மாதிரி ஒரு காட்சியை அவர்கள் கண்டதே இல்லை.

நகரத்தின் வீதிகள் கலகலப்புடன் இருந்ததோடு அல்லாமல் போவோரும் வருவோருமாக, வண்டிகள் ஆங்காங்கே ஓசைப்படுத்தப் பல்லக்குகளிலும் பயணித்த மனிதர்களோடு தெருக்கள் போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டன.  அங்கே வரை சுல்தான்களின் கொடுமைகள், கொடூரங்கள் வராத காரணத்தால் மக்கள் முகங்களும் மலர்ந்து நிச்சலனமாகக் காணப்பட்டன. இது வல்லபனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.  எங்கு பார்த்தாலும் மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டு, கமுகு, வாழைமரங்கள் போன்றவையும் கட்டப்பட்டிருக்கவே ஊரில் ஏதோ திருவிழா/அல்லது வேறு ஏதோ விசேஷம் என இருவரும் விசாரித்துத் தெரிந்து கொண்டனர்.  எங்கு பார்த்தாலும் அலங்காரப் பந்தல்களும், அலங்கரிக்கப்பட்ட விசித்திரமான சித்திரங்களுமாகக் காணப்பட்ட வீதிகள் அத்ஹ்டனையும் சுத்தமாகவும் நீளமும் அகலமுமாகக் காணப்பட்டதோடு விதம் விதமான மாக்கோலங்கள் வீதிகளை அலங்கரித்தன.  வல்லபனுக்கும் தத்தனுக்கும் தாங்கள் ஏதோ மாயாலோகத்தில் நுழைந்து விட்டாற்போல் உணர்ந்தார்கள். 

ஆங்காங்கே திண்ணைகள், மாளிகையின் பெரிய கூடங்களில் திவ்யப்ரபந்தங்களைச் சேவிக்கும் கோஷங்களும் அவ்வப்போது கேட்டன.  அதைத் தவிரவும் ஆங்காங்கே பல வீடுகளில் இருந்து வேத கோஷங்களும் ப்ரபந்தங்களின் கோஷங்களுக்கு இணையாகப் போட்டி போட்டுக் கொண்டு கேட்டன.  அதைக் கண்ட வல்லபனுக்கு நெஞ்சு குமுறியது! தத்தனிடம், "தத்தா! நம் நாடும் தமிழ் பேசும் நாடு தானே! அங்கேயும் இப்படித்தானே இருந்திருக்க வேண்டும். இத்தனை கோலாகலங்களோடு ஜனங்கள் வாழ்ந்திருபபர்கள் அல்லவா?  இந்த சுல்தான்களின் ஆட்சியில் அனைத்தும் மறைந்தும்/மறந்தும் போய் விட்டன அல்லவா?" என்று மனம் நொந்து கலங்கினான் வல்லபன். மஞ்சரியும் இதுநாள் வரை சுல்தான்கள் ஆட்சியிலேயே இருந்ததால் அவளுக்கும் இதெல்லாம் புதுமையாகவே இருந்தது.  காஞ்சியின் காட்சிகள் பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் உண்டு பண்ணின. 

மூவரும் ஓர் சத்திரத்தைத் தேடிப் பிடித்துத் தங்க எண்ணினார்கள். அதன் பின்னர் எப்படியேனும் மஞ்சரியின் மாமனைத் தேடி அவரிடம் அவளை ஒப்படைக்க வேண்டும்.  ஆகவே சத்திரம் ஒன்றைக் கண்டு பிடித்து அங்கே தங்க இடம் பார்த்துக் கொண்டு மஞ்சரியை அங்கே பாதுகாப்பாக இருக்க வைத்துவிட்டுப் பின்னர் இருவரும் மஞ்சரியின் மாமனைத் தேடிச் சென்றார்கள்.  பகல் முழுவதும் தேடியும் மஞ்சரி சொன்ன "சிங்கழகர்" என்னும் பெயருள்ள அந்த மாமனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மாலையும் ஆகி விட்டது. கலங்கி நின்ற அவர்களில் தத்தன், வல்லபனைப் பார்த்து, "வல்லபா! ஊரில் உள்ள வைணவ மடங்களில் கேட்டுப் பார்க்கலாமா? நான் அவற்றிற்குச் சென்று ஒவ்வொன்றாக விசாரித்துக் கொண்டு வருகிறேன். இப்போது இரவாகி விட்டதால் மஞ்சரிக்கு யாரேனும் காவல் இருக்க வேண்டும். ஆகவே நீ போய்ச் சத்திரத்தில் அவளுக்குத் துணை இரு!" என்று சொன்னான்.

அதன் பேரில் வல்லபன் சத்திரத்துக்கு வந்து ஓய்வு எடுத்துக் கொண்டு சத்திரத்தின் முற்றத்தில் இருந்த துளசிமாடத்துக்கு அருகே உள்ள மேடையில் அமர்ந்து கொண்டு யோசனையில் இருக்க உள்ளே இருந்த மஞ்சரி வெளியே வந்து வல்லபனைப் பார்த்த வண்ணம் எதிரே அமர்ந்து கொண்டாள். தத்தன் தனியே தேடப் போயிருப்பது குறித்துத் தன் கவலையைத் தெரிவித்தாள். தத்தன் மீது அவள் வைத்திருக்கும் கரிசனமும் , பாசமும் வல்லபனைக் கவர்ந்தன. 

Wednesday, May 19, 2021

மஞ்சரியின் கதை! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 வல்லபன் தானும் அந்தப் பெண்ணின் மாமா மூலம் அரங்கன் குறித்த தகவல்கள் கிடைக்கும் என நம்பியே ஒத்துக் கொண்டதாகவும், மேலும் அவர்கள் இருவரும் அந்தச் சேவகர்களின் கொடுமையிலிருந்து தப்பிக்கவும் இந்தப் பெண் உதவியதாலும் அவளைக் கூட அழைத்துவரச் சம்மதித்ததாகச் சொன்னான். அதை தத்தனும் ஒத்துக் கொண்டான். மேலும் சொன்னான். அந்தச் சேவகர்கள் இவர்களைத் தேடிக் கொண்டு வைத்தியர் வீட்டில் சோதனை போட்டபோது தான் மட்டும் புழக்கடைக் கிணற்றுக்குள் இறங்கி ஒளியவில்லை எனில் அவர்களிடம் மாட்டிக் கொண்டிருப்போம் எனவும் உயிருடன் தப்பி இருக்க முடியுமா என்பதே சந்தேகம் எனவும் சொன்னான். அதுவும் அந்த ஆழமான கிணற்றின் கடைசி உறையில் தான் நின்று கொண்டிருந்ததாகவும் மயக்கம், மயக்கமாய் வந்ததாகவும் சமாளித்துக் கொண்டு இருந்ததாயும் சொன்னான். 

அப்போது வல்லபன் தத்தன் ஜன்னி கண்டு நினைவின்றிப் படுத்திருந்த காலத்தில் அவனை அடையாளம் கண்டு கொண்ட சேவகன் ஒருவன் அவனருகே வருவதைப் பார்த்துவிட்டு அந்தப் பெண் மஞ்சரி தத்தன் இறந்துவிட்டான் எனப் பொய் சொல்லி அவனருகில் அந்தச் சேவகன் வராதவாறு தடுத்ததோடு அல்லாமல் குச்சிலில் தத்தனை மறைத்து வைத்துப் பணிவிடைகள் செய்து மருந்துகளை நேரம் தவறாமல் கொடுத்து அவனைக் காப்பாற்றியதையும் சொன்னான். தத்தன் அதற்கு இதெல்லாம் ஓர் உதவியா எனச் சிரிக்க, வல்லபனோ இந்த உதவிக்கு மட்டுமின்றி அந்தப் பெண் வந்து பணிவிடைகள் செய்ததற்கும் தத்தன் அதிர்ஷ்டம் பண்ணி இருக்கவேண்டும் எனவும் இல்லை எனில் இதெல்லாம் நடந்திருக்காது என்றும் சொன்னான்.  தத்தனோ மிகத் தீவிரமான மனோநிலையில் இவை எல்லாம் நடந்ததற்குத் தன் விதி தான் காரணம் எனவும், தான் பிழைக்கவேண்டும் என்பது விதி என்றும் அதனால் தான் தான் பிழைத்ததாகவும் சொன்னான்.

வல்லபனுக்கு தத்தன் பேச்சுப் பிடிக்காததால் மௌனமானான். அதைக் கண்ட தத்தன் அவனைப் பேச்சுக்கு இழுக்க நினைத்துத் தான் அரங்கனைப் பற்றிய தகவல்களைத் தேடுவதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பதாய்ச் சொன்னான். வல்லபன் தனக்கும் அதே குறிக்கோள் தான் என்றான்.  மேலும் அதனால் தான் அந்தப் பெண் நம்மோடு வந்தால் அவள் மாமாவைப் பார்த்துத் தகவல் அறிய வசதியாக இருக்கும் என நினைத்து அவளையும் கூட அழைத்து வந்ததாகவும் வல்லபன் கூறினான். மேலும் வல்லபன் அவள் கூட வரும் அவள் பாட்டனார் அந்தப் பெண்ணை அவள் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என எண்ணுவதாகவும் அதற்குத் தான் உதவியாக இருக்கப் போவதாகவும் கூறினான்.  அப்போது பக்கத்து அறையில் இருந்து மஞ்சரி ஓடி வந்து இவர்கள் இருவரையும் அழைத்தாள். பெரியவர் எப்படியோ பார்ப்பதாகவும் தனக்குப் பயமாக இருப்பதால் அவர்கள் இருவரும் துணைக்கு வரவேண்டும் எனவும் அழைத்தாள்.

இருவரும் ஓடோடிச் சென்று பார்த்தால் கிழவர் உடல் தூக்கித் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது. கண்கள் ஒரு மாதிரியாகச் சொருகிக் கொண்டிருந்தன. பார்க்கவே பயமாக இருந்தது. தத்தன் அவர் அருகே போய் உட்கார்ந்து கொண்டான். சற்று நேரத்தில் அவர் மயக்கத்திலிருந்து விழித்துப் பார்த்தார். தத்தனை அடையாளம் கண்டு கொண்டார். மஞ்சரியிடம் குடிக்க வெந்நீர் கொண்டுவரச் சொல்லிவிட்டு அவர் தத்தனிடம் பேசலானார்.  தான் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு வடக்கே காஞ்சியை நோக்கிச் செல்வதாகவும் இவள் தன்னுடைய பேத்தி என்று, சொன்னவர் வழியில் தனக்கு ஜுரம் கண்டதால் பூங்குளத்தில் வைத்தியரிடம் தங்கிச் சிகிச்சை பெற்றதையும் சொன்னார். ஆனாலும் தனக்கு வயது ஆகிவிட்டதால் இனித் தான் பிழைக்கப் போவதில்லை என்று நம்புவதாகவும் சொன்னார். அதற்கு முன்னர் அந்தப் பெண்ணிற்குத் தான் செய்ய வேண்டிய கடமை ஒன்றிருப்பதாகவும் அதைத் தான் இப்போது தத்தனிடம் கூறப்போவதாகவும் சொல்லிவிட்டு அவனை அருகே அழைத்துக் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

அந்தப் பெண் மஞ்சரி அவள் பெற்றோர்களுக்கு ஒரே பெண் என்றும் குழந்தைக்குப் பிரார்த்தனையை நிறைவேற்றத் திருப்பதிக்குக் குழந்தையையும் தூக்கிக் கொண்டு திருப்பதி செல்ல நினைத்தவர்கள் குழந்தை உடல் நலம் இல்லாமல் இருந்ததால் ஊரிலேயே விட்டு விட்டுக் கணவன், மனைவி இருவரும் மட்டும் சென்றதாகவும் அவர்கள் சென்ற வழியில் தான் அப்போது கண்ணனூர்ப் போர் நடந்ததாகவும் தெரிவித்தார். கண்ணனூர்ப் போரில் வெற்றி பெற்ற துருக்கியர்கள் அந்தக் கொண்டாட்டத்தில் அக்கம்பக்கம் ஊர்களை எல்லாம் சூறையாடிப் பெண்களை பலவந்தம் செய்து என்று பல அக்கிரமங்கள் செய்ததாகவும், அவர்கள் கைகளில் மாட்டிக் கொண்ட இந்தத் தம்பதியர் அவர்களால் கொல்லப்பட்டதையும் கூறினார். ஆனால் அந்தப் பெண்ணுக்கு அதைத் தெரிவிக்கவில்லை என்றும் பெற்றோர் வந்துவிடுவார்கள் என்றே சொன்னதாகவும் சொன்னார்.  பெற்றோர்களைப் பார்க்க வேண்டும் என்ற பெண்ணிடம் காஞ்சியில் மாமன் வீட்டில் இருப்பதாகப் பொய் சொன்னதாகவும் நாட்டில் நடக்கும் கலவரங்களால் இப்போது போக முடியாது என்றும் நாட்களைக் கடத்தியதாகவும் மேலும், மேலும் அவள் வற்புறுத்தல் தாங்காமல் தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகச் சொன்னார்.  இதைச் சொல்லும்போதே அவருக்குப் பலத்த இருமல் வரப் பேசமுடியாமல் தவித்தார். விடாமல் நீடித்த இருமல் அவர் உயிரை வாங்கிக் கொண்ட பின்னரே நின்றது.

**************************************************

திருநாராயணபுரம், மஹான் வேதாந்த தேசிகரின் வீடு. காலை வேளை. பட்சிகளின் விதம் விதமான கூவல்கள் அந்த இடத்தையே ஒளிரச் செய்து கொண்டிருந்தது. வேதாந்த தேசிகரைப் பார்க்க கோபண்ணா வந்திருந்தார். அவரை நமஸ்கரித்துத் தான் திருப்பதி யாத்திரை மேற்கொண்டிருப்பதாகவும் ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அவரது ஆசிகளைப் பெற்றுக் கொண்டவர் தனக்கு இன்னொரு ஆசையும் உண்டென்றும் அது தான் அரங்கனைத் தேடுவது என்றும் அதற்கும் தேசிகரின் ஆசிகள் தேவை என்றும் சொன்னார். அரங்கன் அருள் இருந்தால் எல்லாம் நல்லபடி நடந்து நன்மையாகவே முடியும் என ஆசிகளைத் தந்த தேசிகர் "தயா சதகம்" என்னும் நூலை இயற்றிப் பாட ஆரம்பித்தார்.

Sunday, May 16, 2021

நண்பர்களுக்குள் தர்க்கம்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 எதிர் வீட்டில் காணப்பட்ட அந்த அழகி தன்னைக் கவனிக்கவில்லை என்பதில் வல்லபனுக்கு வருத்தம் தான். மனது வேதனைப் பட்டது. அவன் மச்சிலில் புகுந்து ஓய்வு எடுக்கும்போதெல்லாம் அந்த தேவதாசிப் பெண்மணி சுகிர்த ரத்னா வந்து பார்த்து வல்லபனை விசாரித்துச் சென்றாள். அந்தச் சேவகர்கள் ஊரில் எல்லா வீடுகளிலும் நுழைந்து புகுந்து சோதனைகள் போட்டுத் தேடுவதையும் அட்டகாசம் செய்வதையும் சொல்லி வருந்தினாள்.  இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் தங்கள் இஷ்டத்துக்கு நடந்து கொள்கின்றனர் என்றும் வருந்தினாள். நாடு உண்மையிலேயே சீரழிந்து விட்டதாகவும் நல்ல நடவடிக்கைகள், நல்லெண்ணெங்கள் மறைந்து வருவதாகவும் போகப் போக என்னாகுமோ என்னும் கவலை ஏற்படுவதாகும் சொன்னாள். அவள் சொன்னது சற்றும் மிகையில்லை என்பதைப் போல் அந்த ஊரிலே அனைவருக்கும் மனதில் கலக்கம் ஒன்று வந்துவிட்டது. சேவகர்கள் அனைவரும் அந்த அளவுக்கு ஊர் மக்களைப் படுத்தி எடுத்தார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்குமே இதன் காரணம் புலப்படவில்லை.

அந்தச் சேவகர்கள் சம்புவராயரின் சேவகர்கள் அல்ல என்றும் யாரோ கொள்ளைக்காரர்கள் என்றும் சிலர் சொல்ல இன்னும் சிலர் யாரோ உயர்ந்த குடியில் பிறந்தவர்களை இவர்கள் கடத்திக்கொண்டு செல்வதாகவும் இவர்கள் கை தேர்ந்த கடத்தல்காரர்கள் என்றும் உறுதியாகச் சொன்னார்கள். இதைப் பற்றியே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருந்த ஊர் மக்களுக்கு அன்றிரவே அவர்கள் அனைவரும் ஊரைக் காலி செய்து கொண்டு போய்விட்ட செய்தி மறுநாள் கிடைத்ததும் தான் நிம்மதி ஆயிற்று. மழைக்காலம் இன்னமும் விடாததால் இரண்டு நாட்கள் வெறித்திருந்த வானம் அன்று மோடம் போட்டு மழையும் பெய்தது. அந்த ஊரில் இருந்த பெரிய ஏரி நிரம்பி வழிந்தது. வடிகால்கள் வழியே நீர் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. ஏரிக்கரைக்குச் சற்றே தள்ளி ஓர் மேடான இடத்தில் ஓர் மண்டபம் காணப்பட்டது.  பதினாறு தூண்களுடன் பதினாறுகால் மண்டபம் என்றும் அழைக்கப்பட்ட அது அந்த வழியாகச் செல்லும் பயணிகள் தங்கி இளைப்பாறிச் செல்லவென்று ஏற்படுத்தப்பட்டது. சிற்பங்கள் பல செதுக்கப்பட்டிருந்தன.

தண்ணீர் அருகிலேயே ஏரியில் கிடைப்பதால் யாத்ரிகர்கள் அங்கே தங்கிக் குளித்துக் கடமைகளை முடித்துக் கொண்டு உணவும் சமைத்து உண்டு ஓய்வு எடுத்துப் பின் செல்வது வழக்கமாக இருந்தது. அன்றைக்கு இரவு வரை மழை பெய்ததால் ஓர் ஊதல் காற்றுடன் அந்த இடமே ஈரப்பிசுபிசுப்புடன் காணப்பட்டது. வெளியே இருந்து எழுந்த சத்தங்களைப் போல் மண்டபத்துக்கு உள்ளே இருந்தும் ஓர் முனகல் கேட்டது. வயோதிகர் ஒருவர் உடல்நிலை சரியில்லாதவரின் முனகல் குரல். மண்டபத்தின் தரையில் கோரைப்பாயைப் பரப்பி மேலே துணிகளைய்ப் போட்டுப் பெரியவரைப் படுக்க வைத்து விட்டு அருகே அமர்ந்திருந்தால் ஓர் இளம்பெண். அவருக்குப் பணிவிடைகளை அவள் தான் செய்து கொண்டிருந்தாள். அந்த மண்டபம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மண் சுவரைத் தற்காலிகமாய் எழுப்பி இரு தனி அறைகள் போலச் செய்திருந்தார்கள். அதில் தான் ஒன்றில் அந்தப் பெரியவரைப் படுக்க வைத்திருந்தாள் அந்த இளம்பெண். அவர் தலைமாட்டில் ஓர் விளக்கு மென்மையான ஒளியைத் தந்து கொண்டிருந்தது. 

அந்தப் பெண் உள்ளே பெரியவரைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மண்டபத்தின் இன்னொரு ஓரத்தில் இருந்த ஓர் யாளிச் சிற்பத்தின் மீது சாய்ந்து கொண்டு வல்லபனும், தத்தனும் பேசிக் கொண்டிருந்தனர். உண்மையில் காரசாரமான விவாதம். அந்தப் பெரியவரையும், இளம்பெண்ணையும் வல்லபன் தன் பொறுப்பில் அழைத்து வந்திருப்பான் போல் அவர்கள் பேச்சில் இருந்து தெரிந்தது. அதை முழுத்தவறு என ஆணித்தரமாகச் சொல்லிக் கொண்டிருந்தான் தத்தன்.  தத்தனைக் கேட்டுக் கொண்டே தான் முடிவெடுத்ததாய்ச் சொன்ன வல்லபனிடம் தத்தன் தான் ஒத்துக் கொண்டதற்கான காரணமே வேறே என்று சொன்னான்.

"அந்தப் பெண்ணின் மாமன் ஒருவர் அரங்கனுடன் புறப்பட்ட ஐந்து பேரில் ஒருத்தர். ஒருவேளை இப்போது அவர் காஞ்சியில் இருந்தால் அவரைச் சந்தித்தால் அரங்கனைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் புதிதாக இருந்தால் நமக்குத் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும். நம் காரியத்திற்கும் உதவியாக இருக்கும். அதனால் தான் நான் ஒத்துக் கொண்டேன்." என்று தத்தன் சொல்ல, வல்லபன் அது மட்டும் காரணம் அல்ல என்றும் அந்தப் பெண் தத்தனின் உயிரைக்காப்பாற்றியதோடு வல்லபனையும் சேவகர்கள் பிடித்துச் செல்லாவண்ணம் காப்பாற்றிப் பாதுகாத்தாள் என்பதால் அவளுக்குத் தாங்கள் செலுத்தவேண்டிய நன்றிக்கடனாகவும் கூடவே அழைத்து வந்ததாய்ச் சொன்னான்.

Wednesday, May 12, 2021

வல்லபன் மறைந்திருந்த இடம்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

உள்ளே நெடுகிலும் பார்த்துவிட்டு மீண்டும் கூடத்துக்கூ வந்த அவர்களுக்கு முகங்களில் வெறுப்பும், தேடியதனால் ஏற்பட்ட களைப்புமாகத் தெரிந்தது. மஞ்சரியையும் அவர்கள் வெறுப்புடன் பார்த்தார்கள். பின்னர் எதுவுமே சொல்லாமல் வெளியே சென்றனர். மஞ்சரி அவர்கள் கொஞ்ச தூரம் போய்விட்டதை நிச்சயப்படுத்திக் கொண்டு உள்ளே குச்சிலுக்கு ஓடினாள். குச்சிலில் சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தாள். அங்கே யாரையுமே காணோம்! எங்கே போயிருப்பார் அவர்? மஞ்சரி கலக்கம் அடைந்தாள்.  அங்கிருந்த குதிர்களைத் திறந்து பார்த்தாள். பானைகளின் உள்ளே ஒளிந்திருப்பாரோ எனத் தேடினாள். மேலுள்ள பரண்களில் படுத்திருப்பானோ என எம்பி எம்பிப் பார்த்தாள். எங்கேயுமே காணவில்லை. புழக்கடைக் கதவைத் திறந்து அங்கே வெளியே எங்காவது மறைந்திருப்பானோ என்றும் பார்த்தவளுக்கு எங்கேயுமே காணோம் என்றதும் துக்கம் மேலோங்கியது. அயர்ந்து போய் அங்கேயே அமர்ந்தாள்.

சித்திரசாலையில் இருந்து இனிமையான மணங்கள் எல்லா இடங்களிலும் பரவிக் கொண்டிருந்தன. மேல் மாடம் முழுவதும் பரவி நிறைந்து எங்கும் இனிய மணம் வீசிற்று. கூடவே இனிய கீதம் மெல்ல மெல்ல சிற்றலையைப் போல் கிளம்பிற்று. ஐந்து தினங்களாய்த் தொடர்ந்த இந்த இனிய மணமும், இனிய கீதமும் அவனுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. எங்கோ ஓர் உலகில் சஞ்சரிப்பதைப் போல் உணர்ந்தான். எனினும் வல்லபனுக்கு தத்தன் கதை என்னவாகி இருக்குமோ என்னும் கவலை வாட்டி எடுத்தது.கடுமையான ஜூரத்துடன் நோயாளியாகக் கட்டிலில் படுத்திருந்தானே! அவனை அந்தச் சேவகர்கள் கண்டு பிடித்திருப்பார்களோ? பிடித்துக் கொண்டு போயிருப்பார்களோ! அப்படி அவர்கள் பிடித்துச் செல்லவில்லை என்றாலும் நோயின் கடுமையிலிருந்து அவன் தப்பி உயிர் பிழைத்திருப்பானா?  மேற்கொண்டு பிரயாணம் செய்யவும் யோசனை தான். ஏனெனில் சோதனைகள் தொடர்ந்து வந்து சூழ்கின்றன. இந்தச் சேவகர்கள் எங்காவது தொலைந்தால் தான்! மேலே என்ன செய்யலாம் என யோசிக்கவே முடியும். 

ஆனாலும் இவர்கள் வந்ததால் தானே அந்த மங்கையையும் பார்க்க முடிந்தது. இல்லை எனில் அவளுடன் சந்திப்பே நடந்திருக்காதே! அந்த அழகிய முகமும் அந்த நீண்ட பெரிய கண்களால் அவள் பார்ப்பதும் தனி சுகம். இவ்விதம் யோசித்தவனுக்கு அந்த மாடத்துக்குப் படிகளில் ஏறி யாரோ வரும் அரவம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தான் வல்லபன். உள்ளே வந்தவள் சுகிர்த ரத்னா என்னும் பெண்மணி. எம்பெருமாண்டியார் கூட்டத்தைச் சேர்ந்தவள். தேவதாசிகளை அந்நாட்களில் எம்பெருமாண்டியார் என அழைத்து வந்தனர். அவள் கண்ணன் மேல் அபார பிரேமை கொண்டவள். சங்கீதம், நிருத்தியம், சித்திரம், ஆரூடம் என அனைத்திலும் தேர்ந்தவள். நன்கு கற்றுத் தேர்ந்த அவளுக்கு எல்லோரையுமே கண்ணனாகப் பார்க்கும் இயல்பு கை வந்திருந்தது. பார்க்குமிடமெல்லாம் அவள் கண்ணனையே பார்த்தாள். அவள் மனம் கண்ணனின் பிரேமையில் ஆழ்ந்திருந்தது. 

மேலே வந்தவள் வல்லபனைப் பார்த்து, "கண்ணா! காலையிலிருந்து எந்த உணவும் சாப்பிடாமல் பட்டினியாகவே இருக்கிறாயே!எனக்குக் கவலை தாங்கவில்லை என்பதால் உணவை எடுத்துக் கொண்டு நானே வந்தேன்!" என்றபடி கையிலிருந்த வெள்ளித்தட்டுக்களை அவன் முன்னர் வைத்தாள். அவனைக் "கண்ணா!" எனப் பல முறை அழைத்து அவன் வேண்டிய மட்டும் உணவு படைத்துவிட்டுக் கீழே சென்றால் சுகிர்த ரத்னா! வல்லபன் இங்கே வந்ததில் இருந்து அவனைக் கவனித்துக் கொள்பவள் அவள் தான். அவன் தாயைப் போலவே இவளும் அவனிடம் பரிவு காட்டினாள்.  அன்பு ஒன்றைத் தவிர அவளிடம் கொடுப்பதற்கு வேறு எதுவும் இல்லை என்பதை நிதரிசனமாக உணர வைத்தாள்.  சத்திரத்து வாசலில் போக இடம் இல்லாமல் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்த வல்லபன் தற்செயலாக இவளைப் பார்த்தான். அவளிடம் விஷயத்தைச் சொன்னதும் மிகவும் மகிழ்வுடன் அவனை அவள் தன் விருந்தாளியாக ஏற்றுக் கொண்டாள்.

வல்லபன் உணவை உண்டு முடிக்கையில் கீழே சென்றிருந்த சுகிர்தரத்னாவிடம் யாரோ ஏதோ விசாரிக்கும் குரல் கேட்டது. ஆஹா! இந்தத் தோரணையான குரல்! அந்தச் சேவகர்களில் ஒருவன் அல்லவோ? வல்லபன் எச்சரிக்கை அடைந்தான்.  அந்தக் குரல் வீட்டில் யார் இருக்கிறார்கள் என சுகிர்த ரத்னாவிடம் விசாரித்துக் கொண்டிருந்தது. நாங்கள் வீட்டுச் சொந்தக்காரர்கள் தாம் என சுகிர்தா மறுமொழி கொடுப்பதும் அதற்கு அவர்கள் வீட்டைச் சோதனை இட வேண்டும் எனவும் சொல்லுவதைக் கேட்டான் வல்லபன். சுகிர்தாவின் மறுப்பும், அவர்களின் வற்புறுத்தலும் சோதனைக்கு வழிவிடும்படியான ஆணையும் வல்லபன் காதில் கேட்டது. சுகிர்தாவை மீறிக்கொண்டு அவர்கள் உள்ளே நுழையப் பிரயத்தனப் படுவதும் அவனுக்குப் புரிந்தது. ஆனால் சுகிர்தாவோ உரத்த குரலில் "நில்லுங்கள்!" எனக் கத்திக் கொண்டே அவர்களைத் தடுத்தாள்.

தங்களைத் தடுக்கக் கூடாது எனச் சேவகர்கள் கூறுவதும் அவர்களிடம் "நீங்கள் சம்புவராயர் நாட்டைச் சேர்ந்தவர்களா?" என சுகிர்தா விசாரிப்பதும் வல்லபன் காதில் விழுந்தது. அவர்கள் அதை ஆமோதிக்கவும் சுகிர்த ரத்னா உடனே தாங்கள் இருப்பது சுரத்தான் நாடு. இங்கே சம்புவராயர் நாட்டுச் சட்டங்கள் செல்லாது எனவும் அதற்கு அந்தச் சேவகர்கள் இன்னும் ஒரு காத தூரத்துக்கு மேலே எல்லைக்குப் போயாக வேண்டும் என்றும் சொன்னாள். சுரத்தானுக்குத் தேவைப்படும்போது ஆயிரம் பேருக்கு மேல் படையைத் தான் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் இவர்கள் மீறி உள்ளே நுழைந்தால் சுரத்தானிடம் போய்ப் புகார் செய்யப் போவதாயும் திட்டவட்டமாய்க் கூறினாள். சேவகர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு விழித்தார்கள். அவர்களை விரட்டினாள் சுகிர்தா. சுரத்தானுக்கு ஆள் அனுப்பப் போவதாகவும் பயமுறுத்தினாள். சற்று நேரம் எதுவும் பேச்சு இல்லாமல் இருந்தார்கள் அனைவரும். பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் அங்கிருந்து வெளியேறுவது வல்லபனுக்குக் காலடி ஓசைகளில் இருந்து புரிந்தது.

வல்லபன் உடனே திட்டி வாசலுக்கு வந்தான். அங்கிருந்து தட்டோட்டிக்குச் சென்று கைப்பிடிச் சுவர் வழியாக வெளியே எட்டிப் பார்த்தான். அவன் பார்த்த உயரத்திலிருந்து கீழே இருந்த ஆட்களின் தலைகள் மட்டுமே தெரிந்தன. ஆவலோடு பார்த்தான் வல்லபன். மூன்று சேவகர்கள் வெளியேறுவது அவனுக்குத் தெரிந்தது. அளவற்ற சந்தோஷத்துடன் திரும்புகையில் தற்செயலாக அவன் பார்வை எதிர் மாடியின் சாளரத்திற்குச் சென்றது. அப்படியே உறைந்து போய் நின்றான் வல்லபன். அங்கே அந்தப் பெண் நின்று கொண்டு இங்கே கீழேயே பார்த்துக் கொண்டு இருந்தாள். அந்தப் பெண் தலை நிமிர்ந்து தன்னைப் பார்ப்பாளோ என வல்லபனுக்குள் ஆவல் மீதூறியது. அவளையே கவனித்துக் கொண்டிருந்தான். அவளோ அங்கும் இங்குமாய்ப் பார்த்துவிட்டு ஒரு கணம் வல்லபனைப் பார்ப்பது போல் இருந்த நேரத்தில் சட்டெனப் பார்வையைத் திருப்பி விட்டாள். வல்லபன் கண்களில் இருந்து ஆறாகக் கண்ணீர் பெருகியது.

Monday, May 10, 2021

மஞ்சரியின் கலக்கம்! ஶ்ரீரங்கரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 வல்லபனைத் தேடிக் கொண்டு சத்திரத்தை நோக்கி நடந்தாலும் மஞ்சரிக்குத் தன்னை யாரோ பின் தொடருவதாகவே தோன்றியது. இருந்தாலும் அங்கும் இங்குமாகச் சிறிது சுற்றி விட்டுச் சந்துகளுக்குள் புகுந்து சத்திரத்தை அடைந்தாள். கூடத்துக்குள் நுழைந்தாளோ இல்லையோ! யாரோ அவள் கைகளைப் பிடித்து இழுத்தார்கள். திடுக்கிட்ட மஞ்சரி திகைத்துத் திரும்பிப் பார்த்தால் ஏற்கெனவே அறிமுகம் ஆன சேவகர்களில் ஒருவன். சிரித்துக் கொண்டு நின்றிருந்தான். திகைத்த மஞ்சரி நொடியில் தன்னைச் சமாளித்துக் கொண்டாள். அவனைப்பார்த்துத் தன்னைத் தொடக் கூடாது எனவும் தொட்டால் சம்புவராயரிடம் புகார் கொடுப்பேன் என்றும் எச்சரித்தாள். சம்புவராயர் பெயரைக் கேட்ட அந்த சேவகன் கொஞ்சம் தயங்கினான். பின்னர் இந்தச் சின்னஞ்சிறு பெண்ணுக்குப் பயப்படுவதாவது என்று தோன்றியோ என்னமோ அவளைப் பார்த்து, "ஆமாம், ஆமாம்! உனக்குத் தான் அவரை நன்றாகத் தெரியுமே!" என்று கேலி செய்தான்.

ஆனால் மஞ்சரியோ அசராமல், "ஆமாம்! நானும் என் தாத்தாவும் அவரைப் பார்க்கவே இங்கே வந்தோம். போகப்போகிறோம் அவரைப் பார்த்துப் பேச!" என்றாள். சேவகன் திகைப்புடன் அவளைப் பார்த்து அவள் சத்திரத்துக்கு வந்த காரணம் என்னவெனக் கேட்க சத்திரத்துப் பாட்டியைப் பார்த்துப் பேச வந்ததாய் மஞ்சரி பொய் சொன்னாள்.  சேவகனோ இன்னமும் திகைத்துப் பாட்டி ஒருத்தி இங்கே எங்கே வந்தாள் என்ற யோசனையில் ஆழ்ந்தான். அதை அவளிடம் கேட்கவும் கேட்டான். அவளோ அவன் சொன்னதையே அவனிடம் திருப்பிக் கேட்டுவிட்டு அங்குமிங்கும் சுற்றிப் பார்த்துவிட்டுச்சத்திரத்தை விட்டு வெளியேறி வீதிகளில் நடக்க ஆரம்பித்தாள். மஞ்சரி மருத்துவசாலைக்கூ வரும் வழியெல்லாம் யோசித்துக் கொண்டே வந்தாள்.

தாத்தா தன்னிடம் மற்றவர்களுக்கு அதிலும் முகம் தெரியாதவர்களுக்கு எல்லாம் உதவி செய்ய வேண்டாம். நமக்கே ஆபத்து வரும் என்று சொன்னதை நினைத்துப் பார்த்து அதே போல் இப்போது ஆகிவிட்டதே என நினைத்துக் கொண்டாள். பின்னர் அவள் மனம் வல்லபன் எங்கே போயிருப்பான்? தான் தத்தனுக்கு என்ன பதில் சொல்லுவது என்றெல்லாம் யோசனையில் ஆழ்ந்தது. மெதுவாக நடந்து மருத்துவசாலைக்கு வந்து படி ஏறினாளோ இல்லையோ குதிரைகளில் ஐந்து நபர்கள் வந்து அவளைச் சூழ்ந்து கொண்டு சத்தம் போட ஆரம்பித்தார்கள். "சம்புவராயரிடம் புகார் செய்வேன் என்றாயாமே! உனக்கு அவ்வளவு தைரியமா? சம்புவராயரிடம் அவ்வளவு செல்வாக்கா?" என்றெல்லாம் கேட்டுக் கொண்டு அவள் சத்திரத்தில் பார்த்த அந்தச் சேவகன் குதிரையிலிருந்து குதித்தான்.

மஞ்சரி ஆத்திரத்துடன் திரும்பினாள். "சொல்லமாட்டேன் என்றெல்லாம் நினைக்காதே! நிச்சயம் சொல்லுவேன்." என்றாள் படபடப்புடன். அதற்கு அவர்கள் இன்னமும் கேலியாக, "சொல்லு!சொல்லு! நிறையப் புகார்களைக் கொடு! நாங்கள் அந்தச் செத்துப் போனவன் பிழைத்துவிட்டான் எனக் கேள்விப் பட்டோம். அதைப் பார்க்கிறோம்!" என்று சொல்லிக் கொண்டே வைத்தியசாலைக்குள் நுழைந்தார்கள்.  மஞ்சரிக்கு இவர்களுக்கு எப்படித் தெரியும் என்னும் எண்ணம் மனதில் வந்தது. இந்த இருவரையும் இந்தச் சேவகர்கள் எதற்காக இப்படித் தீவிரமாகத் தேடுகிறார்கள். உண்மையில் குற்றம் செய்தவர்கள் யார்? அந்த இளைஞர்களா? அல்லது இவர்களா?  என்றெல்லாம் குழம்பிப் போனாலும் உள்ளூர தத்தனைக் காப்பாற்றும்படி அரங்கனை வேண்டிக் கொள்ள ஆரம்பித்தாள்.  அந்த மருத்துவசாலை முழுவதும் போய் அவர்கள் தேடினார்கள். உரத்த குரலில் சப்தம் போட்டுக் கொண்டு அவர்கள் தேடியது மற்ற நோயாளிகளுக்குச் சிரமங்களை உண்டாக்கிற்று. 

உக்கிராண அறையைப் பார்த்துத் தேடிவிட்டு வெளியே வந்தவர்களைப் பார்த்து மஞ்சரி, "ஐயா, சேவகர்களே!" என்று மிக மரியாதையாக அழைத்தாள். அவர்கள் திரும்பவும் அவர்களைப் பார்த்து, "ஐயாமார்களே! இங்கெல்லாம் நீங்கள் அழைப்பில்லாமலோ, உள்ளே நுழைய உத்தரவில்லாமலோ செல்லலாமோ? உள்ளே பல்வேறுவிதமான மூலிகைகள், மருந்துகள் இருக்கின்றன. சில மிகவும் விஷத்தன்மை வாய்ந்தவை. அவற்றை நீங்கள் காரணமில்லாமல் தொட்டு வைத்தால் உங்களைத் தான் பாதிக்கும். அதோடு துர் தேவதைகளை மந்திர சக்தியால் கட்டிக் குடங்களில் அடைத்து வைத்திருக்கின்றனர். நீங்கள் பாட்டுக்குக் குடங்களைத் திறந்து பார்த்தால் என்ன ஆகும்?" என்றாள். ஆனால் அந்த சேவகர்களோ கொஞ்சம் தயங்கினாலும் எதற்கும் கவலைப்படாமல் உள்ளேயும் சென்று தேடிவிட்டே திரும்பினார்கள்.  மஞ்சரி திகிலோடு வெளியேயே காத்திருந்தாள். நீண்ட நேரம் தேடினார்கள் போல! போனவர்கள் திரும்பவில்லை! என்ன ஆயிற்றோ என்னும் கவலையோடு மஞ்சரி உள்ளே இருந்து அவர்கள் வரும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

Friday, April 16, 2021

கோபமும் தாபமும்! ஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்!

 பண்டிதரும் கங்காதேவியும் கோபண்ணாவைப் புனித யாத்திரை மேற்கொண்டு அதன் மூலம் அவர் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம் என ஆலோசனை சொல்ல கோபண்ணாவும் தாற்காலிகமாக இது ஒரு தீர்வு எனில் ஏற்றுக்கொள்ளலாமே என யோசித்தார். அவ்வளவில் எழுந்து இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார் கோபண்ணா. பின்னர் திரும்பி இருவரையும் பார்த்துத் தான் நாளைக்கே பயணம் மேற்கொள்ளப் போவதாகவும் சொன்னார். இருவருமே அதை ஏற்றுக் கொண்டனர்.  அதற்குள்ளாக இங்கே மருத்துவமனையில் இருந்த தத்தனுக்குள் பல யோசனைகள்!

இருட்டாக இருந்த ஓர் குச்சில் தத்தனைப் படுக்க வைத்திருந்தார்கள், அதன் மூலம் தன்னைப் பாதுகாக்கவே இப்படி ஓர் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதையும் தத்தன் அறிந்து கொண்டான். ஆங்காங்கே எலிகள் வேறே அங்குமிங்குமாக ஸ்வாதீனத்துடன் ஓடிக் கொண்டிருந்தன.  வெளிச்சம் வர வழியே இல்லை போலிருக்கே என தத்தன் நினைக்க மேலே உச்சி முகட்டில் ஒரு கண்ணாடித் துண்டு ஒட்டி இருந்தது. அதன் மூலம் கொஞ்சம் வெளிச்சமும் வந்தது. என்றாலும் இவ்வளவு மோசமான இடத்தில் தன்னைக் கொண்டு விட்டுவிட்டு வல்லபன் எங்கே போனான்? தான் ஏன் இங்கே வந்து கிடக்கிறோம்! எழுந்து தான் பார்ப்போமே! என நினைத்தவாறு தத்தன் மெல்ல எழுந்தான். அடுத்த கணம் அவன் கட்டிலில் அப்படியே விழுந்து விட்டான். இத்தனை பலஹீனம் தனக்குள் எப்படி ஏற்பட்டது? இதை நினைத்து தத்தன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். என்னதான் காய்ச்சல் அடித்தாலும் 2,3 நாட்கள் காய்ச்சலில் தனக்கு இத்தனை பலஹீனமா என தத்தன் நினைத்த வண்ணம் இன்னொரு முறை எழுந்து பார்க்க உத்தேசித்தான். 

மெல்ல மெல்ல எழுந்து சுவரைப் பிடித்துக் கொண்டு சற்று நேரம் நின்றுவிட்டுப் பின்னர் சுவரைப் பிடித்த வண்ணமே மெல்ல மெல்ல நடந்து அந்தக் குச்சிலின் வாயிலுக்கு வந்தான். அந்தக் குச்சிலில் இரு வாயில்கள் இருந்ததையும் ஒன்று புழக்கடைப்பக்கம் போவதையும் இன்னொன்று அந்த வீட்டின் உட்புறம் செல்வதையும் கண்ட தத்தன் புழக்கடைப் பக்கத்து வாயிலைத் திறந்தான். பளீரென்ற வெளிச்சம் அவன் கண்களைக் கூசியது. பசுமையானதொரு சோலையும் அங்கே தெரிந்தது. மெல்ல அப்படியே வெளியே செல்லலாம் என நினைத்தவன் போல ஓர் அடி எடுத்து வைத்தான். உடனேயே உள்ளே இருந்து மஞ்சரியின் குரல் கூவும் சப்தம் கேட்டது! "அடடா! பார்த்தீர்களா! இது என்ன வேலை!" என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மஞ்சரி ஓடோடி வந்தாள். இப்படிப் போவது ஆபத்தல்லவோ என்று சொல்லிக் கொண்டே ஓடி வந்து தத்தன் கையைப் பிடிக்க அவன் கோபத்துடன் அவள் கைகளை உதறினான். இம்முறை மஞ்சரிக்கும் கோபம் வந்து அவனை முறைத்துப் பார்த்தாள்.

"ஐயா, மஹானுபாவனே! போங்க! போங்க! தாராளமாய்ப் போங்க! எனக்கு என்ன வந்தது? உங்கள் நண்பர் தான் உங்களுக்கு ஆபத்து இருப்பதைச் சொல்லி எனக்கு எச்சரிக்கையும் செய்துவிட்டுப் போனார். அவர் சொன்னதின் மேல் தான் நான் உங்களைக் கண்ணும், கருத்துமாய்ப் பார்த்துக் கொண்டதோடு உங்களைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன். என் தாத்தா சொல்லிக் கொண்டே இருப்பது போல் மற்றவங்க வேலைகளில் நான் தலையிட்டிருக்கக் கூடாது தான். அதுதான் அவமானப்பட்டு நிற்கிறேன். எனக்கு நன்றாய் வேண்டும். இது போதாது!" என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள். பிறகு தத்தன் கைகளை அவளும் உதறிவிட்டுப் புழக்கடைக் கதவை உள்ளிருந்து சார்த்திக் கொண்டு அங்கிருந்து போய்விட்டாள். தத்தனுக்கு மனசு எப்படியோ ஆகிவிட்டது. அவனும் உள்ளே வந்தான். கட்டிலில் அமர்ந்த வண்ணம், அவளை, "இந்தா!" என அழைக்க அவளோ, "என் பெயர் மஞ்சரி!" என்று கோபத்துடன் சொன்னாள். 

"பேசுவதற்கு உன் பெயர் தேவையா என்ன?" என்றான் தத்தன். மேலும் தொடர்ந்து, "இது என்ன இடம்? எந்த ஊர்? என் நண்பன் வல்லபன் எங்கே? நான் ஏன் இங்கே இருக்கிறேன்? எத்தனை நாட்களாக இருக்கிறேன். எல்லாவற்றையும் விபரமாகச் சொல்!" என்றான் அவளைப் பார்த்து. அவளோ ஹூம் என்ற வண்ணம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. பின்னர் கையிலிருந்த பால் பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு, தான் முன்னர் சொன்னபோது சரியாகக் கேட்டுக் கொள்ளாத தத்தனுக்கு இப்போச் சொல்லத் தன்னால் முடியாது என்ற வண்ணம் எழுந்து உள்ளே போக ஆரம்பித்தாள்.

தத்தனோ அவளை மீண்டும் அழைத்து முழு விபரத்தையும் சொல்லிவிட்டுப் போகும்படி கேட்டான். அவளும் ஓரளவுக்கு சமாதானம் ஆகித் திரும்பி வந்தாள். அங்கே இருந்த ஓர் பானை மேல் அமர்ந்த வண்ணம் தத்தனிடம் நடந்தவை அனைத்தையும் தெரிவித்தாள். தத்தனுக்கு அந்த வீரர்களிடமிருந்து இன்னமும் ஆபத்து விலகவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினாள். தத்தன் எப்படியானும் தப்பித்துச் சென்று விடலாமா என யோசித்தான். ஆனால் அந்தப் பெண்ணோ அதற்கான வலு இப்போது தத்தனிடம் இல்லை. இந்த நிலையில் வெளியில் சென்றால் மீண்டும் ஜூரமும், ஜன்னியும் வரலாம் என்றும் குறைந்த பட்சமாக இன்னும் பத்து நாட்கள் வெளியே செல்ல முடியாது என்றும் தெரிவித்தாள்.  தத்தனுக்கு ஒரு வாரம் அதிகப்படியாகத் தோன்றியது. தான் உடனே வல்லபனைப் பார்த்தாக வேண்டும் என்றான். அவள் கூடாது என்று சொல்ல தத்தன் இரவில் தான் எவரும் அறியா வண்ணம் சத்திரத்தில் போய்ப் பார்க்கப் போவதாய்ச் சொன்னான். 

அந்தப் பெண்ணோ தத்தன் தலை வெளியே தெரிந்தாலே அவனுக்கு ஆபத்து என்றாள். அந்த வீரர்கள் அங்கேயே இருப்பதாகவும் அடிக்கடி அந்த மருத்துவமனைக்கு வந்து சோதனைகள் போடுவதாகவும் சொன்னாள். அதற்கு மட்டும் அவர்கள் வரவில்லை. அவர்களில் ஒருவனுக்குக் காலில் அடிபட்டுப் படுத்திருப்பதும் ஒரு காரணம் என்றாள். அதைக் கேட்ட தத்தன் அந்தப் பெண்ணிடம் அவள் ஓர் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டான். அவளும் என்ன உதவி எனக் கேட்க வல்லபனைப் போய்ப் பார்த்துவிட்டு விபரங்களைத் தெரிந்து கொண்டு வரும்படியும், அவன் சத்திரத்தில் தான் இருப்பான் என்றும் கூறினான். அவளும் சம்மதித்துக் கொண்டு தெருவில் வந்து சத்திரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் பின்னாலேயே யாரோ வருவது போன்ற உணர்வு அவளுக்குள் ஏற்பட்டது.